மாபெரும் ஆங்கில நாடக ஆசிரியரான வில்லியம் ஷேக்ஸ்ப்பியர் தனது நாடகம் ஒன்றில் கூறினார் இந்த உலகம் ஒரு நாடக மேடை அதில் வசிப்பவர் அனைவரும் நடிகர்கள் என்று. அவர் ஒரு ஆழமான பொருளுடன் அந்தக் கருத்தைக் கூறினார். அதாவது நாடகங்களில் ஒவ்வொரு காட்சியும் வேகம் வேகமாக மாறிக் கொண்டேயிருக்கும். அதைப்போல் தான் இந்த உலகில் நடக்கும் நிகழ்வுகளும் கூட. அவற்றில் முக்கியப் பங்காற்றும் மக்களும் நாடக நடிகர்கள் போல் காட்சிக்குக் காட்சி மாறக்கூடியவர்களே என்று கூறினார்.
ஆனால் அவரது கூற்றில் பொதிந்துள்ள ஆழமான தத்துவார்த்த அம்சத்தை எடுத்துவிட்டு இந்த உலகத்தை ஒரு நாடக மேடை என்று ஒரு மலிவான அர்த்தத்தில் அதாவது கூத்து மேடை என்று பார்த்தால் அதற்கு என்ன பொருளுண்டோ அத்தகைய மேடையாக நமது இந்திய நாடு ஆகிக் கொண்டுள்ளது. அதில் தேர்ந்த கதாபாத்திரங்களாக நமது அரசியல் வாதிகளும், அமைச்சர்களும் உள்ளனர்.
ஆழமான அர்த்தத்துடன் ஷேக்ஸ்பியரால் முன்வைக்கப்பட்ட அந்தக் கூற்றிற்கு இருந்த பின்புலம் போலியல்ல. ஆனால் தற்போதைய நாடக மேடையாகிப் போன இந்திய அரசியலில் நடப்பவை அனைத்துமே போலித் தனங்களுக்குக் கட்டியம் கூறுபவைகளாக உள்ளன.
நிதி அமைச்சரின் குறிப்பு
2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்குவதில் அரசுக் கருவூலத்திற்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்திய முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சரும் தற்போது சிறையில் உள்ளவருமான தி.மு.கழகத்தைச் சேர்ந்த திரு ராசா அவர்களின் பிரச்னை பல்வேறு திருப்பங்களைத் தற்போது எட்டியுள்ளது.
இந்த முறைகேடு ராசா அவர்கள் தகவல் தொடர்புத்துறை அமைச்சராகப் பதவியேற்ற காலத்தில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்களின் அறிவுக்கு எட்டியே நடந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் தயாரித்துள்ள ஒரு குறிப்பு ஒரு புதுத் தகவலை அப்பிரச்னையில் கொண்டு வந்துள்ளது. அதையொட்டி பிரணாப் முகர்ஜிக்கும் ப.சிதம்பரத்திற்கும் இடையில் ஒரு மிகப்பெரிய முரண்பாடு இருந்த வி¬சயம் ஊடகங்களாலும் பத்திரிக்கைகளாலும் வெளிக்கொணரப் பட்டுள்ளது.
அது குறித்துப் பத்திரிக்கையாளர்கள் அப்போது அமெரிக்கச் சுற்றுப் பயணத்தில் இருந்த பிரணாப் முகர்ஜியிடம் கேட்ட போது தான் எங்கும் ஓடிப்போகப் போவதில்லை இந்தியாவிற்குத் திரும்பத்தான் போகிறேன்; அங்கு வந்தவுடன் கேள்விகளைக் கேளுங்கள் என்று கூறி அதுகுறித்துக் கருத்துக் கூற மறுத்துவிட்டார். பின்னர் அவருக்கும் ப.சிதம்பரத்திற்கும் இடையில் ஒரு ‘போர் நிறுத்த ஒப்பந்தத்தை’ சோனியா காந்தி அவர்கள் செய்து வைத்துள்ளார்கள் என்ற விச¬யத்தை அடுத்து வந்த ஊடகச் செய்திகள் வெளிப்படுத்தின. உடனேயே என்னுடைய மதிப்பிற்குரிய தோழர் ப.சிதம்பரம் என்று பிரணாப் முகர்ஜி கூறிக் கொண்டார்.
அத்தகைய மதிப்பிற்குரிய தோழருக்குத் தலை குனிவை ஏற்படுத்தும் வகையிலான குறிப்பை ஏன் தயார் செய்தீர்கள் என்ற கேள்வி எழுந்த போது பிரணாப் முகர்ஜி கூறினார்: முன்னாள் நிதி அமைச்சரான ப.சிதம்பரம் ஒரு பேட்டியின் போது தான் இரண்டாவது தலைமுறை அலைக்கற்றையை ஏலம் விடும் முறைக்கே ஆதரவாக இருந்தேன் என்று கூறினார்; அவருடைய அந்தக் கூற்று வெளி வந்தபின், அவருக்குப் பின் நிதி அமைச்சராக வந்த எனக்கு அதையொட்டிச் சில சங்கடங்கள் வரும் என்று உணர்ந்தேன். அதைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது; அதற்காகவே அந்தக் குறிப்பைத் தயார் செய்தேன் என்று.
