பின்காலனியத்திற்குப் பிறகான இந்தியாவின் கல்விமுறையில் பெரிய அளவிலான மாற்றம் ஏதும் இல்லாமல் மெக்காலேயின் கல்வி முறையே நடைமுறைப்படுத்தப்படுகிறது. மெக்காலேயின் கல்விமுறை என்றால் என்ன? என்கிற குழப்பம் பலரிடையே இருக்கிற நிலையில், மெக்காலே என்ன மாதிரியான இந்தியச் சூழலில் ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய அறிவியலை இந்தியாவில் கற்பிக்க திட்டம் வகுத்தார் என்பதை இக்கட்டுரை கூற முற்படுகிறது. இக்கட்டுரை Rise and Fulfilment of British Rule in India, 1973’ என்கிற நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் குறிப்பிடப்பட்ட ‘இலக்கிய அறிவு’ என்பது அராபிய அல்லது சமஸ்கிருத இலக்கியத்தையே குறித்திருக்க வேண்டும் என்பது வாதிக்கப்பட்டுள்ளது அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஊகமாக இருந்துள்ளது. மில்டனின் கவிதை, லாக்கின் மெய்யியல் மற்றும் நியூட்டனின் இயற்பியலைக் கற்றவர்களுக்குக் கற்றவர் என்ற எண்ணத்தோடு படித்த சுதேசிகள் என்ற பெருமைக்குரிய பட்டப்பெயர் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது உறுதி. ‘படித்த சுதேசிகள்’ என்ற பட்டம் தர்ப்பைப் புல்லை ஏற்று இந்துச் சமய நூல்களில் ஆழ்ந்து, தெய்வம் குறித்த புதிர்களில் ஆழ்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டி ருக்க வேண்டும். இது மனநிறைவு அளிக்கக்கூடிய விளக்கமாக இல்லை. இதற்கு ஒப்பீடாக எகிப்தின் பாஷா(றிணீsலீணீ)வை இணையானதாகக் கொள்வோம். எகிப்து நாட்டில் படித்த சுதேசிகளை ஊக்குவித்தல், இலக்கியத்தை மேம்படுத்தி புத்துயிர் ஊட்டுதல் போன்றவற்றுக்காகப் பெரும் பணம் ஒதுக்குகிறார்கள் எனக் கொள்வோம். அவர்களது Hieroglyphic நோக்கம், கல்வி, ஓசிரியக் கதைகளில் உட்பொருளாக அமைந்துள்ள கோட்பாடுகள் - பூனைகளையும் வெங்காயத்தையும் பழங்காலச் சடங்கு முறைப்படி வழிபடுவதற்கான முறைகளாகவே இருக்கும். இவற்றை எவராவது விளங்கிக்கொள்ள முடியுமா?

மெக்காலேயின் கூற்று பின்வருமாறு அமைந்தது:

கீழைத்தேய கல்வி முறையின் ஆர்வலர்கள் - நிலவும் கல்வி முறையைத் தக்கவைப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதைத் தான் சமூகம் வேண்டுகிறது என நம்புகிறார்கள். இதுநாள்வரை அரேபிய மற்றும் சமஸ்கிருத மொழி மேம்பாட்டிற்காக ஒதுக்கப் பட்ட தொகை பறிக்கப்பட்டால் கல்விமுறை அடியோடு நாசமாகும் எனக் கருதுகிறார்கள். எதன் காரணமாக இம் முடிவுக்கு வந்தார்கள் என்பதை அறிவது அவ்வளவு எளிதில்லை. நாம் மருத்துவமனைக்கான இடத்தை ஆரோக்கியமாக இருக்கிறதென்று கருதிக் கண்டடைந்தோம். நம்முடைய எதிர்பார்ப்புக்குத் தகுந்த வகையில் அது அமையாமல் போனால் அவ்விடத்தை வைத்துக்கொள்வதில் விடாப்பிடியாக இருப்போமா என்ன? நமது கட்டிட முயற்சி பயனற்றதெனப் புரிந்து அப்பணியை நிறுத்தினால், அதெப்படி மக்களது நம்பிக்கையைக் குலைப்பதாகும்?

