தமிழ்ச் சமூகத்தை ஒட்டுமொத்தச் சீரழிவிலிருந்து காக்க ஆளும் கட்சியின் தோல்வியை உறுதி செய்வதே ஒரே வழி 

தமிழகம் உட்பட 5 சட்ட மன்றங்களுக்கான தேர்தல்கள் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை கட்சிகளின் அணிச் சேர்க்கைகள் முடிந்து தேர்தல் அறிக்கைகள் பல்வேறு கட்சிகளால் வெளியிடப்பட்டுள்ளன. ஆளும் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு இலவசமாக வெட்கிரைண்டர் அல்லது மிக்சி இந்த முறை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. எதிர்க்கட்சி அவ்விரண்டினையும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதாகக் காட்டும் விதத்தில் நடவடிக்கைகள் பலவற்றை அறிவித்துச் செயல்படுத்திக் கொண்டுள்ளது. மதுரை மத்தி மற்றும் மேற்குத் தொகுதி இடைத் தேர்தல்களில் ஒத்திகை பார்க்கப்பட்டு திருமங்கலம் இடைத் தேர்தலில் அதன் உச்சகட்ட வடிவில் அரங்கேற்றப்பட்டு கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரப்பட்ட வாக்குகளுக்குப் பணம் வழங்கும் ஆளும் கட்சியின் போக்கு ஒளிவுமறைவின்றி அம்பலமாகி விட்டதால் அதைத் தடுப்பதற்கான பிரத்யேக நடவடிக்கைகள் என்ற பெயரில் பறக்கும் படை அமைத்துப் பணம் வழங்குவதாகத் தகவல் வந்தால் அவ்வாறு வழங்கப்படுவதாகக் கூறப்படும் இடங்களுக்குப் பறந்து சென்று அதைக் கைப்பற்றி தேர்தல் முறையாக நடக்க வழிவகுக்கப் போவதாக தேர்தல் ஆணையம் காட்டிக் கொள்கிறது.

அந்த அடிப்படையில் கூடுதல் பணங்களுடன் பயணிப்பவர்கள் வாகனச் சோதனைகளில் மாட்டிக் கொண்டிருக்கும் செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய செய்திகளில் பல வங்கிகளின் ஏ.டி.எம் களில் வைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட பணம் குறித்தவை, பணம் கொண்டு சென்றவர், அதனை ஏற்றிச் சென்ற வாகனம் அத்துடன் மாவட்ட ஆட்சியாளர்கள் நின்று போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் மாநிலப் பத்திரிக்கைகளின் மாவட்டச் செய்திகளின் பக்கங்களை அலங்கரித்துக் கொண்டுள்ளன.

மாறுபட்ட சூழ்நிலை

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த முறை தேர்தல் நடைபெறவுள்ள வேளையில் நிலவும் சூழ்நிலையும் பின்னணியும் இதுவரை இருந்தவற்றிலிருந்து பெரிதும் மாறுபட்டதாக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஆளும் கட்சி தேர்தல் நடைபெறும் சமயங்களில் அவர்களது ஆட்சியில் முறைகேடாகச் செய்தவை, செய்ய வேண்டிய பலவற்றைச் செய்யத் தவறியவை போன்றவற்றிற்கே பெரும்பாலும் பதில் கூற வேண்டிய கட்டாயமும் நிர்ப்பந்தமும் கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த முறை தமிழகத்தின் ஆளும் கட்சி எதிர் கொண்டுள்ள பிரச்னை இதுபோல் சாதாரணமானதல்ல.

2ஜி அலைக்கற்றை ஊழல்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமைந்த மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தமிழக ஆளும் கட்சி சார்பில் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்ட அ.ராசா தொலைத் தொடர்புத் துறையில் இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை உரிமம் வழங்குவதில் முறைகேடாக நடந்து அத்துறைக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பினை ஏற்படுத்தியுள்ளார் என்ற தகவல் இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியினால் வெளியிடப்பட்டது. அந்தப் பின்னணியில் அதனை முறையாக விசாரித்து உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டும் என்று பொது நல வழக்குகள் தொடுக்கப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் அவ்விசாரணை பல கட்டங்களாகத் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அ.ராசாவும் அவரிடம் முறைகேடாக உரிமம் பெற்றார் என்று கருதப்படும் ஸ்வான் நிறுவனத் தலைவர் பல்வா என்பவரும் கைதாகிச் சிறையிலடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அது தொடர்பாக தமிழக முதல்வரின் குடும்ப உறுப்பினர்களான அவரது முதல் மனைவியும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள இரண்டாவது மனைவியின் புதல்வியும் விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டு உள்ளனர். அதாவது அவ்விருவரும் அதிபர்களாக இருக்கும், அண்ணா அறிவாலயத்தைத் தலைமையிடமாகக் கொண்ட கலைஞர் தொலைக் காட்சிக்கு பல்வா அதிபராக இருக்கும் ரியல்ட்டி நிறுவனத்திடமிருந்து ரூபாய் 214 கோடி சென்றது குறித்து அவ்விசாரணை நடைபெற்றுக் கொண்டுள்ளது.

தற்கொலை

அத்துடன் மிகச் சமீபத்தில் அ.ராசாவிற்குச் சொந்தமான கிரீன் ஹவுசிங் என்ற நிறுவனத்தின் பொது மேலாளராகவும் ராசாவின் நண்பராகவும் இருந்த அலைக்கற்றை முறைகேடு குறித்து முதல்கட்ட விசாரணைக்கு ஆட்பட்டிருந்த சாதிக் பாட்சா இரண்டாவது கட்ட விசாரணைக்கு அழைக்கப்பட்ட வேளையில் தற்கொலை செய்து கொண்டது மற்றொரு பின்னடைவை ஆளும் கட்சிக்கு ஏற்படுத்தியுள்ளது. அதுதவிர முதல்வரின் இரண்டாவது மனைவி மதிப்பு மிக்க வீட்டு மனைகளை டாட்டா குழுமத்திடமிருந்து குறைந்த விலைக்குத் தனது பினாமி மூலம் பெற்றார் என்று ஊடகங்களால் வெளியிடப்பட்ட செய்திகளும் ஆளும் கட்சிக்கு இத்தேர்தலைச் சந்திப்பதில் பெரும் தலை வலியை ஏற்படுத்தியுள்ளன.

எப்படியும் வென்றாக வேண்டும் என்ற நிலை

இந்தப் பின்னணியில் முறையாகத் தேர்தல் நடந்தால் ஆளும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு மிகமிகக் குறைவு. ஆனால் ஆளும் கட்சியைப் பொறுத்தவரை எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாக வேண்டும். ஏனெனில் இச்சூழ்நிலையில் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் அது பல வி­யங்களைத் தோண்டித் துருவும் வாய்ப்பு ஏற்படும். அதைக் கருதித்தான் கூடுதல் மற்றும் குறித்த தொகுதிகள் கேட்டு நிர்ப்பந்தம் கொடுத்த காங்கிரஸ் கட்சியை வழிக்குக் கொண்டுவர மத்திய அரசிலிருந்து தங்களது அமைச்சர்கள் விலகுவர் என்று ஜம்பமாக முதலில் அறிவித்த ஆளும் கட்சி அதன் பின்னர் அந்தர் பல்டியடித்து காங்கிரஸிற்குக் கூடுதல் தொகுதிகள் மட்டுமல்ல குறிப்பிட்ட தொகுதிகளையும் கொடுக்க முன் வந்துள்ளது.

