இலங்கையில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகள் தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இதுவரையான வன்முறை அனுபவங்கள் ஊடகத் தொழிற்பாடுகளில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இதனால் அவரவர் சுயதணிக்கைக்கு உட்பட்டு இயங்கும் மனோ பாவத்தை வளர்த்துள்ளன. அப்படி முடியாதவர்கள் ஊடகத் துறையை விட்டு வெளியேறி அல்லது நாட்டைவிட்டு வெளியேறும் அவலம் பொது நடைமுறையாக மாற்றமுற்று வளர்ந்துள்ளன.

இலங்கையில் 1990ஆம் ஆண்டு ஐ. தே. கட்சி ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி சொய்ஸா முதல் 2009ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சசிமதன் வரை 41 ஊடகவியலாளர்கள் வன்முறைகளினால் தமது உயிரை இழந்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட இந்த 41 ஊடகவியலாளர்களில் 36 பேர் தமிழ்பேசும் இனங்களைச் சேர்ந்தவர்களாகவும் 5 பேர் சிங்களவர்களாகவும் உள்ளனர். சனநாயக நாடெனக் கூறப்படும் இலங்கையில் ஊடகங்கள் அதிலும் குறிப்பாகத் தமிழ் ஊடகங்கள் எதிர்நோக்கும் ஆபத்தையும் சவால்களையும் இவை தெட்டத்தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

முன்னாள் சனாதிபதிகளான பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் 2 ஊடகவியலாளர்களும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா வின் ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் தற்போதைய மகிந்தா ராஜபக்சாவின் ஆட்சியில் 26 ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவது, கடத்தப்படுவது, காணாமல் போவது, தாக்கப்படுவது, மிரட்டப் படுவது என வன்முறைகள் பல வடிவங்களில் நடைபெறுகின்றன. சமூக அக்கறையும் அரசியல் நோக்கமும் உள்ள ஊடகவியலாளர் கள் ஒதுங்கவும் ஓரங்கட்டப்படவும் தள்ளப்படுகின்றனர். தமது தாய்நாட்டில் இருந்தால் தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்பதால் வெளிநாடுகளில் தஞ்சமடைந்தவர்களில் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.

இலங்கையில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் ஆபத்தையும் அச்சுறுத்தலையும் எதிர்கொள்பவர்களாகவே உள்ளனர். 1992ஆம் ஆண்டு முதல் இற்றை வரை உலகில் 580 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2010ஆம் ஆண்டு மட்டும் 57 ஊடகவிய லாளர்கள் கொல்லப்பட்டும் 51 ஊடகவியலாளர்கள் கடத்தப்பட் டுள்ளதாக ‘எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு’ தெரிவிக்கின்றது. இலங்கையில் 1998 ஜுன் 5ஆம் திகதி அவசர காலச் சட்டத்தின் கீழ் சில குறிப்பிட்ட செய்திகள் வெளியிடுதல் மீதான தணிக்கை சனாதிபதியால் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. முன்பு 1995 செப்டம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரையும் பிறகு 1996 ஏப்ரல் 19 முதல் ஒக்டோபர் 8 வரையும் செய்தித் தணிக்கை அமுலில் இருந்தது. இந்தத் தணிக்கையைக் கண்காணிக்கும் பொறுப்பு சிவில் அதிகாரியிடம் வழங்கப்பட்டி ருந்தது.

1998இல் அமுல்படுத்தப்பட்ட செய்தித் தணிக்கையைக் கண்காணிக்கும் பொறுப்பதிகாரியாக இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் அப்பொழுது நியமிக்கப்பட்டார். இலங்கையின் வரலாற்றிலேயே முதற்தடவையாகத் தணிக்கைச் சட்டத்தின்கீழ் ஒரு இராணுவ அதிகாரி பொறுப்புக்கு நியமிக்கப்பட்டது குறித்துத் தொடர்பூடக அமைப்புகள் பலவும் அப்போது தமது எதிர்ப்பைத் தெரிவித்தன.

தொடர்பூடகச் சுதந்திரம் பேணுவதில் இலங்கை மிக மோசமாகத் தாழ்ந்திருந்தது. 1998இல் அறிமுகப்படுத்தப்பட்ட யுத்த செய்தித் தணிக்கை இலங்கையின் தொடர்பூடகச் சுதந்திரத்தை மட்டுப்படுத்தியிருந்தது. அதுபோல இராணுவ நடவடிக்கை களாலும் அவற்றுடன் தொடர்புடைய காரணங்களாலும் அறிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டன. மக்களுக்கு உண்மையை அறிவதற்காக உள்ள அடிப்படை உரிமையை மறுதலிக்கும் இந்தத் தணிக்கை அரசாங்கம் தான் நினைத்தவற்றைத் தனக்குச் சாதகமானவற்றை மட்டுமே மக்களுக்குத் தெரிவிக்கும் நோக்கிற்காகத் தொடர்ந்து அமுல்படுத்தி வந்தது.

