இலக்கிய உலகிலும் சரி, ஆய்வுலகிலும் சரி, தமிழ்ச் சித்திரக் கதைகள் குறித்துப் போதுமான அக்கறையை யாரும் செலுத்தியதாகத் தெரியவில்லை. இன்று புகழ்பெற்றிருக்கும் பல எழுத்தாளர்கள் தங்கள் வாசிப்பனுபவத்தின் முதல் நினைவாகச் சித்திரக் கதைகளையே கூறுவார்கள் என்பதில் ஐயமில்லை. இலக்கியவாதிகளாகவோ அல்லது தீவிர வாசகர் களாகவோ ஆன பிறகு, தமிழ்ச் சித்திரக் கதைகளை நாம் புறக்கணித்துவிட்டோம் அல்லது மறந்துவிட்டோம். உண்மை யில், தமிழ்ச் சித்திரக் கதைகளின் ஆய்வென்பது பண்பாட்டின் நுண்ணரசியலுடன் தொடர்புடையது. அதனை விளக்கும் முன்பு, தமிழ்ச் சித்திரக் கதைகளின் இன்றைய நிலையையும், அதைப் புறக்கணிப்பதன் மூலம் விளையக் கூடிய அபாயங் களையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

புத்தகத்தைத் தொடும் ஒரு குழந்தை, எடுத்தவுடன் எழுத்து களின்பால் ஈர்க்கப்படுவதில்லை. முதலில் அந்தக் குழந்தை யைக் கவர்வது சித்திரங்களே. வண்ண வண்ணச் சித்திரங் களின்பால் ஈர்க்கப்படும் ஒரு குழந்தை, அதனை விளக்கச் சொல்லி, பெற்றோர்களிடமோ, பெரியவர்களிடமோ கெஞ்சுகி றது. கதையுலகிற்குள் மெல்ல நுழைகிறது. எழுத்துக் கூட்டி வாசிக்கத் தொடங்கியவுடன், ஒரேசமயத்தில் சித்திரங்களுட னும் எழுத்துகளுடனும் தன் உறவை வளர்த்துக் கொள்கிறது. புராணமென்றாலும், வரலாறு என்றாலும், பிற சாகசக் கதைகள் என்றாலும், சித்திரக் கதைகள் மூலமாகவே ஒரு குழந்தை பல்வேறு உணர்வுகளைத் தன் ஆழ்மனத்தில் பதித்து வைத்துக் கொள்கிறது. வீரம், கோபம், அன்பு, சாந்தம், சோகம், பொறாமை என்று பல்வேறு குணங்கள் சித்திரக் கதைகளுடன் ஊடாடுவதன் மூலமாக ஒரு குழந்தையின் மனத்தில் பதிந்து விடுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மொழி யும், பண்பாட்டின் பல்வேறு அம்சங்களும் ஒரு குழந்தையின் நனவு மற்றும் நனவிலி மனத்தில் அதனையும் அறியாமல் பதிந்துவிடுகின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டுதான் சித்திரக் கதைகள் பற்றிய ஆய்விற்குள் நுழைய முடியும்.

தமிழ்ச் சூழலில் சித்திரக் கதைகளை வெளியிடும் நிறுவனங் கள் அவற்றை வியாபார நோக்கோடு வெளியிட்டாலும், அதன் வாசகர்கள் யார்? அவற்றின் மொழிநடை எத்தகையது? அவை உருவாக்கும் கருத்தாக்கங்கள் எத்தகையவை? முதலான பல்வேறு கேள்விகளை முன்வைத்து, ஆய்வுகள் தொடங்கப்பட வேண்டும்.

இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சித்திரக் கதைகள் பதிக்கப்பட்டதுபோல் இன்று பதிக்கப்படுவதில்லை. மெட்ரிகுலேஷன் மற்றும் பல தனியார் பள்ளிகள் இன்று ஆங்கிலத்திற்கு மட்டுமே முதன்மையளிக் கின்றன என்பதைக் கவலையோடு கருத்தில் கொள்ள வேண்டும். முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ், ராமகிருஷ்ண மடம் என்று சில நிறுவனங்கள் தமிழ்ச் சித்திரக் கதைகளை வெளியிட்டாலும், சந்தை மதிப்பு ஆங்கிலச் சித்திரக் கதைக ளுக்கே திட்டமிட்டு உருவாக்கப்படுவதாகத் தோன்றுகிறது.

