“நூதனமானதொரு முறையில் தற்கொலை செய்து கொள்வதன் பொருட்டே இந்த நாவல் எழுதப்பட்டது என்பதாக உங்களிடம் பலரும் சொல்லக்கூடும். ஆனால் அதையெல்லாம் நீங்கள் நம்பிவிடக்கூடாது”

என்கிற எச்சரிக்கையுடன் நாவல் தொடங்குகிறது. நாவலின் முற் சேர்க்கையில் (முன்னுரை என்பதாகக் கொள்ளலாம்) சுதேசமித்திரன் என்கிற புனைபெயரில் எழுதிக் கொண்டிருப்பவனின் நண்பன் ‘பாசு’ என்கிற பாலசுப்பிரமணியனின் கதையாகச் சொல்லப்படுகிறது. இவன் ஓர் எழுத்தாளன். இவன் வாழ்வின் தனிமை என்ப தனைப் போதையைக்கொண்டும், தனக்குத் தானே பேசிக் கொண்டும், பிடித்த சினிமாப் பாடல்களைப் பாடிக்கொண்டும், தனிமையில் மதுவருந்திக் கொண்டும் கழிக்கிறான். வருடத்தின் முந்நூறு நாட்கள் மதுவோடு தான் அவன் வாழ்க்கை நடத்துகிறான்.

பாசுவின் நண்பர்களான சுதேசமித்திரன் (இந்நாவலின் ஆசிரியர் என்பதாகக் கதையில் வருகிறது), தரணி போன்றோரின் நிலையும் கிட்டத் தட்ட இதேதான். இந்நாவலின் ஆசிரியர் குடியை ஆசுவாசமாக நேசிக்கிறார். ‘மதுவருந்தும் அழகியலை அதன் குதூகலங்களுடன், மதுவில் திளைத்துக் கிடக்கும் ஒருவனின் மொழியிலேயே இதனைப் பதிவு செய்திருப்பது நாவலின் உணர்வைப் பிரதிபலிப்பதாகவுள்ளது. குடியைப்பற்றி மட்டும் இந்நாவல் பதிவு செய்யவில்லை. மாறாக அதனை ரசித்துப் பருகுவதையும், அதற்காகச் சேர்க்கப்படும் மது வகைகளையும், பக்க உணவாகக் கொள்ளப்படும் பீஃப், போர்க், சிக்கன், சுண்டல், மீன், நண்டு, சுறாப்புட்டு, லாப்ஸ்டர் என்பதாகப் பட்டியல் நீள்கிறது.

நாவலாசிரியரின் கிண்டல் தொனி கதைப்போக்கிற்கு வலு சேர்ப்பதாக இருந்தபோதும், ஆசிரியரின் இடையீடு (நாவல் மொழி) என்பது, இதனை வெகுசன நாவலுக்கான தன்மையாகக் கொண்டு செல்கிறது. கதையின் முடிவில் நடைபெறப்போகும் கொலை ஒன்றினைப் பற்றி ஆசிரியர் முன்னதாகவே குறிப்பிடுகிறார். இதை வைத்தே நாவல் நகர்த்தப்படுவதால், இந்நாவல் மர்ம நாவலுக்கான தன்மையையும் பெறுகிறது.

கதைத் தலைவனான ‘பாசு’ கதைப்போக்கில் நல்ல பாத்திர மாகச் சித்திரிக்கப்படுகிறான். மேலும் பாசு குடிப்பதற்கு அவனின் காதல் தோல்வியும் காரணமாகச் சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் பிடியில் இந்நாவலும் தப்பவில்லை என்பதுதான் வேதனை. இருந்த போதிலும் தன் தந்தையின் அனுமதியின் பேரில் குடிக்கப் பழகுவது புதுச்செய்தி. இருப்பினும் பாசு தனியார் மதுக் கடைகளில் வேலை பார்க்கும் சிறார்கள் மீது இரக்கப்படுவதும், தன் பயணமொன்றில் ஆதிக்கச்சாதி ரெட்டியாரிளைஞன் ஒருவன் வயதான தலித் பெரியவரைக் கன்னத்தில் அறைந்தபோது திகைப் பதும், ஆதரவற்ற கிழவியைக் கண்டு அவளுக்காக இரங்குவதும் நாவலில் பாசுவின் தலைமைப் பண்பை வெளிப்படுத்துகின்றன.

நாவலின் இடையே “விஜயநகர சாம்ராஜ்ஜியத்தில் மூளியாக்கப்பட்ட சிலைகளுக்குப் பதிலாகத்தான், மசூதிகளின்மீது பதிலுக்கு கைவைக்க நேர்ந்ததோ!” என ஆசிரியர் கொள்ளும் அய்யம் சிறுபான்மையினர் ஒடுக்கப்படும் இத்தருணத்தில் நாவலில் தவிர்க்கப்பட்டிருக்கலாம். தமிழில் குடியைப் பற்றியும் அதன் அழகியலைப் பற்றியும் விதந்தோதி இப்படியொரு நாவல் வந்ததாகத் தெரியவில்லை.

Pin It