நீ கொண்ட காதலும்
நான் கொண்ட காமமும்
கடவுளின் சொர்க்க பூமியில்
அனாதைகளாய்த் திரிகின்றன.
வெளிப்போந்த அனைத்தும்
இருட்டிற்குள் திரியும்
வனாந்திரத்தின் நடுவே
உன் விரல் பற்றி
கனாக் கண்டேன் தோழி.
எந்தையும், தாயும்
மகிழ்ந்து குலாவிய
வெந்து தணிந்த காட்டின்
மத்திமப் பகுதியில்
ஆதிகால
மனுஷனும், மனுஷியுமாய்
உடல் முழுதும்
நிர்வாணம் அணிந்து
பரலோக ராஜ்ஜியத்தில்
பழமரம் தேடியலைந்தோம்.
அம்மையும், அப்பனுமாய்
யுகாந்திரத்தில் கிடந்த
அர்த்தநாரீஸ்வரப் பாம்பொன்று
நம் தோளில் அமர்ந்து
வேதம் ஓதியது.
நாம் கடவுளுக்கு
எதிராய் திருப்பப்பட்டோம்.
உள் தெளிந்த சர்ப்பம்
உயிர் மூச்சின் வழி
தலைகாட்டி வெளிவர
ஏமாற்றப்பட்ட கடவுள்
சர்ப்பம் கொன்று
மாலை சூடிக் கொண்டார்.
தூவென் மதி சூடிய கடவுள்
சுடலைப் பொடி பூசி
நம்முன் ஆடிய
களி நடனம் கண்டோம்
கொன்று தின்ற
பாவம் போக்க
மீண்டும் மீண்டும்
கொல்லச் சொன்ன கடவுள்
நம்மிடம் யாசித்தது
இடையறாத பாவம் மட்டுமே.
நாம் கடவுளால்
தூண்டப்பட்டோம்.
- ஜனமித்ரன்