1975ஆம் ஆண்டு காரைக்குடி ரயில் நிலையத்தில் இறங்கி ஒரு பஸ் பிடித்து பள்ளத்தூர் வழியாக, கோட்டையூர் போய்ச் சேர்ந்தேன். அங்குள்ள கிராமத்து போஸ்டுமாஸ்டர், காலியாயிருந்த ஒரு செட்டியார் மாளிகையின் முன்அறையில் நான் தங்க ஏற்பாடு செய்திருந்தார். ரோஜா முத்தையா செட்டியார் வீட்டிற்கு அவர்தான் என்னைக் கூட்டிக் கொண்டு போனார். செட்டியார் வீட்டுத் திண்ணையில் தரையில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். நான் வருவது பற்றி அவருக்குக் கடிதம் போட் டிருந்ததால் அவர் என்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.

தமிழ்த்திரை பற்றிய ஒர் ஆய்விற்கு எனக்கு ஒரு நல்கை அப்போது கிடைத்திருந்தது. சினிமா பற்றி ஆய்வு செய்ய என்ன இருக்கிறது என்றும், அதனால் என்ன பயன் என்றும் பலரும் கூறினார்கள். அலுவலக நண்பர்கள் அந்த ஆய்வு என் பணி உயர்வுக்கு உதவாதே என்றனர். [“ What is the benefit?”]. நான் சந்தித்த கல்விப்புல பேராசிரியர்கள் கூட இதென்ன ஆய்வு என்பது போல் பார்த்தார்கள். தமிழ்நாட்டின் ஒரு பெரும் கலாசார-அரசியல் சக்தியாகத் தமிழ் சினிமா உருவெடுக்கும் என்றும் ஆகவே இதை உற்று நோக்கி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் எனக்கு முதலில் சொன்னவர் சார்லஸ் ரயர்சன். Regionalism and Religion : The Tamil Renaissance and Popular Hinduism என்ற முக்கியமான நூலை எழுதியவர். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தங்கி தமிழ் நாட்டு வெகுஜன கலாசாரம், மத ஈடுபாடு பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் ஆவணக்காப்பகம் கமிஷ்னராகவிருந்த சதுர்வேதி பத்ரிநாத் எனக்கு ஊக்கம் கொடுத்தார். [இவர் அண்மை யில்தான் புதுச்சேரியில் காலமானார்.] பெண் எழுத்தாளர்களைப் பற்றி ஆராய நல்கை பெற்றிருந்த அம்பை [சி.எஸ்.லட்சுமி] நான் எடுத்துக்கொண்டது நல்ல தலைப்பு என்று உற்சாகமூட்டினார். சில ஆண்டுகளுக்கு பின்னர் அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முத்தையா செட்டியாரின் சேகரிப்புப் பற்றிக் கூறியது, சென்னை யில் அது ஓர் ஆய்வு நூலகமாக உருவாக ஒரு முக்கியமான விதையாக அமைந்தது.

எங்கு தொடங்க வேண்டும், எதைப் படிக்க வேண்டும் எப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்று ஒன்றும் தெரியாமல் நான் தடுமாறிக்கொண்டிருந்தேன். இதுவரை ஆய்வுக்குட்படுத்தப்படாத பரப்பாக இருந்ததால் முறையியல் [Methodology] பற்றிய கேள்வியும் எழுந்தது. விளிம்புநிலை மக்கள் பற்றிய ஆய்வு ஓர் இயக்கமாக அன்று ஆரம்பித்திருக்கவில்லை. அன்று சினிமாத் துறைப்பற்றி நூலகங்களில் புத்தகங்களோ வேறு எந்த அச்சுப் பிரதிகளோயிருப்பது வெகு அரிதாகவிருந்தது. தமிழ் திரையைக் கல்விப்புலத்தில் யாரும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. எனது ஆய்வைத் தொடங்கி சில மாதங்கள் கழித்துதான் எனக்கு ரோஜா முத்தையா செட்டியாரைப்பற்றியும் அவரது சேகரிப்பு பற்றியும் தகவல் கிடைத்தது. நான் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்திற்கு சென்றிருந்த போது, அங்கு ஒரு நோட்டீஸ் கையில் கிடைத்தது. Library Service India, Kottaiyur என்று அச்சிடப்பட்டி ருந்தது. இதை வைத்துத்தான் முத்தையாவிற்கு நான் கடிதம் போட்டிருந்தேன்.

