எனக்குத் திசை காட்டக்கூடிய ஒளியை நான் நாடினாலும் அது எனக்கு மறுக்கப்பட்டது

- காலின் மெக்கன்சி

இந்தியாவின் முதல் நில அளவையாளராகப் பணிபுரிந்து மறைந்த கர்னல் காலின் மெக்கென்சி அவர்களின் வாழ்க்கை மற்றும் பணிகள் பற்றிய குறிப்பு. பண்டைய இந்துக்களின் பழக்கவழக்கங்கள், அமைப்புகள், சட்டங்கள், புவியியல், வரலாறு, பழமைசார் தரவுகள் பற்றி விளக்கக்கூடிய கையெழுத்துப்படிகள், சுவடிகள், வரை படங்கள், நாணயங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் முதலியவற்றை உள்ளடக்கிய மெக்கென்சியின் தொகுப்பு குறித்த தகவல்களை கொண்டது. காலின் மெக்கன்சியால் மாண்புமிகு சர் அலெக்சாண்டர் ஜான்சன் அவர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து பெறப்பட்டது

(ஜெர்னல் ஆஃப் தி ராயல் ஏசியாட்டிக் சொஸைட்டி, எண் 1, ப. 333இலிருந்து எடுக்கப்பட்டது)

lady_sculpture_4131828இல் மெக்கென்சி வசம் இருந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளவற்றின் பொருள்பட்டியல் திரு வில்சன் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. அந்த பட்டியலை இங்கிலாந்திலிருப்பவர்கள் எளிதாக பார்வையிட முடியாது. எனவே, அப்பட்டியல் கூறும் விஷயங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள நாட்டமுடையவர் களுக்காக அவர்களுக்கு தெரிந்திராத, தெரிந்திருக்க வாய்ப்பில்லாத, மெக்கென்சியின் தொகுப்பை பற்றி பேசும் இக்கடிதம் பிரசுரிக்கப் படுகிறது.

சிறு வயதிலிருந்தே அவருக்கு பழக்கமான சர் ஜான் அலெக்சாண்டருக்கு மெக்கென்சி 1817இல் இக்கடிதத்தை எழுதினார் - அவருடைய தொகுப்பிற்கான முறையான, உண்மையான பொருள்பட்டியல் தயாரிக்கப்படும் முன்னர் அவர் ஒருகால் இறக்க நேர்ந்தால், இக்கடிதத்தை சர் ஜான் பிரசுரிக்க வேண்டும் என்பதே மெக்கென்சியின் ஏற்பாடு. அவுஸ் ஆஃப் காமன்ஸ் அல்லது மக்கள் மன்றம் அமைத்த குழுவினர் முன் தோன்றி சர் ஜான் வழங்கிய சாட்சியத்தின் போது இக்கடிதம் ஒரு ஆவணமாக சமர்ப்பிக்கப் பட்டது. அச்சமயம், சர் ஜான் அரசாங்கத்தை கேட்டுக் கொண்ட தாவது - மெக்கென்சியின் தொகுப்பு முழுமைப் பெற அரசு ஆவண சய்ய வேண்டும். தரவுகள் பரிசீலிக்கப்பட்டு அத்தொகுப்பிலுள்ள வற்றின் உண்மைத் தன்மை வரலாறு, அறிவியல் என்று துறை வாரியாக நிறுவப்பட வேண்டும்.

கடந்த மே மாதம்1 நடந்த ராயல் ஏசியாட்டிக் சொஸைட்டியின் வருடாந்தர கூட்டத்திலும் இந்த பிரச்சனை பேசப் பட்டதால், சொஸைட்டின் அதிபர் மூலம் கிழக்கு இந்திய கம்பெனி அதிகாரி களுக்கு விண்ணப்பம் ஒன்று அனுப்பப்பட்டது - கம்பெனியாரின் பாதுகாப்பிலுள்ள மெக்கென்சியின் விலைமதிப்பற்ற தொகுப்பு பொதுப் பார்வைக்கு கொண்டு வரப்பட வேண்டும், அது சீராக பயன்படுத்தப்பட வேண்டும் என்று அந்த விண்ணப்பத் தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

என் அன்புக்குரிய சர் அலெக்சாண்டர் அவர்களுக்கு

1. உங்களுக்குத் தெரியும், எனது தேடலுணர்வோ அல்லது பயனுள்ள ஆய்வுகளை மேற்கொள்வதில் எனக்குள்ள நாட்டமோ, என்னமோ ஒன்று என்னை ஆய்வுப் பயணத்தில் ஈடுபடுத்தியுள்ளது. இந்தியாவில் நான் கழித்துள்ள காலத்தின் கணிசமான பகுதியை, இன்று சிலபல ஆண்டுகளாக விரிந்துள்ள காலக் கட்டத்தை, இத்தகைய பயணத்திலேயே செலவழித்து விட்டேன். நான் மேற் கொண்டுள்ள விசாரணைகள் குறித்த சுருக்கமான குறிப்பையாவது வழங்க வேண்டும் என்று வேறு யார் கேட்கிறார்களா இல்லையோ, உங்களுக்கு அப்படி கேட்க உரிமை உண்டு. பொதுவாக இராணுவப் பணியில் இருப்பவர்களின் போக்குக்கும் பழக்கவழக்கங்களுக்கும் முற்றிலும் அந்நியமானதொரு போக்கில் நான் பயணிக்கக் காரணமாக இருந்த எனது உளபாங்கைக் குறித்தும், அத்தகைய பயணத்தை மேற்கொள்ள தேவையான கல்வியோ பயிற்சியோ நான் பெற்றிருக்கவில்லை என்பது குறித்தும் விரிந்து பேச இதுவல்ல தருணம் - என்றாலும், என் பிறந்த நாட்டில் எனக்குள் விதைக்கப் பட்ட கருத்துகளும், புதிய விஷயங்களை கண்டுபிடித்தல், அறிவு சேகரத்தில் ஈடுபடுதல் ஆகியனவற்றின்பால் ஆரம்ப காலத்தில் இருந்தே எனக்கிருந்த ஆசையும் வேட்கையும் நான் இப்பணியைச் செய்ய காரணங்களாக அமைந்தன. இந்த காரணங் களுடன் வேறு சிலவற்றையும் சுட்ட விரும்புகிறேன் - இத்தகைய விசாரணைகளின் பயன்பாடு குறித்த நம்பிக்கையின்மையின் காரணமாக இவை ஏற்படுத்தித்தரும் வாய்ப்புகளைத் தவற விட்டு விடுகிறோம் அல்லது அவற்றில் கவனம் செலுத்தத் தவறுகிறோம். அவ்வாறன்றி இந்த விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டால், அவை ஈன்றளிக்கக் கூடிய தகவல்களையும், விவரங்களையும் திரட்டிப் பாதுகாத்து, பிற்காலத்தில் காத்திரமான, நிலையான கோட்பாடுகளின் அடிப் படையில் அவற்றை முறையாக ஆராய முடியும் என்ற நம்பிக்கை தான் எனது முயற்சிகளுக்கு ஆதாரமாக விளங்கியது.