எனக்குச் சமஸ்கிருதத்திலோ அல்லது அரேபிய மொழியிலோ எவ்வித அறிவும் இல்லை. ஆனால், அம்மொழிகள் குறித்த மிகச்சரியான மதிப்பீட்டை அடைவதற்கான முயற்சிகளை நான் செய்திருக்கிறேன். சமஸ்கிருத மற்றும் அரேபிய மொழிகளில் பெரிதும் கொண்டாடப்படும் நூல்களின் மொழிபெயர்ப்பை நான் படித்திருக்கிறேன்... கீழைத்தேயவியலாளர்கள் கீழைத் தேயவியல் படிப்பு குறித்து முன்வைக்கும் மதிப்பீட்டை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். ஒரு நல்ல ஐரோப்பிய நூலகத்தின் ஒரு வரிசை புத்தகங்களுக்கான மதிப்பை மட்டுமே ஒட்டுமொத்த இந்திய மற்றும் அரேபிய நாட்டு இலக்கியங்கள் பெற்றுள்ளன என்பதை மறுக்கும் ஒரு கீழைத்தேயவியலாளரைக்கூட நான் கண்டதில்லை.

...கற்பனைசார் பிரதிகளிலிருந்து தகவல்களைப் பதிவு செய்யும் தத்துவங்களைக் கொண்ட பிரதிகளை நோக்கிச் செல்கிற பொழுது ஐரோப்பியர்களின் உயரிய நிலை அளவிடற்கரிய தென்பது புலனாகும். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கிற எல்லா புத்தகங்களிலுள்ள வரலாற்றுத் தகவல்களை ஒருசேர தொகுத்தால் அது இங்கிலாந்திலுள்ள ஆரம்பப் பள்ளிக்கூடங் களில் பயன்படுத்தப்படுகிற மிக எளிமையான வரலாற்றுச் சுருக்கம் பெற்றிருக்கும் மதிப்பைவிட குறைந்த மதிப்புடைய தாகவே இருக்கும் என்பதை நான் மிகைபடக் கூறவில்லை என்றே நம்புகிறேன்.

இந்தியாவில் ஆட்சி செய்யும் வகுப்பினரால் ஆங்கில மொழி பேசப்படுகிறது. அரசுப்பணி புரிகிற உயர் வர்க்க இந்தியர்கள் பேசுகிற மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது. கிழக்குக் கடல்பகுதியில் உள்ள நாடுகளிலெல்லாம் ஆங்கிலமொழி வணிகமொழியாகவும் மாறிவிட்டது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வருகிற இரண்டு பெரிய ஐரோப்பிய சமூகங்களின் மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது. ஆண்டுக்காண்டு நம் இந்தியப் பேரரசுடன் இச்சமூகங்கள் நெருக்கமாக இணைந்தும் வருகின்றன.

இப்பொழுது நமக்கு முன்னிருக்கிற கேள்வி இதுதான். இம் மொழியைக் கற்பிக்கும் அதிகாரம் நம்மிடையே இருக்கும்போது, நம்முடைய மொழியின் தகுதியோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபொழுது வேறெந்த மொழியிலும் எந்தப் பொருளிலும் புத்தகங்களே இல்லை என்பது அனைவராலும் பொதுவாக ஒப்புக்கொள்ளப் பட்டதாக இருக்கிறபொழுது, ஏன் பிற மொழிகளைக் கற்பிக்க வேண்டும்? ஐரோப்பிய அறிவியலைக் கற்பிக்க வாய்ப்பு இருக்கும் போது, ஏன் அதிலிருந்து மாறுபட்டு மோசமான நிலையில் உள்ள கருத்தமைவுகளை ஏன் கற்பிக்க வேண்டும்? உயரிய தத்துவத்தையும் உண்மையான வரலாற்றையும் நம்மால் உயர்த்திப் பிடிக்க முடியும்போது ஆங்கிலேய குதிரைலாயம் அடிப்பவர் பழிக்கும் மருத்துவ நூல்களை ஏன் அங்கீகரிக்க வேண்டும். ஆங்கிலேய விடுதிகளில் கற்கும் இளம்பெண்களின் நகைப்புக்கு இடமளிக்கும் வானவியல் ஆராய்ச்சி எதற்காக? அவர்களின் வரலாறோ முப்பது அடி உயர அரசனையும் 30,000 ஆண்டு காலம் ஆட்சி செய்யும் மன்னனைப் பற்றியான செய்தியையுமே மிகுதி யாகக் கொண்டிருக்கிறது! புவியியலோ பாற்கடல், வெண்ணெய் கடல்களாலானதாக இருக்கிறது. புனித நூல்களைக் கொண்டதனால் சமஸ்கிருத, அராபிய மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற வாதத்திற்கு இவ்வாறு பதிலாற்றுகிறார்.