கோட்டையூருக்கு முதலில் சென்றபோது நான் நான்கு நாட்கள் தங்கியிருந்தேன் நூலகத்தைப் பயன்படுத்த செட்டியார் ஒரு கட்டணம் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கட்டணம் எல்லோருக்கும் பொதுவாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு தொகை அல்ல. ஆளுக்கேற்ப வேறுபடும். அதில் மதிய உணவும் அடக்கம். அவரது மனைவி சிவகாமி அம்மாள் அவ்வப்போது காப்பி போட்டுத் தருவார். சில சமயம் முத்தையாவே காப்பி போட்டு எடுத்துக் கொண்டு வருவார். சட்டை போடாமல், தோளில் ஒரு துண்டு மட்டும் போட்டிருப்பார். அடிக்கடி பீடி புகைப்பார். அதிகம் பேச மாட்டார். அவர் சிரித்து பார்த்ததாக எனக்கு நினைவில்லை. முதலில் சந்திக்கும் போது துருவித் துருவி சில கேள்விகள் கேட்டு நீங்கள் அங்கே வந்திருக்கும் காரணத்தை உறுதிசெய்து கொள்வார்.

அவரது நூலகத்தில் வேலை செய்த நாட்களில் வராந்தாவில் உட்கார்ந்துதான் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். கணினிக்கு முற்பட்ட காலம் கையால்தான் எழுத வேண்டும் புத்தக அலமாரிகளுக்கு அருகே கூட போக அனுமதி கிடையாது. உங்கள் தலைப்புச் சார்ந்த துறையில் என்னென்ன நூல்கள் இருக்கின்றன என்று கூட பார்க்க முடியாது. அவர் கொடுப்பதை வைத்து வேலை செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

ஒரு நீண்ட நோட்டுப்புத்தகத்தில் நூல்களின் பெயரை எழுதியிருப்பார் நமக்கு வேண்டிய புத்தகங்களை தெரிந்தெடுத்து காட்டினால் அதை மட்டும் எடுத்துக் கொடுப்பார். அவரிடம் இருந்த எல்லா புத்தகங்களின் தலைப்புகளையும் இந்த நோட்டில் அவர் எழுதி வைத்திருக்கவில்லை. ஒரு குறுகியப் பட்டியலை வாசகரிடம் காட்டினார். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று புத்தகங்களுக்கு மேல் கொடுக்க மாட்டார். தமிழ் சினிமா பற்றி பல வெளியீடுகள் அவரிடமிருந்த சேகரிப்பில் இருந்தும் அவர் அந்த நூல்களைப்பற்றி என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லை. அவைகளை எனக்குக் காண்பிக்கவும் இல்லை. இந்த விவரம் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த சேகரிப்பைச் சென்னைக்குக் கொண்டு வந்து ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் நிறுவப்பட்டு, அதற்கு நான் 1998இல் இயக்குநராகப் பணிசெய்த போது தான் எனக்குத் தெரிந்தது. எனினும் முதன்முறையாகக் கோட்டையூர் சென்ற போது எனக்கு அவர் எடுத்துக்கொடுத்த சில பத்திரிகைகளையும், சினிமா பாட்டுப் புத்தகங்களையும், குஜிலிக்கடை பாட்டுப்புத்தகங்களையும் படித்த பின்தான் நான் எழுதிய Message Bearres (1981) என்ற நூலுக்குக் கரு உருவாகியது. எந்த நோக்கில் என் ஆய்வு செல்ல வேண்டும் என்று ஒரு பிடி கிடைத்தது.