இத்தனை சாதக நிலைகள் எதிர்க் கட்சிக்குக் கிடைத்திருந்தாலும் அக்கட்சியும் உறுதியாக ஆட்சிக்கு வந்துவிடும் என்று கூற முடியாத நிலையே நிலவுகிறது. அதற்குக் காரணம் தமிழக வாக்காளர்களே ஆளும் கட்சி செய்த அத்தனை முறை கேடுகளையும் பொருட்படுத்தாமல் அக்கட்சிக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர் என்பதல்ல. கடந்த நான்காண்டு காலமாக தமிழகத்தின் ஜனநாயக சக்திகளை அதிர்ச்சிக்கு ஆட்படுத்தியிருக்கும் ஒரு வி யம் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. இதுவரை யாரும் எண்ணிப் பார்த்திராத தொகைகளைக் கையூட்டாக வாக்காளர்களுக்குக் கொடுக்கும் போக்கே அது. அதுதான் ஆளும்கட்சி உறுதியாகத் தோற்கும் என்று கூற முடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

பணம் கொடுத்தால் மட்டுமே வெற்றி

ஆளும் கட்சியினர் தாங்கள் அறிவித்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் இலவசத் திட்டங்கள் வாக்காளர்களைத் தங்களுக்குச் சாதகமானவர்களாக ஆக்கியுள்ளது என்று எவ்வளவு கூறினாலும் அந்த இலவசத் திட்டங்கள் அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு விலை உயர்வு ஏற்பட்டு மக்களின் வாழ்க்கை அலைக்கழிப்பிற்கு ஆளாகியுள்ளது. எனவே வாக்கிற்குப் பணம் கொடுத்தால் தவிர வேறெந்த வகையிலும் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பதே தற்போதைய நிலை. இந்தப் பின்னணியிலேயே தமிழகத் தேர்தல் களம் ஏப்ரல் 13ஐ எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

அடிப்படைப் பிரச்னைகள்

தேர்தல்களே ஐந்தாண்டு காலத்திற்கு மக்களின் தலை விதியைத் தீர்மானிக்கின்றன; ஜனநாயகத்தின் முதுகெலும்பும் அதுவே என எவ்வளவு உச்சத்திலும் உயரத்திலும் வைத்துப் பேசப்பட்டாலும் மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைப் பொறுத்தவரை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருபவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே உண்மை. வேலையின்மை, விலையுயர்வு ஆகியவையே நமது மக்கள் எதிர் கொண்டிருக்கும் மிகவும் அடிப்படைப் பிரச்னைகள். யாருடைய ஆட்சியும் அவற்றை இல்லாமற் செய்யவில்லை என்பதே நமக்கு நமது நடைமுறை அனுபவம் உணர்த்தும் உண்மை.

தற்போது எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் ஆளும் கட்சியினர் மீது இவற்றைத் தீர்க்கத் தவறி விட்டனர் என்று எவ்வளவு குறை கூறினாலும் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்களாலும் தீர்க்கப்பட முடியாதவைகளாகவே அப்பிரச்னைகள் உள்ளன. இதன் பொருள் ஆளும் கட்சியாக ஆகும் கட்சிகள் இவற்றைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதிருக்கின்றன என்பதல்ல. அவை எவ்வளவு விரும்பினாலும் கூட அவற்றால் அதனைச் செய்ய முடியாது என்பதே.

தீர்க்க முடியாதவையல்ல

இவ்வாறு நாம் கூறும் போது மற்றொரு கேள்வி எழ வாய்ப்பிருக்கிறது. அதாவது இப்பிரச்னைகள் யாராலும் எப்போதும் தீர்க்க முடியாதவையா? அதுவும் உண்மையல்ல. வேலையின்மையும் விலையுயர்வும் அறவே இல்லாதிருந்த சமூக அமைப்புகளும் உலகின் பல நாடுகளில் ஏற்கனவே இருந்திருக்கின்றன. எனவே அவை தீர்க்க முடியாதவையல்ல. அவ்வாறானால் இவை சமூக அமைப்பு சார்ந்த பிரச்னைகள்; ஆட்சி சார்ந்த பிரச்னைகள் அல்ல.

சமூகங்கள் மாறும் போது அவற்றிற்குகந்த ஆட்சி முறைகள் உருவாகின்றனவே தவிர உருவாகும் ஆட்சிகள் சமூக மாற்றங்களை உருவாக்குவதில்லை. தற்போதுள்ள சமூகம் அடிப்படையில் கோளாறானதாக உள்ளதாலேயே இப்பிரச்னைகள் உள்ளன. சமூகத்தின் அத்தகைய அடிப்படைக் கோளாறுகளை அகற்றுவதன் மூலம் மட்டுமே இப்பிரச்னைகளைத் தீர்க்க முடியும். உருவாகும் ஆட்சிகளும் அவற்றிற்கு உதவி புரியும் தேர்தல்களும் கோளாறுகளுடன் இருக்கும் இந்த அமைப்பிற்குச் சேவை செய்யக் கூடியவையே தவிர கோளாறுகளை அகற்றும் திராணியுள்ளவை அல்ல.

இதுதான் இனிமேல் விலை

எடுத்துக்காட்டாக ஒரேயொரு  வியத்தைப் பார்த்தால் நிலவரம் நமக்கு நன்கு புரியும். சமீபத்தில் பல விவசாய விளை பொருட்களின் விலைகள் கண் மண் தெரியாமல் உயர்ந்தன. யதார்த்தமாக அவ்வப்போது விளைச்சல் குறைவாக உள்ள காலங்களில் பற்றாக்குறை காரணமாக அத்தகைய விலையுயர்வுகள் ஏற்படும். அப்பற்றாக்குறை அகன்ற பின் விலை ஓரளவு குறைந்துவிடும். அப்படியானால் அப்பற்றாக்குறை அகல்வதற்கு அரசுகள் பாடுபட வேண்டும். அதாவது குறைந்த பட்சம் பற்றாக்குறை அதாகவே நீங்குவதற்கான சூழல் உருவாகும் வேளைகளில் எதிர்மறையாகத் தலையிடாமலாவது இருக்க வேண்டும். கடும் விலையுயர்விற்குப் பின் காய்கறிகளின் குறிப்பாக வெங்காயத்தின் விலை அதன் வரத்து சந்தையில் அதிகரித்தவுடன் சற்றே குறைந்தது. உடனேயே வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கத் தொடங்கி வெங்காயத்தின் உள்நாட்டுச் சந்தைக்கான வரத்தைக் கட்டுப் படுத்திவிட்டது. எனவே இறங்கிய விலை ஒரு நிலையில் அப்படியே நின்று அதுதான் இனிமேல் விலை என்றாகிவிட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அரிசி விலை உயர்வும் அவ்வாறே இதுதான் இனிமேல் விலை என்ற வகையில் நின்றுவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த விலை உயர்வின் பலன் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் ஒரு மிகச்சிறு பகுதியே செல்கிறது. மீதி எல்லாம் கமின் கடைக்காரர் போன்ற இடைத்தரகர்களுக்குச் செல்கிறது. அந்த இடைத்தரகரின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்தே அரசாங்கங்கள் எதிர்மறையாக, பரந்துபட்ட மக்களின் பாதிப்பைக் கருதாமல் இதில் வியாபாரிகளுக்கும் இடைத் தரகர்களுக்கும் சாதகமாகத் தலையிடுகின்றனர். ஏனெனில் இந்த அரசு அந்த வர்க்கங்களுக்காகவே அடிப்படையில் உருவாகி வளர்ந்ததாகும். எனவே தான் நாம் கூறுகிறோம் விலையுயர்வு போன்ற அடிப்படைப் பிரச்னைகள் தேர்தல்கள் மூலம் அமையும் அரசாங்கங்களால் தீர்க்கப்பட முடியாதவை என்று.

