வண்ணம் தீட்டப்பட்ட
பட்டாம்பூச்சியின் -
நிறம் விரலில் பிசுபிசுக்க
இறகு பிடித்து தூக்கி -
உன் அம்மாவைக் கடிக்கவிட்டு
மீண்டும் புத்தகத்தில் மேயவிட
உன்னால் முடிந்தது.
வேண்டுமென்றே
கால் செருப்பை மாற்றிப் போட்டு
அம்மா 'மாத்திப்போடுப்பா தம்பி' சொல்லும்மா
எனச் சொல்லி வியப்படைய
உன்னால் முடிந்தது.
புத்தகத்தின் சித்திரத்தில்
கதவோரம் தலைநீட்டிக் கொண்டிருக்கும்
எலிக்குஞ்சைப் பார்த்து
'உள்ளே போ, மியாவ் வருது'
என எச்சரிக்க
உன்னால் முடிந்தது.
தொட்டில் பாடைகட்டி
தோள்சுமந்து தூக்கிவந்து
கருவேல மரத்தின்கீழ்
என் காற்றே! உன்னைப் புதைத்தபின்
என்னால் சுவாசிக்க முடியலியே.
- புலியூர் முருகேசன்