அது மத்திரிகளுக்கு இடையில் வழக்கமாக நடைபெறும் ஒரு செய்தித் தொடர்பே தவிர அதில் வேறெதுவும் இல்லை என்றும் அவர் பூசி மெழுகினார். நாம் அரசியல் நாடகம் என்று இங்கு குறிப்பிடுவது ப.சிதம்பரம் மேல் ஒரு தவறான அபிப்பிராயம் ஏற்படும் தன்மைவாய்ந்த ஒரு குறிப்பை எழுதிவிட்டு அந்தக் குறிப்பு பத்திரிக்கை உலகத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் போதே அவர் எனது மதிப்பு மிகுந்த தோழர் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளதை மட்டும் வைத்தல்ல.
மேலும் சோனியா காந்தி அவர்கள் செய்து வைத்த மத்தியஸ்தம் மூலமாக தற்போது இரு அமைச்சர்களுக்கு இடையிலும் அமைதி ஏற்பட்டு விட்டதாகக் கூறுவதில் சம்பந்தப் பட்டுள்ள நாடகத் தன்மையை மனதிற்கொண்டும் அல்ல.
இந்த இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டு விசயத்தின் ஆரம்பம் முதற்கொண்டே மக்கள் பார்வைக்காகவும் அவர்களுடைய அறிவுக்கு எட்டும் விதத்திலும் அரசாலும் அதன் அமைச்சர்களாலும் முன்வைக்கப்படும் கருத்துக்கள் அனைத்துமே அப்பட்டமான நாடகத் தன்மை பொருந்தியனவாக உள்ளன என்பதை மனதில் வைத்துத்தான் நாம் இந்திய அரசியல் அரங்கமே ஒரு நாடக மேடை போல் ஆகிவிட்டது என்று கூறுகிறோம்.
தகவல் தொழில் நுட்பத்துறை மோகம்
அதாவது சாதாரணக் குடிமக்களின் புலனறிவுக்கு எட்டக்கூடிய பல வி¬சயங்கள் கூட இந்திய அரசிற்கும் அதை வழிநடத்தும் பிரதமர், கட்சித் தலைவர் போன்றவர்களுக்கும் தெரியாமல் போய்விட்டது என்று காட்ட முயல்வது எத்தனை கேலிக்குரிய நாடகத்தனம்!
தி.மு.கழகம் ஒரு பிராந்தியக் கட்சி. பிராந்தியக் கட்சிகளின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கியக் காரணமாக இருப்பவை அவற்றின் பிராந்திய நலன் கருதும் போக்குகள். தமிழகத்தின் பிராந்திய நலன் தற்போது பெரிதும் ஓரே ஒரு வி¬சயத்தில் தான் உள்ளது.
அதாவது அது கோடானகோடி காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த நதிநீர் பங்கீட்டுப் பிரச்னையிலேயே உள்ளது.
உண்மையிலேயே பிராந்திய நலனைப் பிரதிபலிப்பதாக அக்கட்சியில் நடவடிக்கை இருந்திருக்கும் என்றால் அக்கட்சி நீர்ப்பாசனத் துறை அமைச்சகத்தை மத்திய அரசிடம் கோரிப் பெற்றிருக்கும். ஆனால் பலகாலம் பிராந்திய வாதம் பேசி அந்த அடிப்படையிலேயே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய அக்கட்சிக்குத் தற்போது பிராந்திய நலன் பொருட்டேயல்ல; அது வெறும் முகப்பே என்றாகிவிட்டது.
உண்மையில் அக்கட்சித் தலைவரின் எண்ணமும் மூச்சும் வேறு வி¬சயங்களில் தான் இருந்தன. தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாக பொழுதுபோக்குத் தொழில் பிரபலம் அடைந்த போது அதைப் முழுஅளவில் பயன்படுத்திக் கொள்ள அக்கட்சி விரும்பியது. அதற்கிருந்த பிரகாசமான வாய்ப்பை முன்கூட்டியே அறிந்து கொண்ட அதன் தலைவர்களில் ஒருவரான முரசொலி மாறனும் விரும்பினார்.
அதையொட்டியே காலத்தை விரயம் செய்யாமல் அவசர அவசரமாக அண்ணா அறிவாலயம் என்று அழைக்கப்படும் அவர்களுடைய கட்சி அலுவலகத்திலேயே ஒரு பகுதியில் சன் டி.வி. அலுவலகத்தை அவர் உருவாக்கினார். அதற்குப் பல விதங்களில் உதவும் என்ற வகையிலேயே தகவல் தொழில்நுட்பத் துறையை மத்திய அரசில் தி.மு.கழகம் கோரிப் பெற்றது.
முரசொலி மாறன் மறைவிற்குப் பின் அவருடைய புதல்வர் தயாநிதி மாறன் அத்துறையைப் பெற்றார். அக்கால கட்டத்தில் தான் ஏர்செல் நிறுவனத்தின் அதிகப் பங்குகள் அவர்களால் வாங்கப்பட்டன. அதன் பின்னர் மாறன் குடும்பத்தினர் வாங்கிய தினகரன் பத்திரிக்கை தி.மு.க. தலைவர் கருணாநிதியின் புதல்வர்களில் ஒருவரான ஸ்டாலின் அடுத்த முதலமைச்சராக வர அதிக மக்கள் ஆதரவு உள்ளது என்று அறிவிக்கும் கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதன் விளைவாக முன்னால் முதல்வரின் இரு புதல்வர்களுக்கிடையில் பூசல் வெடித்ததன் காரணமாக தயாநிதி, கலாநிதி மாறன்கள் மேல் முன்னாள் முதல்வருக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. அதன் விளைவாகத் தயாநிதி மாறன் மத்திய மந்திரி சபையிலிருந்து விலக நேர்ந்தது.
