1970கள் இணையதளங்கள், மொபைல் போன்கள், தொலைகாட்சி போன்றவை மக்களின் கவனத்தை ஈர்க்காத காலகட்டம். பெரியவர்கள் தங்கள் உபரிநேரத்தைப் புத்தகங் கள், பத்திரிகைகள் படிப்பதிலும், திரைப்படங்கள் பார்ப்பதிலும் வானொலி கேட்பதிலும் செலவழித்துவந்த காலம். சிறுவர் களாகிய நாங்கள் பள்ளி இடைவேளை நேரங்களிலும் வீட்டி லிருந்து பள்ளிக்கு வந்துபோகும் நேரங்களிலும் திரைப்படங் களைப் பற்றியும் பத்திரிகைகளில் வந்த கிரிக்கெட் செய்திகளைப் பற்றியும் தீவிர ஆலோசனை செய்வோம். சில  திரைப்படங் களின் முக்கியக் காட்சிகளைப் பயாஸ்கோப் மூலமாகவும் பார்த்திருக்கிறேன். கதைப்புத்தகங்களை மெதுவாகப் படிக்கத் தொடங்கியபோது, அப்போது வெளிவரத்தொடங்கிய சித்திரக் கதைப் புத்தகங்கள் என் கவனத்தை மிகவும் ஈர்த்தன.

விடுமுறை நாட்களில் விளையாடிய நேரம்போக, நண்பர் களுடன் சேர்ந்து இக்கதைகளைப் பற்றி ஆழ்ந்த விவாதம் நடத்துவோம். ஒருவருக்கொருவர் இரவல் கொடுப்பது மூலம் ஆரம்பித்த இப்புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் தீவிரமாக என்னிடம் தொற்றிக்கொண்டது.  சாலையோரப் புத்தகக் கடைகளில் தொங்கும் இந்தச் சித்திரப்பத்திரிகைகள் விரை வில் தீர்ந்துவிடும் இவை stapler pin  மூலம் இணைக்கப்பட்டிருப்பதால் கடையோரம் நின்று புரட்டிப்பார்க்க முடியாது. அட்டைப்படத்தைப் பார்த்து வியந்து மறுநாள் பணம் கொடுத்து (50 காசு, 1 ரூபாய்) வாங்கிச் செல்வேன். சிலசமயம் அதற்குள் தீர்ந்துவிடும். ஏக்கத்துடன் நானும் என் நண்பர்களும் கடை கடையாகச் சென்று தேடித் தோல்வியைத் தழுவுவோம். அப்பொழுது என் நண்பர்களுடன் நான் கண்டுபிடித்தது சென்னை தி.நகரிலிருந்த பிரபலமான ரவிராஜ் நூலகம் (பனகல் பூங்கா அருகில்). கடைகளில் வாங்கத் தவறிய சித்திரக் கதைப் புத்தகங்களையும், தெருவோரக்கடைகளில் கிடைக்காத மற்ற புத்தகங்களையும் இங்கு தேடிக் கண்டுபிடித் தோம். இப்படித்தான் தொடங்கியது எனது சித்திரக்கதைப் பத்திரிகை வேட்டை.

சித்திரக்கதைகளில் அதுவரைக்கும் மிகவும் குறைந்த அனுபவமே எனக்கிருந்தது.  தினத்தந்தியில் வரும் கன்னித்தீவு சித்திரத்தொடரை அவ்வப்போது ஒன்றும் புரியாமல் (“உள்ளே குதித்தான் . . . அங்கே... நீயா?! . . . தொடரும்”) படித்த எனக்கு முத்து காமிக்ஸ் பிரமிப்பாக அமைந்தது. இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது அப்போது எல்லோருக்கும் பிடித்திருந்த இரும்புக்கை மாயாவியின் சாகசக் கதைகள். பெரியவர்களின் மூலம் கேட்டறிந்த steel claw  பாத்திரத்தைத் தமிழில் உருவத் துடன் பார்த்துப் படித்தபோது அதுஒரு புது அனுபவமாக இருந்தது. நல்லது செய்வதற்காகவே உலாவரும் இரும்புக்கை மாயாவிக்கு ஒரு சிறப்புச் சக்தி மின்சாரத்தில் கைவைத்ததால் சில நிமிடங்களுக்கு யார் கண்ணிலும் தெரியமாட்டார். அவரது இரும்புக்கை மட்டும் தெரியும். இந்த இரும்புக்கையில் ஒவ்வொரு விரலுக்கும் ஒரு சிறப்பு (துப்பாக்கி, தொலைபேசி) இருக்கும்.  சிலநிமிடங்களுக்குப் பிறகு மெதுவாகக் கண்ணில் தென்படுவார். அந்தச் சிறப்புச் சக்தியைப் பயன்படுத்தி அவர் பல சாகசங்களைச் செய்வார். பெரிய கொள்ளையர்களை அழித்து நாட்டைக் காப்பாற்றுவார்.

