தலித் இலக்கிய எழுச்சியினோடுதான் இதுவரை முக்கியத்துவம் தரப்படாத மனிதர்களும் நிகழ்வுகளும் மொழியும் பண்பாடும் பதிவு செய்யப்பட்டன. தலித் இலக்கிய ஆளுமைகளும் பதிவு செய்ய மறந்த மனிதர்களையும் பண்பாட்டையும் பதிவு செய்தவர் இமையம். பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரமான இவரது சிறுகதைகளையும் பிரசுரமாகாத சிறுகதைகளையும் சேர்த்து மண்பாரம் (2004), வீடியோ மாரியம்மன் (2008) என்ற இரு சிறுகதைத் தொகுப்புகளை க்ரியா வெளியிட்டுள்ளது. அத்தொகுப்புகளின் அடிப்படையிலேயே இமையம் குறித்த பின்வரும் உரையாடல் அமைகிறது. இவர் ஒரு தலித் ஆணாக இருந்தாலும் தனது புனைவுகளில் தலித்பெண்கள், சிறார்கள், புதிரை வண்ணார்கள், கூத்தாடிகள் உள்ளிட்டோரை அவர்களது கலை மற்றும் வாழ்வியல் சூழலோடு பதிவு செய்துள்ளார்.

தலித் பெண்கள் தன் சமூகம் சார்ந்த ஆண்கள், ஆதிக்கசாதி ஆண்கள் மற்றும் பெண்கள், அதிகார நிறுவனங்கள் எனப் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர். அதிகார நிறுவனங்கள், உயர்சாதி ஆண்கள் மற்றும் பெண்களால் தலித் பெண்கள் ஒடுக்கப் படுவது குறித்துப் பரவலான பதிவுகள் உள்ளன, ஆனால் குடும்ப வெளிக்குள், தான் சார்ந்த சாதிவெளிக்குள் இவர்கள் ஒடுக்கப்படுவது குறித்து சிவகாமி, பாப்லோ அறிவுக்குயில் என மிகச் சிலரே பதிவு செய்துள்ளனர். ஒடுக்குமுறை தரும் வலிகளையும் அதற்கெதிராகக் கிளர்ந்தெழ வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துவது மட்டுமே புனைவுலகில் தலித்பெண்ணின் வாழ்வாக இருக்க முடியாது. அவர்களின் நாட்டார் வழக்காற்றுக் கூறுகள், நம்பிக்கைகள், குடும்பவெளி, மற்றும் சமூக உறவுகள் முதலானவற்றை விடுதலைக் கருத்தாக்கக் கூறுகளோடு தருவதுதான் அவர்களை முழுமையுடன் பதிவு செய்ததாக இருக்க முடியும். இத்தகைய கூறுகளோடு இமையம் தனது புனைவுகளில் ஏராளமான பெண் பாத்திரங்களை அழுத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.

‘தேர்வு, திட்டமிடுதல் ஒரு படைப்பின் அடிப்படைதான் என்றாலும் பெண் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்பது என் நோக்க மில்லை. அவை அப்படி இயல்பாக அமைந்துவிட்டன. அது தன்னியல்பாக நடந்த ஒன்று’ (சூரிய சந்திரன்; 2008; 222) என இமையம் குறிப்பிடுகிறார். ஆனால் இவரது புனைவுகளில் தலித் பெண்கள், சிறார்கள், முதியோர்கள் மற்றும் தலித்துகளுக்குள்ளும் ஒடுக்கப்படுபவர்களே பெரும்பாலும் இடம்பெறுகின்றனர். தலித் ஆண்களுக்கான வெளி மிகக் குறைவே. இதைத் தன்னிலை மறுத்தலாக, ஒரு அறிவுஜீவியின் சமூக அறம் சார்ந்த செயல்பாடாக, தலித் எழுச்சியை மட்டுப்படுத்த நினைக்கும் ‘தலித் விரோதியின்’ திட்டமிட்ட செயல்பாடாக எனப் பலவகைகளில் வாசகர்கள் புரிந்துகொள்ள முடியும். அந்தப் புரிதல் யார் எந்த அடையாளத்துடன் வாசிக்கின்றனர் என்பதைச் சார்ந்தது.