அடுத்தும் அதே துறை
அவ்வாறு அவர் பதவி விலகிய பின்னர் அவர் இடத்தில் திருவாளர் அ.ராசா அதே தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் தயாநிதி மாறன் காலத்தில் நடந்ததாகப் பல கோளாறுகளை அவ்வப்போது வெளிப்படுத்தினார்.
அதன் பின்னர் தேர்தல் நடைபெற்று நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி பெற்ற பின்னரும் பலருடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாகக் கடுமையாகப் போராடி அதே தகவல் தொழில்நுட்பத் துறையை தி.மு.கழகம் பெற்றது. திருவாளர் ராசாவே மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இப்போது மரபு, சட்டம் ஆகியவை பற்றியெல்லாம் கூறி அவற்றிற்குப் பின் மறைந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் மத்திய காங்கிரஸ் அமைச்சர்கள் பலருக்கு ஏன் மீண்டும் மீண்டும் அந்தத் துறையிலேயே தி.மு.கழகம் கண்ணாய் இருக்கிறது என்பது தெரியாதா?. அனைவருக்கும் நன்கு தெரியும்.
இருந்தாலும் கூட அது ஒரு யதார்த்த நிகழ்வு போல் அவர்களால் காட்டப்படுகிறது. எந்தவொரு சராசரி அறிவுள்ள மனிதனுக்கும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட துறையில் இத்தனை கவனமாக இருக்கிறார் என்றால் அது ஏன் என்று புரியாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை.
ஆனால் மத்திய காங்கிரஸ் அமைச்சர்களோ அந்த சராசரித் தன்மையைப் பல மடங்கு தாண்டி அறிவு ரீதியாக மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள். இருந்தும் அரசியல் அரங்கில் தி.மு.கழகம் கோரியது; நாங்கள் கொடுத்தோம் என்ற அடிப்படையில் அதை மிகச் சாதாரணமான ஒரு நிகழ்வாகக் காட்ட முயல்கின்றனர்.
2001ம் ஆண்டு விலை 2008ம் ஆண்டிலும் இருக்குமா?
2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்குவதில் சம்பந்தப்பட்டுள்ள அடிப்படைப் பிரச்னை அந்த அலைக்கற்றையை 2001ம் ஆண்டு நிலவிய விலைக்கு 2008ம் ஆண்டு விற்றதாகும். எந்தவொரு பொருளை விற்றாலும் படிப்பறிவற்ற கிராமத்து மக்களுக்கும் கூடத் தெரிந்த வி¬யங்கள் இரண்டு உண்டு.
அவற்றில் ஒன்று 2001ம் ஆண்டு விற்ற விலைக்கு 7 ஆண்டுகள் கழித்து யாரும் எந்தப் பொருளையும் விற்க மாட்டார்கள் என்பது. அதாவது குறைந்த பட்சம் பணவீக்கம் அதிகரித்துள்ள அளவிற்காவது அது கூடியிருக்கும். அப்படிப்பட்ட உயர்வை அங்கீகரிக்கும் விதத்தில் தான் விலைவாசிப் புள்ளி உயர்வு கூடத் தீர்மானிக்கப் படுகிறது.
அதுதவிர விற்கப்படும் பொருளின் சந்தை மதிப்பும் அவர்களால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வி¬சயத்தில் இன்டெக்ஸ் மதிப்பு அளவிற்குக் கூட அதன் விலை தீர்மானிக்கப்பட வில்லை. அந்த அளவிற்குத் தீர்மானிக்கப் பட்டிருந்தால் கூட ஓரளவு தற்போது வழங்கியது போல் உரிமம் வழங்கியதை நியாயப்படுத்த முடியும்.
அதாவது இந்தியத் தணிக்கை அலுவலகம் அதன் சந்தை மதிப்பை வைத்து 1.76 லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறது. ஆனால் நாங்கள் 2001ம் ஆண்டு விற்ற விலையிலிருந்து இன்டெக்ஸ் மதிப்பு போட்டால் எவ்வளவு விலைக்கு விற்க முடியுமோ அந்த விலைக்கு விற்றோம் என்று அதில் தொடர்புடையவர்கள் கூறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் ராசா அவர்கள் அதையும் செய்யவில்லை. 2001ம் ஆண்டு மதிப்பிற்கே அந்த அலைக்கற்றை உரிமம் வழங்குவதைச் செய்தார்.
ஒரு வாதத்திற்காகப் பல தி.மு.க. அமைச்சர்களைப் போல் அவர் வி¬சயம் தெரியாதவராக இருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் சுப்பாராவ் அவர்கள் இந்த விலைக்கு விற்பது தவறானது என்று சுட்டிக் காட்டும் போதாவது அவருக்கு அவர் செய்யவிருக்கும் தவறு புரிந்திருக்க வேண்டும்.
இருந்தாலும் கூட அவர் இத்தனை பெரிய இழப்பை இந்திய அரசிற்கு ஏற்படுத்தும் விதத்தில் அதனை விற்றார். இவ்வளவு பெரிய வி¬சயம் சக அமைச்சர்களுக்கோ அல்லது பிரதமர், கட்சித் தலைவர் சோனியா காந்தி போன்றவர்களுக்கோ தெரியாமல் இருந்திருக்கும் என்று கூறினால் யாராவது நம்புவார்களா? அவ்வாறு நம்ப மாட்டார்கள் என்பதால் தான் பிரதமர் மழுப்பல் தொனியில் கூட்டணியில் ஒரு அரசு நடைபெறும் போது, பல வி¬சயங்களில் சமரசம் செய்ய வேண்டியுள்ளது; அவ்வாறு செய்து கொள்ளப்பட்ட ஒரு சமசரமே இது என்ற பாணியில் பதில் கூறினார்.
