‘எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசி பக்கங்கள்’, ‘இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை’, ‘ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள்’, ‘லிபரல் பாளையத்துக் கதைகள்’ ஆகிய தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன.

ரோடும் ரோடு சார்ந்தும் ஆகிப்போன தன் முன்னோர்களின் வாழ்க்கை குறித்த துயர்மிகுந்த நினைவுகளைக் கொண்டது ‘பொங்காரம்’ கதை. ஓசூர் தொடங்கி திருவண்ணாமலை, வந்தவாசி வரை நீளும் சாலைகளை அமைத்தவர்கள் இந்தக் கதையின் மாந்தர்கள். கங்காணியால் ஆந்திரத்தின் பெஜவாடாவிற்கு சிறு முன்பணத்தின் நிமித்தம் அழைத்துச் செல்லப்படும் இவர்களின் அடிமை வாழ்வைச் சொல்லும் கதையாக விரிகிறது.

சொர்ணகுப்பத்தின் நீர்த்தேவையின் பொருட்டு வெட்டப்படும் குளத்தில் பீறிட்டெழும் நீர் ஆறாக ஓடுகிறது. இதிலிருந்து ஊரைக் காக்க உயிர்ப்பலி தீர்வாக முன்மொழியப்படுகிறது. நிறைமாத கர்ப்பிணியான ஒண்ணம்மாள், ஊரில் உள்ள இந்த குளத்தில் புழங்கும் உரிமையைத் தன் மக்களுக்குப் பெற்றுத்தரும் ஒரு ஒப்பந்தத்துடன் தன்னை பலி கொடுக்கிறாள். தலித்துகளுக்கான குளத்தில் புழங்கும் உரிமை மறுக்கப்படுகிறது. சொர்ணகுப்பத்தில் எச்சில் துப்பி ஈரமென்று காட்டக்கூட முடியாதபடி வறட்சி நிலவுகிறது. இது ‘சொர்ணகுப்பத்தின் துர்க்கனவு’ எனும் கதை.

தலித்துகளின் உழைப்புச் சுரண்டலை மையப்படுத்திய கதையாக ‘ரகசியத்தில் பாயும் நதி’ அமைகிறது. பெரும் மழையின் நிமித்தம் கரைபுரண்டோடும் ஆற்றின் போக்கில் அடித்துச் செல்லப்படும் ஆடு, மாடு, மான் ஆகியவற்றைத் தன் சகாக்களோடு சேர்ந்து கரையில் இழுத்துப் போடுகிறான் காளியப்பன். எதேச்சதிகாரமாகப் பண்ணாடிகள் ஆடும் மானும் எங்கள் பங்கு, உங்கள் பங்கிற்கு மாட்டை கொண்டு போய் அறுத்துத் திண்ணுங்கள் என்று பங்கு பிரிக்கின்றனர். பொன்னுருகி எனும் தோட்டி தன் சிற்றப்பன் குறித்த இந்நிகழ்வுகளை நினைவுகூறும்படியான கதையிது.

மலம் அள்ளுதல், பிணவடக்கம், துணி வெளுப்பு, சிரைத்தல் போன்ற கடைநிலைத் தொழில்கள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கானதாய் இருக்கும்படி நமது சனாதன சாதியடுக்கு முறை அமைப்பாக்கம் செய்யப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் டாக்டர் படிப்பு படித்தவர்கள் செய்ய வேண்டிய ‘போஸ்ட் மார்ட்டத்தை’ செய்வது அன்னையா போன்ற அடித்தட்டு மக்கள் திரளில் ஒருவரே என்பதை ‘அன்னையா’ சிறுகதை எடுத்துரைக் கின்றது. குறிப்புகளை வழங்கி மூக்கைப் பொத்திக் கொண்டு நிற்பதற்கு இவர்கள் ஏன் டாக்டர்களாக வேண்டும் எனும் கேள்வியை எழுப்பும் கதை. பிரசவத்தின்போது பிறப்புறுப்புக்களைச் சுத்தம் செய்வது, குழந்தையைத் துடைத்துக் கொடுப்பது உள்ளிட்ட வேலை களை நாவிதர் சாதியின் பெண்களைச் செய்யச் சொல்லிவிட்டு வேடிக்கை பார்க்கும் செவிலியர், மகப்பேறு மருத்துவர்களின் செய்கையை இங்குப் பொருத்திப் பார்க்கலாம்.