இமயத்தின் புனைவுகளில் ஆண்களே இல்லாமல் கதைகள் இருக்கும். ஆனால் பெண்கள் அல்லது சிறார்கள் அல்லது முதியோர்கள் இல்லாமல் எந்தக் கதையும் இல்லை. சான்றாக, ‘தொடரும்’ சிறுகதையில் திருமணமாகி அம்மா வீட்டிற்கு வந்திருக்கும் ஒரு பெண், அவளது குழந்தை மற்றும் அம்மா என மூன்று பாத்திரங்களை மையமிட்டே கதை நகர்கிறது. ‘உறவு’ என்னும் கதையில் தங்களுக்கிடையே சண்டை போட்டுக் கொண் டிருந்த பெண்கள் ஆணின் தலையீட்டை அனுமதிக்காமல் சமாதான மாகின்றனர். இவ்வாறு ஆண்களின் குறுக்கீடு இல்லாத பெண்கள் இவரது ’ பயணம்’, ‘விடியாத இரவு’ முதலான பல கதைகளில் பதிவாகியிருக்கின்றனர்.

தலித் புனைவுகளுள் சிறார் மற்றும் முதியோர் குறித்த பதிவுகள் மிகமிகக் குறைவாகவே உள்ளன. சிலுவைராஜ் சரித்திரத்தில் வரும் சிலுவையின் சுட்டித்தனங்கள், அவனது பள்ளி வாழ்க்கை, பாமாவின் சிறுகதைகளில் தலித் சிறார்கள் அனுபவிக்கும் சாதிக் கொடுமைகள், தகப்பன் கொடியில் வரும் அம்மாசிக் கிழவனின் முதுமை என ஒரு சில இடங்களிலேயே சிறார் மற்றும் முதியோர் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. ஆனால் இமையத்தின் பல கதைகளில் சிறார்களே பதிவாகியிருக்கின்றனர். இந்தச் சிறார்களின் ஒவ்வொரு நிகழ்விலும் பெரியவர்கள் குறுக்கிடுகின்றனர்; அவர்களின் ஆசைகளையும் கேள்விகளையும் அதுசார்ந்த தேடலையும் முடக்கி விடுகின்றனர். தாங்கள் சரி என்று கருதும் வாழ்வியல் நியதியின் படியே சிறார்களையும் வாழ வற்புறுத்துகின்றனர். அதனைச் சிறார்கள் எரிச்சலோடு எதிர்கொள்வதையும் இவர் பதிவு செய்துள் ளார்.