இலக்கியம் தவிர ஆயுர்வேதம், சித்தம், யுனானி போன்ற மருத்துவ பாரம்பரியங்களிலிருந்து நூல்களுடன், பல நாடிசாஸ்திர நூல்களும் இவரது சேகரிப்பில் இருந்தது. உள்ளடங்கியது. முத்தையாவிற்கு இந்தப்பரப்பில் ஈடுபாடு உண்டு. தேள்கடிக்கு மருந்து பற்றி அவர் இரண்டு நூல்கள் எழுதியுள்ளார். இந்த சேகரிப்பில் வெகுமக்கள் கலாச்சாரம் சார்ந்த நாடக நோட்டீஸ்கள், சினிமா இதழ்கள், கதைப்பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் என பல வெவ்வேறு தளங்களைச் சார்ந்த அச்சுப்பிரதிகள் உள்ளன. கடந்த அறுபது ஆண்டுகளாக ஆராயப்படாத பக்தி இலக்கியங் களும், மணிப்பிரவாள தமிழ்ப்பதிப்புகளும் உண்டு. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான தமிழ் இதழ்கள் மூலம் பல புதிய ஆய்வுத் தளங்களைத் திறக்க முடியும். எடுத்துக்காட்டாக, அந்த இதழ்களிலுள்ள விளம்பரங்கள் மூலம் அன்றைய பயனீட்டாளர்களைப் பற்றியும் சந்தை நிலவரம், பொருளாதார நிலை குறித்தும் ஆராயமுடியும். சுதந்திர போராட்டகால தம் இதழ்கள், கைப்பிரதிகள் சில புதிய கோணங்களை ஆய்வாள ருக்குத் தர முடியும். சக்தி இதழில் காந்திஜி, இந்துலால் யாக்னிக் போன்ற தலைவர்களின் கட்டுரைகள் உள்ளன. காந்திஜியுடன் வார்தா ஆசிரமத்தில் பணியாற்றிய ஜே. சி. குமரப்பாவின், குகப்பிரியையால் தமிழாக்கம் செய்யப் பட்ட ஒன்பது ஆய்வுக்கு உதவும் நூல்கள் இங்கு உள்ளன.

அச்சுப்பிரதிகள் மட்டுமல்ல. செட்டியார் அஞ்சல் தலைகளையும் சேகரித்து வைத்திருந்தார். இந்தத் துறை பற்றிய நுணுக்கங் களைத் தெரிந்து வைத்திருந்ததைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். உலகில் உள்ள எல்லா நாடுகளில் வெளிவரும் சிறப்பு அஞ்சல் தலை களுக்கு ஒரு பட்டியல்நூல் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளி யிடப்படுகின்றது. லண்டனிலிருந்து வரும் இந்த Gibbons Catalogueல் அரிய அஞ்சல்தலைகளின் விவரமும் விலை நிலவரமும் இருக்கும். சென்னை தொலைபேசி டைரக்டரியைப் போல் இரண்டு மடங்கு தடிமனாக இருக்கும். Philatelyயில் ஆழமான ஈடுபாடு உடையவர் கள்தான் இதை வாங்கி வைத்திருப்பார்கள். இவர் ஒரு பிரதி வைத்திருந்தார். பல வெளிநாட்டு சேகரிப்பாளர்களுடன் செட்டி யார் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். தனக்கு பணம் தேவை யாயிருக்கும் போது தனது சேகரிப்பிலிருந்து இரண்டு அல்லது மூன்று அஞ்சல்தலைகளை எடுத்து அதை ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோயிருக்கும் ஒரு சேகரிப்பாளருக்கு அனுப்பி வைப்பார். பணம் வந்து சேரும் என்று அவர் அறிந்திருந்தார்.

எந்த சேகரிப்பாளர் இத்தகைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்றும் அவருக்குத் தெரியும். இந்தியாவில் எவருக்கும் இவ்வாறு அனுப்ப மாட்டார். இங்கு சில கசப்பான அனுபவங் களை அவர் சந்திக்க நேர்ந்தது ஒரு காரணமாயிருக்கலாம். அவருடைய சேகரிப்பிலிருந்த குமுதம் முதல் இதழை ஒரு வாசகர் எடுத்துக்கொண்டு போனதும் இல்லாமல், அந்த இதழ் நடத்திய ஒரு போட்டியில் அந்தப் பிரதியை கொடுத்து ஒரு பரிசையும் பெற்றுக்கொண்டார். அஞ்சல்தலை ஆல்பமொன்றைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவர், செட்டியார் ஏதோ காரியத்திற்காக அறையை விட்டு வெளியே போனபோது, சில அரிய ஸ்டாம்புகளை எடுத்துக்கொண்டு போய்விட்டார், என்றும் என்னிடம் வருத்தத்துடன் கூறியிருக்கின்றார். பொதுவாக நம்மூர் ஆய்வாளர்களைப் பற்றி அவருக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது.