2. போர், முகாம் வாழ்க்கை, பயணங்கள், கடல்பிரயாணம் என்ற பரபரப்பான சூழ்நிலைமைகளின் மத்தியிலும் கூட மனிதர்களால் அறிவார்த்தமாகவும் பயனுள்ள வகையிலும் சிந்தனையை விருத்தி செய்ய முடியும் என்பதை யாவரும் அறிவார்கள், அங்கீகரிப்பார்கள். சீசர் போல எழுதவோ கேமியான் போல பாடல்கள் இயற்றவோ எல்லா இராணுவ சாகசக்காரர்களாலும் முடியாது தான். என்றாலும், சான்றோர் ஒருவர் கூறியது போல, சூழலுக்கு ஏற்றார் போல மனிதனுடைய அறிவு விரிவடையக்கூடியது2 என்பது எல்லோரா லும் ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மையே. முகாம் வாழ்க்கையிலும் பிரயாணங்களின் போதும் பெறப்படும் ஓய்வு நேரங்களில் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழலாம், அறிவு வளர்ச்சி ஏற்படலாம் - இப்படி நடப்பது ஒன்றும் புதிதல்ல. உங்களுடைய வேண்டு கோளுக்கு இணங்கி நான் வரையும் இந்த குறிப்பு மூலமாக வேறொன்றையும் சாதிக்க விரும்புகிறேன். இந்தியாவில் இருக்கும் பொழுதுகளில், போர் தொடுப்பதில் செலவிடப்படும் நாட்களுக்கு இடையிடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் - இந்தியாவில் சாகசம் புரிய வந்தவர்களின் வாழ்க்கை என்பது நீண்டநெடிய போர் வாழ்க்கை என்பது தவிர வேறு என்ன- எனது அவதானிப்புகளை தொகுத்தால் அவை பிற்காலத்தில் என்னைக் காட்டிலும் ஆற்ற லுடையவர்களால் பயனுள்ள வகைகளில் எடுத்தாளப்படக்கூடும். அது மட்டுமல்லாமல், தத்துவம் பயிலுபவர்களும், அறிவியல்சார் துறையினரும் முக்கியமானதாகக் கருதும் விவரங்களை பதிவு செய்தாற்போலும் இருக்கும்.

3. இந்துக்களின் நடத்தைநெறிகள், இப்பகுதியின் புவியியல், வரலாறு ஆகியன குறித்த விவரங்களையும் ஆவணங்களையும் திரட்டல் என்பதை பொறுத்தவரை 1783 முதல் 1796 வரையிலான காலக்கட்டம், அதாவது இந்தியாவில் நான் கழித்த முதல் 13 ஆண்டுகள் முக்கியமானவை அல்ல - பின்னாட்களில் செய்தாற் போல் அப்போது நான் எதையும் செய்யவில்லை. நான் இங்கிலாந் தில் இருந்து இங்கு வருவதற்கு முன்னரே எனக்கு இது போன்ற பணியில் நாட்டம் இருந்தாலும், அதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், இங்கு வந்து இராணுவத்தில் சேர்ந்த பிறகு, கீழ்நிலை அதிகாரியாக பணிபுரிபவருக்கு இருந்த வரம்பிடப்பட்ட சூழலின் காரணமாகவும், மேலதிகாரிகளை பற்றியோ அவர்கள் வகித்த பொறுப்புகள் பற்றியோ நான் அறிந்திராததாலும், இராணுவப் பணி விதித்த நிர்பந்தத்தி னாலும் எனது கடமைகளை உடனுக்குடன் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்ததாலும், இத்தகைய ஆய்வுப்பணி வெற்றிகரமாக அமைய, ஏன் எத்தகைய பணியாகினும் வெற்றிகரமாக அமைய தேவையான சிதறாத கவனம் எனக்கு அச்சமயம் வாய்க்கவில்லை. இந்திய தீபகற்பத்தின் பல்வேறு மொழிகள், கிளை மொழிகள், பண்புகள் ஆகியவற்றிலிருந்து நான் அவதானிக்கக்கூடியவற்றை திரட்டியெடுக்கவோ அத்தகைய கவனம் அவசியம்.

4. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு பணிமாற்றம் பெற்று போவது, ஒரு இராணுவப் பிரிவிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றப்படுவது, முகாம், முகாமாக மாறிச் செல்வது, அயர்ச்சித் தரும் கடமைகளை தொடர்ந்து செய்வது - இப்படியே வாழ்க்கை இருந்ததால் இந்த நாட்டின் மொழிகளை அக்கறையுடன் பயில இயலவில்லை. இத்தகைய பயிற்சி இல்லாமல் எதையும் செய்யவும் முடியாது. நான் இந்தியாவுக்கு வந்த நாள் தொட்டு நம் அதிகாரத் துக்கு உட்படுத்தப்பட்ட பகுதிகளில் வழங்கும் மொழிகளை பயில்வதற்கான அதிகாரபூர்வமான ஆதரவு என்பதும் அப்போது இருக்கவில்லை - அதற்கான நேரம் உடையவர்களுக்கு மட்டுமே அது சாத்தியப்பட்டது, அதுவும் போர் முடிந்த அந்த ஆனந்தமான தருவாயில்தான் சாத்தியப்பட்டது. வறுமை, பஞ்சம், போர் என்பவற்றிலிருந்து நாடு மீண்டு வந்த தருவாய் அது. மோசமான ஆட்சியதிகாரம் உண்டாக்கும் கொடுமைகளின் கீழ் பல்லாண்டு காலம் சிக்கித் தவித்தப் பின், இந்த தென்னாட்டின் நிர்வாகம் அப்போதுதான் கருணை மிகுந்த பிரிட்டிஷ் ஆட்சியின் தாக்கத்திற்கு உட்பட்டது.

நரசிம்ம அவதாரம், ஜாஜ்பூர் (ஒரிசா), 18155. கிருஷ்ணா ஆற்றுக்கு தெற்கே உள்ள பகுதிகள் தோறும் நான் பயணித்திருந்த அல்லது இராணுவ பணிக்காக சுற்றியலைந்த காலக்கட்டத்தை பரிதவிப் புடனே இன்று திரும்பிப் பார்க்கிறேன். காரணம், இன்று எனக்குத் தெரியும், இந்தப் பகுதிகளில் ஆராய எவ்வளவோ இருக்கின்றன, நாம் விளங்கிக்கொள்ள வேண்டிய பழக்கவழக்கங்கள், நிறுவ னங்கள் என்று நிறைய உள்ளன என்று - ஆனால் நேரமும் தக்க வழிமுறையும் இல்லாமல் போனதால் இதையெல்லாம் அன்று செய்ய முடியவில்லை.

6. 1796இல் நான் சிலோனிலிருந்து திரும்பியதும்தான் எந்தவித திட்டமிடுதலும் இல்லாமல், இன்னும் சொல்லப் போனால் குருட்டாம்போக்கில் இத்தகைய ஆராய்ச்சியை மேற்கொள்ள தேவையான வழிமுறைகள் எனக்கு வசப்பட்டன (இதற்கு முன்பு எனக்குத் திசைக்காட்டக்கூடிய ஒளியை நான் நாடினாலும் அது எனக்கு மறுக்கப்பட்டது) அன்று முதல் நான் தொடர்ந்து இந்த வழிமுறைகளை ஓரளவுக்கு வெற்றிகரமாக கையாண்டு தென் இந்தியாவின் முதுசங்கள், வரலாறு, அமைப்புகள் ஆகியவற்றை மேம்போக்காக அல்லாமல் சற்றே ஆழமாக ஆராய்ந்துள்ளேன் என்று நம்புகிறேன்.