அதைப் போன்றது தான் வேலையின்மையும். வேலை வாய்ப்புகள் இச்சமூக அமைப்பில் உருவாவது இங்கு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனையாவதைப் பொறுத்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி தொடர்ச்சியாக முதலாளித்துவச் சுரண்டல் காரணமாகச் சூறையாடப் படுவதால் பரந்த அளவில் மக்களிடம் வாங்கும் சக்தி இருப்பதில்லை. எனவே புது வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் தேவைப்படும் எண்ணிக்கையில் புதுப்புது ஆலைகள் திறக்கப் படுவதில்லை. அதனால் வேலையின்மை நிலவுகிறது.

உழைப்புத் திறனும் சந்தைச் சரக்கே

இச்சமூக அமைப்பில் மக்களின் உழைப்புத் திறனும் சந்தைச் சரக்காக இருப்பதால் கூடுதல் எண்ணிக்கையில் வேலையில்லாதோர் இருப்பது பொருளுற்பத்தி செய்வோருக்குக் குறைந்த கூலிக்கு வேலை செய்ய ஆள் கிடைப்பதற்கு ஏதுவாகிறது. எனவே வேலையின்மை என்ற மக்களின் அடிப்படைப் பிரச்னையையும் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் அவை புதுப்புது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக விண்ணளவு முழங்கினாலும் தீர்க்க முடியாது.

பேணி வளர்க்கப்படும் மாயை

இருந்தாலும் கூடத் தேர்தல்கள் குறித்த ஒரு எதிர்பார்ப்பு அது மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்கும் என்ற மாயை மக்களிடையே பேணி வளர்க்கப்படுகிறது. அதில் முக்கியப் பங்கினை இங்கு கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் கட்சிகளும் வகிக்கின்றன. இயக்கப் பாதையை விட்டுச் சிறிது சிறிதாக விலகி நாடாளுமன்றவாத அரசியலே தங்களது ஒட்டுமொத்த அரசியலும் என்று ஆகிவிட்ட அக்கட்சிகள் “சரியான கொள்கைகள் கடைப்பிடிக்கப் பட்டால் மக்களின் அடிப்படைப் பிரச்னைகளும் தீர்க்கப்பட முடியும்” என்ற வாதத்தை முன்வைத்து ஒருவகை மாயையை உருவாக்குகின்றன. அப்படியானால் அப்பிரச்னைகளை ஏன் நீங்கள் ஆட்சி செய்யும் மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்களில் தீர்க்கவில்லை என்ற கேள்வி எழுந்தால் நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் அவற்றைத் தீர்த்து விடுவோம் என்று கூசாமல் பொய் கூறுகின்றனர். அதாவது முதலாளித்துவ வேலிக்குச் சாட்சி கூறும் ஓணான்களாக இக்கட்சிகள் ஆகிவிட்டன.

அரசு எந்திரத்தின் இயக்குனரே அரசாங்கம்

அப்படியானால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் எதற்காகத்தான் இருக்கின்றன? வரலாற்றின் பல கட்டங்களாக வளர்ச்சியடைந்து இன்று ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இருக்கும் அமைப்பிற்குத் தேவையான நிர்வாகம், நீதியமைப்பு, போலீஸ் ராணுவம் போன்ற நிரந்தர அங்கங்களைக் கொண்ட அரசு இயந்திரத்தை இயக்குவதற்காகவே அவை உள்ளன. அதாவது சமூகம் ஆதார கம்யூனிஸம், அடிமை அமைப்பு, நிலவுடைமை அமைப்பு ஆகிய கட்டங்களைக் கடந்து இன்று முதலாளித்துவம் என்ற கட்டத்தில் உள்ளது. அந்த முதலாளித்துவத்திற்கு அவசியமான நிர்வாகத்தைப் பல முனைகளில் நடத்துவதற்கு நீண்டகால அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அரசு இயந்திரம் உருவாக்கப் பட்டுள்ளது. அதனை இயக்கும் இயக்குனர் என்ற இடத்தில் செயல்படுவதாகவே அரசாங்கம் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு வடிவமைக்கப்பட்டதொரு எந்திரத்தை இயக்கும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப் பட்டாலும் அவர் அதனை இயக்கும் போது அது எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அந்த வேலையைச் செய்யுமே தவிர இயக்குபவரின் மனநிலையையோ, விருப்பத்தையோ அது பிரதிபலித்துச் செயல்படாது. அதாவது தற்போதுள்ள முதலாளித்துவ நலன்களைப் பேணுவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ள அரசு இயந்திரம் அதனை இயக்குபவனாக கம்யூனிஸ்ட் என்று தன்னைக் கூறிக்கொள்ளக் கூடிய ஒருவன் நியமிக்கப்பட்டு அவன் அதனை இயக்கும் போதும் அது அடிப்படையில் எதற்காக உருவெடுத்ததோ அந்த முதலாளித்துவ நலன் கருதிச் செயல்படுவதைச் செய்யுமே தவிர அனைத்து மக்களின் நலன் கருதி அது செயல்படாது; அதனால் அவ்வாறு செயல்படவும் முடியாது.

பொய் நம்பிக்கை

ஆனாலும் அரசாங்கங்கள் நடுநிலையாக அனைத்து மக்களுக்காகவும் செயல்படக் கூடியவை; அவற்றால் மக்களின் அனைத்துப் பிரச்னைகளையும் போக்க முடியும் என்ற நம்பிக்கையை நமது ஊடகங்களும், கருத்தியலாளர்களும் உருவாக்கிப் பராமரிக்கின்றனர். அவர்கள் அவ்வப்போது வரி மூலம் வரும் வருமானம் அனைத்தையும் அரசு ஊழியர்களுக்கே ஊதியம் வழங்கிச் செலவழித்து விட்டால் அரசாங்கம் மக்களுக்கு எதைச் செய்ய முடியும் என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொள்கின்றனர். அதன்மூலம் அரசாங்கமே அனைத்தும் என்ற பொய் நம்பிக்கையைப் பரப்பிப் பராமரிக்க முயல்கின்றனர்.

