பவுத்தம் - ஆரிய திராவிடப் போரின் தொடக்கம் - 5

ஆதிக்கத்திற்கும் அதிகாரத்திற்கும் எதிராகப் புத்தரால் உருவாக்கப்பட்ட கருத்தியல் கோட்பாடு - பவுத்தம்.

அதை நடைமுறைப்படுத்தவும், மக்களிடம் கொண்டு செல்லவும் அவரால் உருவாக்கப்பட்ட இயக்கம் - சங்கம்.

இச்சங்கம்தான் பண்டைய இந்தியாவில் தோன்றிய முதல் மக்கள் இயக்கம்.

இதற்கு முன்னால் ஆரியத்திற்கான எந்த ஒரு சங்கமோ, நிறுவனமோ இருந்ததில்லை.

பவுத்தத்தின் சமகாலச் சமயமான சமணத்தில் “சங்கம் இருந்திருக்கலாம் என்றே படுகிறது. மஜ்ஜிம நிகாயத்திலிருந்து கோசாம்பி கொடுத்துள்ள ஒரு மேற்கோளில் “சங்கத் தலைவர்” என்றே சமணத் தலைவர் அழைக்கப்பட்டிருக்கிறார்” என்கிறார் பேராசிரியர் அருணன்.

இருந்தாலும் சமணச் சங்கம் பற்றிய செய்திகள் என்ன என்பது தெரியவில்லை.

ஆனால் புத்தர் சங்கம் தொடங்குவதற்கு முன் சங்கங்கள் இருந்துள்ளன என்பதை மறுக்க முடியாது.

புத்தர் தன் சங்கத்தின் அமைப்பு முறையை, இனக்குழுச் சங்கத்தில் இருந்து எடுத்துக்கொண்டதாக தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா கூறுகிறார்.

இனக்குழுச் சங்கத்தின் பெயர் சன்ஸ்தகார் என்பதை நாம் முன்னர் பார்த்தோம். சாக்கிய இனச் சன்ஸ்தகார் சங்கத்தில் இருந்து முரண்பட்டு வெளியேறினார் புத்தர் என்பதையும் முன்னர் பார்த்தோம்.

இச்சாக்கிய இனக்குழுச் சன்ஸ்தகார் சங்கம்தான் புத்தர் உருவாக்கிய (பவுத்த) சங்கத்திற்கு முன்மாதிரி, முன்னுதாரணம்.

இருந்தாலும் சன்ஸ்தகார் சங்கங்கள் ஓர் இனம் அல்லது இனக்குழுவின் நலம்மட்டும் பேணும் சங்கமாக மட்டும் இருந்ததே ஒழிய, பரந்துபட்ட மக்களின் பொது இயக்கமாக அவை இருக்கவில்லை.

மாறாகப் புத்தரின் சங்கம் இனக்குழுக்களின் எல்லைகளை உடைத்துக் கொண்டு, பரந்துபட்ட ஒரு மக்கள் இயக்கமாக, சமூக அரசியல் இயக்கமாக உருவெடுக்கத் தொடங்கியது.

சங்கத்தில் சாதிகள் விலக்கப்பட்டன. சமூக அந்தஸ்து நிராகரிக்கப்பட்டது. தனியுடைமை மறுக்கப்பட்டது. சமத்துவம் பேணப்பட்டது. ஆண் - பெண் இருபாலரும் சமமாயினர். தனிமனித ஒழுக்கம் பேணப்பட்டது. மக்களின் வாழ்வியல் சங்கத்தின் கருப்பொருள் ஆனது. சங்கம் ஒரு பயிற்சிக் கூடமாகவே மாறியது.

சங்கத்தின் முழு ஆளுமையும் புத்தரிடம் இருந்தும் கூட, தன்னைச் சங்கத்தின் தலைவராக அறிவிக்க மறுத்துவிட்டார். “சங்கம் தன்னைத்தானே நிலைநிறுத்தி இயங்கும்” என்பது அவரின் வாக்கு.

சங்கத்தின் துறவிகளின் பொதுக்குழு அமைக்கப்பட்டு இருந்தது. தெரிவு செய்யப்பட்ட முழு அதிகாரம் கொண்ட துறவிகள் இப்பொதுக்குழுவின் உறுப்பினர்கள். மற்றவர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்.

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. அதுபோலப் பிற சங்க உறுப்பினர்கள் பொது வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தார்கள்.

பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரும்போது அது முன்மொழியப்பட்டு, விவாதிக்கப்பட்டது. ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேறவில்லை என்றால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மை வாக்குகள் வெற்றியாக அறிவிக்கப்படும்.

பொதுக்குழுவோ சங்கக் கூட்டமோ பெரும்பான்மை உறுப்பினர்கள் அன்றி, அரைகுறை உறுப்பினர்களுடன் நடத்தக்கூடாது.

