கீற்றில் தேட...

பன்றிகளின் உறுமல் உச்சத்தில்
ஒதுங்கும் தெருக்கள்
நீரோடைகளின் சலசலப்பில்
மௌனம் கலையும்.
நிர்வாணங்களைத் தேடி அலையும் கண்கள்
மலைக்சிகரங்களை எட்டுவதுண்டு  சிலசமயம்.
ஸ்வாகதம் என்றபடி
நீரை இறைக்கும் சகபயணிகளின்
ஈரத்துணிகளின் வரவேற்பு
வெக்கையை இதப்படுத்தும்.
தெளிந்த தண்ணீரின்
சலசலப்பில் மிதந்து செல்லும்
சவங்களோ
எருமைகளோ
அதிகக் கூளங்களோ
இல்லாத ஆறுதல்.
நெடுநேரம் நீரில் தங்க அனுமதி மறுக்கும்
மூட்டு நோய்
சூகி நதியின் (வறண்ட) காய்ந்த இலைகளின் சரசரப்பில்
கங்கையின் அழுகை.
வீதிகள் தோறும் முழங்கும் மணிகள்
கோவில்களைக் காட்டியபடி
ஹர்க்கி பைரியின்* காணக்கிடைக்காததை
காட்சிக்கு ஏங்கும் மனம்
சிவன் கங்கையை முடியிலிருந்து
கீழே விழத்துவங்கிய
கணத்தின் ஆனந்தமாய் யாத்ரிகர்கள்.
மணிகள் யார்யாருக்கோ
முழங்கிக் கொண்டிருக்கின்றன.

(ஹர்க்கி பைரி : தீபம் ஏற்றி கங்கையில் விடுதல்)

- சுப்ரபாரதிமணியன்