அதே சமயத்தில் முதலாளித்துவத்தின் அடிப்படை நலனையும் அதன் பாதுகாப்பையும் மனதிற்கொண்டு மக்கள் நலத்திட்டங்கள் என்ற பெயரில் சில திட்டங்களையும் அரசாங்கங்கள் செயல்படுத்துகின்றன. நமது மாநிலத்தின் பல இலவசத் திட்டங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குவது போன்ற திட்டங்களும் இந்த ரகத்தைச் சேர்ந்தவையே. இத்திட்டங்களின் மூலம் மக்களிடையே உருவாக வாய்ப்புள்ள ஏற்றத் தாழ்வு நிறைந்த இந்த அமைப்பினை எதிர்த்த கிளர்ச்சி மனநிலையை மட்டுப்படுத்த விரும்புகின்றனர். இன்னொரு விதத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என்ற திட்டம் முதலாளிகளுக்கு மறைமுகமாக வழங்கப்படும் மானியம் போலவும் ஆகிறது. அதாவது இந்த அமைப்பில் உழைப்பவர்களுக்கு உடைமையாளர்களால் வழங்கப்படும் ஊதியம் அவர்களது அத்தியாவசியத் தேவைகளைக் கணக்கிற் கொண்டதாக மட்டுமே உள்ளது. அத்தகையதொரு அத்தியாவசியத் தேவையான உணவு மானிய விலையில் ஏழைகள் என்ற ரீதியில் உழைக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டு விடுவதால் குறைந்த கூலி வழங்கினாலே போதும் என்ற சாதக நிலையை உடைமையாளர்களுக்கு அது ஏற்படுத்தித் தருகிறது.

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது

இவ்வாறு உடைமையாளர்களின் நலனைக் கருத்திற் கொண்டு இயங்கும் அரசு இயந்திரமும் அதனை இயக்கும் பொறுப்பில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்ற ரீதியில் மாறி மாறி அரசாங்கங்கள் அமைத்து ஆட்சிக் கட்டிலில் அமரும் அரசியல் வாதிகளும் படிப்படியாக ஊழல் மலிந்தவர்களாக மாறுவது தவிர்க்க முடியாமல் நடைபெறுகிறது. ஏனெனில் இந்த அமைப்பில் லாபம் என்ற பெயரில் முதலாளிகள் ஈட்டுவதே ஒரு சட்ட ரீதியாக்கப்பட்ட கொள்ளை. அதனை அதிகபட்சமாக்குவதற்கு உடைமையாளர்களுக்குப் பயன்படும் ஒரு சாதனம் லஞ்சம் வழங்குவது. சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிப்பதற்காக இதுபோன்ற லஞ்சத் தொகைகளை அவர்கள் பொருட்படுத்தாமல் கொடுப்பதால் அரசு நிர்வாகம் மற்றும் அரசியல் வாதிகளின் சீரழிவு தங்கு தடையின்றித் தொடர்கிறது.

அதுபோல் தங்களது சம்பாத்தியத்திற்காகப் பணம் வாங்கிப் பழக்கப்பட்டுப் போகும் அரசு இயந்திரத்தின் பங்கும் பகுதியுமான ஊழியர்கள் சாதாரண மக்களிடம் அவர்கள் சிறுசிறு வேலைகளுக்காக அரசு நிர்வாகத்தை அணுகும் போது லஞ்சம் கேட்டுப் படுத்தியெடுக்கின்றனர். இவ்வாறு சம்பாதிப்பதற்கு உருவாகியுள்ள வாய்ப்பே இன்று பலரை அரசியல் பக்கம் கவர்ந்திழுக்கும் சக்தியாக விளங்குகிறது.

சீரழிவின் மாதிரி

இன்றைய ஆளும் கட்சியாக விளங்கும் தி.மு.கழகம் இத்தகைய சீரழிந்த போக்கின் மாதிரி என்று கூறினால் அது மிகையாகாது. அவ்வாறு அக்கட்சி கூச்ச நாச்சமின்றி லஞ்ச ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஆனதற்குப் பல புறச் சூழ்நிலைகளும் காரணங்களாக இருந்திருக்கின்றன. முதற்கண் இந்திய வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வான 400 ஆண்டுகால அன்னிய அடிமைத் தனத்தை எதிர்த்த போராட்டத்தில் அக்கட்சிக்கு எவ்விதப் பங்களிப்பும் இல்லை. ஏனெனில் அது ஒரு கட்சியாக உருவெடுத்ததே விடுதலைக்குப் பின்புதான். அக்கட்சியின் தாய்க்கட்சியாக விளங்கிய திராவிடர் கழகத்தின் நிறுவனர் பெரியார் விடுதலைப் போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அப்போது அவருடன் இருந்து பின்னர் தி.மு.கழகத்தின் ஸ்தாபகர்களாக ஆன யாரும் அவருடன் இணைந்து விடுதலைப் போரில் கலந்து கொண்டதில்லை.

பின்னர் பிராமண எதிர்ப்பினை முன்னிலைப் படுத்திச் செயல்படத் தொடங்கி வெள்ளையரிடமிருந்தான விடுதலை தேவையில்லை என்று பெரியார் கூறிய நிலையில் அவர் அவரது திராவிடர் கழக அமைப்பை ஒரு இயக்கமாகத் தொடர விரும்பினாரே தவிர தேர்தலில் பங்கேற்கும் ஒரு கட்சியாக ஆக்க விரும்பவில்லை. தேர்தல் அரசியல் தனது அமைப்பைச் சீரழித்து விடும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்ததனால் அவர் அத்தகைய முடிவை எடுத்தார்.

வெற்றுப் புகழாரங்கள்

தி.மு.கழகத்தை அத்தகைய தொற்று நோய் எளிதில் பற்றிக் கொள்ள வாய்ப்பிருந்ததை உணர்ந்ததனால் தான் அவர் தி.மு.கழகம் தேர்தல் அரசியலில் நிலைபெற்ற சக்தியாக ஆனபோதும் அதனை ஆதரிக்கவில்லை. மாறாக காமராஜர் தலைமையிலான காங்கிரஸையே ஆதரித்தார். மேலும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்புகளைச் சேர்ந்த பலரே அவரது உளப்பூர்வ நண்பர்களாக இறுதிவரை இருந்தனரே தவிர தி.மு.க. தலைவர்கள் யாரும் அவ்வாறு இருக்கவில்லை. பெரியார் குறித்து எத்தனை புகழாரங்கள் தற்போதைய தி.மு.க. தலைவர்கள் சூட்டினாலும் அவர்கள் அவர் பொது வாழ்க்கையில் கடைப்பிடித்த மதிப்புகளை மேலோட்டமாகக் கூடக் கடைப்பிடிக்கவில்லை.

