"வேலைக்குக் கிளம்பும் போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்"

"எப்படி வெறுங்கையோட போவ
இன்னா தாத்தா கொண்ணாந் தேன்ற
கேள்விக்கென்ன பதில் சொல்வேன்?"


"வெறுங்கைகளுடன்
திரும்பிக் கொண்டிருக்கின்றீர்கள்
சிறுமுயலும் கிடைக்காத இன்றைய
வேட்டையை முடித்துக் கொண்டு

தொடர்ந்து ஐந்தாவது நாளாக
இப்படி நேர்ந்திருக்கிறது
பாரம் துவளத் தளர்ந்த நடையோடு போகும்
உங்களைப் பூதாகரமாய்ப்
பின்தொடர்ந்து வருகிறது அந்திநிழல்"

சிறுங்கண்ணிக்குப்
பறவைகளை அழைத்து அழைத்துச்
சோர்ந்தான்
சகலவித்தைகளும்
பிரயோகிக்கப்பட்டுத்
தோற்றுக் கொண்டிருந்தன.
கண்ணியைச் சுருட்டக்கூட
மனமின்றி நடந்தான்
எட்டிப் போட்ட
நடை தளர்ந்திருந்தது
தள்ளிப் போகத் தள்ளிப் போகப்
பூதாகரமாய்
முன்னால் விரிகிறது
வெறுங்கையுடன்
வீடுதிரும்புபவனின் நிழல்

- வே.மு.பொதியவெற்பன்

Pin It