எதற்காக இத்தகைய சேகரிப்பை செட்டியார் உருவாக்கினார்? இந்தத் துறைகள் மேல் அவருக்கிருந்த ஆர்வமும், அதை ஒரு மூலதனமாக அவர் பார்த்ததும் காரணங்களாக இருக்கலாம். பல அமெரிக்க பல்கலைக்கழக நூலகங்களிலும், லண்டனிலுள்ள பிரிட்டீஷ் நூலகத்திலும் அவரது Library Service India, Kottaiyur என்ற ரப்பர் முத்திரை தாங்கிய தமிழ் நூல்களைக் காணலாம். அறுபதுகளில் இந்தியா பற்றிய ஆய்வு மேலை நாடுகளில் பரவிக் கொண்டிருந்த காலத்தில் இந்நூல்கள் விற்கப்பட்டிருக்கலாம். தென்னிந்தியா பற்றிய பழைய, அரிய நூல்களுக்கு அப்போது பெரிய கிராக்கி. அதே சமயம் சென்னையில் ஜெயவேலு என்பவர் இம்மாதிரியான அரிய தமிழ்ப் புத்தகங்களை மேலை நாட்டு ஆய்வாளர்களுக்கு விற்றுக் கொண்டிருந்தார். ஆவணக் காப்பகத் தில் பணி செய்த நாட்களில் அவரை நான் சந்தித்திருக்கின்றேன்.

செட்டியாரின் நாட்களுக்குப்பிறகு இந்த கிடைத்தற்கரிய அச்சுப்பிரதிகள் கேட்பாரற்றுப் போய்விடக்கூடாது, என்ற எண்ணத் துடன் இவரது சேகரிப்பு பற்றியும், அது எவ்வாறு வரலாற்றா சிரியர்களுக்கு ஓர் அரிய மூலப்பொருள் என்றும் அது ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஒரு முன்வரைவு எழுதினேன். ஒரு நாள் இரவு, இரண்டு மணி நேரம் உட்கார்ந்து இந்தக் குறிப்பை அடித்து முடித்தேன். அப்போது நான் ஒரு Olivetti என்ற ஒரு குட்டி டைப்ரைட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். மறுநாள் தமிழ்நாடு ஆவணக்காப்பக கமிஷ்னரிடம் அதை நானே கொடுத்தேன். பதிலோ, வேறு எந்த விதமான மறுவிளைவோ இல்லை. இப்போது பின் னோக்கிப் பார்க்கும்போது என்ன ஒரு குழந்தைத்தனமாக நம்பிக்கையுடன் அதை எழு தினேன், என்று ஆச்சரியமாக இருக்கின்றது.

நான் அப்போது சென்னையிலிருந்தேன். எழுபதுகளில் சென்னை வரும் போது செட்டியார் எனக்கு ஒரு அஞ்சலட்டை அனுப்புவார். மண்ணடியில் ஒரு நகரத்தார் சத்திரத்தில் இவரை நான் சந்திப்பதுண்டு.சில நாட்கள் அங்கேயே மதிய உணவு உண்போம்.ஒரு முறை ஒரு பழய மரச்சிற்பத்தை, (கதவொன்றின் மேல்பாகம்) விற்பதற்கு வந்திருந்தார். தன்னிடம் இருந்த தொன்மை யான தஞ்சாவூர் ஓவியங்களை விற்பதற்காகவும் சென்னைக்கு வருவதுண்டு. நான் அவரோடு அதிகம் பேசியது அந்த நாட் களில்தான். மகாத்மா காந்தி படம் தயாரித்த ஏ.கே.செட்டியாரை இவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சென்னை மௌபரீஸ் ரோட்டில் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து குமரிமலர் இதழை ஏ.கே.செட்டியார் நடத்திக்கொண்டிருந்தார். அந்தப் பத்திரிக்கையின் அட்டையில் உள்ள அதே எழுத்துருவில் குமரிமலர் என்ற பெயர் தாங்கிய ஒரு பச்சை நிற போர்டு அங்கிருந்தது என் நினைவிற்கு வருகின்றது.