அம்புலி மாமா, பாலமித்ரா, கோகுலம், ரத்னபாலா போன்ற குழந்தைகளுக்கான இதழ்களின் இன்றைய நிலை என்ன? சித்திரம், போகோ, சுட்டி டிவி போன்ற தொலைக் காட்சிச் சானல்கள் வந்துவிட்டதாலேயே இத்தகைய பத்திரி கைகள் இன்று பெருமளவில் வரவில்லை என்று கூற இயலாது. ஆங்கிலத்தின்மீது அளவுகடந்த மோகம் கொண்டுள்ள ஆசிரியர்களும், பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் ஆங்கிலச் சித்திரக் கதைகள் படிப்பதையே விரும்பினார்கள்.  இன்றும் விரும்புகிறார்கள்.  தமிழ்மொழி இன்றைய தலைமுறை யின ரிடம் நுழையாமல் பார்த்துக்கொண்டதில் பெற்றோர்களுக் கும் ஆசிரியர்களுக்கும் கணிசமான பங்கு இருக்கிறது . . . தமிழையும் குழந்தைகளையும் ஒருவகையில் கொலை செய்து கொண்டிருக்கிறது இன்றைய சமூகம்.

ஒளி வடிவில் சித்திரங்களை உள்வாங்கிக் கொள்ளும் ஒரு குழந்தை, ஒலி வடிவில் மொழியையும் உள்வாங்கிக் கொள் கிறது என்பது உண்மைதான். ஆனால் எழுத்துருவில் தமிழ் மொழி நம் தலைமுறைக்குச் சரியாகச் செல்லவில்லை என்பது அதைவிடக் கசப்பான உண்மை. இன்று குவியல் குவியலாக ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கின்றன. தமிழ்ச் சித்திரக் கதைகளைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியுள்ளது.

அச்சிடப்படும் தமிழ்ச் சித்திரக் கதைகள் சிறுவர்களின் மனத்தில் எத்தகைய கருத்தாக்கங்களை உண்டாக்கு கின்றன. எத்தகைய மனவுலகங்களைக் கட்டமைக்கின்றன என்பது மிகப் பரந்துபட்ட ஆய்வாகும். 

சித்திரக் கதைகளைச் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் எட்டு அல்லது பத்து வயதில் வாசிக்கத் தொடங்கு கிறார்கள் என்று கருத இடமுண்டு. பதின்பருவத்திற்குள் அவர்கள் வாசிக்கும் இத்தகைய கதைகள் அவர் களின் ஆளுமையை மட்டுமல்லாது, எத்தகைய பண்பாட்டை உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதையும் தீர்மானிக்கின்றன.

ராமகிருஷ்ண மடம் வெளியிடும் ‘கதைமலர்’ வரிசை யானது, இந்தியப் புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் தமிழி லுள்ள ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் கதை களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. மாணிக்க வாசகர், ஆண்டாள், திருஞானசம்பந்தர், பட்டினத்தார், ஐயப்பன், பீஷ்மர் சபதம், துர்வாசரின் சாபம், ராவணன் வெட்டு முதலி யவை சில உதாரணங்கள். சிறுவர்களை ஈர்க்கும் வகையில் வண்ண வண்ணப் புகைப்படங்கள். பல்வேறு முகபாவங்கள், எளிமையான தமிழில் இக்கதைகள் சொல்லப்பட்டிருக் கின்றன.

mecsico_3701967இல் தொடங்கப்பட்ட ‘அமர் சித்ர கதா’, இன்று நானூற் றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில், உலகம் முழுவதும் அச்சிடப்படுகிறது. தொண்ணூறு மில்லி யன் பிரதிகள் விற்பனை செய்யப்படுகிறது. அபிமன்யூ, நாரதர், ஹனுமான், யயாதி, பீமனும் ஹனுமானும் என்று புராண இதிகாசங் களிலிருந்தே பெரும்பாலான கதைகள் அச்சிடப்படுகின்றன. பகத்சிங், அம்பேத்கர், சுப்பிர மணிய பாரதி, விவேகானந்தர் முதலிய வரலாற்று நாயகர்களையும் இவை அறிமுகப்படுத்தி யுள்ளன என்பது உண்மையே. தெனாலிராமன் கதை, பீர்பால் கதைகள், ஜாதகக் கதைகள் முதலியன பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுத் தமிழில் தரப்படுகின்றன.