7. இந்தியவாசி ஒருவருடன், ஒரு பிராமணருடன்3 எனக்கு ஏற்பட்ட தொடர்புதான் இந்திய அறிவு மரபுக்கான அறிமுகமாக அமைந்தது. இதுவே அந்த மரபை நோக்கி நான் எடுத்து வைத்த முதல் அடி. எந்த மொழியும் அறிந்திராத நான், இந்த நபரின் பேரறிவாற்றலால் உந்தப்பட்டு, ஊக்கத்துடன் செயல்பட்டேன், இது நாள் வரைக்கும் தேடியதை, விரும்பியதை பெற்றேன். இதைச் செய்து முடிக்க 15 கிளைமொழிகள், 21 வகையிலான வரிவடிவங்கள் ஆகியன குறித்த அறிவு கட்டாய தேவையாக இருந்தது. 1799இல் ஸ்ரீரங்கப்பட்டினம் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது கன்னட மொழியிலிருந்தவற்றை மொழிப்பெயர்க்க நம்மவர்களால் இயலவில்லை. ஆனால் இன்றோ, நவீன மொழிகளிலிருந்து மட்டுமின்றி சாசனங்களில் காணப்படும் பழைய, வழக்கொழிந்துப் போய்விட்ட கன்னட, தமிழ் எழுத்துகளையும் கூட நாம் மொழிப் பெயர்த்துள்ளோம். இவை போக சமஸ்கிருத மொழியி லிருந்தும் மொழிப்பெயர்த்துள்ளோம் - நான் முதன்முதலில் இந்தியா வந்தபோது சமஸ்கிருதம் தொடர்பான தகவல்களுமேகூட மிக அரிதாகவே கிடைத்தன. ஆனால் இன்று நம்மிடையே இல்லாத அந்த பிராமணர் போரியாவின் ஆற்றலும் அறிவும் இந்து அறிவு மரபுகளை நாம் கண்டடைய புது பாதைகளை வகுத்தளித்தன. அவர் நம்முடன் கொஞ்ச காலமே இருந்தாலும் அவருடைய பங்காளிகளும் மாணவர்களும் அவரை முன்உதாரணமாகக் கொண்டு, அவர் வகுத்த விதிகளை பின்பற்றி ஒரு அமைப்பாக சிறப்பாகச் செயல்பட்டனர். இப்படி விதிவசமாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக் கப்பட்ட அவருடைய அணுகுமுறையை கொண்டு நமது கட்டுப் பாட்டுக்குள் உள்ள மாநிலங்கள் அனைத்தையும் படிப்படியாக நம்மால் பகுத்தாய்ந்தறிய முடியும். இந்த ஆய்வில் சம்பந்தப் பட்டுள்ள தனிநபர்கள் சிலரது கோரிக்கைகளையும் அவர்களில் சிலருக்கு வாய்த்துள்ள சிறப்பு தகுதிகளையும் உள்ளடக்கிய பிரத்யேக மகஜர் ஒன்று அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டள்ளது.

8. எனது முதல் 13 ஆண்டுகால வாழ்க்கையில் ஒரு இராணுவ அதிகாரி என்ற முறையில் நான் பங்கேற்ற போர்கள், தாக்குதல்கள் குறித்து நான் எழுதி வைத்திருந்த குறிப்புகள், டைரிகள் தவிர எழுத்து என்று காட்ட என்னிடம் ஏதுமில்லை. 1783இல் போர் முடிந்த காலத்தில் நான் கோயம்பத்தூரிலும் திண்டுக்கல்லிலும் இருந்தேன்.

பிறகு சென்னை, நெல்லூர், குண்ட்டூர் என்று பல இடங்களில் அலுவல்கள் பார்க்க நேர்ந்தது. 1790 முதல் 1792 வரை நீடித்த போர்க்காலத்தில் மைசூரிலும், போருக்கு பிறகு 1792இல் ஐதராபாத் நிஜாமுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட பகுதிகளிலும் காலங் கழித்தேன். இச்சமயத்தில்தான் முதல்முறையாக தக்காணத்தின் புவியியல் விவரங்களை கறாரான அணுமுறையினூடாக பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அதைத் தொடர்ந்து செய்து முடிக்க முடியவில்லை - பல தடைகளை நான் சந்தித்தேன், ஏன் செய்து முடிக்க இயலாதபடிக்கு தடுக்கப்பட்டேன் (அவற்றை குறித்தெல்லாம் இங்கு பேச வேண்டிய அவசியமில்லை). சிலோனுக்கு நான் சென்ற விவரம், நான் பங்கேற்ற இராணுவ நடவடிக்கைகள் ஆகியன பற்றிய செய்திகளை நான் இந்தியா திரும்பியதும் எழுதத்தொடங்கிய தக்காணத் தின் புவியியில் பற்றிய குறிப்புக்கான அறிமுகமாகக் கொள்ளலாம்.

9. மைசூரில் நாங்கள் போரிட்டுக் கொண்டிருந்த போதுதான் நான் அதுவரைக்கும் தன்முனைப்புடன் செய்து வந்த ஆய்வுப் பணிகள் உடன் போரிட்ட சிலரது கவனத்தை ஈர்த்தன. எனது ஆற்றல், ஆய்வில் எனக் கிருந்த வெறி ஆகியனவற்றை இவர்கள் வெகுவாக புகழ்ந்திருக்க வேண்டும். ஏனெனில், 1792இல், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் மீண்டும் அமைதி நிலைநிறுத்தப் பட்ட பிறகு, நான் மாண்புமிகு கார்ன்வாலீஸ் துரை அவர்களால் நிஜாமின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டேன். அங்கு முதல்முதலாக ஒரு சிறிய குழுவை அமைத்திருந் தார்கள். அப்பகுதியின் புவியியல் அமைப்பு, அண்டை பகுதிகளின் எல்லைக் கோடுகள், புதிதாக தோன்றிய மாநிலங்கள், அரசுகள் ஆகியவற்றின் எல்லைகள், வடிவங்கள் என்று அனைத்தையும் பற்றிய விவரங்களை திரட்டும் பணியை அந்த குழுவினரோடு இணைந்து நானும் செய்ய வேண்டும் என்பதற்காக அனுப்பப்பட்டிருந்தேன்.

10.1792 முதல் 1799 வரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணியை செய்து முடிப்பதற்குள் சந்திக்க வேண்டியிருந்த பிரச்சனைகள், விபத்துகள், தடைகள் ஆகியவற்றை பட்டியலிடுவது அயர்ச்சியையே ஏற்படுத்தும் - சிக்கனம் என்ற பெயரில் இவ் வேலைக்கென போதுமான பணம் ஒதுக்கப்படாதது (அவ்வாறு செய்தது நியாயமானதாகவே இருந்தாலும்), இத்தகைய புதிய முயற்சிகள் எதிர்கொண்ட சந்தேகக் கேள்விகள், உபத்திரவங்கள், இந்த நாட்டின் தட்பவெட்ப நிலையால் ஏற்படும் பிரச்சனைகள், அரசாங்கத்தின் போக்கு, சம்பந்தப்பட்டவர்களின் மனச்சாய்வுகள், ஆசாபாசங்கள், ஒன்றோடு ஒன்று முரண்படும் பலதரப்புகளைச் சார்ந்தவர்களின் நலங்கள் என்று விரிந்த சிக்கலகளை எதிர்கொள்வது என்பது சிரமமாக இருந்ததோடு, அவற்றை இன்று நினைவு கூர்வதும்கூட வேதனையளிப்பதாக உள்ளது. 