“தீர்மானம் முறைப்படி ஒருமுறை, இரு முறை, மூன்று முறை அவைமுன் வைக்கப்படும். சங்கம் அமைதியாக இருந்தால் தீர்மானம் தானாக அமுலுக்கு வரும். யாராவது எதிராகப் பேசினாலோ, கருத்து வேறுபாடு கொண்டாலோ பெரும்பான்மையின் அபிப்பிராயம் ஏற்கப்படும். அதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பவர் முன்னமே சங்கத்தால் நியமிக்கப்பட்டு விடுவார்” என்று மஜும்தார் சொல்வதில் இருந்து, சங்கம் ஜனநாயக முறையில் செயல்பட்டு வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

இதே கருத்தமைவில் கோசாம்பியும், தேவிபிரசாத் சட்டோபாத்தியாவும் ஒன்றிணைவது இங்கு கருதத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் சமூக இழிவுகளுக்கு எதிராக, ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக, சமத்துவச் சமூக அமைப்பை நோக்கிய பார்வையில் ஆரியத்தை எதிர்க்கச் சங்கத்தைத் தயார்படுத்தினார் புத்தர்.

வேதங்கள் புனிதமானவை.

சதுர்வர்ணம் ஆரியர்களின் இலட்சியச் சமுதாயக் கோட்பாடு. சதுர்வர்ணக் கோட்பாட்டைக் கேள்விகேட்காமல் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சதுர்வர்ணங்களிடையே சமத்துவம் நிலவக்கூடாது.

ஆரியர்களே அனைத்து உரிமைக்கும், ஆதிக்கத்திற்கும் உரியவர்கள்.

சூத்திரனுக்கு எந்த உரிமையும் இல்லை. அவன் சமூக அடிமை.

சூத்திரர்கள் கல்வி கற்கக் கூடாது. பெண்களும் கல்வி கற்கக்கூடாது. அவர்கள் ஆண்களின் அடிமைகள்.

இவை போன்றவைகளால் பலவீனமான சூத்திரர்களை ஒடுக்கவும், சுரண்டவும், அவர்களை முழுமையான அடக்குமுறை நிலையில் வைத்திருக்க வும் ஆரியம் முற்பட்டதைப் புத்தர் கடுமையாக எதிர்த்தார்.

“பவுத்த சங்கம் குருமார்களின் கூட்டமன்று; அதில் பூசாரிகளும், புரோகிதர்களும் இல்லை. அது பயிற்சி பெறும் துறவிகளின் கூட்டம்” என்கிறார் ப. ராமசாமி.

வெறும் போதனைகள் மக்களை வெகுதூரம் கொண்டு செல்ல முடியாது. மக்களின் சந்தேகங் களுக்கு விளக்கம் சொல்ல வேண்டும்.

அதற்கான சமூக அறிவுப் பயிற்சியைச் சங்கத்தின் மூலம் துறவிகளுக்குக் கொடுக்கச் செய்தார் புத்தர்.

தன் தோழமைத் துறவிகளிடம் புத்தர் சொல்கிறார்,

“நான் உலகத்துடன் சச்சரவிடுபவன் அல்லன். ஆனால் உலகம்தான் என்னுடன் சச்சரவிடுகின்றது. நாம் போர் தொடுக்கின்றோம். அதனால் நாம் போராளிகள் என்று அழைக்கப்படுகின்றோம். உயர்ந்த நல்ல நெறிகளுக்காக, உன்னதமான நல்ல முயற்சிக்காக, தேர்ந்து தெளிந்த நல்லறிவிற்காக நாம் போர் தொடுக்கிறோம். எனவேதான் நாம் போராளிகள் என்று அழைக்கப்படுகிறோம். எங்கெல்லாம் நல்ல நெறிகள் அபாயத்தில் இருக்கிறதோ, அங்கெல்லாம் போராடுங்கள் - வாயடைத்து நின்றுவிடாதீர்கள்...

அமைதியைப் பாதுகாப்பதற்கான எல்லா வழிகளும் தோல்வியடைந்து போனால், போர் தொடங்குகிறவன் மீதுதான் வன்முறையின் பொறுப்பு சேரும். தீய சக்திகளுக்கு ஒரு போதும் பணியக்கூடாது. போர் இருக்கலாம், ஆனால் அது சுயநல நோக்கங்களுக்காக இருக்கக் கூடாது”

புத்தரின் இந்தப் பேச்சின் மூலம் அவரது சமூக அக்கறையைப் பார்க்கலாம். அவர் ஒரு போராளியாகக் காட்சி தருகிறார். தன் சங்கத்தையும், தோழமைத் துறவிகளையும் சிந்தனைக்கு, போராட்டக் களத்துக்கு அவர் கொண்டு செல்கிறார்.