இந்துமதத்திலுள்ள பெருந்தெய்வ வழிபாட்டை முன்னிறுத்தும் வகையில் அச்சிடப்படும் கதைகளை வெளியிடும் இந்நிறு வனங்கள், தமிழில் உள்ள நாட்டுப்புறக் கதைகளைக் கண்டு கொள்வதில்லை. பிராமணியப் பண்பாட்டை இவை உயர்த்திப் பிடிக்கின்றன என்று பொத்தாம்பொதுவாகக் கூற இயலாது. எனினும், தமிழ்ப் பண்பாட்டைக் கட்டமைப்பதில் இந்நிறுவ னங்கள் கிஞ்சித்தும் அக்கறை செலுத்தவில்லை எனலாம்.

நகர்சார்ந்து இக்கதைகளை வாசிக்கும் சிறுவர்களுக்கு இந்தியத் தொன்மங்கள் அறிமுகமாகின்ற அளவிற்குத் தமிழ் நாட்டுப்புறக் கதைகள் அறிமுகமாகியதில்லை. விக்கிரமாதித் யன் அல்லது பீர்பால் கதைகளைத் தெரிந்து வைத்திருக்கும் இவர்கள், அண்ணன்மார் சாமிகளையோ, மதுரைவீரன், அல்லது காத்தவராயனையோ, மயில் ராவணனையோ அறிந்து வைத்திருப்பதில்லை. முருகனைப் பற்றிய கதைகளைக் கூட, கந்தபுராணத்திலிருந்தே இத்தகைய நிறுவனங்கள் அறிமுகம் செய்கின்றன. இந்தியத் தொன்மங்கள் இச்சிறுவர் களுக்கு அறிமுகம் ஆகக் கூடாது என்பதல்ல. முருகன் - வள்ளி, கண்ணன் - நப்பின்னை, கபிலர், பரணர், பழையனூர் நீலி போன்ற தமிழ் மரபுசார்ந்த கதைகள் ஏன் தப்பித் தவறியும் இச்சித்திரக் கதைகளில் அறிமுகமாகவில்லை என்பதே கேட்கப்பட வேண்டிய கேள்வி.

இராமகிருஷ்ண மடம் இந்துமரபைக் கட்டமைக்கவும், அமர் சித்ர கதா நிறுவனம் இந்தியப் பண்பாட்டைக் கட்ட மைக்கவும் பயன்பட்டுள்ளன என்பதே உண்மை. கரிகாலன், இராஜராஜ சோழன் முதலிய மன்னர்களின் கதைகள் அபூர்வ மாக அச்சிடப்பட்டதுண்டு. ஒருபோதும், தமிழ் நாட்டுப்புறக் கதைகள், தமிழ்ச் சித்திரக் கதைகளில் அச்சிடப்பட்டதில்லை.

மேற்சுட்டப்பட்ட நிறுவனங்களுக்கு நேர்மாறானவை லயன் காமிக்ஸ், பைகோ கிளாசிக்ஸ், முத்து காமிக்ஸ் முதலிய நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் வெளியிடும் மர்ம, திகில் நிறைந்த சாகஸக் கதைகள் முற்றிலும் வெளிநாட்டுப் பண் பாட்டைத் திணிப்பவை. கொலை செய்ய விரும்பு, காலன் தீர்த்த கணக்கு, ஙீமிமிமி இரத்தப் படலம் போன்ற தலைப்பு கள் சில உதாரணங்கள். பதின்பருவத்தில் இத்தகைய சாகசக் கதைகளைச் சிறுவர்கள் விரும்பி வாசிப்பார்கள் என்றாலும், முற்றிலும் அந்நியமான பண்பாட்டிற்கு அவர்கள் ஆட்படுகி றார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. பைகோ கிளாசிக்ஸ் நிறுவனம் வெளியிடும் ‘டாம் சாயர்’ என்ற சித்திரக் கதையில் இடம்பெறும் ‘டாம்’ என்ற சிறுவன், ‘பெக்கி’ என்ற பெண்ணைச் சர்வசாதாரணமாகக் காதலிக்கிறான். கதையின் இடையில், அவளுடைய கவனம் வேறு சிறுவனிடம் செல்கிறது. ‘தாமஸ் சாயர்! நீங்க நீங்களாகவே இருக்கலாம். இனி உம்மோடு நான் பேசப் போவதில்லை’ என்று பள்ளிச் சிறுமியாகிய பெக்கி உரைக்கிறாள். இச்சித்திரக் கதை வெளியிடப்பட்ட ஆண்டு 1987 என்பது கருத்தில் கொள்ளத் தக்கது. வன்முறையும், காதலும், காமமும் தமிழ்ச் சித்திரக் கதைகளில் இடம்பெற்றுள் ளதை எவ்வாறு எடுத்துக் கொள்வது?

