தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்தல்களின் மூலமாக மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப் படுவதில்லை. மேலும் மக்கள் முழுமையான சுதந்திர மனநிலையுடன் அவர்களுடைய பிரச்னைகளை மனதில் வைத்து இந்த அமைப்பில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதுமில்லை.

வெளிப்படையான அடக்குமுறை மூலம் அவர்களுடைய சிந்தனை சுதந்திரமானதாக இல்லாதவாறு ஆக்கப்படாவிட்டாலும் எழுத்து மற்றும் காட்சி ஊடகங்களால் அடிப்படைப் பிரச்னைகளாக இல்லாதவை பிரச்னைகளாக ஆக்கப்படுகின்றன. அனைத்து இல்லங்களிலும் மிகப் பெரும்பாலான சமயங்களில் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் மூலம் ஊடகங்களால் பரப்பப்படும் செய்திகளே மக்களின் மனதைப் பெருமளவு ஆக்கிரமித்து அவர்களது மனதில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பவையாக உள்ளன.

அவர்களாகவே சிந்தித்து அவர்களின் பிரச்னைகள் சார்ந்த கருத்துக்களை வகுத்தெடுத்துக் கொள்ள மிகக் குறைந்த வாய்ப்பே இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு உள்ளது. அதனால் பணபலமும் ஆளும்வர்க்க ஆதரவும் கிட்டும் ஊடகங்களின் பின்பலமும் கொண்ட உடைமை வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் கட்சிகளில் ஏதாவதொன்றே ஆட்சிக்கு வரும் என்ற சூழ்நிலையே தற்போது பொதுவாக நிலவுகிறது.

நம்பிக்கை ஊட்ட முடியாது

இந்நிலையில் இந்தத் தேர்தல்கள் மூலம் ஆட்சிக்கு வந்திருக்கும் அரசுகள் மக்களின் பிரச்னைகளை தீர்த்துவிடும் என்ற நம்பிக்கையை மக்களிடம் உருவாக்குவது சரியானதாக இராது. மேலும் ஆட்சிக்கு வரும் கட்சி எதுவாக இருந்தாலும் சட்டமன்றங்கள் நிரந்தரமாக இருக்கும் அரசு எந்திரத்தை இயக்கும் வேலையையே செய்கின்றன. அரசு எந்திரமோ உடைமை வர்க்கங்களின் நலன்களைப் பேணிப் பாதுகாப்பதற்காக மட்டுமே உருவாகி வளர்ந்ததாகும். அது அனைத்து மக்களின் நலன்பேணும் கருவியாக ஒருபோதும் ஆக முடியாது.

எனவே அதன் இயக்குனராக இருப்பவரின் உள்ளக் கிடக்கை எதுவாக இருந்தாலும் அதற்குகந்த விதத்தில் அரசு எந்திரம் செயல்படாது. இவ்வாறு உடைமை வர்க்கங்களின் அடிப்படை நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் வேலையை ஆற்ற அரசு எந்திரத்தை தங்குதடையின்றி அனுமதிக்கும் அதே வேளையில் சட்ட, நாடாளுமன்றங்கள் சில மக்கள் நலன் பேணுவதற்கு என்ற பெயரிலான அறிவிப்புகளை அவ்வப்போது செய்து தங்களால் தான் அனைத்து வேலைகளும் நடைபெறுகின்றன என்று காட்டிக் கொள்கின்றன.

அவ்வாறு அரசால் அறிவிக்கப்படும் திட்டங்களும் கூட அரசு எந்திரத்தின் மூன்று முக்கிய அங்கங்களில் ஒரு முக்கிய அங்கமான நிர்வாகத்தின் உடமை வர்க்கச் சார்பின் காரணமாக அத்தனை சுமூகமாக நிறை வேற்றப்படுவதில்லை. பல சமயங்களில் அரசாங்கங்கள் அறிவிக்கும் நலத் திட்டங்களின் பலன்கள் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து அரசு நிர்வாகத்தை நிர்ப்பந்தித்தால் மட்டுமே அவர்களுக்குக் கிட்டும் என்ற சூழ்நிலையே நிலவுகிறது.

இதுவே யதார்த்தமான நிலையாக நிலவும் போது அப்பட்டமான நாடாளுமன்றவாதக் கட்சிகளின் பாணியில் நாமும் வெற்றிபெற்ற கட்சியை வாழ்த்துவது அதற்கு இதைச் செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்று பரிந்துரைப்பது, அது அறிவித்துள்ள அல்லது முடக்கியுள்ள திட்டங்கள் குறித்து பூரிப்புடன் அல்லது வெறுப்புடன் கருத்துக்களை முன்வைப்பது ஆகியவற்றைச் செய்வது ஒரு வகையில் நம்மைப் பொறுத்தவரை அபத்தமானதாகவே இருக்கும்.