தலித் பெண்களின் உழைப்புச் சுரண்டல், பண்ணாடி, கணவன், தம்பி ஆகியோரின் கண்காணிப்பும் ஒடுக்குமுறையும் குறித்த பதிவுகளைச் சொல்வது ‘சொல்லவே முடியாத கதைகளின் கதை’ எனும் கதை.

“கன கம்பீரமான ஆம்பிளையாள்கூட கழுவத் தெரியாத கவண்டப் பிள்ளைங்ககிட்டயும் கணக்கய்ய ரூட்டு பொம்பளைங்க கிட்டயும் கைகட்டி நிக்க வேண்டியிருக்கு. ஊரெல்லாம் ஒடுங்கி நடுங்கி வர்ற அப்பேர்ப்பட்ட ஆம்பளைக்கிட்ட ஒரு வார்த்தை தெகிரியமா பேச முடிறதில்ல பொம்பளைக்கி”. சாதி பாலின ஒடுக்குமுறைகள் என ஆகக்கீழாக ஒடுக்கப்படுவது தலித் பெண்க ளாக இருப்பதைக் கதை அழுத்தமாகச் சொல்கிறது. இக்கதையின் முக்கியப் பாத்திரமான பள்ளிகொடத்தாளின் கதையைக் கேட்க அவளைப் பின்தொடர்கிறான் ஒருவன். ஆர அமர அவனிடம் தன் கதைகளைப் பகிர்ந்துகொள்ள முடியாமலே போகிறது அவளுக்கு. கூலியுயர்வு கேட்டதின் பொருட்டு கொல்லப்பட்ட அவளின் சொந்தங்கள் குறித்தும், பண்ணாடிகளின் உழைப்புச் சுரண்டலையும் கணவன் இழந்தபின் தன் தம்பி ஆதரவில் வாழ்வதையும் இரண்டாந்தாரமாக இவளின் மூத்தமகளை அவன் மணந்தபிறகு இளைய மகள் மீதும் விருப்பு கொள்வதையும் இடையிடையே சொல்லிச் செல்கிறான். நிலவும் சூழலை எந்தப் பேச்சும் எழுத்தும் மாற்றிவிடப் போவதில்லையென்றான பிறகு எங்களைப் பற்றி எழுதி என்ன ஆகப்போகிறது என்ற கேள்வியை எதிர்கொண்டு திரும்புகிறான் பள்ளிகொடத்தாளின் கதையைக் கேட்கப் போனவன்.

“எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசி பக்கங்கள்” என்ற கதையை நான் இவ்வாறு புரிந்துகொள்கிறேன். தலித்துகளின் துயர் சூழ்ந்த போராட்ட வாழ்வின் தொடக்க புள்ளிகளாக எழுதப்பட்ட சில பிரதிகளைக் கண்டே பதற்றமுறும் பொதுச் சமூகத்தின் படைப் பாளர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் குறித்த சித்திரிப்பு இக்கதை. தலித் இலக்கியத்தின் இலக்கியத்தரம், செல்நெறி, செல்ல வேண்டிய நெறி, தேக்கம், நீர்த்தல் எனும் தன்மையிலான சொல் லாடல்களைக் கவனமாக எதிர்கொண்டு அவற்றிலுள்ள தந்திரங்களை அம்பலப்படுத்தும் கதை.