சுதிக்கேற்ற வகையில் ஆடும் அமைப்பு

இவ்வாறு எந்தப் பாரம்பர்யமும் தியாக வரலாறும் இல்லாத தி.மு.கழகத்தை உடனடியாகப் பெரிய அமைப்பாக்கியது தமிழ் நாட்டின் பிராந்திய முதலாளி வர்க்கமே. அதாவது தங்களது நலன் அகில இந்திய முதலாளி வர்க்கத்தின் மூலதன வலுவால் பாதிப்பிற்காளாகி விடும் என்று அஞ்சிய பிராந்திய முதலாளிகள் அவர்களின் சுதிக்கு ஏற்றபடி ஆடவல்ல அமைப்பாகத் தி.மு.கழகத்தைப் பார்த்தனர். தி.மு.கழகத் தலைமையும் பிராந்திய முதலாளிகள் விரும்பியவாறெல்லாம் தங்களது அமைப்பின் முழக்கங்களை மாற்றி பிராந்திய முதலாளிகளின் நம்பிக்கைக்குரிய ஏஜெண்டாகவே மாறியது.

தேனும் தலையும்

இவ்வாறு வளர்ச்சியடைந்த தி.மு.கழகத்தின் தலைமைக்கும் அதன் கீழ்த்தட்டு நிர்வாகிகளில் பெரும் பாலோருக்கும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அன்றைய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்தவர்களிடம் காணப்பட்ட தரமும் மதிப்புகளும் இயல்பாகவே இருக்கவில்லை. ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும் அதனை நியாயப் படுத்துவதிலும் அவர்களுக்கு அத்தனை கூச்சமிருக்கவில்லை. அதாவது தேன் பானையில் கையை விட்டவன் தேனை ருசிக்கவே செய்வான்; தலையில் தடவிக் கொள்ள மாட்டான் என்று அதன் தலைவர்களில் பலர் வெளிப்படையாகவே ஊழலை நியாயப்படுத்தினர். அந்தப் போக்கே இன்று வளர்ந்து எதுவெல்லாம் ஊழல் செய்ய வாய்ப்புள்ள துறைகள் எனப் பார்ப்பதிலும் அவற்றைக் கோரிப் பெற்றுச் சம்பாதிப்பதிலும் சென்று முடிந்துள்ளது.

கட்சிக்குள் ஏகபோகம்

இந்தப் பின்னணியில் தோன்றி வளர்ந்த அக்கட்சியின் தலைமை அதன் மீது விமர்சனங்கள் வரும் போதெல்லாம் தமிழ் இனவெறிவாத நிலையெடுத்தும், சமூகநீதி என்ற பெயரில் சாதிய நிலைபாட்டினை மேற்கொண்டும் அவற்றைச் சந்திக்கும் ஒரு பாசிஸப் போக்கைத் திறமையாகக் கையாளத் தொடங்கியது. அரசியல் இவ்வாறு தொழில் போல் ஆகிவிட்டதால் தொழில்களில் தோன்றும் அனைத்து வளர்ச்சிப் போக்குகளும் அக்கட்சியிலும் தோன்றியது. பொதுவாகத் தொழில்கள் வளர்ச்சியடைந்த நிலையில் அவற்றில் ஏகபோகங்கள் தோன்றும். அவ்வாறே தொழில் போல் ஆகிவிட்ட தி.மு.க. அரசியலிலும் அக்கட்சிக்குத் தலைமை தாங்கும் தற்போதைய முதல்வர் மற்றும் அவரது உறவினர்களைக் கொண்ட ஏகபோகம் உருவாகி வளர்ந்தது.

மாநில அரசியலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வந்த தி.மு.கழகம் தற்போதைய முதல்வரின் உறவினரான திரு.முரசொலி மாறன் முன் முயற்சியால் மத்திய அரசியலிலும் முனைந்து செயல்படத் தொடங்கியது. அது அவரது கைவசம் இருந்த தனியார் தொலைக்காட்சி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

தமிழ் நாட்டின் எரியும் பிரச்னைகள் காவேரி நதி நீர் பங்கீடு மற்றும் முல்லைப் பெரியார் பிரச்னை போன்றவைகளாகும். தி.மு.க. அது பேசும் பிராந்திய வாதத்திற்கு உண்மையானதாக சிறிதளவாவது இருந்திருந்தால் நீர்ப்பாசனத் துறை போன்ற துறைகளைக் கோரிப் பெற்று இப்பிரச்னைகளின் தீர்விற்குச் சிறிதாவது வழி கோலியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கோரிப் பெற்ற துறைகளோ முதல்வரின் உறவினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர் சிலரின் தொழில் ரீதியான நலன்களுக்கு உதவக் கூடிய துறைகளாகவே இருந்தன.

எதிலெல்லாம் வருவாய்க்கு வாய்ப்போ அதிலெல்லாம் நாம்

அதாவது எது எதிலெல்லாம் வருவாய் கிட்டுவதற்கு வாய்ப்பிருந்ததோ அத்துறைகளைக் கோரிப் பெறுவதிலேயே அக்கட்சி முனைப்பாக இருந்தது. நாற்கர சாலை போடும் திட்டம் அமலில் இருந்த போது சாலை வழிப் போக்குவரத்து, சேது சமுத்திரத் திட்டத்திற்கு மணல் வாரும் தேவை உருவாகும் என்ற நிலையில் கடல்வழிப் போக்குவரத்து, எப்போதும் தொலைத் தொடர்பு என வருவாய் வாய்ப்புள்ள துறைகள் மட்டுமே அவர்களது கண்களில் பட்டன.

கட்சியின் ஏகபோகமாக அவர்களது குடும்பம் ஆகிவிட்டதால் கட்சிக்குள் யாரும் கேள்வி கேட்கமுடியாத நிலை உருவாகி உட்கட்சி ஜனநாயகத்திற்கு முழுமையாக விடை கொடுக்கப்பட்டது. தற்போது அந்த அரசியல் குடும்பம் தொழில் துறையிலும் அரசியல் பின் பலத்துடன் காலூன்றி அதிகச் சிரமமின்றி எளிதில் சம்பாதிக்க வாய்ப்பிருக்கும் அனைத்துத் துறைகளையும் கைவசப்படுத்திக் கொண்டுள்ளது. மின்னணு மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள், திரைப்படத்துறை, மருத்துவக் காப்பீட்டுத் துறை என அனைத்திலும் தி.மு.க. தலைவர் மற்றும் அவர் குடும்பத்தினரின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது.

சிறந்த தயாரிப்பாளர்கள் தங்களது திரைப் படங்களை மழைக்காலக் காளான்கள் போல் புதிதாக உருவெடுத்துள்ள அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விற்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது. வழிக்கு வராத தயாரிப்பாளர்களின் திரைப்படங்களுக்கு அவை வெளியிடப் படுவதற்குத் திரையரங்குகள் கூடக் கிடைக்காது என்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது.