அதிமேதாவித்தனம் கூடாது

இதன் பொருள் எப்போதும் மற்றும் தற்போதும் நடந்துள்ள தேர்தல்கள் முக்கிய அரசியல் நிகழ்வுகளே அல்ல; அவற்றிற்கு எந்தவொரு முக்கியத்துவமும் தரத் தேவையில்லை என்று கருதுவதல்ல. அவ்வாறு கருதினால் அது ஒருவகை அதிமேதாவித் தனமானதாக இருக்கும். ஏனெனில் பொதுவாக மக்களும் குறிப்பாக உழைக்கும் மக்களும் இன்றுவரை தேர்தல்களை முக்கிய அரசியல் நிகழ்வுகளாகவே கருதுகின்றனர்.

அவற்றின் மூலம் ஏற்படும் வெவ்வேறு கட்சிகளின் ஆட்சிகள் கடந்த காலங்களில் தாங்கள் அன்றாடம் எதிர் கொள்ளும் விலையுயர்வு, வேலையின்மை போன்ற பிரச்னைகளைத் தீர்க்கவில்லை என்பதை அறிந்திருந்தும் உண்மையான மக்கள் சக்தியை ஒருங்குதிரட்டி அதன் கூட்டு வலிமையைப் பறைசாற்றி குறைந்த பட்சம் லத்தின் அமெரிக்காவின் பல நாடுகளில் நடைபெறுவது போல் தெருவில் அரங்கேறும் ஜனநாயகம் என்பது போன்ற ஒரு நிலையைக் கூட உழைக்கும் வர்க்க நலன் நாடும் நமது நாட்டின் கட்சிகள் செய்யாததால் மக்களின் கருத்து வேறு வழியின்றி இந்தத் தேர்தல்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பதாகவே இன்றுவரை உள்ளது. இந்த வெளிப்படையான உண்மையை பொறுப்புள்ள எந்த அமைப்பும் பார்க்காமலிருக்க முடியாது.

மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் சில அபாயகரமான வளர்ச்சிப் போக்குகள் கடந்த ஆட்சிக் காலத்தில் தோன்றி வளர்ந்தன. எங்கே அவை அப்படியே நிலைபெற்று விடுமோ என்ற அச்சம் சமூக நலன் நாடும் அனைத்துப் பகுதியினரையும் அப்போது ஆட்டிப் படைத்தது. எனவே தமிழகத் தேர்தல் முடிவுகளை அந்தக் கோணத்திலிருந்தும் அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பொதுவாக அரசாங்கங்களை அமைக்கும் கட்சிகள் நிலவும் முதலாளித்துவ அமைப்பிற்குச் சேவை செய்து முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த நலனைப் பேணும், பராமரிக்கும் வேலையைச் செய்பவையே. ஆனால் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக முன்பிருந்த தி.மு.கழகம் அந்த வரையறையைத் தாண்டி தானே ஒரு முதலாளித்துவ நிறுவனம் போல் செயல்படத் தொடங்கியது. ஆளும் கட்சித் தலைமைக் குடும்பத்தின் கைவசம் எளிதில் பணம் ஈட்டவல்ல அனைத்துத் தொழில் துறைகளும் சென்று சேர்ந்தன. அதனைச் செய்வதற்கு மாநிலத்தின் அரசு அதிகாரத்தில் அக்கட்சி இருந்ததும் மத்திய ஆட்சியில் அது அங்கம் வகித்ததும் பெருமளவு பயன்படுத்தப் பட்டது.

வாக்கிற்கு வழங்கப்பட்ட லஞ்சம்

இதன்மூலம் அது ஈட்டிய பணத்தின் ஒருபகுதி வாக்காளர்களுக்கு லஞ்சமாகக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், அதற்கு முன்பு நடைபெற்ற பல சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் வாரி வழங்கப்பட்டது. அதன் காரணமாகச் சாதிக்கப்பட்ட வெற்றிகள் எங்கே மக்களை தார்மீக நெறி இழந்தவர்களாக முழுமையாக ஆக்கி விட்டனவோ என்ற கவலை உண்மையான ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைத்தின் மனதிலும் இருந்தது.

இத்தகைய சீரழிவுப் போக்கும் அதன்மூலம் சாதிக்கப்படும் வெற்றியும் இந்தத் தேர்தலிலும் சாத்தியமானதாகி விட்டால் சமூகம் நேர்மை, ஒழுக்கம், சுய கெளரவம் ஆகியவற்றை இழந்த மதிப்புகள் எதுவுமில்லாத வெற்றுக் கூடுபோல் ஆகிவிடுவதோடு இந்தப் போக்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அனைத்துக் கட்சிகளாலும் கடைப்பிடிக்கப் படுவதாகவும் ஆகிவிடும் என்ற அச்சமும் அனைவர் மனதிலும் இருந்தது.