குடியரசுத் தலைவரின் ஊதியத்தைவிட ஒரு ரூபாய் கூடுதலாகவும் அப்பதவிக்குரிய மரியாதைகள் அனைத்தும் மலம் அள்ளும் தொழில் செய்வோருக்கு வழங்கப்படும் என்ற அவசரச் சட்டம் கக்கா நாட்டில் நிறைவேற்றப்படுகின்றது. அதுவரை நாட்டில் உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் வாய்ப்பும் உயர் பதவிகளைப் பெறும் வாய்ப்பும் தங்களின் பிறப்புரிமையாகக் கொண்ட ஆதிக்க சாதியினர் இந்தக் கணத்திலிருந்து மலம் அள்ளும் தொழிலாளராகிவிடத் துடிக்கின்றனர். மலம் அள்ளுபவர்களும் செருப்பு தைப்பவர்களும் உயர் கல்வி கற்க முனைந்தால் நாங்கள் மலம் அள்ளவும், செருப்பு தைக்கவும் போக வேண்டுமா என்றளவில் இட ஒதுக்கீட்டுக் கெதிராகப் போர்க்கொடி உயர்த்திய ஆதிக்க சாதியினர் இப்போது நிஜமாகவே மலம் அள்ளத் துடிக்கின்றனர். “கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக் கூடும்” கதையில். அருந்ததியர் மற்றும் ஆதிக்க சாதியினர் வாதங்களை மாற்றிப் போடுவதன் மூலம் அருந்ததியர் களின் நியாயங்களைச் சிறப்பாக உணர்த்தும் கதையிது எனக் கூறும் பிரபஞ்சன் ஒரு நூற்றாண்டின் ஆகச்சிறந்த கதையாகவும் இதை முன்மொழிகிறார்.

இழிதொழில்களைச் செய்யப் பணித்தவர்களே லாபம் கருதி அத்தொழில்களைச் செய்யப் போட்டி போடுவதைப் பகடி செய் வதின்மூலம் ஆதிக்க சாதியினரின் கயமை விவாதப் பொருளா கின்றது. சிரைத்தல் எனும் தொழிலைச் செய்யப் பணிக்கப்பட்ட வர்களிடமிருந்து அத்தொழிலின் சமகால சந்தை லாபங்களைக் குறித்து ஆதிக்க சாதியினர் நவீன பார்ப்பனர்களாக உருவாகி வருவதை இக்கதையுடன் பொருத்திப் பார்க்கலாம் (பார்க்க: அழகின் அரசியல் - அம்பட்டனும் பியூட்டிஷியனும், புறநடை இதழ், ஜனவரி 2012).

லிபரல் பாளையத்துக் கதைகள் எனும் சமீபத்திய தொகுப்பில் 9 கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா எனும் பெருநிலப்பரப்பை லிபரல்பாளையம், கக்கா நாடு, டப்புஸ்தான், துட்டுஸ்தான் என பல்வேறு உருவகங்களின் மூலம் விளிக்கின்றார் ஆதவன். நாளும் இங்கு நடந்தேறும் அரசியல் சீரழிவுகளைக் கதைகளாக்குகிறார். லிபரலப்பன், டாலராண்டி, கன்ஸ்யூ மரேஸ்வரி, பரிதாபசுந்தரி, காசுநாதன், வட்டியப்பன் போன்ற கதை மாந்தர்கள் உலகமயம் உருவாக்கிய சுரண்டல்களின் சாட்சியங்களாக அமைந்து விடுகின் றனர். இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளை அமெரிக்கா தீர்மானிப்பதில் எவ்வித எதிர்ப்புமற்றவர்களாகவும் அதேவேளை யில் எதிர்ப்பை வெளிப்படுத்துபவர்களாகவும் இவர்கள் இருக்கின் றார்கள். அமெரிக்காவின் 42வது மாகாணமாக இந்தியா இணைக்கப் பட்டுவிட்டதோ என எண்ணும்படியான மயக்கம் மங்கலாக வேணும் இவர்களால் அறியமுடிகின்றது.

‘உலகமே உறங்கும் நடுநிசி வேளையில்’ எனும் கதை இந்தியா வின் நாணயம் ரூபாயிலிருந்து திடீரென டாலருக்கு மாறிவிட்டதை அறியும் லிபரலப்பன் பதறி விடுகிறார். உலகமயம் கொடுத்த ‘வளர்ச்சி’யைக் கொண்டாடுபவர் அவர் மட்டுமின்றி புழக்கத்தி லிருக்கும் ஆணுறைகள் அனைத்திலும் புஷ் படம் பதிக்கப்பட்டிருக் கின்றது. இன்றோ நாளையோ நடக்கவிருக்கும் இந்நிகழ்வுகளை இக்கதை சற்று முன்கூட்டியே நமக்குச் சொல்கின்றனவே அன்றி மிகையானவை அல்ல.

