ஆவணப்படம் குறித்த ஒரு பார்வை

தீயது எதையும் ஒழுங்குபடுத்திப் பராமரிக்க முடியாது அது முடிவுக்குக் கொண்டுவரப்படவே வேண்டும்.

2008, 2009  களில் தோன்றிய முதலாளித்துவ நெருக்கடி பலரின் கண்களைத் திறந்தது. முதலாளித்துவம் சுதந்திரமான வளர்ச்சியை உறுதி செய்கிறது; அது சுதந்திர வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டது; இவ்வாறு எங்கும் சுதந்திரம் எதிலும் சுதந்திரம் என்பதைப் பேணிப் பராமரிப்பது முதலாளித்துவமே; முதலாளித்துவத்தால் தான் நாம் உலகிலேயே மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டவர்களாக இருக்கிறோம் என்பன போன்ற பிரச்சாரங்களில் மயங்கி சோசலிசம் கம்யூனிசம் ஆகியவை எல்லாம் தீய வார்த்தைகள் என்ற மனநிலையில் இருந்த அமெரிக்க மக்களின் கண்களை குறிப்பாக அது பெரிதும் திறந்துள்ளது.

சுதந்திர வர்த்தகம் , முதலாளித்துவம் வழங்கும் உயர்ந்த வாழ்க்கைத் தரம் போன்ற கருத்துக்கள் அமெரிக்கச் சமுதாயம் பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறையக் கொண்டதாக இருந்து அவற்றின் விற்பனையை உலக அளவில் செய்து அதில் கிட்டிய லாபத்தில் ஒரு பகுதியை அமெரிக்கத் தொழிலாளருக்கும் ஊதியமாக வழங்கிய போது தோன்றியவை.

அதாவது நமது நாட்டைப் போன்ற நாடுகளில் எல்லாம் தேவை அடிப்படையிலான குறைந்தபட்ச ஊதியமே எட்டாக்கனியாகத் தொழிலாளருக்கு இருந்த வேளையில் அமெரிக்கத் தொழிலாளர் சராசரி வசதிகளுடன் வாழ்க்கை நடத்தத் தேவையான வாழ்க்கைச் சம்பளம் பெற்ற நிலையில் தோன்றியவை.

அதாவது அமெரிக்காவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற தொழிற்சாலைகளில் வேலை செய்தவர்களுக்கு வாழ்க்கைச் சம்பளத்தோடு வருடத்திற்கு 4 வாரக்காலம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுத்து அவர்கள் பல இடங்களுக்கு உல்லாசப் பயணம் மேற்கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்ட காலத்தில் உருவானவை.

அவ்வாறு இருந்த அமெரிக்க முதலாளித்துவம் உலக அளவில் உற்பத்தித் துறையில் தலையயடுத்த போட்டியின் விளைவாக அது ஒரு சமயம் அடைந்த லாபத்தைத் தொடர்ச்சியாக அடைய முடியாததாக ஆனது. 

இராணுவமயப் பொருளாதாரம்

அதனால் படிப்படியாக அமெரிக்காவின் உற்பத்தி இராணுவ தளவாட உற்பத்தியாகவும் அதன் மூலம் ஈட்டப்படும் பெரும் லாபம் நிதி மூலதனமாகவும் உருவெடுத்தது. பொருள் உற்பத்தி என்பதில் கவனம் செலுத்தாமல் நிதி மூலதனத்தை எங்கெல்லாம் முதலீடு செய்ய முடியுமோ அங்கெல்லாம் முதலீடு செய்வதன் மூலமாக எளிதாக அதிகபட்ச லாபம் ஈட்டும்  முறையை அமெரிக்க முதலாளித்துவம் தேர்ந்தெடுத்தது.

