தமிழ்ப் புனைகதை உருவாக்க மரபில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் வெவ்வேறு கோட்பாடுகள் சார்ந்தும், கொள்கை சார்ந்தும் புனைகதைகள் உருவாக்கம் பெற்றதைக் காணலாம். இலக்கிய ஆளுமைகளும் பல தரப்பட்ட பின்னணியில் இயங்கி வந்துள்ளனர். தமிழ் கதை சொல்லல் முறையில் சிறுகதை வடிவம், அது சார்ந்த வாசிப்பாளர்கள், படைப்பாளர்களுக்கான ரசிகர்கள் என்ற தன்மை முக்கியத்துவம் பெறுகிறது. சுரேஷ் குமார் இந்திரஜித். இவரது சிறுகதைகள், அலையும் சிறகுகள் (1983), மறைந்து திரியும் கிழவன் (1993), மாபெரும் சூதாட்டம் (2005), அவரவர் வழி (2009) என்னும் தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.

 சுரேஷ் குமார் இந்திரஜித் எழுத்துக்களை,

-     தேசியம், காந்தியம் சார்ந்து அடையாளப்படுத்த முடிகிறது.

-     நடுத்தட்டு வர்க்கத்திலிருந்து மேல்தட்டு சார்ந்து பயணப் படும் மக்களையும், அடித்தட்டு மக்கள் குறித்தும் பதிவு செய்யப்பட் டுள்ளது.

-     குடும்ப உறவுகளுக்குள்ளிருக்கும் சிக்கல், மற்றும் சமூக உறவுக்குள் அதன் விளைவுகளை உள்வாங்க இயலுகிறது.

-     மதம், சாதி, தீண்டாமை, சமூக ஏற்றத்தாழ்வு குறித்தப் பதிவுகளில் மூன்றாம் தர பார்வையை புரிந்துகொள்ளலாம்.

-     இவரது படைப்புகளில் உள்ள மொழி அலட்டிக் கொள்ளா மல், எளிமையாக, சரளமாக வாசிப்பாளரைப் பயணப்படுத்து கிறது.

மறைந்து திரியும் கிழவன் சிறுகதையில் ஒரு கிழவன், பிரிட்டிஷ் அரசிற்கு பயந்து மறைந்திருப்பதாகவும் தன்னை அவர்கள் பிடிக்க வருவதாகவும் கூறுவதாக அமைகிறது. அதே சமயம் அக்கிழவன் மனநிலை பாதிப்பில் இருப்பதையும் காணலாம். தேசியம் குறித்து தொடர்ச்சியாக மைய நீரோட்ட செயல்பாட்டாளர்களால் கற்பிக்கப் பட்டு வருகிறது. மாற்றுக் கருத்தியல் கொண்ட தேசிய இயக்கங் களும் இவ்வகை செயல் பாடுகளில் ஓர்மையில் நிற்பதைக் காணலாம்.

மணிக்கொடி கால, எழுத்து கால சிறுகதையாளர்கள் தன்மையில் சுரேஷ் குமார் இந்திரஜித் அணி சேர்வதைக் காணலாம். சி.சுப்பிர மணிய பாரதி, வ.வே.சுப்பிரமணியம் தொடங்கி இந்து தேசம், தேசியம் புனைவுகள் மற்றும் கவிதைகள் வழி கற்பிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் தேசியம் சாதி, மதம், இனம், நிலம், மொழி சார்ந்து கட்டுண்டு கிடப்பதை இவரது கதைகளே பதிவு செய்கின்றன. இவரது தொடக்க கால எழுத்து குறித்து “ மௌனியை ஞாபகப்படுத்தும் நிழல் நடை. துக்க ராக ஆலாபனை” என்று கி. இராஜ நாராயணன் கூறுவதைக் காணலாம். ஆனால் தான் சிறுகதை யாளனாக ஆவதற்கு ஜெயகாந்தனின் சிறுகதைகள் தூண்டுதலாக இருந்ததைக் குறிப்பிடுகிறார் சுரேஷ் குமார் இந்திரஜித். மேலும் பல்வேறு சிறுகதையாளர்களின் வாசகனாய் இருந்த போதிலும் அடிக்கடி தான் வாசித்து அவைகளோடு உரையாடுவதாக வண்ண நிலவன் எழுதிய பாம்பும் பிடாரனும், போர் ஹே எழுதிய The approach to Al-Mustasim, லாவண்யா எழுதிய The Clowns ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.