முத்தையா செட்டியாரின் சேகரிப்பைக் கருவாகக் கொண்ட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வேகமாக வளர்ந்து வருகின்றது. நூலகம் சென்னையில் துவக்கப்பட்ட நாளிலிருந்த சேகரிப்பு இன்று இரண்டு மடங்காகி விட்டது. சங்ககால இலக் கியத்தின் காலக்கணிப்பு என்ற பொருளில் ஈடுபாடு கொண்ட ஒரு ஆய்வாளர் அந்த பரப்பு சார்ந்த 2000 நூல்களை சில ஆண்டுகளுக்கு முன் கொடுத்தார். இதேபோல, கிஃப்ட் சிரோமணி, தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஏ.கே.ராமானுஜம் இவர்களது சேகரிப்புகளும் இங்கு வந்து சேர்ந்துள்ளன. திராவிட இயக்கம் பற்றி ஆராய்ச்சி செய்த ராபர்ட் ஹார்டுகிரேவ், வட ஆற்காடு மாவட்ட ரெட்டியார்களைப்பற்றி விவரங்கள் திரட்டிய எட்வர்டு மன்கோமரி போன்ற ஆய்வாளர்கள் தங்கள் சேகரிப்புகளை இந்த நூலகத்தில் சேர்ப்பித்துவிட்டார்கள்.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலுள்ள சினிமா பற்றிய ஆவணங்கள் இன்னும் சரிவர பயன்படுத்தப்படவில்லை. தமிழ் நாட்டில் இந்தியாவில் சினிமா பற்றிய ஆய்வு அதிகமாக நடப்பதாகத் தெரியவில்லை. பெங்களூரிலுள்ள Centre For The Study Of Culture and Society போன்ற தனியார் நிறுவனங்கள் இந்தத் துறை பற்றிய ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டுகின்றன. பல்கலைக்கழகங்களை எடுத்துக்கொண்டால், கொல்கத்தாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் சினிமா ஒரு தனித் துறையாக உள்ளது. தென்னிந்திய வரலாற்றின் மற்ற பரிமாணங்களைப்பற்றி ஆய்வு செய்பவர்களுக்கும் சினிமா சம்பந்தமான அச்சுப்பிரதிகள் ஒரு மூலப்பொருளாக உதவலாம். எடுத்துக்காட்டாக, இந்தியாவில் தொழிற்சங்கங்களைப்பற்றி ஆய்வு செய்யும் ஒருவர் தமிழ்ப்படங் களில் உழைக்கும் வர்க்கத்தினரின் பிரச்சனைகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றன என்று பார்க்கலாம்.

எனது ஆய்வு சம்பந்தமாக மூன்று முறை நான் கோட்டையூர் சென்றிருந்தேன். கடைசி நாள் அவரிடமிருந்து விடைபெறும்போது 1932ல் பதிப்பிக்கப்பட்ட, நன்கு காலிகோ கட்டமைக்கப் பட்ட நளவீமபாக சாஸ்திரம் என்ற அரிய தமிழ்நூலை என் கையில் கொடுத்து இதை உங்கள் மனைவிக்குக் கொடுங்கள் என்றார். என் மனைவி உணவியல் படித்தவர் என்று ஒரு நாள் பேச்சு வாக்கில் அவரிடம் கூறியிருந்தேன். இந்த நூலை இப்போதும் நாங்கள் அடிக்கடி புரட்டிப்பார்க்கின்றோம். இதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அதே போல் பருப்பு வகைகளும். நூறாண்டுகளுக்கு முன் நம் நாட்டில் பல்லுயிரியம் [Biodiversity] எவ்வளவு வளமாக இருந்தது என்பது தெரிகின்றது.

முத்தையாவின் சேகரிப்பைச் சரிவர ஆய்வாளர்கள் பயன்படுத் தினால் தமிழ்நாட்டின் வரலாறு திருத்தி எழுதப்படலாம் என்று நான் நினைப்பதுண்டு. அயோத்திதாசரின் தமிழன் இதழ் அதிலிருந்து உருவான ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் இந்த சாத்தியக் கூற்றிற்கு ஓர் எடுத்துக்காட்டு. 

(தியடோர் பாஸ்கரன் தமிழ்ச் சினிமா வராலாற்றறிஞர். The Eye of the Serpent என்ற அவரது புத்தகத்திற்கு தங்கத்தாமரை பரிசு பெற்றவர். சினிமா, இயற்கை, சூழலியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் நூல்கள் பல தொடர்ந்து எழுதிவருகிறார். 1998 முதல் 2001 ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநராக பொறுப்பேற்றிருந்தார். இந்நூலக அறக்கட்டளையினை தொடங்கிய அறங்காவலர்களுள் ஒருவர்.)

Pin It