11. 1796இல் நிஜாமின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் பொதுவான வரைப்படம் முதன்முதலாக தயாரிக்கப்பட்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. விவரமறிந்த பலரிடமிருந்து பல்வேறு விதமான ஆவணங்களும், பொருட்களும் பெறப்பட்டு, அவை சுட்டிய செய்திகளும் தொகுக்கப்பட்டன. அச்செய்திகளின் சாரத்தை உள்ளடக்கிய நினைவுக்குறிப்பு ஒன்றும் வரைப்படத்துடன் இணைக் கப்பட்டது. நாங்கள் வேலை செய்ததை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்யவில்லை. மாறாக, இத்தகைய ஆய்வு களை பிழையின்றி செய்ய உதவக்கூடிய, பின்னாட்களில் நாம் மேற்கொள்ளக்கூடிய ஆய்வுகளுக்கான மாதிரியாகவே இத்தகைய குறிப்பைத் தயாரித்தோம். அதே சமயம், குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய பார்வையாகவும் இது அமைந்தது. 1798, 1799 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் சில ஆய்வுகள் செய்யப்பட்டதன் பின்னணி யில் இந்த குறிப்பில் இடம் பெற்றிருந்த இணைப்புகளின் உள்ளடக்கம் திருத்தப்பட்டது. தொடர்ந்து இதே அணுகுமுறையை பின்பற்றி வேலையைச் செய்ய ஊக்கமும் அளிக்கப்பட்டது. ஆனால் பயனுள்ள ஆதரவு அளிக்கப்பட்டதாக சொல்ல முடியாது. 1806இல் தக்காணத்தை பற்றிய சுற்றாய்வுப் பணிகளிலிருந்து நான் விலக்கப் பட்டதும் இந்த வரைபடத் தயாரிப்பு வேலையும் நின்று போனது. ஆனால் அப்பணி கைவிடப்பட்டதாக கொள்ள வேண்டிய தில்லை - பழைய பாணியில் விரிவாகச் செய்ய முடியாவிட்டாலும், ஏற்கனவே தொகுக்கப்பட்ட விவரங்கள் மீளாய்வு செய்யப்பட்டு, ஓரளவுக் கேனும் இப்பணி செய்து முடிக்கப்படும் என்று நம்பலாம்.

12.1798இல் தக்காணத்தின் புவியியல் தொடர்பான ஆய்வை தொடர நான் மூன்றாவது முறையாக ஐதராபாத் சென்ற போது அந்த பகுதி முழுவதையும் ஆராய வழிமுறைகள் வகுக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் பொதுவான அணுகுமுறையும் வரையறுக்கப் பட்டது. 1799க்கு முன் தொடர்ந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ மான அறிக்கையில் (தாஃப்தர்கள் என்று சொல்லப்படும் அறிக்கை களில்) இடம் பெற்றிருந்த தக்காணத்தின் பல்வேறு பிரதேசங்கள், பிரிவுகள் பற்றிய நுணுக்கமான தகவல்கள் எங்களுக்கு உதவியாய் இருந்தன. பாரசீக மொழியில் இருந்த அந்த அறிக்கையும் வேறு சில கையெழுத்துப் படிகளும் மொழிப்பெயர்க்கப்பட்டன. அவற்றின் அடிப்படையிலேயே எமது ஆய்வும், நாங்கள் வரையவிருந்த குறிப்பில் இடம் பெறவேண்டிய விவரணைகளும் அமைய வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. அது வரைக்கும் தக்காணம் என்பது அறியப்படாத பகுதியாகவே இருந்தது. அது குறித்து உண்மையான தகவல்கள் ஏதும் இருக்கவில்லை - புசி துரையின் படையணிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த செய்தி களிலும், டாவெர்ன்னியர், தெவன்னோ ஆகியோரின் பயணக் குறிப்புகளிலும் காணப்படும் விவரங்களில் தெளிவில்லை, தகவல்கள் முழுமையாக இல்லாமல் துண்டுதுக்காணியாக உள்ளன. நவீன சிந்தனையாளர்கள் எதிர்பார்க்கும் தீர்க்கமான கறாரான தன்மை இந்த எழுத்துகளில் இல்லை.4

13. 1799இல் திப்பு சுல்தானுடன் நாம் போரிட தொடங்கியதும், இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றே தோன்றியது. ஆனால் அச்சமயம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனுள்ளவை யாக இருந்தன - இராணுவரீதியாகவும் சரி (இவை குறித்து அதிகார பூர்வமான அறிக்கைகளில் நிறையச் செய்திகளைப் பெறலாம்), இனி நாம் செய்து பயன்பெற வேண்டிய பணிகளுக்கான வெள்ளோட்டம் என்ற வகையிலும் சரி, அம்முயற்சிகள் பயனுள்ள வையாக இருந்தன. இனி வரும் நாட்களில் அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு தக்காணத்தின் வரலாறு, முதுசங்கள், அப்பகுதி தொடர் பான புள்ளிவிவரங்கள் என பலவற்றை முறையாக நாம் அறியலாம்.

14. 1799 இல் மைசூரின் வீழ்ச்சிக்குப் பிறகு நடந்த ஏற்பாடுகளில் (போருக்குட்பட்ட) பகுதிகளை (நம் கூட்டாளிகளுக்குப்) பிரித்துக் கொடுக்கும் பணியில் நான் ஈடுபடுத்தப்பட்டேன் - நிலப்பிரிவினைக் குப் பொறுப்பேற்றிருந்த ஆணையர்களுக்கு தேவையான புவியியல்ரீதியான விவரங்களை அளித்து, குறிப்பிட்ட பகுதிகளின் எல்லைகளை நிர்ணயிக்கும் பணியில் உதவ ஈடுபடுத்தப்பட்டேன். நான் மதராஸ் திரும்பியதும் கவர்னர்-ஜெனரலாக இருந்த மார்நிங்டன் பிரபு இந்தப் பகுதிகளைப் பற்றி மேலும் முழுமையான தகவல்கள் அரசாங்கத்துக்கு கட்டாயம் தேவைப்படுகிறது என்று - மிகச் சரியாக - எண்ணியதால் நான் கேட்காமலேயே, என்னை தனிப்பட்ட முறையில் அறியாதவராய் இருந்தாலும், மைசூர் பகுதிகளை சுற்றாய்வு செய்ய என்னை நியமித்தார். எனக்கு உதவியாக இருக்க குழு ஒன்றையும் அமர்த் தினார். இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை யானது குறைந்தபட்ச வேலைக்கானதாகவே இருந்தது. ஆனால் வேலையோ மிக விரிவாகச் செய்யப்பட வேண்டிய வேலை - அதுவும் முன்பின் தெரியாத பகுதியில் இதைச் செய்ய வேண்டும். (போருக்குப் பிறகு) பிரித்துத் தரப்பட்ட நிலப் பகுதிகள் எங்கே உள்ளன என்பதும்கூடஇந்த சுற்றாய்வைத் தொடங்கியதும் தான் தெரிய வந்தது5 - இது நமக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதுடன் அச் சங்கடம் உருவாக்கிய விநோதமான சூழ்நிலையில்தான் சுற்றாய்வு மேற்கொள்ளப்பட்டது.

15. என் பணி குறித்து நான் முதன்முதலில் கொண்டிருந்த கருத்துகளின் அடிப்படையில் வேலைத்திட்டத்தை அமைத்து செயல்படுத்த இதுதான் தக்க தருணம் என்று எனக்கு தோன்றியது - நான் சுற்றாய்வு செய்ய வேண்டிய பகுதியின் வரலாறு, புவியியல், அது தொடர்பான புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை கண்டறிவதற் கான, இவற்றை உள்ளடக்கிய வேலைத்திட்டத்தை தயாரித்தேன். அரசாங்கம் அதை ஏற்றுக் கொண்டது. எனக்கு உதவியாக மூன்று நபர்களும் இயற்கையியலாளர்6 ஒருவரும் நியமிக்கப்பட்டனர். அறிவார்ந்த கருத்தாக்கங்களின் அடிப்படையில் வரையப்பட்ட இந்த ஏற்பாட்டை இங்கிலாந்தில் உள்ள தலைமை ஏற்க மறுத்ததுடன், அவசரஅவசரமாகவும் மிகவும் இறுக்கமான ஆணைகளை பிறப் பித்தும் அதை குலைக்கப் பார்த்தது. 1801இல் இங்கிலாந்திலிருந்து இது குறித்து செய்திகள் வந்த சமயத்தில் நான் மைசூரின் வடக்கு, கிழக்கு பகுதிகளை சுற்றாய்வு செய்து முடித்திருந்தேன் - எனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் இதை செய்தேன்.

