ஜே.பி. சாணக்யாவின் கதைகள் மனிதர்களால் அவ்வளவு எளிதில் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளால் உருக்கொண்டிருக் கிறது. எளியவர்களின் வலிமையான மனத்திடத்தையும் அவர்கள் சமூகத்தை எதிர்கொள்ளும் பாங்கினையும் விவரிக்கும்போது பொய்ம்மைகளையே கட்டி வைத்திருக்கிற ஆதிக்க மனநிலை அதிர்ச்சியை எதிர்கொள்ள நேரிடும். ஒழுங்கற்ற, விமர்சனத்திற்குரிய நடத்தைகளாகக் கருதப்பட்டு வரும் அனைத்தும் அநாயசமான ஒன்றா கவே சாணக்யாவின் கதைகளில் தென்படுகிறது. வாழ்க்கையை மிகவும் யதார்த்தமான ஒன்றாக பார்க்க வேண்டியதன் தேவையை முன்வைத்துச் செல்லும் கதைகளில் எவ்வித ஆரவாரத்திற்கும் இடமில்லை. சமூகப் புறவெளியில் சதாரண ஒன்றாகக் கருதப் படுவதுதான் ஒவ்வொருவரின் அகவெளியிலும் பிரதானமானதாகச் செயல்படுகிறது என்ற உண்மையை எவ்வித தடையுமின்றி கதைகள் கூறிச் செல்கின்றன.

‘என் வீட்டின் வரைபடம்’ ‘கனவுப் புத்தகம்’ ஆகிய இரண்டு தொகுதிகளில் உள்ள கதைகள் புதிய தன்மைக ளோடும் வகைகளோடும் வெளிப்படும் எழுத்துக்களில் காணக் கிடைக்காத வாழ்வின் நுட்ப இழையை, மறுபக்கத்தைக் கொண்டிருக்கின்றன. திரையரங்குகளில் பிளாக் டிக்கட் விற்பவர்களின் வாழ்வுமுறை குறித்த கதை எவ்வளவு போராட்டம் நிறைந்ததாக உள்ளது என்பதையும் பெண்கள் தங்கள் உடல் ஆயுதத்தை ஆதிக்கத் திற்கு எதிராகப் பயன்படுத்தும் போக்கையும் உலகில் எதுவுமின்றி வாழும் வாழ்க்கைக்கே எவ்வளவு போராட்டம் தேவைப்படுகிறது என்ற அனுபவத்தையும் அக்கதை கதைக்கிறது. ‘என் வீட்டின் வரைபடம்’ என்ற கதை அகப்போராட்டங்களில் சிக்கித் தவிக்கும் குடும்ப உறுப்பினர்களின் மனநிலையையும் ‘ஊருக்குச் செல்லும் வழி’ என்னும் கதையில் தனிமனிதர் ஊர்ச்சோறு சாப்பிடும் நிலையில் அவன் உணர்வுகள் படும் பாட்டையும் சாணக்யாவால் எப்படி இவ்வளவு ஆழமாக வாழ்வின் யதார்த்தங்களில் பயணிக்க முடிகிறது என்ற வியப்பையே தருகிறது. திசைமாறிச் செல்வதுதான் வாழ்க்கையானாலும் தாழ்வை நோக்கிய பயணத்தில் எதிர்நோக்கும் மனத்துயரின் கனம், பெண்ணைத் துயருக்கு எதிரான உருவாக நிறுத்தி துயரத்தை எள்ளலுடன் எதிர்நோக்கும் ‘மிகுமழை’ கதை. ‘தனிமை யின் புகைப்படம்’ பிச்சைக்காரர்களின் உள்ள ஓட்டத்தை அதன் இயல்புத் தன்மையோடு கூறுகிறது.