’நெல்சோறு’ கதையில் கல்யாணப் பந்தியில் உட்கார்ந்து நெல்சோறு சாப்பிடவேண்டுமென பையன்கள் ஆசைப்படுகின் றனர். ஒவ்வொருமுறை பந்திக்குச் செல்லும்போதும் பெரியவர் களால் துரத்தி அனுப்பப்படுகின்றனர். இதனை, ‘பெரியவர்கள் ஏன் எதற்கெடுத்தாலும் முன்னே முன்னே என்று வந்துவிடுகிறார்கள்? ஊரில் யார் குசு விட்டாலும் பஞ்சாயத்தார்களும் கொத்துக்காரர்களும் கூடிவிடுகிறார்கள். அவர்களுக்குக் கையாளாகத் தலையாரியும் ஊர் மணியக்காரனும் வந்துவிடுவார்கள். பிறகு அவர்கள் ராச்சியம்தான். தலையாரிக்கும் மணியக்காரனுக்கும் பையன்களை எங்கே கண்டா லும் அடிப்பதுதான் வேலை. அவர்கள் இருவரும் சாகவேண்டும் எனப் பையன்கள் எண்ணுவதாக இமையம் சித்திரித்துள்ளார். இக்கதையின் இறுதியில் பந்தலுக்கு வெளியில் உட்கார்ந்தவாறே இரண்டு படல்களை இணைக்கும் கட்டைப் பிரித்து விரல்களால் நெம்பி, பின் கையைக் கொடுத்து குமார் விலக்குகிறான். தலையை ஒருக்களித்து உடலையும் நுழைத்துவிட்டான்; கால்கள் மட்டும்தான் பந்தலுக்கு வெளியே இருக்கிறது. குமாரைத் தேடி வரும் கம்சலா அவனது கால்களைப் பிடித்து தரதரவென பந்தலுக்கு வெளியே இழுத்து அவனை அடிக்கிறாள். இவ்வாறு ‘பெரியவர்களின்’ மனநிலைகளுக்கேற்ப சிறார்கள் அலைக்கழிக்கப்படுவது குறித்த பதிவுகள் இவரது கதைகளில் அதிகம். சிறார்களிலும் பையன்களின் உலகமே பெரும்பாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இமையம் தமது புனைவுகளில் முதியோரை, குறிப்பாகத் தாய் பாத்திரங்களை யதார்த்தமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய் கின்றார். படித்து நல்லவேலைக்குச் சென்று, பெரிய இடத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தனியாகத் தங்கிவிட்ட மகன், தன்மீதும் தனது உறவினர்கள் மீதும் அக்கறை கொள்வதில்லை எனும் தாயின் குற்றச்சாட்டுகளை ‘அம்மா’ கதையில் பதிவு செய்துள்ளார். தன் மகனிடம் அவனைப் பற்றி எவ்வளவு புலம்பி னாலும் அவன் ஊருக்குச் செல்லும்போது புளி முதல் மாங்காய் வரை தந்து அவனை வழியனுப்பி வைக்கும் உணர்வைச் சித்திரிக்கிறார். கிராமத்தில் இருந்து கஷ்டப்படுவதற்குப் பதில் தன்னோடு வீட்டிற்கு வந்துவிடும்படி மகன் அழைக்கிறான்; அதனைத் தாய் மறுக்கிறார். தன்னைப் பெற்றவர்களுக்கு மூன்றுவேளை சோறும் தங்குவதற்கு வசதியான இடமும் தந்தால் போதும் என எண்ணும் பிள்ளைகள் மனத்தையும் சோற்றையும் வசதியையும் விட மனம் விட்டுப் பேச / உறவாட துணையன்று தேவையென்று எண்ணும் முதியோரின் மனத்தையும் பல கதைகளில் இவர் துல்லியமாகச் சித்திரித்துள்ளார்.

தலித்தியம் எனும் கோட்பாட்டுக்குள், இலக்கிய வகைமைக்குள் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத இமையம் சாதிய எல்லை களை மீறிய மனித உறவுகளைத் தமது புனைவுகளில் சித்திரித் துள்ளார். தமிழ்ச் சமூகத்தில் ஒருபுறம் சாதியம் சார்ந்தே மனித உறவுகள் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் மறுபுறம் சாதியம் தாண்டிய மனித உறவுகளும் உள்ளன என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த இருவேறு நிலைகளையும் தனது வனாந்திரம், ஊர்க்காலி மாடுகள் முதலான கதைகளில் சித்திரித்துள்ளார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்தவராகத் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் இமையம் விவசாயத்தோடும் வறுமையோடும் போராடுவோரின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார். விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சினையை மட்டுமல்லாமல் குறுநில விவசாயிகளின் பிரச்சினைகளையும் தமது புனைவுகளில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. உழுவதற்கான மண்ணைப் பதம் பார்ப்பது, மாடுகள் மற்றும் ஏர்களை இரவல் வாங்குவது, கூலிக்காரர்கள் ஏமாற்றாதபடி கண்கொத்திப் பாம்பாக நின்று வேலை வாங்குவது, இயற்கை அழிவுகளைத் தாண்டி விவசாயம் பார்ப்பது என விவசாய வாழ்க்கையின் ஒவ்வொரு கூறுகளையும் கதையின் போக்கு சிதையாமல் நுட்பமாக விவரிக்கிறார். ‘மண்பாரம்’ கதையில் தன் தாலியை அடகுவைத்து அஞ்சலை கடலைப்பயிர் விதைக் கிறாள். ஏர் உழுவதையும் பயிர் போடுவதையும் அஞ்சலையும் கிருஷ்ணனும் உன்னிப்பாகக் கவனித்து வேலை வாங்குகின்றனர். கிருஷ்ணன் மதியம் சாப்பிடாமல் படல் இழுக்கிறான். இப்படி இவர்கள் எல்லாம் சரியாகச் செய்துமுடித்த பிறகு பேய்மழை பெய்கிறது.