யுத்தம், யுத்த அழிவுகள் போன்ற விபரங்கள் தொடர்பான உண்மைத் தகவல்கள் எவையும் மக்களுக்குச் சொல்லாமல் இருப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்தத் தணிக்கைமுறை யுத்தத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் மக்களை மட்டுமல்லாமல் அதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஆயுதப்படையினரையும் கூடப்பாதித்தது. கொல்லப்பட்ட படையினரின் குடும்பங்களுக்கு அவர்கள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படாதது முதல் படையினருக்குக் கூட அவர்கள் தமது உயிரைக் கொடுத்து நடத்தும் யுத்தம் எந்தளவுக்கு வெற்றிகரமாக நடத்தப்படுகிறது என்பது கூடக் கூறப்படாமல் இருந்தது.

சந்திரிகா அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக மக்கள் முன்வைத்த பல்வேறு கவர்ச்சித் திட்டங்களில் ஒன்று கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திர உரிமையும் வெளிப்படைத் தன்மையும் பற்றியதாகும். ஆனால், பின்னர் யுத்தம் பற்றியோ அதன் விபரங்கள் பற்றியோ எல்லாத் தகவல்களையும் பாராளுமன்றத்தில் கூடத் தெரிவிக்க முடியாது என்று கூறுமளவிற்கு அதன் வெளிப்படைத் தன்மை வாக்குறுதி தூக்கி வீசப்பட்டது. 17 வருட ஐ.தே.க. அரசாங்க காலத்தில் நடந்த அத்துமீறல்களை அணுஅணுவாக மக்களுக்குத் தொடர்பூடகங்கள் குறிப்பாகப் பத்திரிகைகள் அறிவித்து வந்ததன் விளைவாகவே ஐ.தே.க. அரசாங்கத்தினை வீழ்த்தி, சந்திரிகா அம்மையார் அரசாங்கம் ஆட்சிக்கு வரவழிவகுத்தது. இந்த வளர்ச்சிக் கட்டம் பின்னர் மகிந்தா தலைமையிலான ஆட்சியில் இன்னும் உச்சம் பெற்றது. 26 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்னும் பலர் தாய்நாட்டில் வாழமுடியாது உயிரைத் தக்கவைக்க வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இன்னும் பலர் ஊடகத்தொழிலே வேண்டாமெனக் கூறி ஒதுங்கிவிட்டனர். அரச சிவில் நிருவாகக் கட்டமைப்பில் இராணுவத் தரப்பாலின் செல்வாக்கு அதிகரித்து விட்டது. வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் அரசாங்க உயரதிகாரிகளாக முன்னாள் இராணுவத் தளபதிகள் நியமிக்கப் படும் நடைமுறை அரசாங்க முறைமையாக வளர்ச்சியடைகிறது. ஆளுநர், மாவட்டச் செயலாளர் மற்றும் மாகாண ஆளுநர் போன்ற பதவிகளுக்கு ஓய்வுபெற்ற இராணுவத் தளபதிகளைக் கொண்டே நிரப்பும் புதிய நடைமுறை எழுச்சி பெற்றுள்ளது.

மேலும், அவசரகாலச் சட்டத்தை நீக்கும் பிரேரணை மீது பாராளுமன்றத்தில் சனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றும் போது கூறிய கருத்தொன்று இங்குக் கவனிக்கத்தக்கது. அதாவது 2005ஆம் ஆண்டுக்குப் பின்னரான தமது தலைமையிலான ஆட்சியில் பத்திரிகைத் தணிக்கை செய்யப்படவில்லை என்றும் எழுத்துச்சுதந்திரம் யுத்த உச்சக் கட்டத்திலும் பேணப்பட்டது என்றும் கூறி இருக்கிறார். ஆனால், இவர் காலத்திலேயே அதிக மான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள், நாட்டைவிட்டு ஓடியிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நிருவாகமும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் ஊடகச் சுதந்திரத்தைப் படுமோசமாகப் பாதித்த இந்தச் செயற்பாடுகளுக்கு அவர்கள் எந்தளவு பொறுப்பாக இருந்தார்கள் என்பது பற்றி அவர்களுக்குள்ளேயே சர்ச்சைகள் எழுந்தன. இவை வெளியிலும் தெரிய வந்தன. நாட்டில் ஏற்பட்ட விநோதமான மாற்றங்களால் சனாதிபதியும் தளபதியும் ஊடகச் சுதந்திரத்தின் முக்கியத்துவம் ஊடகவியலாளர்களின் நலன்கள் பற்றியெல்லாம் அளவுகடந்த அக்கறையைக் காண்பித்தனர். அவை தேர்தல்கால கொண்டாட் டங்களில் பின்பற்றப்படும் ஏமாற்று வேலைகளாக இருந்து விட்டன.