புத்தர் தன் தோழமைத் துறவிகளிடம், “நீங்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் செல்லுங்கள். மாறாத வர்களை மாற்றுங்கள். உலகம் முழுவதும் துன்பத்தில் எரிந்து கொண்டிருக்கிறது. எங்கும் போதனை செய்யுங்கள். சரியான வழிகாட்டுதல் இல்லாதவர் களுக்கு வழிகாட்டுங்கள். செல்லுங்கள். அவரவர் தனித்தனி வழியில் செல்லுங்கள். கருணையில் நிரம்பி இருங்கள். செல்லுங்கள். காப்பாற்றுங்கள் - அவர்களை ஏந்துங்கள்” என்று புத்தர் சொல்வதைப் பேராசிரியர் அருணன் சுட்டிக் காட்டுவதில் இருந்து, புத்தர் எத்தகைய சமூகச் சீர்திருத்தவாதி, புரட்சியாளர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

“அறிவின் பெருமையும், அறியாமையின் சிறுமையும் பவுத்தத்தில் வலியுறுத்தப்படுவதுபோல, வேறு எந்த மதத்திலும் வலியுறுத்தப்படுவதில்லை. மனிதன் தன் கண்களை அகல விரித்து எப்போதும் விழிப்பாய் இருக்க வேண்டும் என்பதற்கு வேறு எந்த மதமும் இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதில்லை” என்கிறார் ஈ.ஜே.மில்ஸ்.

டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார், “பவுத்தம் ஒரு புரட்சியாகும். இது சமயப் புரட்சியாகத் தோன்றியதாயினும், அதனினும் மேலாக சமூக அரசியல் புரட்சியாக அது மாறியது”.

பவுத்தத்தின் புரட்சி ஆரியத்தின் எதிர்ப்பில் இருந்தும், பகுத்தறிவுச் சிந்தனையில் இருந்தும் புறப்படுகிறது.

“புத்தரைப் போல நாத்திகராக வாழ்ந்தவரும் இல்லை, கடவுள் போல மதிக்கப்பட்டவரும் இல்லை. அவர் தெய்வீகத் தன்மை தமக்கு இருப்பதாக அகம்பாவத்துடன் உரிமை கொண்டாடாதவர்.

எளிமையாக சராசரி மக்களிடம் அவர் வலம் வந்தார். தூற்றியவர்களைப் புறமுதுகிடச் செய்தார். இனிமையும் எடுப்பும் நிறைந்தது அவரின் பேச்சு. அவர் ஒவ்வொருவருக்கும் தலைவர். அனைவருக்கும் நண்பர். அவரது கனிவான எடுப்பான பேச்சு கேட்போரை ஆட்கொண்டது. இவர் பேசினார், கேட்பவர் கூட்டம் அதிகரிக்கிறது.

அவர் என்ன பேசுகிறார் என்பது முக்கியமல்ல. ஏனெனில் இயக்கத்தைக் கட்டுப்படுத்திக் கேட்போரை வளைய வைக்கும் ஆற்றல் படைத்தவராக அவர் இருந்தார். தங்கள் துன்பத்தின் மீட்சிக்கு அவரே பொறுப்பு என்று மக்கள் நம்பினார்கள்.

அடிமைகள் சுதந்திர மனிதர்களாகும் உண்மையையும், சாதிகளைக் கடந்து அனைவரும் சகோரதத்துவம் உள்ளவர்கள் என்பதையும், புத்தருடைய பேச்சில்தான் முதல்முதலாக மக்கள் உணர்ந்தார்கள்” என்று புத்தரின் உருவத்தைக் கண்முன் கொண்டு வருகிறார் பேராசிரியர் ஹட்கின்ஸ்.

இந்த உணர்வுதான் மக்களைப் பவுத்தத்திற்குக் கொண்டு சென்றது. இந்தப் பேச்சுதான் மக்களைச் சங்கத்திற்குக் கொண்டு போனது.

மக்கள் மத்தியில் புத்தர் - திகைத்தது ஆரியம்!

மக்களுக்காகப் பேசினார் புத்தர் - அதிர்ந்தது ஆரியம்!

ஊரெல்லாம் சுற்றிச் சுற்றிப் பவுத்தத் துறவிகள் முழங்கினார்கள்:

வாருங்கள் அறிவை ஏற்றுக்கொள்வோம் - புத்தம் சரணம் கச்சாமி!

வாருங்கள் சமநீதியை ஏற்றுக்கொள்வோம் - தம்மம் சரணம் கச்சாமி!

வாருங்கள் நாம் ஒன்றிணைவோம் - சங்கம் சரணம் கச்சாமி!

ஆரியத்தின் அஸ்திவாரத்தை ஆட்டத் தொடங்கினார் புத்தர்; அப்பொழுது, அவருக்கு வயது 37.

- மீண்டும் சந்திப்போம்

Pin It