ஒருவர் என்ன செய்கிறார் என்பதைவிட  எதற்கெல்லாம் அவர் அதிபதி என்பதே முக்கியம்

அதனால் கோடிக் கணக்கான டாலர்கள் லாபம் ஈட்டிக் கொண்டிருந்த ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் கூடக் கார் உற்பத்தியைக் குறைத்தன. ஜப்பானிலும் ஜெர்மனியிலும் இருந்து கார்கள் இறக்குமதி செய்யும் நாடாக அமெரிக்கா மாறியது. இவ்வாறு நிதி மூலதனத்தைப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுத்திச் சம்பாதிக்கும் முறையில் அமெரிக்க மக்களனைவரையும் ஈடுபடுத்தும் விதத்தில் அமெரிக்க ஜனாதிபதிகளின் அறைகூவல்கள் அமைந்தன. எடுத்துக்காட்டாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான ஜிம்மி கார்ட்டர் ‘ஒருவர் என்ன செய்கிறார் என்பது முக்கியமல்ல அவர் எவற்றிற்கெல்லாம் சொந்தக் காரராக இருக்கிறார் என்பதே முக்கியம்’ என்று கூறினார்.

ரீகன் தொடங்கி வைத்த ‘சீர்திருத்தம்’

தற்போது உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய உலகமயத்தைப் பின்னணியாகக் கொண்ட பொருளாதார சீர்திருத்தத்தை அமெரிக்க மண்ணில் தோற்றுவித்தவர் ரொனால்டு ரீகன் என்னும் திரைப்பட நடிகராக இருந்து அமெரிக்க ஜனாதிபதியாக ஆனவர் ஆவார். அவர் மெரில்லிஞ் என்ற நிதி நிறுவனத்தின் தலைவருடன் ஒருங்கிணைந்து வங்கிகள் பெருந்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிற்குச் சாதகமாக அதாவது குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டவும் தொழிற்சங்கங்களை ஒழித்துக் கட்டவும் லேஆப்-ஆட்குறைப்பு போன்றவற்றின் மூலம் உழைப்புத் திறனை கடுமையாகக் குறைக்கவும் திட்டங்கள் வகுத்துக் கொடுத்தார்.

மேலும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வருமான வரியைப் பாதியாகக் குறைத்தார். அந்த நிலையிலும் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கு வழிவகுக்கும் விதத்தில் தொழிலாளர் முன்பு செய்ததைப் போல் இருமடங்கு வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதன் விளைவாக மக்களுக்கு அதுவரை கிடைத்துவந்த உடல் நலம் பேணுவதற்கான செலவுகள் முன்பிருந்ததைக் காட்டிலும் 78 சதவீதங்கள் அதிகரித்தன.

கையூட்டில் கைகோர்த்து நின்ற அரசு நிர்வாகம்

இந்நிலையில் லாபம் சம்பாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை தோன்றியது. அரசியல் வாதிகள், அரசு நிர்வாகத்தில் இருப்போர், நீதிபதிகள் போன்றவர்களின் துணையோடு முறைகேடான, மனிதாபிமானமற்ற முறையிலெல்லாம் லாபம் சம்பாதிப்பது நடைபெற்றது. குறைந்த காலத்தில் அதிக லாபம் ஈட்டிய மெரில்லிஞ்ச் போன்ற நிறுவனங்கள் பல அரசியல் வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்தின் பங்கும் பகுதியுமான நீதிபதிகளுக்கும் அவை ஈட்டிய லாபத்தில் ஒரு பங்கினை வழங்கின. அதற்குக் கைமாறாக அவை குறுக்கு வழியில் இன்னும் அதிக லாபம் ஈட்ட நிர்வாகம் , நீதி அமைப்பு ஆகியவற்றின் ஒருமித்த ஆதரவு அவற்றிற்கு கிட்டியது.

எடுத்துக்காட்டாக சராசரிக் குழந்தைகளாக இல்லாமல் குதர்க்கமான மனநிலைகளைக் கொண்டவையாக இருக்கும் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகச் சில நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ளன. அவற்றில் ஒன்றான பி.ஏ. குழந்தைகள் காப்பகம் என்ற நிறுவனத்தில் இருந்த குழந்தைகளைக் காப்பகத்தில் வைத்துக் காப்பதால் அதிகம் செலவானது. அதனைத் தவிர்க்க அக்குழந்தைகளை சிறைக்கு அனுப்பி விட்டு அதன்மூலம்  செலவைக் குறைத்து அந்தத் தனியார் நிறுவனம் லாபம் ஈட்ட விரும்பியது. அதற்கு வழிவகுத்த ஒரு தீர்ப்பினை ஒரு அமெரிக்க நீதிபதி வழங்கினார்.