பின்னர் ஜெனரல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். இந்த நிகழ்வுக்குப் பின்னால் உள்ள அரசியல் நலன்கள் தொடர்பான விரிவான செய்திகள் விமரிசனங்கள் முழுமையாக வெளிப்படாத வகையில் செய்தித்தணிக்கை தன்னியல்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனைக் கண்காணிக்கும் பொறிமுறையாக அரசாங்க நிருவாகம் மாற்றப்பட்டிருப்பதையும் மறப்பதற்கில்லை.

‘ஊடகச் சுதந்திரம்’, ‘தகவலுக்கான உரிமை’ போன்ற அம்சங்கள் இலங்கையின் அரசியல் மரபில் இழையோட முடியாதவையாக மாற்றப்பட்டுள்ளன. ஆரோக்கியமான சனநாயக நடைமுறை களைப் பின்பற்றும் “ஆட்சிமுறை’’ இலங்கையில் இன்னும் நிலைபெறவில்லை. இன்று சனநாயக நடைமுறையில் அல்லது நாட்டின் ஆட்சி முறையில் மக்கள் பங்குகொள்ளக்கூடிய ஒரு சிறந்த வழிமுறையாக ‘தகவல் அறியும் முறை’ காணப்படுகிறது. உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் இந்தத் தகவல் அறியும் சட்டம் பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்கா, அயர்லாந்து, அவுஸ்திரேலியா, நேபாளம், பங்களாதேஷ் உட்பட 70 நாடுகளில் இச்சட்டம் அமுலில் உள்ளது.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 14ஆவது சரத்தின் கீழ் பிரஜை ஒருவருக்குக் கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளடங்கிய கருத்துச் சுதந்திரம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள் ளது. இருந்தபோதும் இலங்கைப் பிரஜை ஒருவருக்குத் தகவல்களை அறியும் சுதந்திரம் இருப்பதாகவும் உள்ளதை அரசியலமைப்புச் சட்டமூலமோ பாராளுமன்றத்தின் எந்தவொரு சட்டமோ தெளிவாக இதுவரை குறிப்பிடப்படவில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சிந்திக்கும் மற்றும் கருத்து வெளியிடும் உரிமை அடிப்படை உரிமையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் தகவல் அறியும் உரிமை மறைமுக மாக வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உயர்நீதிமன்றம் பலமுறை குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் அதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இதுவரை உண்மையான அக்கறை எதுவும் காட்டப்படவில்லை. இலங்கையில் தகவல் அறியும் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்படுமா? 1994ஆம் ஆண்டு முதல் அரசியல் கட்சிகள் ஊடக அமைப்புகள் இதற்காகக் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், இந்த உரிமை இதுவரை மக்களுக்குக் கிடைக்கவில்லை.

ஆனால், அயல் நாடான இந்தியாவில் மத்திய அரசாங்கமும் அதேபோன்று மாநில அரசாங்கங்களும் தகவல் அறியும் சட்டத்தை முழுமையாக அமுல்நடத்தி வருகின்றன. இந்த நடைமுறையால் அந்நாட்டில் நல்லாட்சிக்கான சிறப்புகளை மக்கள் உணரவும் ஓரளவு அவற்றை அனுபவிக்கவும் முடிகிறது. இதற்குப் பல்வேறு உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும். ஆனால், இலங்கையில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் இச்சட்டத்தை அமுல்படுத்துவதிலும் புதிய ஊடகப் பண்பாட்டை, சனநாயக நடைமுறைகளை ஏற்படுத்துவதிலும் பெரும் அக்கறை செலுத்துவதாக இல்லை. தொடர்ந்து சிங்களப் பேரினவாத அரசியலை உறுதிப்படுத்தவும் தமது எதிர்கால நன்மைக்காகவும் சனநாயக விரோதப் போக்குகளைக் கடைப்பிடிக்கவும் உறுதி பூண்டுள்ளார்கள். இதனால் சிறுபான்மை இனங்களை நசுக்கவும் ஒடுக்கவும் மற்றும் சிங்களத் தொழிலாள விவசாயிகளின் நியாயமான போராட்டங்கள் வெளியில் தெரியவிடாமல் தடுக்கவும் ‘தகவல் அறியும் சட்டம்’ போன்றவற்றை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

தற்போது “போருக்குப் பிந்திய’’ என்னும் சொல்லாடலை அரசாங்கம் தாராளமாகப் பயன்படுத்தி வருகிறது. ஆனால், ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குவதையோ தகவல் அறியும் உரிமை பாதுகாப்பதற்கான சட்டத்தை அமுல் படுத்துவதிலோ பெரும் அக்கறை செலுத்துவதாக இல்லை. ஊடகங்கள் மீது வன்முறைகள் தொடர்கின்றன. அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

Pin It