எவ்வேலைகளையும் செய்திடாத பிச்சைக்கார கிழவன் ஒரு நிலையில் வேலை செய்யும்போது அவருக்குள் செயல்படும் நேர்மை தேவையற்றதாகக் கருதப்படுகிறது. பிச்சைக்காரர்களின் மதிப்பீடுகள் குறித்தும் அவர்களுக்குள் இயங்கும் உலகம் குறித்துமான விரிவான எதிர்கொள்ளல்களைக் கொடுக்கிறது. ‘உருவங்களின் ரகசியம்’ அடுத்தவன் மனைவியிடத்தில் கொண்டுள்ள உறவின்வழி எதிர்ப் படும் பாடுகள் அனைத்தும் பெண்ணின் மீதே சுமத்தப்படும் அவல மும், சாதிய வேறுபாட்டின் காரணமாகவும் வர்க்கக் காரணமாகவும் திருமணம் எதிர்க்கப்படும் சூழலில் விஷம் குடித்து இறந்துவிடும் முடிவுக்கு வரும் காதலர்கள் அதை நிறைவேற்றும் தருவாயில் முதலில் விஷம் குடிக்க உயர்சாதி ஆண் படும் மரணப் போராட் டத்தைக் கண்டு விஷம் குடிப்பதைத் தவிர்க்கும் பெண்ணின் செயல்பாடு அத்தனை ஆதிக்க மனோநிலைக்கும் விடப்பட்ட எச்சரிக்கையாகவே தென்படுகிறது. பெண் உறுப்புகள் சாதாரண ஒன்றல்ல. அதன் வீரியம் அளவிட முடியாதது.

ஆண்களுக்கு எதிரான அச்சத்தை அது தரத்தக்கது. ஆண் மைய சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் அத்தனை மதிப்பீடுகளையும் பெண் உறுப்புகள் சிதைத்துவிடும் ஆற்றலைப் பெற்றவை என்பதை வலியுறுத்தி பெண்ணை அடக்கும் ஆண் ஆசையை எட்டி உதைக்கும் கதையாக ‘ரிஷப பீதி’ இருக்கிறது. மிகவும் இணக்கமாக வாழும் கணவன் மனைவிக்கு குழந்தை பிறக்காத நிலையில் எதிர்பாராத விபத்தொன்றில் கணவன் முன்னிலையில் கூட்டு வன்புணர்ச்சிக்கு ஆளாகிறாள். அம்மாத சுழற்சியில் கரு உருவாகிறது. மனைவி இறந்துவிட வேண்டும் என்ற ஆணின் மனோநிலை வெளிப்படு கிறது. புகுந்த வீடு புறந்தள்ளிய நிலையில் அவள் உலகத்தையே புறக்கணித்தவளாய் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். ஆண் மனநிலையை மிக எளிதாகப் புறக்கணித்துவிடும் பெண்ணின் தீவிரத்தை ‘ஆட்டத்தின் விதிமுறைகள்’ கூர்மைப்படுத்துகிறது. தந்தைக்கும் மகனுக்குமான போட்டியை அதன் உள்ளார்ந்த தன்மைகளோடு வெளிப்படுத்தி உறவு முறைகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தும் ‘உடைந்த புல்லாங்குழல்’ என சாணக்யாவின் முதல் தொகுதியின் கதைகளில் ‘சமூகத்தின் ஆதிக்க மதிப்பீடுகளால் தமது கௌரவத்தை பறிகொடுத்த மனிதர்கள் மீண்டும் அதைக் கண்டடைகிறார்கள்’.

‘வெட்டிச் சாய்க்க முடியாத மலையுருவங்களைக் குடைந்து செல்லும் ஒரு உயிரியைப் போல் இவ்வாழ்க்கையின் மேல் படிந்திருக்கும் என் ஆசைகள் கனவுகள் அதை உருவாக்கும் சூத்திரங்கள் அன்பு இச்சை வன்மம் இவற்றிலிருந்து நான் பெற்றுக் கொண்டது பெற இருப்பது இனித் தேர்ந்தெடுக்கக் கொள்ள வேண்டியது என எல்லாவற்றிற்குமான நிதானத்தை நோக்கிச் செல்லும் புள்ளிகளை என் வாசிப்பும் எழுத்தும் எனக்குக் காட்டித் தொடங்கியிருக்கின்றன. (2005;11) என்ற சாணக்யாவின் மொழிகளி னூடாக அவரது இரண்டாவது தொகுதியான ‘கனவுப் புத்தகம்’ அவருக்கான அடையாளத்தைக் கொடுக்கிறது. நனவுக்கும் நனவிலிக்கும் இடையிலான ஆண் பெண் காதல் போராட்டத்தை மிக நுட்பமாகவும் மனித மனங்களின் ஆசைகள் நிராசையாகப் போகும் தருணம் எவ்வளவு கொடுமையானது என்பதையும் ‘கடவுளின் புத்தகம்’ கொடுக்கிறது.