தொழிலாளரின் இறப்பு   நிறுவனத்திற்குச் சிறப்பு

பல நிறுவனங்கள் அந்நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் பெயரில் அந்த நிறுவனங்களே இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுத்து அவர்கள் இறந்தால் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இருந்து அதற்கான இன்சூரன்ஸ் தொகையினை நிறுவனங்களே பெற்று அதன்மூலம் லாபம் ஈட்டக் கூடியவைகளாக மாறின. அதனால் தொழிலாளர் அற்ப ஆயுளில் இறந்தால் கூடுதல் இன்சூரன்ஸ் தொகையை நாம் பெறலாம் என்று கருதக்கூடிய கொலைகாரத் தன்மை பொருந்தியவையாக வால்மார்ட் கண்ட்ரிஒயிடு போன்ற நிறுவனங்கள் மாறின.

பகுதி நேரப் பணிகளில் விமான ஓட்டிகள்

தொழிலாளர் மீது சுமத்தப்பட்ட சம்பள வெட்டு 40 சதவிகிதம் என்ற அளவிற்கு ஆனது. நமது நாட்டில் மிக உயர்ந்த ஊதியம் கிட்டக் கூடிய வேலைகளில் ஒன்று விமான ஓட்டி வேலை. ஆனால் அமெரிக்காவில் அத்தகைய விமான ஒட்டிகளின் சம்பளம் பல நிறுவனங்களால் ஆண்டு ஒன்றிற்கு 17,600ல் இருந்து 23000 டாலர்கள் என்ற அளவிற்குக் குறைக்கப்பட்டது. அதன் விளைவாக வாழ்க்கைச் செலவினங்களை ஈடுகட்ட விமான ஓட்டி வேலையோடு வேறு வேலைகளுக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் விமான ஓட்டிகளுக்கு ஏற்பட்டது. அதனால் காண்டினென்டல் கனெக்டிங் பிளய்ட் என்ற விமானக் கம்பெனியின் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாக அதில் பயணம் செய்த 50 பேர் உயிரிழந்தனர். பின்னர் விபத்துக் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போது அதனை ஒட்டிய பெண் விமானி வேறொரு இடத்தில் ஒரு விடுதியில் பணிப் பெண்ணாகப் பகுதிநேரப் பணி புரிந்தது தெரிய வந்தது.

மறு அடமான மோசடி

இவ்வாறு சம்பளக் குறைப்பு வேலையிழப்பு போன்றவற்றிற்கு ஆளான அமெரிக்கத் தொழிலாளரின் அவலநிலையைப் பயன்படுத்தி அவர்களது வீடு போன்ற உடமைகளை பணயப் பொருளாக்கி  கண்ட்ரிஒய்டு, கிளைவெல்பார்கோ போன்ற நிறுவனங்கள் மறு அடமானம் என்று கூறப்படும் சப்பிரைம் சூதாடத்தில் ஈடுபட்டன.

அதாவது தொழிலாளர் ஏற்கனவே கடன் பெற்றுக் கட்டியுள்ள வீடுகளின் மதிப்பு பங்குச் சந்தை வர்த்தகம் உயர்ந்த நிலையில் இருந்த போது பல மடங்கு உயர்ந்தது. அவற்றின் மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளதோ அவ்வளவிற்கு நிதி நிறுவனங்கள் கூடுதல் கடனை அதன் உரிமையாளருக்கு வழங்க முன்வந்தன. இதனால் கடன் பெற்றோர் ஏற்கனவே செலுத்த வேண்டிய தவணைத் தொகையோடு கூடுதல் கடனுக்கான தவணைத் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இந்த வீட்டுக்கடன் பத்திரங்களை நிதி நிறுவனங்கள் வங்கிகளில் அடமானம் வைத்து அவை முதலீடு செய்த தொகைகளை ஈட்டிக் கொண்டன. இந்தப் பங்குகளை அடமானமாகப் பெற்ற வங்கிகள் அவற்றை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அவற்றின் ஒட்டுமொத்த மதிப்பிற்கு இன்சூர் செய்து அதற்கான பாலிசிகள் எடுத்துக் கொண்டன. அத்துடன் அந்த வங்கிகள் அடமானமாகப் பெற்ற வீட்டுக்கடன் பத்திரங்களைப் பங்குகளாக மாற்றி உலக அளவில் விற்பனை செய்தன.