புது பார்முலா

தொழில் துறையின் ஈடுபாடும் நாட்டமும் அரசியலை இரண்டாம் பட்சமாக்கி அக்கட்சி வழக்கமாகப் பேசி வந்த தமிழர் நலன் முழக்கமும் தேய்ந்து ஓய்ந்து போகும் போக்கு உருவாகி விட்டதால் முன்பு போல் இன, மொழி மற்றும் பிற்பட்டோர் சாதிய வாத முழக்கங்களை இடைவிடாது செய்து இனிமேல் அரசியல் செய்ய முடியாது என்ற நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டு விட்டது. அதனால் அரசியலைப் பயன்படுத்திப் பொருளீட்டுவது, ஈட்டிய பணத்தைக் கொண்டு அரசியல் செய்வது என்ற போக்கு இதுவரை இந்திய அரசியலில் யாரும் செய்திராத அளவிற்கு அக்கட்சியினரால் சமீப காலங்களில் செய்யப் படுகிறது. பணபலப் பின்னணியுடன் தொழில் நுட்ப ரீதியில் தேர்தல் வெற்றிகளைச் சாதிக்கும் கலையில் இதுவரை கண்டும் கேட்டுமிராத நிபுணத்துவத்தை அக்கட்சி பெற்றுள்ளது.

தேர்தல் வெற்றிக்குப் பயன்படும் ஆசிரியர், அரசு ஊழியர் பகுதியினருக்கு தாராளத்துடன் சலுகைகளை வழங்குவது, ஏழை மக்களுக்கு இலவசத் திட்டங்களை அறிவிப்பது ஆகியவற்றைச் செய்து இவற்றினால் அக்கட்சிக்கு ஒரு பெரிய வாக்கு வங்கி உள்ளதென்ற மிகைப் படுத்தப்பட்ட தோற்றத்தை உருவாக்கிவிட்டு அந்தப் பின்னணியில் வாக்குகளுக்குப் பணம் கொடுத்துத் தேர்தல் வெற்றியைச் சாதிக்கும் யுக்தியை நம்பியே அக்கட்சி தற்போது முழுமையாக உள்ளது. இந்த அரசியல் குடும்பத்திற்கு இணையாக ஏதாவதொரு அரசியல் குடும்பத்தை உலக அரசியல் அரங்கில் எடுத்துக் காட்ட வேண்டுமென்றால் இத்தாலியின் தற்போதைய ஆட்சியாளர் பெர்லுஸ் கோணி குடும்பத்தைத் தான் காட்ட முடியும்.

அதல பாதாளத்தில் தமிழ்ச் சமூகம்

முதலாளித்துவச் சுரண்டலினால் நல்ல வாழ்க்கையை இழந்து நிற்கும் லட்சோப லட்சம் உழைக்கும் தமிழ் மக்களிடம் மிஞ்சியிருக்கும் சுய கெளரவத்தையும், மரியாதையையும் இல்லாமற் செய்வதாகக் கடந்த பல இடைத் தேர்தல்களிலும், நாடாளுமன்றத்திற்கான தேர்தலிலும் இக்கட்சியினால் கடைப்பிடிக்கப்பட்ட வாக்கிற்குப் பணம் வழங்கும் போக்கு ஆகியுள்ளது. இப்போக்கு கலாச்சார ரீதியில் கல்வி கற்றவர்கள் நிறைந்த மாநிலம் என்ற ரீதியில் மிக உயர்ந்த இடத்திலிருந்த தமிழ்ச் சமூகத்தை அதல பாதாளத்தில் தள்ளியுள்ளது.

ஒருபுறம் பணம் கொடுத்துப் பாமர மக்களின் வாக்குகளைப் பெறுவது மறுபுறம் பட்டங்களும், பதவிகளும் கொடுத்துப் பல இலக்கிய வாதிகளும், கவிஞர்கள் , கலைஞர்களைத் தன் ஆதரவாளர்களாக ஆக்கி அவர்களைத் தன்னையும் தனது ஆட்சியையும் விமர்சிக்க முடியாதவர்களாக ஆக்குவது இவ்விரண்டுமே தற்போது இக்கட்சி மற்றும் அதற்குத் தலைமை தாங்கும் முதல்வரின் ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

உழைக்கும் மக்களின் பிரச்னைகளுக்கான போராட்டங்களை அவற்றை வழிநடத்த யாரும் இனிமேல் முன்வரக் கூடாது என்ற விதத்தில் அடக்கி ஒடுக்குவதும் இக்கட்சியின் ஆட்சியில் சாதாரண நடை முறையாகிவிட்டது. மிகக் குறைந்த ஊதியத்தில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கும் சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தை வழிநடத்த முன்வரும் அமைப்புகளைக் கூட மாவோயிஸ்டுகளோடு தொடர்புடையவர்கள் என்று கூறி அடக்குவது, தொழிற்சங்க உரிமை மறுக்கப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இயங்கும் ஹுண்டாய் போன்ற நிறுவனங்களில் ஊழியர் உரிமைக்குப் போராடினால் போராட்டத்தில் தலைமை ஏற்ற தலைவர்களைக் கைவிலங்கிட்டு அகெளரவப் படுத்துவது, ஆளும் கட்சியினரைப் போல் வேலை செய்ய நிர்ப்பந்திப்பதைக் கண்டித்துப் போராடிய வருவாய்த்துறை ஊழியர் மீது தடியடி நடத்துவது அவர்களை இடமாற்றம் செய்து பணிய வைப்பது என அனைத்துப் பாசிஸப் போக்குகளும் தலைவிரித்தாடும் மாநிலமாக இக்கட்சியின் ஆட்சியில் தமிழகம் ஆகியுள்ளது.

பாசிஸப் போக்குகளின் ஒட்டுமொத்த வடிவம்

உலகம் முழுவதும் இயங்கி மனித சமூகத்திற்கும் நாகரீகத்திற்கும் மாபெரும் கேடுகளை விளைவித்த பல்வேறு பாசிஸ அமைப்புகளிடம் காணப்பட்ட அனைத்து மோசமான அம்சங்களும் போக்குகளும் ஒரு சேரக் காணப்படும் அமைப்பாக இக்கட்சி வளர்ந்துள்ளது. ஏழை எளிய மக்களுக்கு இலவசங்களை அறிவித்து அவர்களிடம் இரங்கல் போக்கை வளர்ப்பது; அதைத் தாண்டி அவர்களில் ஒன்றிரண்டு பிரிவினர் போராட்டக் களம் புகுந்தால் தயவு தாட்சண்யமின்றி அவற்றை அடித்து நொறுக்குவது, தன்மீது வரும் விமர்சனங்களை மொழி, இன, சாதி வெறிவாத முழக்கங்களைக் கொண்டு எதிர் கொள்வது, அத்தகைய எதனாலும் எதிர் கொள்ள முடியாத விமர்சனங்கள் வந்தால் அப்படிப்பட்ட விமர்சனம் இருப்பதாகவே காட்டிக் கொள்ளாத கல்லுளிமங்கத் தனத்தைக் கடைப்பிடிப்பது, அரசு விளம்பர ஆயுதத்தைக் கொண்டு இடதுசாரி என்று அறியப்படும் பத்திரிக்கைகளின் எழுத்துக் கூர்முனையை மழுங்கச் செய்வது, அதையும் தாண்டி அவற்றில் சில எழுத்துக்கள் வந்துவிட்டால் தனது அரசு கொடுக்கும் விளம்பரங்களைக் கொண்டே உங்களால் பத்திரிக்கை நடத்த முடிகிறது என்று குத்திக் காட்டி அப்பத்திரிக்கை நடத்துபவர்களைக் கூசச் செய்வது, கூறுவது பொய் என்று தெரிந்தும் அவற்றை இடைவிடாமல் கூறினால் அது உண்மையாகிவிடும் என்ற பாசிஸ யுக்தியைத் தங்கு தடையில்லாமல் கையாள்வது, மேல்தட்டு அரசு நிர்வாகிகளை ஊழல் மயமாக அனுமதித்து அவர்கள் தனது கட்சியினர் நடத்தும் ஊழல்களைக் கண்டு கொள்ளாதிருக்கச் செய்வது என அனைத்துப் பாசிஸப் போக்குகளின் உறைவிடமாக அக்கட்சி ஆகியுள்ளது. 