பி.ஜே.பியின் பங்கு
உண்மையில் இந்த விசயத்தை அத்தனை பெரிதாக்க முக்கிய எதிர்க்கட்சியான பி.ஜே.பி. கட்சியும் விரும்பவில்லை. ஏனெனில் இந்த வி¬சயத்தைப் பொறுத்தவரையில் அக்கட்சியின் அலமாரியிலும் பல எலும்புக் கூடுகள் இருந்தன.
ஆம், திருவாளர் ஜக்மோகன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது பல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசின் தொலைத் தொடர்பு நிறுவனத்திலிருந்து தொழில் நுட்பங்களை ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்திப் பெற்று நடத்த முன்வந்தன.
ஆனால் அந்நிறுவனங்கள் அத்தொகைகளைச் செலுத்தவில்லை. உடனேயே ஜக் மோகன் அவர்கள் ஏற்றுக்கொண்ட தொகையை செலுத்தாத நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால் அவ்வி¬சயத்தில் வாக்குத் தவறிய நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் சாதகமாகவும் தலையிட்டது வேறு யாரும் அல்ல, சாட்சாத் அட்டல் பிஹாரி வாஜ்பாய் அவர்களே இதில் தலையிட்டார்.
அவர் தலையிட்டு ஒப்புக் கொண்ட தொகையை முழுமையாகச் செலுத்தத் தேவையில்லை; வரும் வருவாயை மையமாக வைத்து அதில் ஒரு பங்கினைச் செலுத்தினால் போதும் என்று ஆட்டத்தின் விதியையே மாற்றினார். அதன் விளைவாகத் தொலைத் தொடர்புத் துறைக்கு ஏற்பட்ட இழப்பு 85,000 கோடி ரூபாய் என்று கணக்கிடப் பட்டது.
அதன் பின்னர் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக வந்த அருண் சோரியும் கூட முதலில் வருபவர்களுக்கு முதலில் உரிமம் என்ற 2001ம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட அதே விதியையே கடைப்பிடித்தார்.
இத்தனை கோளாறுகள் எதிர்க்கட்சியிடமும் இருந்த காரணத்தினால் தான் அருண் சோரி அவர்கள் ஒரு கட்டத்தில் ராசா விசயத்தில் பி.ஜே.பி. கட்சி தொடர்ச்சியாக கடுமையான நிலை எடுக்காது என்று ஒரு நேர்காணலின் போது கூறினார்.
கண்டு கொள்ளாத சி.பி.ஐ(எம்).
அதுமட்டுமல்ல இடதுசாரி கட்சிகளிலேயே மிகப் பெரிய கட்சி என்று மார்தட்டிக் கொள்ளக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட இந்த வி¬யத்தை அம்பலப்படுத்தவில்லை.
அதாவது அக்கட்சிக்கு அம்பலப்படுத்துவதற்குப் போதிய வாய்ப்பிருந்தும் அது அதனைச் செய்யவில்லை. எந்த வகையில் அக்கட்சிக்கு அவ்வாய்ப்பு இருந்ததென்றால் அக்கட்சியின் தொழிற்சங்கமான பி.எஸ்.என்.எல்.இ.யு. தொழிற்சங்கமே இந்த உரிமம் ஒதுக்கீடு நடைபெற்ற வேளையில் பி.எஸ்.என்.எல். இன் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக இருந்தது.
ஒரு துறையில் செயல்படக் கூடிய ஒரு சங்கம் அது அங்கீகரிக்கப்பட்டதாக இல்லாத நிலையில் கூட அங்கு நடக்கும் முறைகேடுகளை அறிந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவே இருக்கும். ஆனால் சி.பி.ஐ(எம்). கட்சியின் தொழிற்சங்கமோ அங்கீகரிக்கப்பட்ட சங்கம். இருந்தாலும் கூட அக்கட்சி இதனை வெளிப்படுத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால் எந்தவொரு அரசியல் கட்சியும் இதனை வெளிப்படுத்தவில்லை.
தங்களுக்குள் ஏற்பட்ட பூசலை அடிப்படையாகக் கொண்டு தயாநிதி மாறன் தரப்பிலிருந்தே இந்த ஏலம் விடுதலில் ஏற்பட்ட இழப்பு வெளிச்சத்திற்கு வந்தது. அதுவும் இவ்வளவு இழப்பு என்ற அளவிற்கு முதலில் வரவில்லை. 8000 கோடி அதன் பின்னர் 12,000 கோடி அதன் பின்னர் 25,000 கோடி என்ற அளவுகளிலேயே இழப்பு என்பது பத்திரிக்கைகளில் வெளிவந்தது.
ஆனால் அதற்கெல்லாம் எந்தவொரு முக்கியத்துவமும் தி.மு.கழகமோ காங்கிரஸ் கட்சியோ தரவில்லை. அதன் பின்னர் அப்போது பிரதான எதிர்க் கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க.வின் பிரச்சாரத்தை மையமாகக் கொண்டே இந்தப் பிரச்னை உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. அந்தக் கட்டத்தில் தான் இந்தியத் தணிக்கை அதிகாரியின் 1.76 லட்சம் கோடி இழப்பு என்ற கருத்து வெளிவந்தது. அதன் பின்னர் ஊடகங்கள் இந்த முறைகேட்டின் பல்வேறு விளைவுகளையும் அதனால் பலனடைந்த அரசியல் வாதிகள், அமைச்சர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றையும் தோண்டித் துருவி வெளியிடத் தொடங்கின.