ஏற்கனவே சம்பளக் குறைப்பு , வேலையிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அதனால் தங்கள் வீடுகளை இவ்வாறு அடமானம் வைத்த தொழிலாளர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களாக ஆயினர். அதனால் அடமானப் பத்திரங்களை மாதம் மாதம் கிடைக்கும் கூடுதல் வட்டிக்காகப் பங்குகளாகப் பெற்றிருந்தவர்களுக்கு வட்டியினைத் தொடர்ந்து கொடுக்க முடியாதவைகளாக வங்கிகள் ஆகிவிட்டன. அது போன்ற வராக்கடன்களுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இன்சூர் செய்த தொகைகளைக் கொடுக்க முடியாமல் திவாலாகி விட்டன.

இந்நிலை தோன்றியவுடன் வீட்டு அடமானப் பத்திரங்களைப் பங்குகளாக வாங்கி இருந்தவர்கள் அவற்றை வங்கிகளில் ஒப்படைத்து தங்களது பணத்தைத் திரும்பக் கோரினர். அவ்வாறு கேட்கும் அனைவருக்கும் அவர்களது பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாத நிலைக்கு வங்கிகள் ஆளாயின. அவை அதனால் தாங்கள் அடமானமாகப் பெற்றிருந்த உழைக்கும் மக்களின் வீடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்தன. இவ்வாறு பேங்க் ஆப் அமெரிக்கா என்ற ஒரு வங்கி மட்டும் விற்பனைக்குக் கொண்டு வந்த வீடுகளின் எண்ணிக்கை 34000‡க்கும் அதிகமானவையாகும்.

வீடிழந்த குடிமகனுக்கு 1000 டாலர் மோசடி செய்த நிதி நிறுவனங்களுக்கு 700000 கோடி

இதனால் பல ஆண்டுகளாகத் தாங்கள் குடியிருந்த வீடுகளை இழந்து லட்சோப லட்சம் அமெரிக்க மக்கள் தெருவிற்குத் தள்ளப்பட்டனர்.இந்தக் கொடுமை அமெரிக்கா முழுவதும் கொள்ளை நோயாகப் பரவியது.  வெளியேற்றப் படுபவர்களுக்கு அவர்கள் வேறு வாழ்நிலை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக கொடுக்கப்பட்ட தொகை வெறும் 1000 டாலர்கள். வீடுகளை இழந்து கோடான கோடி மக்கள் பரிதவித்துத் தெருவில் நிற்கையில் அவர்களுக்கு ஆயிரம் டாலர் என்ற அற்பத் தொகையினை நஷ்ட ஈடாக வழங்கிய அரசு இந்த வர்த்தகச் சூதாட்டத்தில் ஈடுபட்ட வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் மக்களின் வரிப்பணத்திலிருந்து 7,00,000 கோடி டாலர்களை நஷ்ட ஈடாக வழங்கியது. பேங் ஆப் அமெரிக்கா மட்டும் இத்தகைய நஷ்ட ஈடாக 25000 கோடி டாலர்களைப் பெற்றது.