16. ஆலோசித்திருந்தபடி எல்லாவற்றையும் செய்து முடித்தோமா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியாது. எதிர்மறையான சூழ்நிலைமைகளால் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியை தோற்றே விட்டோம். சுற்றாய்வு செய்கையில் மைசூரின் இயற்கை வரலாறும் ஆராயப்படவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன் - ஆனால் அவ்வாறான முறையில் ஆய்வு அமையவில்லை. எனக்கென கொடுக்கப்பட்ட ஊக்கத்தொகை சொற்பமானதே. அதிலிருந்துதான் எனக்கான சம்பளம், தொடர்ந்து ஏற்பட்ட எதிர்பாராத செலவு களுக்கான பணம் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டி யிருந்தது. இதனால் நான் படாதபாடு பட்டேன். அதே சமயம், எனக்கு உதவியாக ஏற்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பு கலைக்கப்பட்டது - கம்பெனி அதிகாரிகளின் மன்றம் விடுத்த ஆணையை ஏற்று அரசாங்கம் வேறு சில துறைகளுக்கு பாரபட்சமான வகையில் நிதி ஒதுக்கியது.7 இந்த நடவடிக்கைகளால் பொது அபிப்பிராயம் பாதிக்கப்பட்டது, ஏன் என்னுடன் வேலைப் பார்த்தவர்களும் பாதிக்கப்பட்டனர். வேலையில் சுணக்கம் ஏற்பட்டது, ஏற்ற பணியைச் செய்து முடிக்க இயலாதபடிக்கு மனவிரக்தி ஏற்பட்டது. ஆனாலும் கூட தொடக்ககால ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்திருந்ததாலும், இவற்றின் பயன்பாட்டில் நம்பிக்கை யுடையவனாய் நான் இருந்ததாலும், 1807 வரை எப்படியோ தொடர்ந்து வேலை செய்தேன்.

மைசூர் மாகாணத்தின் புவியியலைமிக நேர்த்தியாக ஆராய்ச்சி செய்திருந்தோம் - 40,000 சதுர மைல்களை உள்ளடக்கிய அதன் பரப்பளவின் கடைசி அலகு உட்பட எல்லா வற்றையும் மிக நுணுக்கமான ஆய்வுக்கு உட்படுத்தினோம். மைசூரின் வரலாறு, அந்த மாகாணத்துக்குரிய புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை விளக்க போதுமான எடுத்துக்காட்டுகளை தருவித் திருந்தோம். இந்த தீபகற்பத்தை முழுதாக ஆய்வு செய்வதற்கான வலுவான அடிப்படையை அந்த ஆய்வு உருவாக்கியிருந்ததால் அன்று வகுக்கப்பட்ட வேலைத்திட்டம் இன்றும் அப்படியே பின்பற் றப்படுகிறது. (நாங்கள் செய்து முடித்தப் பணி குறித்து கம்பெனி அதிகாரிகளின் கருத்தை அறிய பின்னிணைப்பாக தரப்பட்டுள்ள “பி” என்று குறிக்கப்பட்டுள்ள கடிதத்தைக் காண்க).

17. இந்த சுற்றாய்வில் கிடைக்கப்பெற்ற அனைத்தையும் ஏழு தொகுதிகளுக்குள் அடக்கி, அவற்றுடன் பொதுவான வரைபடங் களையும், குறிப்பிட்ட மாகாணங்களுக்கான வரைபடங் களையும் இணைத்து இங்கிலாந்துக்கு அனுப்பினோம். இவைபோக, தென் பகுதிகளின் வரலாற்றை எழுத தேவையான மேலும் பல தரவுகள் எம்மிடம் நிறைய எஞ்சியுள்ளன. இவை மைசூர் சுற்றாய்வினூடாக பெறப்பட்ட போதிலும், அந்த ஆய்வுடன் பொருந்திப் போகக்கூடிய, அத்துடன் நேரடியான தொடர்புடைய தகவல்களல்ல. இவற்றை பற்றிய குறிப்புகள் இணைப்புகளாக தரப்பட்டுள்ளன.

18. இந்த விசாரணைகளை மேற்கொள்வதில் பல தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும், இவற்றின் விளைவாக தென் பகுதிகளின் - விந்திய மலைக்கு தெற்கே உள்ள பகுதிகளின் - வரலாறு குறித்த செய்திகள் நமக்கு முதன்முறையாக கிடைத்துள்ளன என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த விசாரணை முடிந்த பிறகும் நமக்கு கிடைத்துள்ள செய்திகளைக் கொண்டு இந்த பகுதி வரலாற்றை இன்னமும் விரிவாக புரிந்து கொள்ள முடியும். விந்திய மலைக்கு வடக்கே கிட்டியுள்ள செய்திகள் கூறும் கருத்துகளையும் இவை உறுதிபடுத்தியுள்ளன. கைவசமுள்ள சுவாரசியமான விஷயங்களில் முக்கியமானவை இவையாகும் -

- சமண மதம் பற்றிய கண்டுபிடிப்புகள், குறிப்பாக பௌத்தத் திலிருந்து அது வேறுபட்டிருக்கும் நிலைகள் குறித்த தகவல்கள்

- இந்த நாட்டின் பல்வேறு சமயங்கள், அவற்றின் உட்பிரிவுகள் குறித்த செய்திகள் - அதாவது, லிங்காயத்து, சைவம், பண்டார மடங்கள் என்பன பற்றிய செய்திகள் கற்களில் பொறிக்கப்பட்ட சாசனங்கள், செப்பேடுகள், இவற்றின் தன்மை, பயன்பாடு, இந்து நிலவுரிமைப் பாத்தியம் குறித்து இவை சொல்லும் தகவல்கள் (1800 முதல் சேகரிக்கப்பட்ட சாசனங்களின் எண்ணிக்கை 3000. இவற்றை இதுவரை யாரும் முக்கியமானவையாகக் கருதியதில்லை)

- தில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை காணப்படும் வீரக்கற்கள், மாஸ்திகற்கள், கல்லினாலான நினைவிடங்கள், இவற்றின் வடிவங்கள், வார்ப்புகள் - இந்த நாட்டின் ஆதிகுடிகளின், ஏன் மேற்கத்திய தேசங்களின் ஆதிகுடிகளின் பழக்கவழக்கங்களை விளக்குவனவாக இவையுள்ளன.

- ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் காணப்படும் இறந்தவர்களின் துயிலிடங்கள் போலவே இங்கும் காணப்படும் புதையிடங்கள், நினைவுச் சின்னங்கள் - இவற்றை உள்ளவாறே வரைந்துள்ளோம். இவை போக, வேறு சில முதுசங்கள் குறித்த செய்திகளும் உள்ளன.

19. மைசூர் சுற்றாய்வை செய்து முடித்த பிறகுதான், அதனடிப் படையில் திரட்டப்பட்ட செய்திகள் - பல்வேறு சந்தர்ப்பங்களில் - கவனத்துக்குரியவையாகின. மைசூரில் எனக்கென்று பதவியும் துறையும் ஏற்படுத்தப்பட்டதுடன், கம்பெனி அதிகாரிகளால் அந்த முடிவு உறுதி செய்யப்பட்டது. சுற்றாய்வில் பெறப்பட்ட தகவல் களை சீரணித்து, அவற்றை நிதானமாக ஆராய்வதற்கென்றே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் 1810இல் இராணுவ அமைப்பு களின் சில பிரிவுகள் சீர்த்திருத்தப்பட்ட போது, எனது துறை மீளமைக்கப்பட்டது. இதனால் எனது பதவி பறிபோனது. இழப் பீடாகவோ, நான் பெற்று வந்த ஊதியத்துக்கு ஈடாகவோ எனக்கு ஏதும் தரப்படவில்லை. கம்பெனி அதிகாரிகள் நான் செய்து முடித்திருந்த வேலைகளை பாராட்டியிருந்தனர். நான் எனது ஆய்வுகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று ஆணைகள் பிறப்பித்து எனக்கு ஊக்கமளித்தனர். நானும் அவ்வாறே வேலை களை மேற்கொண்டு பாதிக்கும் மேல் முடித்திருந்தேன். ஆனால் தற்சமயம் இந்த மாகா£ணத்தில் நிலவும் நிலைமைகளைப் பார்த்தால் மீதி வேலைகளை எனக்குத் திருப்தியளிக்கும் வகையிலும், கம்பெனி அதிகாரிகளின் மன்றம் நினைத்தாற் போலும் செய்து முடிக்க முடியும் என்று தோன்றவில்லை.