“பயன்மிக்க அறிவற்ற வறண்ட மொழி என்று ஒத்துக் கொள்கிறார்கள். பூதாகரமான மூடநம்பிக்கைகளை வளர்க்கும் என்பதற்காக நாம் இவற்றைக் கற்பிக்க வேண்டும். பிழையான வரலாறு, வானியல், மருத்துவம் ஆகியவை பிழையான மதத்துடன் இணைந்திருப்பதால் நாம் கற்பிக்க வேண்டும். இந்தியர்களைக் கிறித்தவ மதத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறவர்களை வெளிப்படையாக ஊக்குவிப்பதை நாம் தவிர்ப்போம்; தவிர்த்து வருவோம் என்று நான் நம்புகிறேன். நாம் இப்படிக் கவனமாக நடக்கும்போது அரச வருவாய் தரும் தொழிலை விட்டுவிட்டு கழுதையைத் தொட்டால் தீட்டுக்கழிப்பது எப்படி என்பதையோ, ஆட்டைக் கொன்ற பாவத்தைத் தொலைக்க வேதம் சொல்லும் பரிகாரம் பற்றியோ படித்துத் தமது இளமையை வீணடிக்குமாறு எப்படித் தர்க்க ரீதியாக, கண்ணியமாகக் கூறமுடியும்?’’

மார்ச்சு 4, 1835 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கில மொழி அலுவலக மொழியானது.

மெக்காலே கூற்றின் மீதோ அல்லது அவரின் சிந்தனைமீதோ இன்றைக்கு வெறுப்பைப் பொழிவது வழக்கமான ஒன்றுதான். உண்மையில் அவருடைய எழுத்துகளை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் அந்தத் தவறைச் செய்வதில்லை. அவரது குறிப்பில் மிகைபடக் கூறியவற்றையும் தவறான புரிதலையும் பிரித்தாய்ந்து வெளியேற்றினோமானால் உள்ளுரம் வாய்ந்த உரத்த உண்மை அடி ஆதாரமாய் விளங்குவதை உணரலாம். மேலும், இந்தியர்களே தங்களுக்கு ஆங்கிலம் கற்பிக்குமாறும் நவீன மேற்கத்திய அறிவியலைக் கற்பிக்குமாறும் பலத்த வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

மேம்போக்காகப் போகிறபோக்கில் தோல்வியாக விவரிக்கப்படும் கொள்கைக்கு மெக்காலே, மெட்கால்ஃப், பெண்டிக் ஆகியோரே பொறுப்பு. இந்திய மக்கள் கொண்டிருக்கிற தேர்ச்சித்திறத்தால் ஆங்கிலத்தின் கடினமான சிக்கலான மொழியை கைக்கொண்டுள்ளனர். உலகம் முழுவதுக்குமான வரலாற்றில் இதற்கு இணையான வெற்றியைக் காணமுடியாது. கடினமாக உழைக்கத் தயாரான அறிவு ஜீவிகளிடையே பண்பாட்டு ரீதியிலான பங்களிப்பை இக்கல்விமுறை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் சில அபத்தங்களையும் முட்டாள்தனங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியர்கள் நமது சிந்தனைகளைச் சிந்திக்கப் பழகிவிட்டனர்; நமது பார்வையில் பார்க்கிறார்கள்; சற்று நடுக்கத்துடனான நுட்பத்துடன் அழகாகவும் துல்லியமாகவும் தம்மை வெளிப்படுத்துகின்றனர். ஆங்கிலேயக் கருத்து வெளிப்பாட்டின் சுதந்திரக் குடிமக்களாக உருவாகியுள்ளனர். சக பிரிட்டிஷ் குடிமக்களாக வாழ்கின்றனர். வருத்தத்தோடும் தற்காலிக உரிமத்தோடும் பிரிட்டிஷ் ஆட்சியைப் பகிர்ந்துகொள்ளும் அந்நியர்களாக அவர்கள் இல்லை.

- மெக்காலே

Pin It