வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டி குறித்து விவரிக்கிறது இக்கட்டுரை தொடர்.
1948-ஆம் ஆண்டு, ஓமந்தூர் ராமசாமி தலைமையிலான அரசு, சென்னை மாகாணப் பள்ளிகளில் இந்தியை மீண்டும் கட்டாயப் பாடமாக்கியது. நீறுபூத்த நெருப்பாக இருந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரின் உணர்ச்சிப் பிழம்புகள் மீண்டும் வெடிக்கத் தொடங்கின. அந்த உணர்வுகளுக்குத் தப்பாத ஒரு கிராமம் கும்மம்பட்டி. திண்டுக்கல்லில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர். அந்த ஊரைச் சேர்ந்த கு.சி.பழனிச்சாமி, எந்நேரமும் கையில் பெரியார், அண்ணா நூல்களை வைத்திருப்பவர். பத்தாம் வகுப்பு மாணவரான அவர், சக மாணவர்களோடு உரையாடும்போதுகூட தமிழ், தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு பற்றியதாகவே இருக்கும். ‘திராவிடப் பண்ணை’ நூல்களை வாங்கி, தான் படிப்பதோடு மட்டுமல்லாமல், சக மாணவர்களுக்கும் கொடுத்து படிக்கச்சொல்லி, அதில் இருந்த கருத்துகளை விவாதிப்பார்.
இதை முறைப்படுத்துவதற்காகத் தன் நண்பர்களுடன் இணைந்து 1949-இல் ‘கலை மன்றம்’ ஒன்றைத் தொடங்கினார். “கலை என்பது மக்களை மகிழ்விப்பதற்கு மட்டுமல்ல; அவர்களது மனங்களில் சிந்தனையைக் கிளற வேண்டும்” என்ற அண்ணாவின் கருத்துக்கு ஏற்ப செயல்பட்டது, இந்தக் கலை மன்றம். ராமாயணம், மகாபாரதக் கதைகள்தான் அதுவரை அங்கு மாணவர்களுக்குப் பாலபாடம். கோயில் திருவிழாக்களில் வட்டக்கும்மியும், ஒயிலாட்டமும் பிரபலம். இந்த நிலையில், 1949-ஆம் ஆண்டு திண்டுக்கலில் நடைபெற்ற ‘பேச்சுரிமை, எழுத்துரிமை’ மாநாட்டில் பேசிய அண்ணா, `கிராமப்புறக் கலைகளில் புதிய கருத்துகளை இணைத்து நம் கொள்கைகளைப் பரப்ப வேண்டும். பாடல்கள் எழுத வேண்டும். பாடலின் பொருள் மக்களுக்குப் புரியும்படி எழுத வேண்டும்’ என்று அறிவுறுத்தி விட்டுச்சென்றார். ஏற்கெனவே, கலை மன்றத்தின் வாயிலாக நாடகம், சொற்பொழிவு, பொதுப்பணி பயிற்சிகளைத் தொடங்கியிருந்த கு.சி.பழனிச்சாமிக்கு, அண்ணாவின் அறிவுரை இன்னும் ஈர்ப்பைத் தந்தது. பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துரைக்கும் வகையில் ஒயிலாட்டப் பாடல்கள் பலவற்றை அவரே எழுதினார்.
ஒயிலாட்டத்தின் மூலம் பகுத்தறிவு உணர்வையும் தமிழ்ப்பற்றையும் ஊட்டி வளர்த்தது கலை மன்றம். அதுபோக, அப்பகுதி மாணவர்கள் கம்பரின் ராமாயணத்தை அறியும் முன்னரே அவர்களிடத்தில் அண்ணாவின் `கம்பரசத்தை’ச் சேர்த்துவிட்டார். கீதையை அறியும் முன்னரே `ஆரிய மாயை’யை அறியச் செய்து விட்டார். - சேரன்மாதேவி குருகுல சம்பவத்தைக் கொண்டுசேர்த்து விட்டார். இப்படி பகுத்தறிவால் வார்க்கப்பட்ட மாணவர்கள் உருவாக்கியது என்பதால், ‘கலை மன்றத்தினர் என்றாலே சாமி இல்லை என்று சொல்லும் கருப்புச் சட்டைக்காரர்கள்’ என்றே ஊரார் கருதினர். மக்கள் மனத்தை ஈர்ப்பதற்காகப் பொதுப்பணிகளிலும் ஈடுபடுத்திக்கொண்டது கலை மன்றம்.
ஆறு மாதங்களுக்கு செழிப்பான நீரோட்டம், ஆறு மாதங்களுக்கு கடும் வறட்சி என்பதுதான் கும்மம்பட்டியின் நிலைமை. வறட்சிக் காலங்களிலும் ஊர் மக்களுக்குக் குடிநீரை உறுதிசெய்ய வேண்டு மென்பதற்காக, வறண்டு கிடந்த பாண்டியர் காலத்து பொதுக்கிணற்றைத் தூர் வாரியது கலை மன்றம். ஊராரின் பாராட்டைப் பெற்று, மக்களிடையே மன்றத்திற்கு ஒரு நெருக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு, ஊரில் தீப்பிடித்தால் அணைப்பதாக இருந்தாலும் சரி, திருடர்களை விரட்டிப் பிடிப்பது என்றாலும் சரி, கலை மன்றத்தினரே முன் நின்றார்கள். அதனால் மக்களும் மன்றமும் ஒன்றாகிப் போனதுடன், மன்றத்தினர் முன்வைத்த பகுத்தறிவுக் கருத்துகளுடனும் மனத்தளவில் ஒன்றிணையத் தொடங்கினர் கும்மம்பட்டி மக்கள்.