வறுமையின் பிடியில் ஆட்பட்டிருக்கும் கணவன் மனைவிக்கு, ‘அண்ணன்’ என்ற உறவுமுறையில் வீட்டுக்கு வருபவன் மூலமாக கணவனுக்கு வேலை கிடைக்கப் போகிறது என்ற நிலையில் ‘அண்ணனுடன்’ உறவு கொள்ளும், மனைவி, வேலை வாய்ப்பு பொருட்டு ஏற்கும் கணவன் என சமூக உறவு நிலையின் மீதான கேள்வியை வலுவாக முன்வைக்கும் ‘கோடை வெயில்’. விரும்பிய ஒருவனை கைப்பிடிப்பதற்காக ஒரு பெண் எதிர்கொள்ளும் இடர்களை காட்டும் ‘பதியம்’. சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவனின் வாழ்முறையும் ஆண்-பெண் இடைவெளிகள் குறைந்து காணும் நிலையையும் காட்டும் ‘கண்ணாமூச்சி’. கிராமியக் கலைகள் அருகிவரும் சூழலில் அக்கலைஞர்களின் மனப்போராட் டத்தையும் அவர்கள் எதிர்கொள்ளும் அவமானத்தையும் மீறி அக்கலைகள் வேறு திசையில் வடிவம் கொள்ளும் முறையையும் கலைகள் மீதான மதிப்பீடுகளை உணர வேண்டியதன் அவசியத்தை யும் ‘கருப்புக் குதிரைகள்’ கூறுகிறது.

ஊரிலுள்ள பலரிடம் உறவு கொள்ளும் ஒரு பெண் தீவிர சுய பிரக்ஞையுடன் தனது பாலியல் தன்மையைத் தனது அதிகாரத்திற்கான ஒன்றாகக் கட்டமைத்து ஆண் மைய வாதம் என்பது ஒன்றுமே இல்லாத ஒன்றாக இருக்கிறது என்பதை போகிற போக்கில் சொல்லிவிடுவதும் தாயைப்போல் நானில்லை என்பதை வெளிப்படுத்த அப்பெண்ணின் மகள் போராடு வதும் அவளின் திருமணத்திற்கான அவள் காதலனுடனேயே உறவு கொள்வதும் என சாணக்யா கதை மாந்தர்கள் மறைந்திருக்கும் அத்தனை முனைகளிலிருந்தும் வெளிப்படுகிறார்கள். ‘ஆண்களின் படித்துறை’ இதற்கு வழியமைத்துக் கொடுத்திருக்கிறது. ஒரு சிலம்பாட்டக் கலைஞன் தன் மனைவியைத் துய்ப்புக்கான ஒன்றாகவே பார்க்கிற நிலையில் அவளின் மீறல்களும் அவளைக் கட்டுப்படுத்த முடியாத அவனின் இயலாமையையும் காட்டும் ‘அமராவதியின் பூனை’.

கவித்துவமும் செறிவும் நிரம்பிய சொற்கள் உருவாக்கும் வாழ்க்கைச் சித்திரங்கள் தமிழின் பரந்த புனைவுவெளிப் பரப்பில் பிரத்யேக அடையாளத்துடன் உயிர் பெறுகின்றன. காலமும் இடமும் கலைத்துப் போட்டிருக்கும் வாழ்வின் புள்ளிகளை இணைத்தபடி செல்லும் இப்பயணத்தின் வழித்தடங்களில் இதுவரை நாம் பார்க்காத சில முகங்களேனும் காணக் கிடைக்கின்றன. நாம் பார்த்திராத முகங்கள், அறிந்திராத நிகழ்வுகள், நம் அனுபவத்திற்கு வசப்படாத வாழ்க்கை, தீராத வியப்புணர்வைத் தூண்டும் கனவின் புனைவுத் தன்மையுடனும் தவிர்க்க முடியாமல் நம் கவனத்தைக் கோரும் யதார்த்தத்தின் பதிவுகளுடனும் நம்முன் சுழல்கிறது சாணக்யாவின் புனைவுலகம். ‘சாணக்யா பாலியல் கதைகளை எழுதுகிறார்’ என்ற மதிப்பீட்டுடன் பலர் அணுகுவதைப் பார்க்க முடிகிறது. அது உண்மையல்ல. வாழ்வின் தரிசிக்க வேண்டிய அற்புதங்களை அக்கதைகள் காட்டுகின்றன.

சிறுகதைத் தொகுதிகள்

1. என் வீட்டின் வரைபடம், காலச்சுவடு பதிப்பகம், 2002

2. கனவுப் புத்தகம், காலச்சுவடு பதிப்பகம், 2005

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர். “தென்னிந்திய வரலாறுகளைக் கட்டமைப்பதில் மெக்கன்சியின் பங்களிப்பு” குறித்து ஆய்வு செய்து வருகிறார்.)

Pin It