இந்த நிலையில் மக்கள் ஒன்றைப் புரிந்து கொண்டனர். அதாவது முதலாளித்துவம் எடுக்கக் கூடியதும் கொடுக்கக் கூடியதுமான ஒரு அமைப்பு அல்ல. மாறாக முடிந்ததை எல்லாம் நம்மிடமிருந்து பிடுங்கக் கூடிய அமைப்பே என்ற புரிதல் அவர்களுக்கு ஏற்பட்டது. மற்றவரின் நிர்க்கதியான நிலையைப் பயன்படுத்தி வளர்வதே முதலாளித்துவம் என்ற மற்றொரு புரிதலும் அவர்களுக்கு ஏற்பட்டது. இவ்வாறு சமூகத்தைக் கொள்ளை அடித்துத் தங்களது தொப்பைகளை நிரப்புவதற்காக இருக்கும் முதலாளிகளின் பாதுகாவலனாக இருப்பதே அமெரிக்க அரசு என்ற அப்பட்டமான உண்மை அமெரிக்க மக்களின் பார்வையில் படத் தொடங்கியது.

அமெரிக்க அரசு என்பது அதிகார வர்க்க அரசியல்வாதிகளுக்குக் கையூட்டுக் கொடுத்துத் தங்களுக்குப் பக்கபலமாக முதலாளிகள் வைத்திருக்கும்  முதலாளித்துவ நிறுவனங்களின்  கருவியே என்பது அமெரிக்க மக்களின் கண்களுக்குத் தெளிவாகத் தெரியத் தொடங்கியது. இப்போது சோசலிசம் , கம்யூனிசம் ஆகியவை தீய வார்த்தைகளாக அவர்களுக்குத் தோன்றவில்லை. இந்தக் கொடுமைகளை மாற்றக் கூடிய சமூக மாற்ற எழுச்சி எப்போது தோன்றும் என்பதே அமெரிக்க மக்களின் உள்ளக் கிடக்கையாக ஆகியது. இந்த அம்சங்களை உள்ளம் உருகும் விதத்தில் வெளிக் கொணர்ந்து அமெரிக்க மக்கள் மத்தியில் வைத்துள்ளது கேப்பிட்டலிஸம் எ லவ் ஸ்டோரி என்ற மைக்கேல் மூர் அவர்களின் ஆவணப் படமாகும்.

இனிமேல் உதயமாகப் போவது உழைக்கும் வர்க்க ஜனநாயகமே

அமெரிக்க மக்கள் சோசலிசத்தை ஒரு சர்வாதிகாரக் கண்ணோட்டமாகவே பார்த்துப் பழக்கப்பட்டவர்கள். அதனால்தான் ஒபாமா இந்த நெருக்கடி நிலையை தனது வெற்றிக்காகப் பயன்படுத்த முன்வைத்த பல கருத்துக்களை வைத்து அவரை ஒரு சோசலிஸ்டு என்று அவருக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர் வசை பாடினார். உண்மையில் இந்த நெருக்கடி அமெரிக்க மக்களின் கண்களைத் திறக்கக் கூடியதாக இருந்ததால் அவரை எவ்வளவு தூரம் சோசலிஸ்டு என்று அவரது எதிரிகள் வசை பாடினரோ அந்த அளவிற்கு கருத்துக் கணிப்புகளில் அவரது வெற்றி வாய்ப்பு அதிகரித்தது.

ஆனாலும் கூட சோசலிசம் குறித்த முழுமையான புரிதல் இன்னும் அவர்களுக்கு ஏற்படாததால் இந்த முதலாளித்துவத்திற்கு மாற்றான சமுதாய அமைப்பு என்று அவர் இப்படத்தில் கூற வருவதும் ஜனநாயகம் என்பதாகவே உள்ளது. ஒரு வகையில் அதிலும் பொருள் இல்லாமல் இல்லை. கடுமையான நெருக்கடியில் சிக்கி அதிலிருந்து மீள்வதற்காக கொலை மற்றும் கொள்ளைக்காரத் தன்மை வாய்ந்தவையாக மாறியுள்ள முதலாளித்துவ அமைப்புகள் அவை தோன்றிய காலத்தில் கொண்டுவந்த ஜனநாயகக் கருத்துக்களோடு ஒரு தொடர்பும் இல்லாதவையாகத் தற்போது ஆகிவிட்டன. எனவே அந்த பழைய ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்றால் அது முடியாது. அந்நிலையில் அந்த முதலாளித்துவ ஜனநாயகம் உழைக்கும் வர்க்க ஜனநாயகமாக மாற்றப்பட்ட வடிவில் மட்டுமே இனிமேல் கொண்டுவரப்பட  முடியும்.