குடும்ப உறவு சார்ந்த சிக்கல்களை மையப்படுத்தி பல்வேறு சிறுகதைகள் உருவாக்கம் பெற்றுள்ளன. இவரது கதைகளும்குடும்ப உறவுகளில் உள்ள சிக்கல், குடும்ப அமைப்பு எவ்வாறு சமூக அமைப்பை பாதிக்கின்றது, சமூக அமைப்பு எவ்வகையில் குடும்ப அமைப்பை பாதிக்கின்றது என்பதை அறியலாம். இது இந்திய பண்பாட்டு மதிப்பீட்டில் மிக முக்கியமானதாகும். இவரது சிறுகதைகள் முறையற்ற பாலியல் உறவுகளையும் அதற்கான நியாயத்தையும் சமூக இயல்புகளையும் முன்னிறுத்துகின்றன. இரண்டு கணவர்கள், இரண்டு மனைவிகள், மகளென்று தெரியாமலே தந்தை மகளுடன் உறவு கொள்ளுதல், திரைத்துறைத் தொழிலின் மறுபக்கம், நிலையற்ற வாழ்க்கை, பல பெண்களோடு ஆணின் தொடர்பு, பெண் கலைஞர்களின் அவல நிலை எனப் பல்வேறு பட்ட வாழ்க்கையைக் காணலாம். இவ்வகையில் அவரவர் வழி சிறுகதைத் தொகுப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

வாழ்க்கையானது தொடர்ச்சியான பயணத்தில் நொடிக்கு நொடி மாறுபடுவதைக் காணலாம். மாற்றங்கள் கொண்ட சூழலை, தன்னைச் சுற்றியுள்ள சமூக நிகழ்வுகளை உற்று கவனித்தலை இவரது புனைவுகள் நமக்கு உணர்த்துகின்றன. இன்றையசூழ்நிலை யில் அவசரமான வாழ்க்கை, நெருக்கடியான காலகட்டம், நவீன தொழில் நுட்பங்களோடு உறவு, மாறி வரும் பொருளாதர நிலை வணிக நோக்கோடு செயல்படுவதை அறியலாம். இந்திரஜித் முன்னெடுக்கின்ற மக்களும் இவற்றைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். வருணனைகள் பெரும்பாலும் ரசனைமுறையில் இருக்கின்றன. பெண்கள் குறித்தப் பதிவுகளில் ஆணின் சிந்தனை வயப்பட்ட மொழியைக் காணலாம். காதல், பாலியல் புனைவுகள் அதிகமாகக் காணக்கிடைக்கின்றன. குடும்ப அமைப்பு பாலியலை முதன்மைப்படுத்தி இயங்குவதாக இவரது சிறுகதைகள் முன்வைக் கின்றன. கணவன் மனைவி உறவுகளின் தனித்தன்மைகளைக் காணலாம்.

வழக்கமான சினிமா பாணியிலான காதலன் காதலி, வேறு வேறு நபர்களுடன் திருமணம் முடிந்து, இரயில் பயணங்களில், இன்னபிற இடங்களில் சந்தித்துக்கொள்வதாகவும் பின்னோக்கி (ஃப்லாஷ் பேக்) நினைவுகள் பயணிப்பதாகவும் உள்ளன. இம்மாதிரியான வாழ்க்கையை இக்கதைகளின் மக்கள் யதார்த்தமாக ஏற்றுக் கொண்டதாக பதிவு செய்துள்ளார் சுரேஷ் குமார் இந்திரஜித். ‘அறிக்கை’ எனும் சிறுகதை அசல் திரைப்படத்திற்கான திரைக்கதை யாகவே இருக்கிறது. இருப்பினும் 90களில் இருந்த நாயகனை விமர்சிப்பதாக உள்ளது. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நாயகர்கள் செலுத்தும் ஆதிக்கம், அவர்கள் சார்ந்த ஒளிவட்டம், நாயகத் தன்மை ஆகியவற்றை பகடி செய்வதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. முழுமையாகத் திரைத் துறையை விமர்சிக்கின்ற போக்கையும் காணலாம்.

இவர் தனது படைப்புகள் குறித்துத் தெளிவான மனநிலையில் இருக்கிறார். தனக்கான அடையாளம், கருத்தியல் சார்ந்து தனித்த முடிவுகளைக் கொண்டுள்ளார்.