அவ்வாறு ஆகிவிட்டால் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி அவற்றின் அடிப்படையில் மக்களை அணிதிரட்டுவது என்ற ஆரோக்கியமான அரசியல் போக்கிற்கே இடமில்லாமல் போய்விடும் என்ற கவலையும் சமூக நலன் கருதுவோரை ஆட்கொண்டிருந்தது. எனவே தமிழகத் தேர்தல் முடிவுகளை அந்தக் கோணத்திலிருந்தும் வழக்கத்திற்கு மாறான ஒரு கூடுதல் ஆர்வத்துடன் உண்மையான உழைக்கும் வர்க்க சக்திகள் பார்த்தன.

இரண்டு இழப்புகள்

இந்தப் பின்னணியில் தமிழகத் தேர்தல் முடிவுகள் மக்களிடம் இடைக் காலத்தில் மறைந்திருந்ததும் இப்போது வெளிப்பட்டுள்ளதுமான சில ஆரோக்கியமான போக்குகளை வெளிப்படுத்தியுள்ளன. இந்தத் தேர்தல் முடிவுகள் முன்னாள் ஆளும் கட்சிக்கு இரண்டு இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஒன்று அதன் பதவி இழப்பு; மற்றொன்று அதன் பண இழப்பு; ஆளும் கட்சி வாக்காளர்களுக்கு வழங்க ஒதுக்கிய பெரும் தொகைகள் பல இடங்களில் அதனை வழங்க அக்கட்சியினால் நியமிக்கப் பட்டவர்களாலேயே விழுங்கி ஏப்பம் விடப் பட்டுள்ளன.

மக்களிடம் பரவலாக வழங்கப்பட்ட பணமும் அவர்கள் வாக்களிப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதற்கு ஒரு முக்கியக் காரணம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் ஆளும் கட்சி நடத்திய பண விநியோகம் அரசு நிர்வாகம் மற்றும் காவல் துறையின் முழு ஒத்துழைப்புடன் நடந்தது போல் இந்தமுறை நடைபெறவில்லை என்பதே.

வாக்கிற்குப் பணம் கொடுப்பது தமிழகத்தில் எத்தனை சாதாரணமாக நடைபெறுகிறது என்பது உலக அளவில் விக்கிலீக் போன்ற செய்தி நிறுவனங்களின் கசிவுகளால் அம்பலமானதும் அதனால் இந்தியாவில் தேர்தல் ஜனநாயகம் கேலிக் கூத்தாகி வருவது உலகம் முழுவதும் பேசப்படும் பொருளானதும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை ஓரளவிற்காவது இந்தமுறை செயல்படச் செய்தது. இல்லையயனில் தேர்தல் ஜனநாயகம் குறைந்தபட்ச அளவிற்குக் கூட மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாக இல்லை என்றாகியிருக்கும்; அது உடமை வர்க்கத்தின் நீண்டகால நலனுக்கு உகந்ததல்ல.

ஏனெனில் இந்த சமூக அமைப்பில் மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப் படாததால் அவர்களிடம் தோன்றும் அதிருப்தி தேர்தல் மூலம் நடைபெறும் ஆட்சி மாற்றங்கள் மூலமே ஓரளவு குறைக்கப்படுகிறது. அதற்கு வாய்ப்பே இல்லை; பணம் தான் தீர்மானிக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் தேர்தல்கள் மீதே நம்பிக்கையில்லாத ஒரு மனநிலை சமூகத்தில் ஆளும் வர்க்கத்தின் தேவைகளை உணர்ந்து பொதுக் கருத்தை உருவாக்குபவர்களுக்கே ஏற்பட்டு விடும்.

இத்தகைய அவநம்பிக்கை ஒரு சரியான புரிதலின் அடிப்படையில் மக்களிடம் ஏற்பட்டால் அது ஆரோக்கியமானதாக இருக்கும். ஏனெனில் உணர்வுபூர்வமாக அந்நிலையில் மக்கள் அவர்களின் உண்மையான மாற்று அதிகார அமைப்புகளை ஏற்படுத்த முடிந்தவர்களாக இருப்பர். அது இல்லாத சூழ்நிலையில் ஏற்படும் இந்த அவநம்பிக்கை ஆக்கபூர்வ வளர்ச்சிப் போக்குகளுக்கு இடமளிக்காது.

மேலும் பணம் வாங்கி வாக்களிப்பதால் பாழ்பட்டுப்போன மனநிலையிலிருக்கும் உழைக்கும் மக்கள் அத்தகைய உண்மையான மக்கள் அதிகாரத்தைப் பிரதிபலிக்கும் மாற்று அமைப்புகளைப் பற்றிச் சிந்திப்பதற்குக் கூட திராணியற்றவர் ஆகிவிடுவர்.