அமெரிக்க மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் 2ம் உலக யுத்தத்தின் போது நிகழ்ந்த சில நிகழ்வுகள் படத்தில் மக்களுக்கு நினைவுறுத்தப் படுகின்றன. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் 2வது உலகப் பொது நெருக்கடியினை எதிர் கொண்டிருந்தார்.

 அந்நெருக்கடியின் விளைவாக வேலை மற்றும் வாழ்விழந்த மக்கள் அதை உருவாக்கிய அமெரிக்க முதலாளிகளுடன் அமெரிக்க ஆட்சியாளர்கள் கைகோர்த்துச் செயல்பட்டதைப் பார்த்து அரசுக்கு எதிராகத் திரண்டெழுந்தனர். தொழிலாளர் எழுச்சியிலிருந்து கற்றுக் கொண்ட படிப்பினைகளை வைத்து யுத்தம் முடிந்தவுடன் 2வது உரிமை சாசனத்தை அரசியல் சட்டமாக்குவேன் என்று ரூஸ்வெல்ட் கூறினார். அதனை முன்னிலைப்படுத்தி இன்றைய நிலையில் அமெரிக்க மக்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் சமுதாய மாற்றம் வேண்டும் என்ற கருத்தை நாசூக்காகப் படத்தை எடுத்தவர் நிறுவியுள்ளார்.
 
மேலும் லாப நோக்கில் நடத்தப்படாத ஒரு ரொட்டிக் கடையும் மற்றொரு ரோபோ தயாரிப்பு நிறுவனமும் தொழிலாளர் மற்றும் அலுவலர்களின் கூட்டுறவின் மூலம் நடத்தப்படுவதன் காரணமாக அவை எவ்வாறு நெருக்கடியில் இருந்து தப்பித்து நின்றன என்பதும் காட்டப்பட்டுள்ளது. முதலாளித்துவ உற்பத்திச் சூழலை அப்படியே வைத்துக் கொண்டு ஓரிரு நிறுவனங்களை நீண்டகாலம் லாப நோக்கின்றி நடத்த முடியாது என்றாலும்  லாப நோக்கம் இல்லாமலும் நிறுவனங்கள் நடத்தப்படவும் முடியும் என்று காட்டி சோசலிசத்தின் ஒரு மையமான கருத்தினை இன்றைய அமெரிக்க மக்களின் மனநிலை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் கூறியிருப்பது ஒரு சிறந்த யுக்தியாகும். 

மாமேதை மார்க்ஸ் கூறினார் முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு உகந்த மதம் கிறிஸ்தவ மதம் என்று. ஏனெனில் முதலாளித்துவச் சுரண்டல் உற்பத்தி முறை ஒருபுறம் இருக்கக்கூடிய மனித மதிப்புகளை அழித்தொழித்துக் கொண்டிருக்கும் போது , கிறிஸ்தவ மதம் தனது செயல்பாடுகளின் மூலம் அவற்றைத் தக்க வைத்து ஒழுக்க நெறிகளைப் பராமரிக்கும் நிறுவனமாக அதனைக் காட்டிக் கொண்டது.

ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையின் நெருக்கடி சூழ்ந்த நிலையிலும் லாப வெறியினைக் கைவிடாத போக்குகளை முதலாளித்துவம் கொண்டிருப்பதால்  அந்த மனித மதிப்புகள் படிப்படியாக இல்லாதவையாக ஆகி மனித சமூகமே முதலாளித்துவ ஓநாய்களும் அவற்றிற்கு இரையாகிக் கொண்டிருக்கும் உழைக்கும் வர்க்கப் பலி ஆடுகளும் என்றாகிவிட்டது; அந்நிலையில் அவ்வாறு மதிப்புகள் இருப்பது போல் பாவனை கூடக் காட்ட முடியாத சூழ்நிலை தோன்றுகிறது.