ஒருமுறை இரும்புக்கை மாயாவி மூலம் நடந்த ஒரு அனுப வத்தை இங்கே குறிப்பிடவேண்டும். என் நண்பன் ஒருவன், கடைசியாக வந்த முத்து காமிக்ஸில் மாயாவி கொள்ளைக் காரராக வந்ததாகவும் அக்கதையின் பெயர் ‘கொள்ளைக்கார மாயாவி’ என்றும் ஒரு திகிலை ஏற்படுத்தி னான். நாங்கள் பதறியடித்து அன்று மாலையே ஒவ்வொரு கடையாக “கொள்ளைக்கார மாயாவி”யைத் தேடித் தோற்றோம். ரவிராஜ் நூலகத்திலும் இது எளிதில் கிடைக்க வில்லை. சிறிதுநாட்கள் கழித்து ஒரு நண்பன் இதைக் கண்டுபிடித்து வகுப்பறையி லேயே இக்கதையின் ரகசியத்தை மெல்லிய குரலில் கூறினான் -மாயாவி கொள்ளைக்காரராக வரவில்லை ஆனால் கதை யில் ஏற்படும் நிலையால் (என்னவென்று இப்பொழுது எனக்கு நினைவில்லை) அவரைக் காவல்துறையினர் தப்பாகப் புரிந்து கொண்டு, இறுதியில் அவர் நல்லவர்தான் என்று புரிந்து கொண்டதாகவும் கூறி சிறிதுநாட்கள் நீடித்த எங்கள் கலக்கத் தைப் போக்கினான்.

இரும்புக்கை மாயாவியைப் போல் லாரன்ஸ், டேவிட் இருவரும் மாணவர்களிடையே முத்துகாமிக்ஸ் மூலம் உலா வந்தனர். இதற்குப்பின்னர்  வந்த பொன்னி காமிக்ஸ் இன்னும் சில பாத்திரங்களைத் தமிழில் கொண்டுவந்தது. இதே நேரத் தில் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் போன்ற பத்திரிகை களும் சித்திரக் கதைகளைக் கொண்டுவந்தன. பர்மா அகதிகள் காடுகளின் வழியாக இந்தியா வரும் அனுபவங்களைத் தழுவிப் பல தொடர்கதைகளும் சில சித்திரக்கதைகளும் இப் பத்திரிகைகளில் வெளிவந்தன. தொலைந்த சொந்தங்களைத் தேடிப்பின்னர் கண்டுபிடிக்கும் வகையில் இக்கதைகள் அமைந்தன. அதே நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் போர் முடிந்து சில ஆண்டுகள் ஆகியிருந்ததால் அதைத்தழுவிப் பல சித்திரக்கதைகள் இப்பத்திரிகைகளில் வந்தன. போரினால் பாதிக்கப்பட்ட இந்து, முஸ்லீம், கிறித்துவ இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதாகவும் பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்ப்பதாகவும் இக்கதைகள் அமைந் தன.

ranuva_370அப்போது வெளிவரத் தொடங்கிய கல்கி குழுமத்தைச் சேர்ந்த கோகுலம் பத்திரிகை என்னை மிகவும் கவர்ந்தது.  பல சிறுவர்கதைகளும் சித்திரக் கதைகளும் இதில் வெளிவந்தன.  இதில் பிரபலமான பலே பாலு என்னும் பாத்திரம் பல சாகசங்களைச் செய்யும் ஒரு சிறுவனைக் கதாநாயகனாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 

ஆங்கிலத்தில் பிரபலமான பேன்டம் என்ற வீரனை இந்திரஜால் காமிக்ஸ் இந்தியாவில் வெளியிட்டது. இதே பேன்டம் தமிழில் வேதாளன் என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்டபோது, இதை ஆங்கிலத்தில் படித்த என்னால், நேர்த்தி யற்ற தமிழ் மொழிபெயர்ப்பில் ரசிக்கமுடியவில்லை. இதே நிலைதான் மாண்ட் ரேக் என்ற பிரபலமான மந்திரவாதி யின் கதைக்கும் தொடர்ந்தது. இந்தக் கட்டத் தில் ஓரளவு ஆங்கிலத்தில் புரிந்து கொள்ளும் நிலை வந்துவிட்டதால் என்னால் இந்த தமிழ்க் கதைகளை ஏற்க முடியவில்லை.

1980களில் ஓரளவு மற்ற தமிழ்க் கதைகளையும் ஆங்கில இலக்கியங்களையும் படிக்கத்தொடங்கியபின் மெதுவாக சித்திரக்கதைகள் மேல் இருந்த மோகம் குறைந்தது.  ஆனால் 1980களின் பிற்பகுதியில் ராணி காமிக்ஸ், அதற்குப் பின் மேகலா காமிக்ஸ், பார்வதி சித்திரக்கதைகள் ஆகியவற்றின் மூலம் மீண்டும் ஓரளவு ஈடுபாடு அதிகரித்தது. இவற்றில் மேகலா காமிக்ஸ் ஜேம்ஸ்பாண்டுக்கு இணையான கதாநாயகர் களில் ஒருவரான காரிகன் கதைகளை அதிகம் வெளியிட்டது. இது சித்திரக்கதையை மட்டுமல்லாமல்,  தலையங்கத்தையும் பிற செய்திகளையும் இணைத்து வெளியிட்டது. இருந்தாலும் ஆங்கிலம் ஓரளவிற்குப் புரிந்தவர்களுக்கு இத்தமிழாக்கங்கள் சிறப்பாகத் தோன்றவில்லை. என்னுடைய ஈடுபாடும் 1990களின் இடையில் குறைந்தது. இருந்தாலும் தேடிச் சென்று கடைகளில் அலைந்து வாங்காவிட்டாலும் கிடைக்கும் போது தமிழ்ச்சித்திரக் கதைகளைப் படிக்கும் பழக்கம் இன்றளவும் தொடர்கிறது.