அந்த அடிப்படையில் முன்னாள் ஆளும் கட்சிக்கு இந்தத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மக்களின் தார்மீக முதுகெலும்பு முறிபட்டுப் போய்விட வில்லை என்பதைத் திட்டவட்டமாகப் பறை சாற்றியது. அது மிகப் பெரிய ஆறுதலையும் நிம்மதிப் பெரு மூச்சையும் உழைக்கும் வர்க்க சக்திகளிடம் உருவாக்கியது. அதாவது கடந்த தேர்தல்களிலெல்லாம் பணம் பெற்றுக் கொண்டு மக்கள் வாக்களித்திருந்தாலும் அதனை ஒரு குற்ற உணர்வுடனேயே செய்துள்ளனர் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

அதானல்தான் தேர்தல் ஆணையம் ஓரளவு நடுநிலையான நிர்வாகத்தைத் தேர்தல் காலத்தில் இருப்பதாகக் காட்டியவுடன் மக்கள் தங்களது மனக் குமுறல்களை ஆளும் கட்சிக்கு எதிராக வெளிப்படுத்தியுள்ளனர். அத்தகைய குற்ற உணர்வின்றி மக்கள் இருந்திருந்தால் நமக்குக் கிடைக்கவிருந்த பணத்தைத் தடுத்து விட்டார்கள் என்ற அற்பத்தனமான கோபத்தில் முன்னாள் ஆளும் கட்சிக்கே பெருமளவு வாக்களித்திருப்பர்.

சாதிக் கட்சிகளின் பின்னடைவு

அத்துடன் இத்தேர்தல் முடிவு சமூக நீதி என்ற பெயரில் மக்களை ஜாதிய ரீதியாகப் பிளவுபடுத்தி அதில் குளிர்காய்ந்து வந்த பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் எதிரானதாக இருந்துள்ளது. ஜாதிய அரசியலையே முழுமையாக நம்பியிருந்த பா.ம.க., வி.சி.க. போன்ற கட்சிகளை மக்கள் இந்தத் தேர்தலில் முழுமையாகப் புறக்கணித்துள்ளனர்.

இதுபோன்ற சாதக அம்சங்கள் உருவாக்கியுள்ள சூழலை உழைக்கும் வர்க்கக் சக்திகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அவ்வாறு முன்வந்து மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகள் சார்ந்த வி­யங்களை அடிப்படையாகக் கொண்டு மக்கள் இயக்கங்கள் கட்டி அவர்களிடம் மீண்டும் ஓரளவிற்கு ஏற்பட்டுள்ள நேர்மை, கெளரவ உணர்வைப் பயன்படுத்தி சமூக விஷ‌யங்களில் அவர்களது ஈடுபாட்டை அதிகரிக்க ஏற்பாடு செய்து அதன்மூலம் சமூகமாற்ற சிந்தனை ஏற்படுவதற்கான பின்புலத்தை உருவாக்க வேண்டும்.

அவ்வாறு உருவாக்காவிட்டால் ஆட்சியிலிருக்கும் எந்தக் கட்சியும் அதனைத் தனது சுயலாபத் தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்தி ஏதாவது ஒரு வகையில் அந்த நேர்மை உணர்வையும் சுயகெளரவத்தையும் பாழ்படுத்தவே விரும்பும். ஏனெனில் கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளி வர்க்கத்திற்கு மக்கள் நேர்மை உணர்வுடன் இருப்பதே ஒரு உறுத்தல்தான். சுயலாப முதலாளித்துவக் கலாச்சாரத்தைக் கொண்டு தன்னல வாதத்தையும் தனிமனிதப் போக்கினையும் சக மனிதனைப் புறம் தள்ளியாவது தான் வாழ வேண்டும் என்ற சமூக விரோத மன நிலையையும் மக்களிடம் வளர்ப்பதையே ஆளும் முதலாளி வர்க்கம் இன்றைய நிலையில் அதன் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

எனவே அந்த ஆளும் வர்க்கத்திற்குச் சேவை செய்ய முன்வரக் கூடிய கட்சிகள் ஏதாவது ஒரு விதத்தில் இப்போக்குகளுக்கு உறுதுணையாக நிற்பது தவிர்க்க முடியாமல் நிகழ்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனை உணர்ந்து விழிப்புணர்வுடன் செயல்படுவதற்கு ஒரு பெரு மூச்சுவிடும் இடைவெளியை தமிழகத் தேர்தல் முடிவுகள் உண்மையான உழைக்கும் வர்க்க சக்திகளுக்கு வழங்கியுள்ளது. இதையே மாற்றுக் கருத்து தமிழகத் தேர்தல் முடிவுகள் குறித்த தனது கருத்தாக மக்களிடம் வைக்க விரும்புகிறது.

Pin It