கட்சிகள் வெளிப்படுத்தவில்லை
தங்களது அரசியல் ஆதாயத்திற்காக அதனை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்தன. அதன் பின்னர் ஏதோ அக்கட்சிகள் அனைத்தும் கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு இவ்வி¬யத்தைப் பார்த்தறிந்து வெளியிட்டது போல் பாவனை காட்டிக் கொண்டன. தற்போது காட்டிக் கொண்டும் உள்ளன. எத்தனை பெரிய நாடகத் தனம் இது.
அதாவது ஒரு பொருள் அல்லது பிரச்னை குறித்த உண்மையை அறிய வேண்டுமென்றால் அதனைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். அதனுடைய பல்வேறு அம்சங்களைக் கூறுபோட்டுப் பார்க்க வேண்டும். இது விஞ்ஞான நியதி. இந்த விஞ்ஞான நியதியைக் கேலிக் கூத்தாக்கும் விதத்தில் பல்வேறு நிகழ்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ளன.
திருவாளர் ராசா அவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பின் அவரது பொறுப்பை ஏற்ற கபில் சிபல் அவர்கள் இவ்வாறு நரியைப் பரியாக்குவதில் மிகவும் வல்லவர் என்பதைப் பலமுறை நிரூபித்தார்.
ஆனால் நிரூபித்துப் பலனொன்றும் இல்லை. அவர் குறித்து மக்கள் மத்தியில் இருந்த அவர் அத்தனை கெட்டவர் அல்ல என்ற பெயரை அவர் இழந்ததுதான் மிச்சம்.
அவர் இப்பிரச்னையை விஞ்ஞான பூர்வமாகக் கூறுபோட்டுக் காட்டுவது போல் காட்ட முனைந்தார். அரசின் கொள்கை தொலைத் தொடர்புத் தொழில் நுட்பம் வர்த்தகப் பொருளாக்கப்படக் கூடாது; அதனை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் அது என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியிலிருந்த காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவது; ஆனால் அந்தக் கொள்கை அமலாக்கப்பட்ட விதத்தில் தான் கோளாறு உள்ளது. அமலாக்கப்பட்ட விதத்தில் கோளாறு உள்ளதே தவிர கொள்கை அடிப்படையில் பார்த்தால் நஷ்டம் என்பது அறவே இல்லை என்றெல்லாம் கூறத் தொடங்கினார்.
வாடிக்கையாளர் வசதிக்குச் செய்ததாகக் கூறும் வேடிக்கை
அதாவது மதிப்புள்ள ஒரு தொழில் நுட்பத்தை மிகக் குறைந்த விலைக்கு விற்று அதனால் ஒரு மாபெரும் இழப்பை தொலைத் தொடர்புத் துறைக்கு ஏற்படுத்திவிட்டு அதனை நியாயப்படுத்துவதற்காக மக்கள் அனைவருக்கும் மலிவான விலையில் செல்போன் வசதி கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகவே இதனைச் செய்தோம் என்று அவர் கூறத் தொடங்கினார்.
அதாவது செல்போன் வசதி கிடைத்தவுடன் அதனைப் பயன்படுத்தி விவசாயிகள், மீனவர்கள் இவ்வாறு அனைத்துத் தொழில் செய்பவர்களும் அவர்களின் உற்பத்திப் பொருள்களுக் கான உண்மை விலையை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்து அவர்கள் வலிமை பெற்றவர்களாக ஆகிவிடுகின்றனர். அதற்கு இந்தக் குறைந்த செலவில் கிடைத்த தொலைத் தொடர்பு வசதி உதவியது; வர்த்தக நோக்கின்றி இத்தொழில் நுட்பம் விற்கப்பட்டதால் தான் இப்படிப்பட்ட வலிமை பெற்றவர்களாக மக்கள் ஆகினர் என்று இடைவிடாமல் கூறினார். இப்போதும் கூறி வருகிறார்.
தாங்கள் தலையிட்ட அனைத்திலும் ஊழல் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்ட தி.மு.கழகத்தின் தெருமுனைப் பேச்சாளர்கள் கூட உள்ளாட்சித் தேர்தல்களின் போது அந்த வாதத்தையே வாந்தி எடுத்தனர். இவ்வாறு மலிவான விலைக்கு செல்போன் சேவை கிடைத்ததற்கான காரணம் 2ஜி விற்பனையின் மூலம் போட்டி உருவாக்கப்பட்டதே; அந்தப் போட்டியின் விளைவாகவே இத்தகைய சேவைக்கான விலைக் குறைப்பு நடந்தேறியுள்ளது என்பதே அக்கூட்டங்களில் அவர்களது வாதமாக இருந்தது.
சொல்லும் செயலும்
அதாவது காங்கிரஸ் கட்சியும் பி.ஜே.பி. கட்சியும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் போது முன்வைத்த வாதம் நஷ்டம் விளைவிக்கும் தொழில்களையே நாங்கள் தனியார் மயமாக்குகிறோம் என்பதாகும். ஆனால் தொலைத் தொடர்புத் துறையில் அத்தகைய நஷ்டம் எதுவுமில்லை. இருந்தாலும் கூட அதனைத் தனியார் மயமாக்கினர்.