சிறுவயதில் சித்திரக்கதைகளால் ஈர்க்கப்பட்டதற்கு என்ன காரணம்? நான்கு பக்கங்கள் எழுத்தாகப் படிப்பதைப் படங் கள் மூலம் அரைப்பக்கத்தில் படித்து இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளமுடிந்தது. ஆங்கில இலக்கியப் புத்தகங்களையும் Illustrated classics என்ற சித்திரக்கதைப் புத்தகங்களை வைத்தே நன்றாகப் படித்தேன். புரியாத வார்த்தைகளும் படங்களின் மூலம் புரிந்துவிடும். ஒவ்வொரு பாத்திரத்தையும், நெடுங் கதை களாக இருந்தால் கூட, காட்சிப் படுத்தப்படும்போது ஏற்படும் உணர்ச்சி தனியாக இருக்கும். 

1990களுக்குப் பிறகு மெதுவாக இப்பத்திரிகைகள் குறைந் தன. தொலைக்காட்சியின் தாக்கம் மெதுவாகத் தலைதூக்கிய போது, சித்திரக்கதைகள் மட்டுமல்லாமல் பத்திரிகைகளின் வியாபாரமே குறைந்ததாகச் சில நூலகர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றனர்.  குறிப்பாக தமிழ்ச் சித்திரக்கதைகள் இன்று அங்கொன் றும் இங்கொன்றுமாகச் சில கடைகளில் இருக்கிறதே தவிர பரவலாகக் கிடைப்பதில்லை. முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் போன்றவை இன்னும் வெளிவந்தாலும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வரு வதில்லை. சில தினசரி பத்திரிகைகள் சிறுவர் இதழை வெளியிடும்போது அவற்றில் சித்திரக்கதை களையும் சேர்க்கின்றன. கோகுலம், அம்புலிமாமா போன்ற பத்திரிகைகள் சித்திரக்கதைகளுக்கு ஓரளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

தமிழ்ச் சித்திரக்கதைகளின் இந்நிலைமைக்கு காரண மென்ன? சந்தேகமே இல்லாமல் தொலைக்காட்சி, இண்டர் நெட் போன்றவற்றில் கவனம் சென்றுவிட்டபடியால் இவை களின்மேல் நாட்டம் குறைந்துவிட்டது. சிறுவர்களும் அவர்களுக்குப் பிடித்த அலைவரிசைகளைப் பார்த்து நேரத்தைச் செலவழிப்பதால், அவர்களுக்குத் தேவையான படங்கள் இன் னும் வசீகரமாகத் தொலைக்காட்சியில் பிணையப்பட்டிருப்ப தால், சித்திரக்கதைப் புதத்கங்களை மிகவும் குறைவாகவே படிக்கின்றனர்.

சில தனிப்பட்ட ஆர்வலர்கள் தங்களால் முடிந்த அளவு இக்கதைப் புத்தகங்களை ஆதரித்துதான் வருகின்றனர். பழைய சித்திரக்கதைப் புத்தகங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இணைய தளங்களில் வெளியிடப் பட்டுள்ளன. ஆனாலும் இவற்றைப் படிப்பதற்கான வாசகர்கள் பழைய கால நினைவுடன் வாழ்ப வர்களே தவிர புதியவர்கள் பெரிய ஈடுபாட்டைக் காட்டுவ தில்லை என்று இத்துறையிலுள்ள ஆர்வலர்கள் கூறு கின்றனர்.

இந்நிலைக்குத் தொலைக்காட்சியையே முழு காரணமாகக் கூறி ஒதுக்கிவிடமுடியாது. இப்புத்தகங்களின் தற்காலத் தரத் தைப் பற்றிய பொதுவான கருத்து என்ன? Amar Chittra Katha போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள் காலத்துக்கு ஏற்றாற்போல் மாறின. ஆனால் தமிழ்ச் சித்திரக்கதைகள் ஏன் மாறவில்லை? இக்கேள்வி களுக்கு என்னிடம் பதிலில்லை.

இப்போதைய நிலைமை எப்படி இருந்தாலும் என்னுடைய சிறுவயது நினைவுகளில் பலே பாலுவின் சாகசங்களும் இரும்புக்கை மாயாவியின் தனித்துவமும் கண்டிப்பாக நீங்கா இடம்பெற்றுள்ளன.

Pin It