இன்று முதலாளி வர்க்கத்திற்குச் சேவை செய்யும் கட்சிகள் அனைத்துமே ஏதாவதொரு வகையில் பாசிஸப் போக்குகளைக் கடைப்பிடிப்பவையாகவே உள்ளன. அவ்வளவு தூரம் அவற்றைச் சேவகர்களாகக் கொண்ட முதலாளித்துவம் சீரழிந்துள்ளது. எனவே நாம் மேலே குறிப்பிட்ட பல கேடுகளைச் சுட்டிக் காட்டக் கூடியவையாக பெரிய கட்சிகள் என்று காட்டப் படுதவற்கு வாய்ப்புள்ள எந்தக் கட்சியும் நமது அமைப்பில் இல்லை. சமூகமாற்ற சிந்தனை வழி நடத்தாத பல கட்சிகளுக்கு ஆளும் கட்சி கடைப்பிடிக்கும் மேற்குறிப்பிட்ட பாசிஸ யுக்திகள் அரசியல் சாணக்கியமாகத் தோன்றினால் கூட அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. எனவே அக்கட்சிகளிடம் இப்போக்குகளை மக்களிடம் பிரச்சாரம் செய்து அம்பலப்படுத்தி சமூகத்தைப் பாசிஸப் பேரபாயத்திலிருந்து மீட்கும் எண்ணமும் இல்லை. உபாயமும் இல்லை.

இயக்கமே பிரமையைப் போக்கும்

தேர்தல் அரசியல் மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்காது என்பது அப்பட்டமான உண்மையாக இருந்தாலும் அது சராசரி மக்களிடம் சென்று சேராத நிலை உள்ளதால் மக்களிடம் தேர்தல், சட்டமன்றம், நாடாளுமன்றம் குறித்த பிரமைகள் ஏராளமாக இருக்கவே செய்கின்றன. அவை மூலம் மட்டுமே சமூகம் நிர்வகிக்கப் படுகிறது அதனைத் தாண்டி எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணப் போக்கு நமது ஊடகங்களால் திட்டவட்டமான இடைவிடாத பிரச்சாரங்கள் மூலம் மக்கள் மனதில் நின்று நிலவச் செய்யப்படுகிறது.

இந்தப் பிரமையைப் போக்குவதற்கு உள்ள ஒரேவழி மக்களின் அன்றாட வாழ்க்கை சார்ந்த பிரச்னைகள் பெரிதாகத் தலைதூக்கும் போது அவற்றை மையமாக வைத்து மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்கள் கட்டுவதேயாகும். அவற்றால் மட்டுமே அரசு எந்திரத்தின் அங்கங்களான நிர்வாகம், நீதி அமைப்பு, காவல்துறை ஆகியவை யாருக்காக உண்மையில் உள்ளன என்பதை அம்பலப்படுத்த முடியும்.

தனித்தன்மையற்ற போக்கு

அத்தகைய மக்கள் இயக்கங்கள் மிக மந்தமான நிலையில் இருப்பதையே இப்போது நாம் பார்க்கிறோம். அதற்குக் காரணம் பிரச்னைகளின் தாக்கத்தை மக்கள் உணராதிருக்கிறார்கள் என்பதல்ல. விஞ்ஞானபூர்வக் கல்வியறிவின்மையும், மதவாத மூட நம்பிக்கைகள் சார்ந்த விதிவாதமும் மக்களின் போராட்ட மனப்பான்மையை மட்டுப்படுத்தி வைத்துள்ளன என்பது உண்மையாக இருந்தாலும் காலங்காலமாக இருந்து வரும் இப்போக்குகள் முன்பெல்லாம் இப்போது உள்ளது போல் மக்களின் போராட்ட உணர்வினை அவ்வளவு தூரம் மட்டுப்படுத்தி வைத்திருக்கவில்லை இப்போது அந்த உணர்வு மட்டுப்பட்டு இருப்பதற்கு மிக முக்கிய காரணம் போராட்டங்கள் குறித்த ஒரு அவநம்பிக்கை அவர்கள் மனதில் மண்டியிருப்பதேயாகும். குறிப்பாக கம்யூனிஸ்ட் என்று அறியப்பட்ட கட்சிகளின் சந்தர்ப்பவாத, வர்க்க சமரச நடவடிக்கைகளே அவற்றிற்கான மிக முக்கிய காரணமாகும்.

நாடாளுமன்ற வாதம், சில சட்டமன்ற நாடாளுமன்ற இடங்களுக்காக அவர்கள் செய்து கொள்ளும் கோட்பாடற்ற கூட்டுகள், கூட்டணியில் உள்ளோம் என்பதற்காக கூட்டணியிலுள்ள பெரிய கட்சிகளின் கிரிமினல் நடவடிக்கைகளைக் கூடக் கண்டு கொள்ளாதிருப்பது, அக்கட்சியின் தயவில் தான் தங்களது வேட்பாளர்களின் வெற்றி உள்ளதென்ற எண்ணத்தில் அத்தகைய கட்சித் தலைமைக்கு இச்சகம் பாடுவது இவை அனைத்தும் சேர்ந்து கம்யூனிஸ்ட் என்ற தனித்தன்மையே இல்லாதவர்களாக அக்கட்சியினரை ஆக்கியுள்ளது.