அதாவது அதே துறையில் தனியாரையும் செயல்பட அனுமதித்தால் அப்போட்டியின் விளைவாக அரசின் கைவசம் இருக்கக் கூடிய தொலைத் தொடர்புத் துறையும் முனைப்புடன் செயல்பட்டு அதன் சேவையை இன்னும் அதிகப்படுத்தும் என்ற அடிப்படையில் தனியார் துறையின் பங்கேற்பு தொலைத் தொடர்புத் துறையில் கொண்டுவரப் பட்டதாகக் கூறினர்.
ஆனால் அவர்கள் முன்வைத்த கருத்திற்கு மாறாக உருவான பல நிறுவனங்கள் அவை எங்கெல்லாம் ஆதார வசதிகளை ஏற்படுத்த முடியவில்லையோ அங்கெல்லாம் அரசின் தொலைத் தொடர்புத் துறையின் தொழில் நுட்பத்தையும் ஆதார வசதிகளையும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்திப் பயன்படுத்தத் தொடங்கின. அந்தத் தனியார் துறையின் வளர்ச்சிக்காக ஒரு கண்ணோட்டம் முன்வைக்கப்பட்டது. அதாவது அத்துறையில் போட்டியிடும் அனைவருக்கும் சமமாகப் போட்டியிடும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே அந்தக் கண்ணோட்டம்.
அது எவ்வாறு அமுலாகிறது என்பதைக் கண்காணிக்க ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டது. அதாவது தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) என்ற பெயரில் அது செயல்பட்டது. அது தன் நோக்கத்தை நிறைவேற்றுகிறேன் என்ற பெயரில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மூடுவிழா செய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்தது. அதன் விளைவாக வளர்ந்த நிறுவனங்களுக்கு அதன் 2ஜி, 3ஜி போன்ற தொழில் நுட்பங்களையும் பி.எஸ்.என்.எல். விற்கத் தொடங்கியது.
இவை அனைத்தும் தொலைத் தொடர்புத் துறையில் காலடி எடுத்து வைத்த தனியார் நிறுவனங்கள் சம்பாதித்துக் கொழுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டவையே. இருந்தாலும் கூட அவை மக்களை அதிகாரம் படைத்தவர்களாக ஆக்குவதற்காக செய்யப்பட்ட உன்னதமான காரியங்கள் என்ற பொய்ச் சித்திரம் தற்போது முன்வைக்கப் படுகிறது.
வேலை வாய்ப்பு நாடகம்
நமது நாட்டில் முதலாளிகள் காலங்காலமாக ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டுள்ளனர். அவர்கள் அதிகபட்ச லாபம் ஈட்டுவதற்கு எங்கு முதலீடு செய்தால் அது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறார்களோ அங்கு முதலீடு செய்து அத்தொழிலில் ஈடுபடும் உழைப்பாளரைச் சுரண்டி லாபம் ஈட்டிக் கொண்டு அதனை அவர்கள் செய்வதற்குக் காரணமாக இல்லாத வேறொரு காரணத்தை இட்டுக்கட்டிப் புனைந்து காலங்காலமாக கூறி வருகின்றனர்.
அதாவது பலருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காகவே நாங்கள் தொழில் தொடங்குகிறோம் என்று ஒரு பொய்க் காரணத்தைக் கூறி வருகின்றனர். அதைப் போலவே தொலைத் தொடர்புத் துறையில் கண்மண் தெரியாத அளவிற்குத் தனியார் துறையினர் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக அரசுத் துறையின் கைவசம் இருந்த தொழில் நுட்பத்தை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு அது செல்போன் வசதி குறைந்த விலையில் கிட்டுவதற்காகச் செய்யப்பட்டது என்ற பொய்யான நாடகத்தனமாக வாதத்தைத் தற்போது நாக்கூசாமல் முன்வைத்துக் கொண்டுள்ளனர்.
ஊழல்களை மறைக்கப் பயன்படும் வார்த்தைகள்
தொழில் நுட்பத்தின் விளைவாகவே சேவையின் விலைக் குறைவு ஏற்படுகிறது. அதனைத் தன் கைவசம் வைத்திருந்த அரசின் தொலைத் தொடர்புத் துறை மூலம் அதன் சேவையைப் பரவலாக்கியும் கூட இத்தனை குறைந்த விலைக்கல்ல இதைக்காட்டிலும் குறைந்த விலைக்கே இந்த சேவையை அரசால் வழங்கியிருக்க முடியும்.
அதனைச் செய்யாமல் இந்த ஏகபோக மூலதனம் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில் போட்டியை ஊக்குவித்து சேவையின் விலைக் குறைப்பைக் கொண்டு வந்ததாகப் போலி நாடகம் நடத்துகின்றனர். போட்டியில் ஈடுபட்டதாக அவர்கள் கூறும் நிறுவனங்கள் அவர்கள் வாங்கிய தொழில் நுட்பத்தைக் குறுகிய காலத்தில் பிறருக்கு விற்று அதாவது அவற்றைப் பிறர் வாங்கும் விதத்தில் பங்குச் சந்தையில் நுழைந்து பங்குகளாக விற்று பணமாக்கிக் கொண்டு சென்றுவிட்டன. அரசிற்குக் கிட்ட வேண்டிய அந்த நிதி அவ்வாறு கொள்ளை போவதை மூடி மறைப்பதற்காக போட்டி, கொள்கை, அதன் விளைவான விலைக் குறைப்பு என்றெல்லாம் காட்டுக் கூச்சல் போடுகின்றனர்.