தமிழ்த் தேசியம், இந்தியத் தேசியம் எனும் கருத்தாக்கங்களின் பின்னுள்ள அரசியலையும் ஆதவன் கதைகள் அம்பலப்படுத்தி விடுகின்றன. இந்தியா, பாகிஸ்தானை ஜெயிப்பதற்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு எனும் நம்பிக்கை நிலவும் சூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட கதை ‘ஒரு பில்லியன் பிராத்தனைகளும் ஒற்றைச் சூடக்கட்டியும்’. இந்திய/தமிழ்த் தேசியத் தன்னிலைகளாகத் தங்களை மக்கள் உணரும்படி செய்துள்ள ஒரு ஏற்பாடுதான் கிரிக்கெட் எனும் சூதாட்டம் வெற்றி கரமாக நிகழ்த்தப் பெறுவதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை இக்கதை உணர்த்துகின்றது.

சாதி, மதம், தேசியம், பாலினம் சார்ந்த ஒடுக்குமுறைகள் சுரண்டல்கள் தொடர்ந்து அரங்கேற்றப்படும் சமூகச் சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நாம் இவற்றை மவுனமாகக் கடக்கவே முடியாது. நாம் சுரண்டவும் ஒடுக்கவும்படுகிறோம் என்ற ஓர்மையைக் கிளர்ந்தெழ வைப்பவை ஆதவனின் சிறுகதைகள். அநீதியான இந்த சமூக அவலங்களின் மீதான ஆதவனின் பெருங்கோபம் அதிகாரங் களுக்கெதிரான கண்டனங்களாகவும் பகடியாகவும் கேலியாகவும் தன்னை உருக்காட்டிக் கொள்கின்றது.

ஆதவன் முன்னுரையில் எழுதிய ஒரு பத்தியை இங்கு மேற் கோளாகக் காட்டி முடிக்கலாம் எனத் தோன்றுகிறது. “சிலர் எழுதிய தாள்கள் மலம் துடைக்கவும் தகுதியற்றதாக அருவருப்பூட்டும். ஆனால் சிறையிலடைக்கப்பட்ட கூகிவா தியாங்கோ அங்கு மலம் துடைக்கும் தாளில் ஒரு நாவலை எழுதி முடித்தார். அது நாட்டின் வயல்வெளிகளிலும் அடிப்படிகளிலும் தெருமுனைகளிலும் மதுபான விடுதிகளிலும் வரிக்குவரி வாசிக்கப்படுகிறது. மதுபான விடுதியில் வாசித்துக் காட்டுகிறவனின் கோப்பை காலியாகிற போதெல்லாம் என் கணக்கில் அவனது கோப்பையை நிரப்பு என்று கூட்டத்திலிருந்து யாரோ ஒருவன் செலவழிக்கிறான் கூகியின் எழுத்தைக் கேட்பதற்காக. தமிழில் அப்படி வாசிக்கப்படும் உக்கிரமான முதல் படைப்பாக என்னுடைய எழுத்துகள் இருக்க வேண்டும் என்ற எளிய ஆசையை அகங்காரம் துளியுமின்றி இவ்விடத்தில் வெளிப்படுத்துகிறேன். எனக்கும் முன்பாகவே யாருடைய எழுத்தேனும் வாசிக்கப்படுமேயானால், வாசித்துக் காட்டுகிறவரின் கோப்பை என் செலவில் தளும்பி வழியும் - என் மகிழ்வைப் போல”.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர்.“பண்டைத் தமிழ் மருத்துவ மரபு - தொண்டைமண்டல நாவிதர் சமூகத்தை முன்வைத்து” எனும் தலைப்பில் ஆய்வு செய்து வருகிறார்.)

Pin It