20. கடந்த ஐந்த ஆண்டுகளாக மதராஸ் மாகாணத்தில் மேற் கொள்ளப்பட்ட சுற்றாய்வுகளுக்கான செலவு என்பது 1810இல் திடீரென்று உயர்ந்ததாலும், தெளிவற்ற வகையிலும், ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதபடிக்கும் இந்த ஆய்வுகள் செய்யப்பட்டு வந்ததாலும், இவற்றுக்கு ஆதாரமாக வலுவான சீரான முறைமை ஏதும் இல்லாததாலும், மதராஸ் அரசாங்கம் மற்ற மாகாணங்களில் உள்ளது போல இங்கும் சுற்றாய்வுப் பணிகளை மேற்பார்வை யிடுவதற்கென்று சுற்றாய்வுத் துறையன்றை ஏற்படுத்த முடிவு செய்தது. நான் அந்தத் துறைக்கான அதிபராக நியமிக்கக்பட்டேன். இதற்கு முன் இது குறித்து யாரும் என்னுடன் தொடர்பு கொள்ள வில்லை.

கடந்த 14 ஆண்டுகளாக நான் செய்து வந்துள்ள பணிகள் தான் என்னை அதிபர் பதவிக்கு தகுதியுடையவனாய் ஆக்கின என்றாலும், அத்தகைய பணிகளை செய்யக்கூடிய தகுதி எனக்குண்டு என்பதை இதுநாள் வரை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரிய வில்லை. இது போன்ற விஷயங்களை ஐரோப்பாவில் இருப்பவர்கள் முக்கியமானவையாக கருதமாட்டார்கள்8 என்பதை அறிந்துதான், மைசூர் சுற்றாய்வை செய்து முடித்த பிறகு, ஆரம்ப நாட்களில் யோசித்து வைத்திருந்தது போல இனி நம்மால் வேலைகளை செய்ய முடியாது என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன் - அத்தகைய வேலைகளை செய்ய தேவையான வயதும் உடல் வளமும் அச்சமயம் நான் பெற்றிருந்த போதிலும். இச்சமயம் இப்பதவியை நான் ஏற்று கொண்டதற்கு காரணம், இந்த மாதிரியான வேலை என்பது கிழக்கு இந்திய கம்பெனியாருக்கு பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கும், எனவே நாம் அதைச் செய்ய உதவ வேண்டும் என்று நான் கருதுவதால்தான்.

21. இனி வருங்காலத்தில் இத்தகைய வேலைகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும், நடைபெற்றுவரும் பல்வேறு ஆய்வுப்பணிகள் ஒரு பொதுவான ஆய்வு முறைமைக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்பதற்காகவும், பல்லாண்டுகால உழைப்பினூடாக பெறப்பட்டுள்ள வேறு வேறான தரவுகளை பாதுகாக்கவும் அவற்றின் சாரத்தை வரையறுக்கவும், இவை அனைத்தையும் மிகக் குறைந்த செலவில் செய்வதற்காகவும்9 நான் இந்தத் துறைக்கு அதிபராக நியமிக்கப்பட்டேன். ஆனால், அது வரை திரட்டப்பட்டிருந்த தரவுகளை எனது அலுவலகத்தில் பத்திரப்படுத்தி வைக்கவும் அவற்றை எப்படி முறையாக கையாள வேண்டும் என்பதற்கான திட்டம் ஒன்றை வகுக்கவும்தான் எனக்கு நேரம் இருந்தது - காரணம், சாவகத் தீவில் நமது படைகள் மேற்கொள்ள விருந்த இராணுவ நடவடிக்கை ஒன்றில் உதவி புரிய கட்டாயம் நான் செல்ல வேண்டும் என்று இங்கும் அங்குமுள்ள அரசுகள் முடிவு செய்தன. எனவே நான் எனது இராணுவ கடமைகளையாற்ற அங்கு செல்ல வேண்டியிருந்தது. எமது மேலதிகாரிகள் இட்ட கட்டளை களை உடனே ஏற்று நான் அங்கு சென்று பணியாற்றியது குறித்த அறிக்கைகளை இந்திய அரசாங்கத்திடம் கொடுத்துள்ளபடியால், தேவைப்பட்டால், எனது நண்பர்கள் அவற்றை கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

22. 1810இல் சுற்றாய்வு துறைக்கென வரையப்பட்ட திட்டத் திற்கான நிதி என்பது அதிகமில்லை - இதற்கு முன் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத பணிகளுக்காகவும் சீராக செய்யப்படாத வேலை களுக்காகவும் செலவிடப்பட்ட தொகையைக் காட்டிலும் மிகக் குறைவான செலவுகளே செய்யப்பட்டன. அதே சமயம், மேற் சொன்ன திட்டமானது, புவியியல் ரீதியாகவும், இராணுவத் தேவை களுக்காகவும் சுற்றாய்வுகள் செய்யப்படுவதை குறிக்கோள்களாகக் கொண்டிருந்ததுடன், புவியியல் ரீதியான ஆய்வில் பெறப்பட்ட தரவுகளை ஒரு முறைமைக்குள் வைத்து விளக்குவதையும், வரலாற்று ரீதியான தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் தொகுப் பதையும், முக்கிய இலக்குகளாக கொண்டிருந்தது - இந்த தகவல் களையும் தரவுகளையும் சாவகம் செல்வதற்கு முன்னால் நான் ஒரு இடத்தில் - அலுவலகத்தில் - சேகரித்து வைத்தேன்.

மைசூர் பகுதியை பற்றிய புவியியல் சார்ந்த, புள்ளிவிவரங்களை உள்ளடக்கிய சுற்றாய்வு குறித்த விளக்கம், அந்த ஆய்வை ஆதாரமாகக் கொண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்ட வரைபடங்கள் - 1 முதல் 24 மைல்கள் என்ற அடிப்படையில் வெவ்வேறு அளவைகளில் உருவாக்கப்பட்ட வரைபடங்கள் - விளக்கப்படங்கள் ஆகியனவும் அந்த அலுவலகத்தில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றாய்வுத் துறை உருவாக்கப்பட்டதும் அதனிடம் வழங்கப்பட்ட முதல் ஆவணங்கள் இந்த மைசூர் சுற்றாய்வு தொடர்பானவைதான் - 1811இன் தொடக்கத்தில் இத்துறையில் நிறுவப்பட்ட விசேஷ ஆய்வுக் குழுவின் கண்காணிப்பின்கீழ் இது நடந்தது.

23. மைசூர் சுற்றாய்வின் விரிவான அறிக்கைகள் புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள அரசு ஆவணத்துறையிடம் உள்ளன - நகல்களே இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டன. அந்த வேலை முடிவடைந்த வுடன் அது குறித்து இங்கிலாந்திலுள்ள அதிகாரிகள் வரைந்த குறிப்பின் பகுதி “பி” என்று சுட்டப்படுள்ள கடிதத்தில் இடம் பெற் றுள்ளது. மைசூர் சுற்றாய்வு 1809இல் முடிந்தது. அதில் பணியாற்றிய இந்திய சுற்றாய்வாளர்களை, நான் விசேஷ அனுமதி பெற்று, நிஜாமுக்குத் தரப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்தேன் - அந்தப் பகுதிகளை பற்றிய சுற்றாய்வும் செய்து முடிக்கப்பட்டது. அதாவது, கொஞ்ச காலத்துக்கு முன்பாக, பரந்தும் விரிந்தும் கிடந்த, முன்னாள் மைசூர் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் அனைத்தையும் சுற்றாய்வு செய்து முடித்தாகி விட்டது10.

