பழைய மனிதன்

எல்லா இடங்களிலும்
ஏதோ ஒரு பைத்தியம்
கழுத்து பிளாஸ்டிக் மணியைத்
தொட்டுக்காட்டி
சிதைவுண்டு போன பற்களை
வெளிப்படுத்தி
அதிர்ச்சியூட்டும் சிரிப்புடன்
காசு வாங்கிச் செல்கிறது
தன்னைக் கண்டு பயப்படும்
மனிதனைக் கண்டு அருவருக்கும்
பைத்தியத்தின் உடலில் முன்பு
மனிதனாயிருந்த தன்
அடையாளங்கள்
நிறையவே உள்ளன.

உயிர்

நான்கு நாட்களாக
கிழிபடாமலிருக்கும்
நாட்காட்டியில் தொடங்கி
அறைக்கதவின் உட்பக்கத் தாழ்
தொட்டு
சுழலாத மின்விசிறியின்
உச்சிக்குச் சென்று
இறுகித் தொங்கும் நைலான் கயிற்றின்
வழி கீழிறங்கி படரும்
தன் வாழ்விடத்தின் வாசலை
பின்னத் தொடங்குகிறது
அச்சிலந்தி
பிதுங்கிய அவ்விழிகளின்மீது.

- கணேசகுமாரன்

Pin It