தமிழக-கர்நாடக எல்லைப்புற மலைகிராமத்தில் கூட்டுச் சமூகமாக வாழும் சோளகர்களின் வாழ்வைச் ‘சோளகர் தொட்டி’ பதிவு செய்கிறது. இரண்டு பாகங்களாக இந்நாவல் பகுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் இம்மக்களுடைய வாழ்முறை நம்பிக்கைகள், வேட்டை சார்ந்த வாழ்வு, வள உறவு என அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது.

சிக்குமாதா துணிச்சலான வேட்டைக்காரன். வேட்டையின்போது தன்மீது பாயவந்த கரடியைச் சுட்டுக் கொன்றதாக வனக் காவலர்களால் நிர்வாணமாக்கப்பட்டு அடியும் உதையும் வாங்கினான். சிக்குமாதாவின் மரணத்திற்குப் பிறகு அவனது தம்பி கரியன் சிக்குமாதாவின் மனைவியோடும் குழந்தைகளோடும் பரிவுடன் நடந்துகொண்டான். நாளடைவில் கரியனுக்கும் அவனது அண்ணி கெப்பம்மாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. அவள் ஊர்ப்பஞ்சாயத்தைக் கூட்டித் தனக்குக் கொழுந்தனைக் கட்டி வைக்குமாறு கேட்கிறாள். கரியனின் சம்மதம் பெற்று ஊரார் திருமணம் நடத்துகின்றனர். உறவுகளுக்குப் போலி மதிப்பீடுகளைக் கொடுக்காமல், மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பழங்குடி வாழ்க்கையை இதன்மூலம் உணரலாம்.

நாவலின் இரண்டாம் பாகம் தான் மலைவாழ் மக்கள் குறித்த பிற நாவல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பரிணாமம் கொண்டுள்ளது. வீரப்பன், தேடுதல் வேட்டையின்போது தமிழக - கர்நாடக அதிரடிப் படைகள் மலைவாழ் மக்கள் மீது நிகழ்த்திய வன்முறைகள் வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொட்டியினர் இரவு நேரங்களில் அதிரடிப்படை முகாமைக் காவல் காக்க வேண்டுமென்றும் வீரப்பனைப் பற்றிய துப்பு கிடைத்தால் உடனே தெரிவிக்க வேண்டுமென்றும் அதிகாரி உத்திரவிடுகிறான். அவர்கள் இனிக் காட்டுக்குள் போகக்கூடாது எனத் தடை விதிக்கப்படுகிறது. நாட்டுத் துப்பாக்கிகளையெல்லாம் கொண்டு வந்து ஒப்படைத்துவிட உத்தரவிடப்படுகிறது.

அதிரடிப்படை முகாமுக்குள் மக்களைக் கொண்டுவந்து அடைத்து மகனைவிட்டு அப்பனையும் அப்பனைவிட்டு மகனையும் அடிக்கச் சொல்கின்றனர். கணவன் கண் முன்னாலேயே மனைவி மீது கூட்டாக வன்கலவியல் ஈடுபடுகிறார்கள். ஆண்கள், பெண்கள் என்று பாராமல் அவர்களின் குறிகளிலும் மார்புகளிலும் கிளிப்புகளை மாட்டி மின்சாரம் பாய்ச்சுகின்றனர். அதிரடிப்டையின் சித்திரவதைக் கூடம், சித்திரவதை முறைகள், சித்திரவதை புரிவோர் அடையும் குரூரமான மகிழ்ச்சி ஆகியன இந்நாவலில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் நேரடி வன்முறையாளர்களாகச் செயல்படும் இராணுவம், காவல்துறை முதலானவற்றின் இயல்புகள் இந்நாவலில் துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. அரச வன்முறைகள் குறித்துத் தத்துவங்களும் கோட்பாடுகளும் தரவியலாத புரிதல்களை இப்பகுதி தருகிறது.

மலைவாழ் மக்களைப் பற்றிய முந்தைய நாவல்கள் அவர்களை இரக்கத்துக்குரியவர்களாகவும் ஏழ்மையின் சின்னங்களாகவும் சித்தரித்தன. ஆனால் இந்நாவல் சோளகர்களின் இயல்பான வாழ்வியலை, வலிகளைப் பதிவு செய்வதோடு அதற்குத் தீர்வு சொல்லாமலிருப்பதும் இதன் பலம். சோளகர் இனமக்களைப் பழங்குடித்தன்மை மிகுந்தவர்களாக மட்டு மல்லாமல் சமகால நாகரிக சமூகத்தின் தாக்கங்களைப் பெற்றவர்களாகவும் நாவல் பதிவு செய்கிறது. இவர்கள் சாதிப் பெருமை மிகுந்தவர்களாகவும் தங்களுக்குக் கீழாகப் பலரைக் கருதுபவர்களாகவும் உள்ளனர். அருந்ததியச் சாதியைச் சேர்ந்தவனுடன் சோளகப் பெண்ணொருத்தி ஓடிப்போனதை இவர்கள் அவமானமாகக் கருதுகின்றனர்.

மொழி விளையாட்டுக்காகவும் அழகியல்சார் சாகசங்களுக்காகவும் நாவலைப் படிக்க முனைவோர் தோல்வியடைவர். அதே சமயம் சோளகர் இனக்குழு குறித்த ஆவணமாகவும் சாதாரண மக்கள் மீது அரசும் அதிகாரமும் செலுத்தும் வன்முறை குறித்த பதிவாகவும் இந்நாவல் வெற்றியடைந்துள்ளது.

Pin It