தொழில்நுட்ப ரீதியான வார்த்தைகளுக்குப் பின்னால் புகுந்து கொண்டு அதாவது தொழில் நுட்பத்தை அப்படியே விற்றிருந்தால் அது தவறு; ஆனால் அதனை பங்குகளாக்கி விற்றால் அது தவறல்ல என்றெல்லாம் பேசுகின்றனர்.
ஆரம்பத்தில் சந்தையைப் பிடிப்பதற்காக கட்டணக் குறைப்புச் செய்த நிறுவனங்கள் தற்போது கட்டணங்களை அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. கட்டணம் குறைந்ததைக் கூரைமேல் ஏறி நின்று கொண்டு கூறியவர்கள் தற்போது ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் கட்டணங்களைக் கூட்டியுள்ளது குறித்து மூச்சு விடாமல் இருக்கின்றனர்.
பயன் பெறுவது முதலீட்டாளர்களே
இதுதவிர செல்போன் வசதியால் சாதாரண மீனவர்களும் விவசாயிகளும் அதிகாரம் பெற்றுள்ளனர்; அவர்களது விளை பொருள்களுக்கு உரிய விலையினை அதாவது தற்போது உள்ளது போன்ற தகவல் தொழில் நுட்ப வசதியில்லாத காலத்தில் அவர்கள் அடைந்திராத விலையினைத் தற்போது பெற்றுக் கொண்டுள்ளனர் என்று கூற வருகின்றனர்.
தாங்கள் விளைவிக்கும் விளை பொருள்களுக்கான விலை எவ்வளவு என்பதை விவசாயிகளும் மீனவர்களும் அறிந்து கொள்வதினால் மட்டும் அவர்கள் உரிய விலையைப் பெறவோ அவர்களுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை இல்லாததாக்கவோ முடியாது. விலை தெரியாத காலத்தில் விதியை நொந்துகொண்டிருந்த அவர்கள் தற்போது விலை என்ன என்பதைத் தெரிந்து கொண்டாலும் அந்த விலைக்கு விற்க முடியாது முனகிக் கொண்டிருக்கும் நிலையிலேயே உள்ளனர். எந்தத் தொழிலிலும் அதில் ஈடுபடுவோர் பலனடைவதில்லை. அதில் முதலீடு செய்து விளை பொருள்களை வாங்குபவர்களே பலனடைகின்றனர்.
அவ்வாறு முதலீடு செய்யும் வாய்ப்பு சாதாரண விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் கிட்டுவதேயில்லை. பெரும் தொகைகளை முதலீடு செய்ய முடிந்தவர்களான கமி¬ன் மண்டி வைத்திருப்பவர்களும் ஒட்டுமொத்தமாகப் பிடிக்கப்படும் மீன்களை ஏலம் எடுப்பவர்களுமே அதனால் பலனடைகின்றனர். அவர்களுக்கு உதவுவனவாகவே அரசுத்துறை, அரசுத் துறையின் வங்கிகள் போன்றவையும் உள்ளன. மிக உயர்ந்த உள்நாட்டு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் கல்வி பயின்ற கபில் சிபல் போன்றவர்களுக்கு இது தெரியாததல்ல. இருந்தும் அவர்கள் நாடகம் ஆடுகின்றனர்.
நடைமுறைக் கோளாறு!
இவ்வாறு அரசின் கைவசமிருந்த தொழில் நுட்பத்தை அடிமாட்டு விலைக்கு விற்க முன்வரும் போது அதனைப் பயன்படுத்த முனைவோர் நிச்சயமாக அவ்வாறு விற்க முன்வருவோரைக் கவனிக்கத் தயாராகவே இருப்பர். இது மிகவும் இயல்பானதொரு விசயம்.
அதில் அதனை விற்கும் வாய்ப்பினைக் கொண்டிருந்த அமைச்சர் ராசா போன்றவர்கள் இன்னும் கூடுதலாக தாங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக முதலில் வருவோருக்கு முதலில் உரிமம் என்ற விதியையும் மீறி விற்கத் தொடங்கினர்.
அதாவது ஒரு குறிப்பிட்டக் காலக்கெடுவைத் தீர்மானித்து அக்காலக்கெடு வரைக்கும் முன்வருவோர் அதற்காகச் செலுத்த வேண்டிய தொகையினைச் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துவிட்டு பிறகு தன்னிச்சையாக அதனை மாற்றி அதாவது அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே ஒரு தேதியை அறிவித்து அதற்குள் தங்களுக்கு வேண்டிய சிலரை விண்ணப்பிக்கச் செய்து அவர்களுக்கு விற்றுள்ளனர்.
தற்போது இழப்பே இல்லை; அவ்வாறு இழப்பென்பது இருந்தாலும் அது இவ்வாறு ராசா அவர்கள் செய்த அந்த முறைகேடான நடைமுறையில் தான் உள்ளது என்று கபில் சிபல் போன்றவர்கள் கூற வருகின்றனர்.
அதாவது 2ஜி அலைக்கற்றையின் சந்தை மதிப்பைப் புறக்கணித்து அதனை அதன் 2001ம் ஆண்டு விலைக்கே விற்ற பகாசுரக் குற்றத்தை மூடிமறைத்து இது ஒரு நடைமுறைக் கோளாறு. அதில் ஏற்பட்ட இழப்பே இழப்பெனக் கருதப்பட வேண்டும் என்று கூறத் தொடங்கியுள்ளனர்.