சோளத்தைப் போடாமல் கடலையைப் போட்டு விளைச்சலில் வரும் இலாபத்தில் பெண்ணுக்குத் திருமணம் செய்துவைக்கலாம் என்னும் அஞ்சலையின் எண்ணமும் அந்தப் பேய்மழையில் சிதைகிறது. இதேபோல் ‘மாடுகள்’ கதையில் எத்தனையோ தடைகளுக்கு இடையில் கொத்தமல்லி பயிர் செய்யும் கிருஷ்ணனின் கைகுழந்தை களத்தில் மாடுகள் மிதித்ததால் குடல் பிதுங்கிச் சாகிறது. ‘வனாந்திரம்’ கதையில் கொல்லிக்காரியின் அதிகாரம், விவசாயக் கூலிகளின் மனிதநேயம், ஏமாற்றுத்தனம், அதிகாரம் எனப் பல பரிமாணங்களைப் பதிவு செய்கிறார். விவசாயத் திற்கு மூலாதாரமான மழை, மழை பற்றிய நம்பிக்கைகள், சடங்குகள் குறித்துப் பல கதைகளில் (மண்பாரம், சத்தியக்கட்டு) பதிவு செய்துள்ளார்.

இமையம் தலித்துகளின் வாழ்வியலைச் சாதி காரணமாக நிகழ்த்தப்படும் வன்முறைகளோடும் போராட்டத்தோடு மட்டும் சித்திரிக்கவில்லை. இவர் தலித்துகளின் விளையாட்டுகள், சடங்குகள், மொழிக் கேளிக்கைகள், சந்தோஷங்கள் ஆகியவற்றோடு அவர்களின் நம்பிக்கைகள், குறுநிலம் சார்ந்த விவசாயம் முதலான வற்றையும் பதிவு செய்துள்ளார். விழுப்புரம் வட்டார மக்களின் வழக்காறுகளை நேர்த்தியாகக் கதாபாத்திரங்களின் பேச்சினூடாக யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார்.

இமையத்தின் புனைவுகளில் கதாபாத்திரங்களின் உரையாடல், அவர்களது எண்ண ஓட்டங்கள் மற்றும் எழுத்தாளரின் குறுக்கீடு அல்லது வர்ணனை என மூன்று மொழியாடல்கள் அமைந்துள்ளன. ஆசிரியரின் குறுக்கீடு தனியே துருத்திக்கொண்டு நிற்காமல் கதாபாத்திரங்களின் மன ஓட்டத்தினோடே கலந்து நிற்கிறது. ஒருவகையில் இது வாசிப்பிற்கு இடையீடின்றி அமைகிறது. ஆனால் கதாபாத்திரத்தின் சூழல், வயதுக்குப் பொருந்திவராத எண்ணங்கள் ஆசிரியரின் சார்புடனேயே பதிவு செய்யப்பட்டுள்ளதை உணர முடிகிறது. இவரது நறுக்கிக் கோர்க்கப்பட்ட மிகக் குறைவான சொற்களைக் கொண்ட செறிவான உரையாடல் தன்மைகள் குறித்து ராஜ்கௌதமன் கூறுபவை ஏற்றுக்கொள்ளத்தக்கதே. இவரது கதைசொல்லலிடையே நடைபெறும் வெட்டு ஒட்டுக்களும் நிகழ்வுகளைச் சித்திரிக்கும் தன்மையும் நேர்த்தியான திரைப்படங் களை நினைவூட்டுகின்றன. தவிரவும் நேர்த்தியான சினிமாக்களைப் போலவே இவரது புனைவுகள் மனித துக்கங்களையே, துன்பியல் முடிவுகளையே பெரும்பாலும் கொண்டிருக்கின்றன. சில கதைகளில் (மாடுகள், பூவும் இரவும் முதலான கதைகளில்) மனித துக்கங்கள் மிகையாகவும் புனையப்பட்டுள்ளன.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர். “செவ்வியல் பிரதிகளை சமயவாதிகள் எதிர்கொண்ட முறைமை” குறித்து ஆய்வு செய்து வருகிறார்.)

Pin It