40,000 சதுர மைல்களை உள்ளடக்கிய நிலப்பரப்பு முதலில் ஆய்வு செய்யப்பட்டது. இத்துடன் பிறகு ஆய்வு செய்யப்பட்ட 30, 000 சதுர மைல்களையும் சேர்த்தால் மொத்தம் 70,000 சதுர மைல்களுக்கு உட்பட்ட பெரிய நிலப்பகுதி நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவரும். இந்த இரண்டாம் ஆய்வு நாங்களாக, தன்முனைப் புடன் மேற்கொண்டதாகும் - இதற்கென்று விசேஷ தொகையோ ஊக்க ஊதியமோ ஒதுக்கப்படவில்லை. இந்த பணிகள் யாவும் சுற்றாய்வுத் துறையின்கீழ் செய்யப்பட வேண்டியவையாக அடையாளப்படுத்தப்பட்ட பிறகுதான் இவற்றுக்காக தனி வரவுசெலவு திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இப்போது இந்த (மாகாண) துறையும் கலைக்கப்பட்டு எல்லாமே இந்திய சுற்றாய்வுத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

24. இந்தப் பணிகளைச் செய்து கொண்டிருக்கையிலேயே, புனித ஜார்ஜ் கோட்டையின் ஆளுகைக்குட்பட்ட மாகாணப் பகுதியிலுள்ள எல்லா மாவட்டங்களுக்கும் என்னால் தேர்தெடுக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட உள்ளூர்வாசிகளை அனுப்பினேன் - வரலாற்று செய்திகள், தரவுகள், ஆவணங்கள், புள்ளி விவரங்கள் என்று அனைத்தையும் அவர்கள் திரட்டத் தொடங்கினார்கள். இவர்கள் செய்த பணிகளுக்கு மைசூர் சுற்றாய்வு தந்த படிப்பினையானது ஆதாரமாக விளங்கியது. இந்த வேலைக்காக நான் அரசாங்கத்திடம் எந்த தொகையையும் கேட்டுப் பெறவில்லை - தபால் தலைகளுக் கான கட்டணமும் எழுத்தர்கள் சிலரை பயன்படுத்திக் கொண்டதற் கான செலவைத் தவிர. மற்ற எல்லா செலவுகளுக்கு மான பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன். இது போல மலபார், தென் பிராந்தியங்கள், சர்கார் பிராந்தியங்கள், தக்காணம் ஆகிய பகுதிகளில் நேர்ந்த அய்வு தொடர்பான செலவுகளையும் நானே பார்த்துக் கொண்டேன். நான் சாவகத்தில் இருந்த காலக் கட்டத்தில் இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த அறிக்கைகளும் இணைக்கப்பட் டுள்ளன. தென் இந்தியாவின் பண்டைய வரலாறு, தற்கால நிலைமைகள் பற்றிய ஆய்வுகளின் தன்மை, பரப்பு அகியன குறித்து மேலும் விரிவாக விளக்கக் கூடிய ஆவணங்களை இணைக்க முடியாமைக்கு வருந்துகிறேன். இவை கல்கத்தாவிற்கு அனுப்பப் பட்டுள்ளன - எனக்காக அவை அந்த மாகாணத்தில் காத்திருக்கும்.

25. வரலாற்றுரீதியான ஆய்வுகளின் தொடக்கம், விரிவாக்கம் ஆகியவற்றை பற்றி நுணுக்கமான தனி ஆய்வறிக்கை தேவை- சாவகத்தின் வரலாறு குறித்த அத்தகைய அறிக்கை ஒன்று இணைக் கப்பட்டுள்ளது (எண் - “ஏ”). உள்ளூர் சந்தர்ப்ப சூழ்நிலைமைகளை கருதி குறிப்பிட்ட வழிமுறைகளை மட்டுமே கையாண்டு குறுகிய காலக் கட்டத்தில் செய்த முடிக்கப்பட்ட ஆய்வு இது. என்றாலும் அங்குள்ள அரசும், பிரிட்டிஷ் இந்தியாவின் இரண்டு ஆளுனர்களும் இந்த ஆய்வை செய்யத் தேவையான ஊக்கத்தையும் பாதுகாப்பை யும் வழங்கினர். பிற ஆய்வுகளுக்கு இவை வாய்க்கவில்லை. இந்த ஆய்வினால் அரசாங்கத்துக்கு பெரிய செலவும் ஏற்படவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொருட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இடையே கிடைக்கும் ஒய்வு நேரங்களில் இத்தகைய ஆய்வுகளுக்கு ஆதரவளித் தால் தக்க பயன் பெறலாம் என்பது கண்கூடு - இவ்வகையில் சாவகத்தில் கண்ட ஆய்வு வெற்றிகள் ஊக்கமும் நம்பிக்கையும் அளிப்பவையாக உள்ளன.

26. நான் சாவகத்திலிருந்து மதராஸ் மாகாணத்துக்கு திரும்பி வந்த போது, மாகாணத்தின் சுற்றாய்வுத் துறையை இழுத்து மூடச் சொல்லி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்ததை அறிந்தேன். இத்துறையின் செயல்பாடுகளை மதிப்பிடும் பணி 1811இல் தொடங்கப்பட்டு, பிறகு கிடப்பில் போடப்பட்டது. நான் சாவகத்திலிருந்து திரும்பியதும் அந்த வேலையை செய்து முடிக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அதற்குள் துறையே இல்லாமல் போனதுடன் எனக்கு பெருமை தரும் வகையில் இந்தியா முழுவதற்குமான சுற்றாய்வுத் துறை பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டிருந்தபடியால், புதிய ஏற்பாட்டின்படி அந்தப் பொறுப்பை ஏற்க நான் கல்கத்தா, அதாவது வில்லியம் கோட்டைக்கு, சென்று அங்கேயே குடியிருக்க வேண்டி யிருந்தது. மாண்புமிகு கம்பெனியார் என்னை மதித்து, பெருமைப் படுத்தும் வகையில் வழங்கியுள்ள இந்த பதவி கோரும் நியாயமான கடமைகளை நிறைவேற்றுவதில் தற்சமயம் கவனம் செலுத்தி வருகிறேன் - நான் இது போன்ற முயற்சிகளை இனியும் மேற்கொள் வேன் என்ற எண்ணத்தையுங்கூட கைவிட்டிருந்தபோதும் இவற்றை செய்ய வேண்டிய பொறுப்பு என்னுடையதாகியுள்ளது.

27. நான் கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளதால் இது வரையிலும் நான் விளக்கிச் சொன்ன எமது பணிகள் எவ்வாறு பாதிக்கப் பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பல்லாண்டு களாக என்னுடன் பணியாற்றி, என்னால் பயிற்றுவிக்கப்பட்ட தென்னாட்டவர்கள், இந்த கடற்புறப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள், என்னுடன் கல்காத்தாவுக்கு வர இயலாது - ஐரோப்பியர்களுக்கு வங்கமும் இந்துஸ்தானமும் எத்தனை அந்நியமான இடங்களாக உள்ளனவோ அதே அளவுக்கு இவர்களுக்கும் இந்தப் பகுதிகள் அந்நியமானதாகவே இருக்கும். அப்படியே என் மேல் அவர்களுக் குள்ள தனிப்பட்ட வாஞ்சை, விசுவாசம் காரணமாக ஒரு சிலர் - எனது குழுவின் மூத்த பிராமணர், சமண இலக்கியங்களை மொழிப் பெயர்ப்பவர், வேறு சிலர் - என்னுடன் வர விருப்பப்பட்டால் அதற்கான செலவு பெரும் செலவாகி விடும். அதே சமயம், என்னிடமுள்ள பனுவல்களை மொழிபெயர்த்து அவற்றின் சாரத்தை சுருக்கி வழங்க இவர்களின் உதவி மிக அவசியம். அவர்கள் இல்லாமல் என்னால் கல்கத்தாவில் இந்த பணியை சுலபமாக செய்து முடிக்க முடியாது.