அவ்வேளையில் சில கிறிஸ்தவ மத குருமார்களும் முதலாளித்துவத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பது இன்று அமெரிக்கா உள்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் தோன்றிவரும் ஒரு  போக்காகும். அப்போக்கும் இப்படத்தில் வெளிப் படுத்தப்பட்டுள்ளது. அதாவது பெயரளவு மனித மதிப்புகளுக்காக இருப்பவர்கள் கூட முதலாளித்துவத்தை எதிர்க்காமல் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதையே இது தோலுரித்துக் காட்டுகிறது.

நிலைநாட்டப்பட்ட மக்கள் சதி

முதலாளித்துவ நெருக்கடிகளை மறைக்கவே முடியாது என்ற நிலையினை மேலோட்டமாக வெளிப்படுத்திய ஊடகங்கள் அவற்றிற்கு எதிராக மக்கள் மத்தியில் தோன்றிவிடும் எதிர்ப்புணர்வையும் எழுச்சிகளையும் காட்டவேயில்லை. அவ்விசயத்தில் ஒரு பொருள் பொதிந்த மெளனத்தைக் கொண்டவையாகவே அவை இருந்தன. ஆனால் எவ்வாறு அமெரிக்க மக்கள் பல பகுதிகளில் கடனால் மூழ்கிப்போன தங்களது வீடுகளை வங்கிகளுக்கு ஆதரவாகக் கைப்பற்ற வந்த காவல்துறையையும் அரசு அதிகாரிகளையும் எதிர்த்து வீடுகளை விட்டு வெளியேறாது போராடி மக்கள் சக்தியை நிலைநாட்டி நிற்கின்றனர் என்பதை ஊடகங்கள் காட்டவில்லை.  உற்சாகம் தரும் அவ்விசயத்தை உலக உழைக்கும் வர்க்கத்தின் முன் மைக்கேல் மூர் அருமையாக இப்படத்தின் மூலம் எடுத்து வைத்திருக்கிறார். அந்த வகையிலேயே பேங் ஆப் அமெரிக்காவின் வற்பறுத்தலினால் மூடப்பட்ட, கதவுகள் மற்றும் சன்னல்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் புகுந்து பல நாட்கள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக அடையாளப்பூர்வமாக 6,000 டாலர்களை ஒவ்வொரு தொழிலாளரும் இழப்பீடாகப் பெற்ற நிகழ்ச்சியும் முன் வைக்கப்பட்டுள்ளது.

அடிமை உழைப்பை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளுக்கு அழிவு உறுதி

அடிமைத்தனத்தை மையமாகக் கொண்டிருந்த சமூகங்கள் நீடித்திருந்ததில்லை. அந்த உண்மையினை முழுமையான அடிமை உழைப்பை மையமாகக் கொண்டிருந்து அதனால் வீழ்ச்சியடைந்த ரோம சமூக அமைப்பை இன்றைய கூலி அடிமைத் தனத்தை மையமாகக் கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூக அமைப்புடன் ஓர் நிறையில் வைத்து ரோம சாம்ராஜ்யத்தின் அழிவைப் போல் முதலாளித்துவ அமெரிக்காவின் அழிவும் நிச்சயம் என்பதை மைக்கேல் மூர் பூடகமாக இப்படத்தில் காட்டியிருக்கிறார்.

தனது நண்பரான நாடக ஆசிரியர் உடனான பேட்டி, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத் தலைவருடனான சந்திப்பு, இக்கால கட்டப் பொருளாதார நிபுணர்களுடனான உரையாடல் போன்றவற்றின் மூலம் முதலாளித்துவத்தின் உண்மையான கூறுகளையும், கொள்ளை லாபம் ஈட்டும் செயலை ஒரு கருத்தாகத் தர்க்க பூர்வமாக முன் வைக்க முடியாமல் கற்றறிந்த நிபுணர்களே தடுமாறும் போக்கினையும் கொண்டு வந்திருப்பது அரசியல் உணர்வற்ற மக்களையும் சிந்திக்க வைக்கிறது.