“காலத்தின் முன் படைப்பு முகஸ்துதி இழந்து நிற்கிறது. மாலை மரியாதைகள் இழந்து நிற்கிறது. இதில் யாருக்கும் யாரும் போட்டி யில்லை. யார் இடத்தையும் யாரும் பிடிக்க முடியாது. அவரவர் களுக்கு நாற்காலி உண்டு. என் சிறுகதைகளுக்கெதிரான விமர்சனங் கள், எனக்கெதிரான சதி ஆகாது. அத்தகைய மனப்பிராந்தி எனக்கு ஏற்படுமானால் என்னை நானே பரிசீலித்துக் கொள்ள வேண்டும். படைப்பில் வலு இருப்பின் அத்தகைய விமர்சனம் பொய்த்துப் போகும்.” என்பதின் வழி இதனை விளங்கிக்கொள்ளலாம்.

“மாபெரும் சூதாட்டம்” தொகுப்பின் முன்னுரையில் “ இக்கதைகளில் நான்கு மட்டுமே கற்பனையான தேசத்தில் நடப்பதாக உருவாக்கப்பட்டவை. ஐந்து கதைகள் மட்டுமே பிறன்மனை உறவுச்சிக்கல்கள் தொடர்பானவை. என்னை இவ்வாறாகக் கதை எழுதுபவன் என்று நினைப்பவர்களுக்காக இவ்விவரம்” (2005:11)

இவரது படைப்புகள் குறித்து,

‘கதாசிரியர் மனத்தை நெருடும் வண்ணம் தம் சுற்றுப்புறங்களை மிக ஆழமாய்க் கவனித்திருக்கிறார். கதையும் கூட ஒரு கவிதையின் பாணியிலேயே ஆரம்பிக்கிறது. எந்த அனுபவம் ஒரு கலைஞனை நிஜமாகப் பாதிக்குமோ, அந்த அனுபவம் மட்டுமே கதையிலும் உண்மை பெறுகிறது.’ என்கிறார் மதுசூதனன். 

அய்யர் வீட்டுப் பையன் தன்மேல் காதல் கொள்ளும் பெண்ணை விரும்பாது ஒரு தலித் பெண்ணை விரும்புவதில் வெளிப்படுகிறது இப்படைப்பாளனின் சாதிய சீர்திருத்தம். இருப்பினும் அய்யர் பைய்யனை விரும்பும் பெண்ணின் சாதியை குறிப்பிடத் தவறி விட்டார். இதைச் சனாதனிகளின் சீர்திருத்தமாகப் புரிந்துகொள்ளலாம். தலித் பெண்ணை இப்படியாக வருணிக்கின்றார். “ அவனுடைய ஈடுபாடு கலாவதியின் மீதுதான் இருந்தது. அவள் தலித் குடும்பத்தைச் சேர்ந்த்வள். பளபளக்கும் கருமை நிறம் கொண்டவள். சுந்தரேச னுக்கு அவள் வித்தியாசமான தோற்றம் கொண்ட அழகியாகத் தோன்றினாள்.” (2009:16) இங்கு தலித் பற்றிய பொது புத்தி சார்ந்த அடையாளங்கள் பதிவாகியுள்ளதைக் காணலாம்.

சுரேஷ் குமார் இந்திரஜித்தின் சிறுகதை பாணி, சூழல், களம் என்பவை எண்பதுகள் தொடங்கி இன்றுவரை பல் நிலைகளில் மாறுபட்டு வந்துள்ளதை இந்நான்கு தொகுப்புகளின் வழி விளங்கிக் கொள்ள முடிகிறது. படைப்பாளன் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை பரிசீலித்துக் கொண்டு வருகிறான். அதனால் தான் தொடர்ச்சி யாக இயங்க முடிகிறது.

-     மைய நீரோட்ட தேசிய அடையாளத்தோடு முற்போக்கு பேசும் படைப்பாளராக சுரேஷ் குமார் இந்திரஜித்தை புரிந்துகொள்ள முடிகிறது.

-     குடும்ப உறவுகள் சார்ந்த பதிவுகள் சமூக யதார்த்தத்தின் வெளிப்பாடாக விளங்கிக்கொள்ளலாம்.

-     கோர்வையாகவும், முன்னிருந்து பின்னும், பின்னிருந்து முன்னும் உள்ள கதைக் கூறல் முறை இயல்பாக வெளிப் படுவதைக் காணலாம்.

-     அனைத்துக் கதைகளும் சமூகத்தோடு, நடைப்பியலோடு நெருங்கியிருப்பதை உள்வாங்கிக் கொள்ளலாம்.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர்.“தமிழ்ச் சமூக வரலாறு : பிரபந்த இலக்கியங்கள்” குறித்து ஆய்வு செய்து வருகிறார்.)

Pin It