போராட்டப் பாவனைகள்

சீரழிவு ஒரு முனையில் தொடங்கினால் அது அத்துடன் மட்டும் நின்று விடுவதில்லை; பலமுனைகளிலும் அது பல்கிப் பரவுகிறது. அவ்விதத்தில் கடும் சீரழிவிற்கு ஆளாகியுள்ள அத்தகைய ‘கம்யூனிஸ்ட்’ கட்சிகள் அவை இருப்பதைக் காட்டுவதற்காகவே பெயரளவிற்குச் சில போராட்டங்களையும் நடத்துகின்றன. விலையுயர்வை எதிர்த்த போராட்டம் என்றால் அதில் சம்பந்தப்பட்டுள்ள மக்களிடம் சென்று அவர்களை அணிதிரட்ட எதுவும் செய்யாது, தனது தொண்டர்களைக் கொண்டு ஒரு தொடர் முழக்கமோ, மறியலோ செய்வது என்பவையாகவே அக்கட்சிகளின் போராட்டங்கள் ஆகிவிட்டன. அவை பாவனைத் தன்மை வாய்ந்தவையாக மக்கள் கண்களில் படுகின்றனவே தவிர கோரிக்கையைச் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப் படுபவையாகப் படுவதில்லை.

நெருக்கடி வாய்ப்புகளை உருவாக்கும்

மக்களிடம் போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் குறித்து இருக்கும் அவநம்பிக்கையும் எப்போதும் நீடித்து நிரந்தரமானவைகளாக ஆகிவிடாது. அடுத்தடுத்து அவர்கள் வாழ்க்கையைத் தாக்கும் முதலாளித்துவ நெருக்கடிகளின் விளைவான பிரச்னைகள் அவர்களைச் சலனப்படுத்தவே செய்யும். அந்நிலையில் மக்கள் இயக்கங்களைக் கட்டுவதில் உண்மையான ஆர்வமும் நம்பிக்கையும் உள்ள சக்திகள் முழு முனைப்புடன் செயல்பட்டால் மக்கள் இயக்கங்களை ஆரம்பத்தில் ஓரளவும் அதன் பின்னர் பன்மடங்கும் தட்டியெழுப்பவும் முடியும்.

கூனர்களாக

இந்த வாய்ப்பினை இல்லாமற் செய்யும் பேரபாயமாகத் தான் தற்போது ஆளும் கட்சி மேற்கொள்ளும் வாக்கிற்குப் பணம் கொடுக்கும் போக்கு உருவெடுத்துள்ளது. வாக்கிற்குப் பணம் பெறுவோரின் தார்மீக முதுகெலும்பு இதனால் முறிக்கப்படுகிறது. நியாயத்திற்காக நிமிர்ந்து நிற்க முடியாத கூனர்களாக அவர்கள் ஆக்கப் படுகின்றனர். வாக்கிற்கு அவர்கள் பெறும் பணம் அதனைக் கொடுத்து வெற்றி பெறுவோருக்கு கொள்ளையடிக்க வழங்கப்படும் அனுமதியாக ஆகிவிடுகிறது. தேர்ந்தெடுக்கப்படுவோர் செய்யும் ஊழல்கள் அப்பட்டமாகக் கண்களுக்குத் தெரிந்தாலும் அதனை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு வாக்கிற்குப் பணம் வாங்கும் சாதாரண மக்களிடம் மனதளவிலேயே முடங்கிப் போகிறது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்காக என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஒரு பலனையும் தராத வெற்று ஆர்ப்பாட்டங்களாக ஆகப் போகின்றனவே தவிர வேறெந்தப் பலனையும் தரப் போவதில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்தப் பாவனைகள் எதையாவது செய்யப் போகிறதென்றால் அது வழக்கமான முறையான ஜனநாயகச் செயல்பாடுகளைக் கட்டுப் படுத்துவதையே செய்யப் போகிறது.

கோட்பாடற்ற நிலை

பிரதான எதிர்க்கட்சியின் நோக்கமும் மக்களை இந்த இழிந்த போக்கிற்கு இரையாகி உங்களது சுயமரியாதையையும், மாண்பினையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று வலியுறுத்துவதல்ல. அவர்களைச் சிந்திக்காமலும், மனம் நோகாமலும் வாக்களிக்கும் வரை வைத்திருந்து அவர்களிடமிருக்கும் வாக்குகளைத் தாங்கள் பெற்றுவிட வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாகவும் உள்ளது. எனவே தான் பணம் வருவதைக் கெடுத்து விட்டார்கள் என்ற எண்ணம் தங்கள் மீது மக்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர். அதனால் தான் ஆளும் கட்சியினர் கொடுக்கவிருப்பது உங்கள் பணம்; அதனை வாங்கிக் கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள் என்றே அவர்கள் கூறுகிறார்கள். ஒரு தந்திர உபாயமாகக் கூடுதல் பணம் ஆளுங்கட்சியினர் வழங்க முடியும் என்று கூறி வாக்காளரின் பணம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகமாக்கி அதன்மூலம் பலன் பெறவும் பிரதான எதிர்க்கட்சி விரும்புகிறது. எனவே அக்கட்சியைப் பொறுத்தவரை வாக்கிற்குப் பணம் கொடுப்பது, பெறுவது குறித்து கோட்பாடு ரீதியான நிலை எதுவும் கிடையாது.

உண்மையிலேயே இது யாரைப் பாதிக்குமென்றால் மக்கள் இயக்கங்களைக் கட்டி, பரந்த அளவில் மக்களின் பங்கேற்பினைச் சமூக விசயங்களில் அதிகமாக்கி சமூக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கருதுபவரையே இது கடுமையாகப் பாதிக்கும். எனவே அத்தகைய சமூகமாற்ற சக்திகள் தங்கள் அணிகளை ஒருங்குதிரட்டி இதனை எதிர்த்துப் போராடத் தயாராக வேண்டும். இந்த அவலம் நீடிக்க இடம் கொடுத்தால் அது மக்களின் புற ரீதியானது மட்டுமல்ல; அக ரீதியிலான வாழ்க்கையையும் செல்லரிக்கச் செய்து மக்களை வாழ்க்கை, சமூகம் குறித்த மதிப்புகள், உணர்வுகள் எதுவுமில்லாத செல்லரித்த ஜென்மங்களாக நடைப்பிணங்களாக ஆக்கிவிடும்.

தோற்கடியுங்கள்

எனவே இந்த ஆளும் கட்சியின் பாசிஸப் போக்குகளும், பணம் குவிக்கும் நடைமுறையும், அதனை மக்கள் கண்டு கொள்ளாதிருக்க வேண்டும் என்பதற்காக வாக்கிற்குப் பணம் கொடுக்கும் கேவலமும் எப்பாடுபட்டாவது கட்டுப் படுத்தப்பட வேண்டும். அதனை ஆற்றும் விதத்தில் மக்களிடையே இந்த அனைத்துச் சீரழிவுகளின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் ஆளும் கட்சியை இத்தேர்தலில் தோல்வியுறச் செய்ய அனைத்து வகைகளிலும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் பாடுபட வேண்டும். இந்த அறைகூவல் ஏறக்குறைய ஓரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவும், முதலாளித்துவச் சேவையில் முன் நிற்பவையாகவும் உள்ள எதிர்க்கட்சியினருக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டதல்ல. மாறாக மக்கள் இயக்கப் பாதையில் மிகப் பெரும் குறுக்கீடாகவும், முட்டுக் கட்டையாகவும் உள்ள ஆளும் கட்சியின் பாசிஸப் போக்குகளை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.

Pin It