கீற்றில் தேட...

கழுத்தில் தாலி வாங்கிக் கொண்டு
எனை உதறிவிட்டு அவள்
சென்ற பிறகும்
என் எதிரிலேயே எப்போதும்
சிரிக்கிறாள், மிதக்கிறாள், அழைக்கிறாள்.
கை நீட்டி அடித்து விரட்ட
கையாலாகாதவனாய்
தெருக்கள் சுற்றித் திரிகிறேன்.
சதா என்னை நக்கலடிக்கும் அவளை
எந்நேரமும் என் முகம் பார்த்து
கொக்காணி காட்டும் அவளை
விரட்டியடிக்கத் துப்பில்லாமல்
எனது கைகளில் சூடிட்டுக் கொள்கிறேன்
அவள் பெயரை மிக சுகமாய்...!
எக்ஸ்க்யூஸ் மீ நண்பர்களே...
இந்த நகரின் எல்லா தெருக்களிலும்
அவளின் கொலுசு சப்தமே கேட்கிறது
சீனாபுரம் சோதிடக்காரன்
சொன்னதை நம்பி
அவளோடு நான்
ஈசுவரன் கோயில், சுள்ளிக்காடு,
கோபி கொடுவேரி திரையரங்குகள்
என்று சுற்றி வந்த பின்பும்
எனை விட்டு நகர மறுக்கிறாள்
இப்போதுதான் இந்தப் பேனா
அவளின் அழகைப் பற்றி
எழுதக்கூட கூசித் தொலைக்கிறது.
அவளின் திருமணத்திற்குப் பிற்பாடு
ஏதாவதொரு அம்மாவாசை நாளில்
போதை ஏறிய விழிகளுடன்
விஜயமங்கலம் மகாராஜா பேக்கரி முன்
சிகரெட் ஊதிக் கொண்டிருக்கும்
என்னை சட்டை செய்யாது
அவள் கணவனுடன் கைகோர்த்து
அவள் போகும் வரை
நினைவுகளின் பிடியிலிருந்து
நான் மீளவும் போவதில்லை,
என்னேரமும் என் முகம் பார்த்து
கெக்கலித்துத் திரியும்
அவள் முகத்தில் நான்
ஒரு குத்து விடவும் போவதில்லை.

- வா.மு.கோமு