பெயர்கள், நிகழ்வுகள், ஆடைகள் அனைத்திலும் மேலை நாட்டுக் கலாச்சாரமே திணிக்கப்பட்டுள்ளது கண்கூடு. இத்தகைய சித்திரக் கதைகள் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் தமிழில் இதுவரை போதிய ஆய்வுகள் வெளிவந்துள்ள தாகத் தெரியவில்லை.

தமிழ்ச் சித்திரக் கதைகளில் கையாளப்படும் மொழிநடை தனித்த ஆய்விற்குரியது. வால்ட் டிஸ்னி நிறுவனம் வெளியிட்டு மொழிபெயர்ப்பில் கிடைக்கும் ஹேவி டேவி லூயி, மிக்கி மவுஸ், அங்கிள் ஸ்கூருஷ், ஜூனியர் வுட் சக்ஸ், டொனால்ட் டக் முதலிய சித்திரக் கதைகளில் கையாளப்பட்டுள்ள மொழி நடை குழந்தைகளின் சுபாவங்களைக் கவனத்தில் கொண்டவை. ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள கதை மலரில் உள்ள கதைகள் செந்தமிழ் நடையைக் கையாள்பவை. அண்மையில் படக்கதை வடிவில் சேகுவாராவின் வாழ்க்கை வரலாற்றையும், அமெரிக்க மக்கள் வரலாற்றையும் பயணி வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. இந்த இருநூல்களில் வெளிப்பட்டுள்ள சித்திர வடிவமைப்பு அற்புதமானது. 

ஆனால் வரலாற்று ரீதியாகச் சில தகவல்களைச் சிறுவர்களுக்குச் சேர்க்க வேண் டும் என்ற முனைப்புதான் அதில் மிகுதி. சான்றாக, ‘அமெ ரிக்கப் பேரரசின் மக்கள் வரலாறு’ என்ற நூலில், ‘நம்முடைய போர்கள் பலவும் மக்களை வஞ்சித்த புதைமணலின் மேல்தான் தொடங்கப் பட்டன’ (ப.121) என்ற வாசகத்தைச் சொல்லலாம். வசீகரம், கனவு, சாகசம், குதூகலம் முதலிய வற்றைவிட அறிவைப் புகட்டும் முற்போக்கு அம்சங்களே இந்நூலில் மிகுதி. சேகுவாராவின் வரலாறும் அறிவுஜீவித் தன்மைக் குரிய ஒன்றுதான். சிறுவர்கள் இத்தகைய நூல்களை எவ்வாறு வரவேற்கிறார்கள் என்பது எதிர்காலத்தில்தான் தெரியும்.

மதச்சார்பு, வன்முறை, அந்நியப் பண்பாட்டுத் திணிப்பு முதலியவற்றிலிருந்து விடுபட்டு, நம் பண்பாட்டு அடையாளங் களுடன் கூடிய தமிழ்ச் சித்திரக் கதைகள் பெருகுவதற்கான சாத்தியக் கூறுகள் தற்சமயம் தமிழ்ச் சமூகத்தில் இல்லை என்ற வருத்தத்துடன்தான் கட்டுரையை நிறைவுசெய்ய வேண்டி யுள்ளது.

Pin It