ஜார்ஜ் புஷ் போன்ற அமெரிக்க ஜனாதிபதிகளின் முன்னுக்குப் பின் முரணான பேச்சுக்களையும், மக்கள் மறதியையே முழுமையாக நம்பி அவர்கள் நேற்று ஒன்றையும் இன்று மற்றொன்றையும் சம்பந்தமில்லாமல் கூறி நடத்தும் அரசியலையும் வெளிக் கொண்டுவந்திருப்பது மிகச் சரியான, பாமரரும் புரிந்து கொள்ளக் கூடிய அரசியல் விமர்சனமாகும்.

இறுதியாக அனைத்திற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் அவரது படத்தில் இடம் பெற்றிருக்கும் உரையாடல் ஒரு மிகப் பெரிய உண்மையினைத் தலையில் அடித்துச் சொல்வது போல் அமைந்துள்ளது. அதாவது முதலாளித்துவ சமூக அமைப்பு தீயது. தீயது எதையும் ஒழுங்குபடுத்திப் பராமரிக்க முடியாது. அது முடிவுக்கு கொண்டுவரப்படவே வேண்டும் என்ற அழுத்தமான உரையாடலே அது. அதனை அடுத்து இத்தனைக் கொடுமையாக மாறியுள்ள இந்த அமெரிக்க சமுதாயத்தில் நான் வாழ மறுப்பவனாக இருக்கிறேன். ஆனால் அதற்காக அந்த அமைப்பை விட்டு ஓடிவிட மாட்டேன் என்று கூறி தனது தீமைக்கெதிராகப் போரிடும் தன்மையை மைக்கேல் மூர்  அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அனைவரும் பிரமிக்கும் விதத்தில் பாட்டாளி வர்க்க சர்வதேச கீதத்தின் அமெரிக்க வடிவத்தை பட முடிவில் பாடலாக வைத்திருப்பது நம்மை அசர வைத்து விட்டது. அது மைக்கேல் மூர் போன்ற தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று தைரியமாக அறிவித்துக் கொள்ளாத ஒரு மனச்சாட்சியுள்ள அறிவு ஜீவியும் கூட ஒரு கால கட்டம் வரும்போது ஒரு சமூத்தின் ஆன்மாவாகத் திகழும் ஒரு கலைஞனின் நிலையாக கம்யூனிஸக் கருத்துக்களையே எடுக்க வேண்டிவரும் என்பதை அவரையும் அறியாமல் அந்த சர்வதேச கீதத்தை படத்தில் சேர்த்திருப் பதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

கம்யூனிஸ விரோதக் கருத்துக்களின் நிலைக்களனாக அமெரிக்க மக்களை அமெரிக்க ஆட்சியாளர்கள் , ஆளும் வர்க்கம் , அதன் ஊடக வலிமையைக் கொண்டு இதுவரை வைத்திருக்க முடிந்தது. ஆனால் 2008 , 2009களில் தோன்றிய மிகக் கடுமையான நெருக்கடி முதலாளித்துவம் எத்தனை கொடிய அமைப்பு என்பதை அவர்களுக்குத் தோலுரித்துக் காட்டி விட்டது.

அந்நிலையில் எந்தப் பொய்ப் பிரச்சாரமும் ஒரு சித்தாந்தத்தை ஏறெடுத்துப் பார்க்கவிடாமல் அமெரிக்க மக்களைக் கடிவாளம் போட்டு காலங்காலமாக வைத்திருக்க முடியாது என்ற நிலை வெளிப்படையாக உருவாகியுள்ளது. அதனைக் கலை வடிவத்தில் வெளிப்படுத்தியிருக்கும் ஒரு திருப்பு முனையே கேப்பிடலிஸம் எ லவ் ஸ்டோரி என்ற இந்த ஆவணப்படம். சுருக்கமாகச் சொன்னால் ஒரு வரலாற்றுக் கடமையினை  அமெரிக்க மக்களின் கண்களை உண்மைப் பிரச்னைகளின் பால் திருப்பி அதன்மூலம் சமூக மாற்றத் தேவையினை அவர்களை உணரச் செய்யும் ஒரு வரலாற்றுக் கடமையினை  இப்படத்தை எடுத்ததன் மூலம் மைக்கேல் மூர் ஆற்றியுள்ளார்.

- A.ஆனந்தன்