இப்படிப்பட்ட முறைகேடான விற்பனைகளும் அவற்றின் பலனாக அரசியல் கட்சிகள் அடையும் பலன்களும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். வழக்கமாக அக்கட்சிகள் அவற்றைப் பெரிது படுத்துவதில்லை.
அந்த அடிப்படையிலேயே பி.ஜே.பி. போன்ற பிரதான எதிர்க்கட்சியும் சி.பி.ஐ(எம்). போன்ற இடதுசாரிக் கட்சிகளும் கூட அதனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட சில பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் வெளிக்கொணர்ந்த தகவல்களைத் தோண்டித் துருவி ஊடகங்கள் பல வி¬ச யங்களை அம்பலப்படுத்திய தனாலேயே இது வெளிவந்தது.
அதாவது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட வசதிகள் பல வி-சயங்களை முழுமையாக மூடிமறைக்க முடியாதவையாக்கி உள்ளதன் விளைவாக வெளிவந்துள்ளதே இந்தக் கொள்ளை குறித்த தகவல்கள். அதன் விளைவாகவே ஆளும்கட்சி எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சிகளும் அரசியல் அரங்கில் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் நாடகங்கள் அனைத்தும் தற்போது அம்பலமாகிக் கொண்டுள்ளன.
முழுப் பூசணிக்காயைச் சேற்றில் மறைக்கும் முயற்சி
இந்நாடகத்தின் ஒரு சுவையான காட்சி பி.ஜே.பி. கட்சியின் எல்.கே.அத்வானி நடத்தும் யாத்திரை மூலமாக அரங்கேற்றப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போதைய யு.பி.ஏ. அரசின் கோளாறுகளில் ஒன்றாக அவர் யாத்திரையின் போது குறிப்பிட்டுள்ளது பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகிய அமைச்சர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பூசலாகும். அதனை அவர் இப்படி முக்கிய மந்திரிகள் தங்களுக்கிடையில் போட்டியிலும் பூசலிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் அரசு எங்கனம் முறையாக நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் இந்தப் பிரச்னையை இவ்வாறு முன்வைக்கும் விதத்திலேயே தன் கட்சியையும் பாதிக்கும் ஒரு முழுப் பூசணிக்காய் அளவிலான பிரச்னையை சேற்றுக்குள் அமுக்கப் பார்க்கிறார் என்பது தெளிவாகிறது.
உண்மைக்கு மதிப்பளிப்பவராக இருந்தால் அவர் இவ்வி¬சயத்தை வேறு வகையில் வெளிக் கொணர்ந்திருக்க வேண்டும். நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் என்று மாறி மாறி இருந்து கொண்டிருக்கக் கூடிய இவ்விருவருக்கும் அத்துடன் அவர்களது அமைச்சரவை சகாக்களுக்கும் இதுபோன்ற மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது எவ்வாறு தெரியாமல் இருந்திருக்கும்; அதுவும் தொலைத் தொடர்புத்துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு விற்கும் முறை தவறானது என்று குறிப்பிட்ட பின்னரும் அதைக் கண்டு கொள்ளாதிருந்தது எவ்வாறு ஒரு யதார்த்த நிகழ்வாக இருக்க முடியும்? என்று கொண்டு வந்திருக்க வேண்டும்.
அத்வானி அடக்கி வாசிப்பதன் பின்னணி
பிரணாப் முகர்ஜி அவர்கள் தனது அமைச்சகத்தின் சார்பாக தயாரித்துள்ள குறிப்பில் குறிப்பிட்டுள்ளது போல் இந்த ஒதுக்கீடு நடைபெற்ற காலத்தில் பல்வேறு சந்திப்புகள் அமைச்சர் ராசாவிற்கும் ப.சிதம்பரம் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்தால் அந்த சந்திப்புகளின் போது இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு வி¬யம் பேசப் படாமலா இருந்திருக்கும்? இதுபோன்ற வி¬சயத்தைப் பேசுவதை விடுத்து இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் தமிழ்நாட்டில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா என்றா பேசிக் கொண்டிருந்திருப்பர்? எனவே இதனை முழுமையாக விசாரித்து சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்றல்லவா அத்வானி கூறியிருக்க வேண்டும்.
அவரோ அவரது கட்சியோ அவ்வாறு உறுதியுடன் கூறக் கூடாது என்பதற்காகத்தான் அவரது கட்சி அமைச்சரவை இருந்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இதே முறையின் விளைவாக ஏற்பட்ட இழப்புகளையும் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறத் தொடங்கினர். எனவே தான் அத்வானி அவர்கள் அடக்கி அல்ல இப்பிரச்னையைத் திரித்து வாசிக்கிறார்.
இவ்வாறு ஒட்டுமொத்தத்தில் இந்திய அரசியல் அரங்கில் இரண்டாவது அலைக்கற்றை ஒதுக்கீட்டு வி¬சயத்தில் ஒரு மாபெரும் நாடகம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.
மக்கள் அனைவரும் ஆட்சியில் உள்ள ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கட்சியினர் அனைவரும் இதை நடத்திக் கொண்டிருப்பதால் அதில் முக்கியப் பாத்திரங்களாக வருபவர்களின் வாயிலிருந்து வெளிவரும் வசனங்களில் காணப்படும் அவர்களுக்குப் புரியாத பல தொழில் நுட்ப வார்த்தைகளினால் குழம்பி ஏதோ நடக்கிறது என்று எண்ணிக் கொண்டுள்ளனர். பலர் அந்நாடகத்தை நிஜமென்று நம்பி ஏமாந்து கொண்டுமிருக்கின்றனர்.