28. என்றாலும் இந்த வேலையை நான் செய்து முடிக்க முயற்சி செய்வேன். நான் ஐரோப்பாவுக்குத் திரும்புவதற்கு முன் என் வைப்பிலுள்ள கையெழுத்துப் படிகள், நூல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நூல் பட்டியல் ஒன்றை தயாரித்து இவற்றை பற்றிய கச்சிதமான வரையறையை உருவாக்க விரும்புகிறேன். ஏற்கனவே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளவற்றையும் ஒரு முறைமைக்குள் கொண்டு வரவும் முயற்சி செய்வேன். வருங்காலங்களில் என்னை விட தகுதியுடையவர்கள் இவற்றை செப்பனிட்டு, இவற்றின் சில பகுதிகளையாவது வெளியிட விரும்பினால் அவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் - எனது வயதும் உடல்நலமும் ஒத்துழைத் தால் நானே நன்றியுணர்வோடு இதைச் செய்வேன்.

அலுவல்கள் காரணமாக என்னால் இவ்வளவே உங்களுக்கு எழுத முடிந்தது - மேலும் விரிவாக எழுத முடியாமற் போனதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். அப்படி எழுதுவதானால், எம்மிடமுள்ள பனுவல்களின் அசல்களை பார்வையிட்டு, ஆய்வு செய்து குறிப்பு களை எழுதி அனுப்ப வேண்டியிருக்கும். அப்போது தான் அவற்றின் தன்மை, முக்கியத்துவம் - எனது பட்சபாத பார்வைக்கு மட்டும் அவை முக்கியம் வாய்ந்ததாக இருக்கக்கூடாது அல்லவா - ஆகியவற்றை என்னால் விளக்க முடியும்.

கடந்த 34 ஆண்டுகளாக இந்தத் தட்பவெட்ப நிலைகளில் வாழ்ந்து கொண்டு, ஒரு முறை கூட ஓய்வுக்காக ஐரோப்பாவுக்கு செல்லாமல், ஏன், உடலை தேற்றிக் கொள்ளவோ, தனிப்பட்ட அலுவல்களின் பொருட்டோ வேறு எந்த மாகாணத்துக்கும் போகாமல் வாழ்ந்து வந்துள்ள ஒருவருக்கு, இந்தப் பனுவல்களை நிதானமாகவும் முழுகவனத்துடனும் ஆராய ஓய்வும் அமைதியும் தேவை என்பதை அக்கறையுள்ள யாவருமே ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

அன்பு அலெக்சாண்டர், எப்பவும் போல அன்புடன்

உங்கள் காலின் மெக்கென்சி

மதராஸ், பிப்ரவரி 1, 1817

அடிக்குறிப்புகள்

1. காண்க, ஜெர்னல் ஆஃப் தி ராயல் ஏசியாட்டிக் சொஸைட்டி, எண் 1, ப, 165

2. டாசிடஸ்ஸின் கூற்று - டைபீரியசின் பேருரையி லிருந்து எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.

3. அன்று இளைஞனாக இருந்த, இன்று நம்மிடையே இல்லாமல் போன காவெள்ளி வெங்கட்ட போரியா - இவர் அதிகெட்டிக்காரார். கூடவே இளகிய மனமும் சிந்தனையும் கொண்டவர். இந்த சுற்றாய்வின் இறுதியில் மேற்கொள்ளப் பட்ட விசாரணைகளின் போது, அவர் சந்தித்துப் பேசிய பல்வேறு குடிகள், குழுக்கள் ஆகியவற்றின் வேறுபட்ட தன்மைகளை திறந்தமனத்துடன் உள்வாங்கிக்கொண்டார்.

ஏழு ஆண்டுகள் உழைத்த பிறகு அவர் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டார். ஆனால் அதற்கு முன்னால் அவருடைய இளைய சகோதரர்கள், பிற சாதிகளை சேர்ந்தவர்கள், பிராமணர்கள், சமணர்கள், மலபார்காரர்கள் என்று பலரை இந்தப் பணியில் ஈடுபடுத்திவிட்டுச் சென்றார் - இதனால் பணிகள் திருப்திகரமாக நடந்தன.

4. இந்திய புவியியல் குறித்து இந்திய பயணங்கள் என்ற நூலில் ஜென்டைல் கூறியுள்ளவற்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

5. மராத்தியர்களுக்கு கொடுக்கப்பட்ட ஹோலோல் கைரா, சிட்லதுர்க்கிற்கு வடமேற்கு பகுதியிலுள்ள குடிக் கட்டா, மைசூருக்கு கிழக்கேயுள்ள கோலாரின் ஒரு பகுதியாக தவறாக அறியப்பட்டன. இது போல அடுக்கிக்கொண்டே போகலாம் - சுற்றாய்வின் அவசியத்தை இவை நமக்கு வலியுறுத்தின.

6. திரு மாத்தர், லெஃப்டினெட் வாரன், லெஃப்டினெட் ஆர்த்தர், துணை சுற்றாய்வாளர்கள். டாக்டர் ஹெய்ன், இயற்கையியலாளர்

7. 1810, ஆக்டோபர் மாதம் சுற்றாய்வு தொடர்பாக வகுக்கப் பட்ட விதிகளின்படி, இராணுவ, வருவாய் துறைகளில் அமர்த்தப் பட்ட உள்ளுர் சுற்றாய்வாளர்களை தவிர்த்து 20 இராணுவ வீரர்கள் குவார்டர் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்துக்கு நியமிக்கப்பட்டனர். இந்த துறையினர் சாதித்வற்றை மைசூர் சுற்றாய்வு பணியில் ஈடுபட்டோர் சாதித்ததுடன் ஒப்பிட்டால் யாருடைய பணி பயன் ஈன்றது என்பதை நியாயமான வகையில் அறியலாம்.

8. 1806இல் மதராசில் மேற்கொள்ளப்பட்ட அணுகு முறையை முரண்பாடுடையதாக நான் கருதியதோடு எனக்கு இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஊட்டப்பட்ட நம்பிக்கைக்கு புறம்பானதாகவும் கருதினேன்.

9. 1 டிசம்பர், 1810 தேதியன்று முடிவுற்ற ஆண்டுக் கணக்கின்படி வருடாந்திர செலவு என்பது 85, 000 அல்லது 100, 000 பகோடாக்களிலிருந்து 55, 000 பகோடாக்களாக குறைக்கப்பட்டிருந்ததோடு, ஒன்றோடு ஒன்று பொருந்தாத பல பகுதிகளைக் கொண்ட பழைய திட்டத்தின் கீழ் செலவான தைக் காட்டிலும் புதிய திட்டத்தின் கீழ் ஆன செலவுகள் ஆகக் குறைவானவை - அரசாங்கத்திடம் ஏப்ரல் 30, 1816 அன்று சமர்ப்பிக்கப்பட்ட 5 ஆண்டுகளுக்கான செலவுப் பட்டியல் இதை உறுதிபடுத்தும்.

10.சில ஆண்டுகளுக்கு முன்னால் பாராமகால் பகுதி சுற்றாய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வை முழுமையாக்க தேவையான திண்டுக்கல் பகுதி சுற்றாய்வும் செய்து முடிக்கப்பட்டு தரவுகள் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

(மொழியாக்கம் - வ.கீதா)

Pin It