சேலம் மாவட்டக் கழக இளைஞரணி நடத்திய இரண்டு நாள் பயிலரங்கத்தில் எண்பது இளைஞர்கள் பெண்களும், ஆண்களுமாய் பங்கேற்றனர். கால மாற்ற சூழலில் பெரியார் கருத்தியல் மற்றும் பெரியார் இயக்கத்தின் தேவை குறித்து பயிலரங்கம் விரிவாக விவாதித்தது.

சேலம் மாவட்ட இளைஞர் அணி பயிலரங்கம் ஜூன்20,21 தேதிகளில் சேலம் நிலாச்சோறு உணவக அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. 20.06.2026 சனிக்கிழமை இளைஞர்களின் எழுச்சியோடு தொடங்கியது. தோழர்கள் லதா, சத்யா, பொன்ராஜ், உமாபதி குழுவினரின் கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு தொடங்கியது.

தொடர்ந்து "இன்றைய சமூக அரசியல் சூழலில் பெரியாரியத்தின் தேவை" என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முதல் வகுப்பினை தொடங்கினார்.dvk youth wingதேநீர் இடைவேளைக்கு பிறகான இரண்டாவது அமர்வில் "சமூக ஊடகங்கள் - பயன்படுத்தல்" என்ற தலைப்பில் ( Wild South Raiders podcast) தோழர் கக்காஷி காணொளி மூலமாக விளக்கி வகுப்பெடுத்தார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகான மூன்றாவது அமர்வில் "ஜாதியத்தின் புதிய வடிவம்: சுயஜாதி மறுப்பு பார்ப்பனிய எதிர்ப்புடன் ஜாதி மறுப்பு இயக்கம்" என்ற தலைப்பில் கழக தாம்பரம் நகர அமைப்பாளர் அருண்கோமதி வகுப்பெடுத்தார்.

மாலை தேநீர் இடைவேளைக்குப் பிறகான நான்காவது அமர்வில் "வாழ்க்கை முறையில் சடங்குகளின் தாக்கம்: அதன் வழியே நிலை நிறுத்தப்படும் மடமை,இழிவு" என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி வகுப்பெடுத்தார். முதல் நாள் கடைசி அமர்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி "பெரியாரின் போராட்டங்கள் - இலக்கு - அணுகுமுறை" என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.

முதல் நாள் வகுப்பில் 80 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட புதிய தோழர்கள் பங்கேற்றனர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி 79-வது பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

2-ம் நாள்: தோழர்கள் லதா, சத்யா, பொன்ராஜ், உமாபதி குழுவினரின் கலை நிகழ்ச்சிகளுடன் வகுப்பு தொடங்கியது. தொடர்ந்து "பார்ப்பனியம்: தத்துவமாய், அதிகார மையமாய் ஊடகங்களில், அரசாங்கத்தில், மதத்துறையில் செலுத்தும் ஆதிக்கம் -கோட்பாடாக புரிந்துகொள்ளல்" என்ற தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முதல் வகுப்பினைத் தொடங்கினார்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகான இரண்டாவது அமர்வில் "பெரியாரும், தேர்தல் அரசியலும் - சமூக மாற்றத்தின் வழியாக அரசியல் மாற்றம்" என்ற தலைப்பில் திருப்பூர் மகிழவன் உரை நிகழ்த்தினார். மதிய உணவு இடைவேளைக்கு பிறகான மூன்றாவது அமர்வில் "திராவிடர் விடுதலைக் கழகம் - 2012 முதல் இன்று வரை செயல்பாடுகள் - முன்னெடுப்புகள்" என்ற தலைப்பில் கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் உரை நிகழ்த்தினார். தேநீர் இடைவேளைக்கு பிறகான கடைசி அமர்வில் "சுயமரியாதை இயக்கம்: செயல்பாடு - அணுகுமுறை" என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வகுப்பெடுத்தார்.

நிறைவாக, "அய்யம் களைதலில்" தோழர்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் ஆதாரத்துடன், வரலாற்றுக் குறிப்புகளுடன், எளிமையான விளக்கத்துடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறந்த முறையில் பதிலளித்தார்.

சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன் நன்றி கூற பயிலரங்கம் நிறைவு பெற்றது. பயிலரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வுக்கு உழைத்திட்ட சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் தங்கதுரை, சிவ சண்முகம், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், தமிழ்நாடு மாணவர் கழகம் நாகராஜ், கவியரசு, கொங்கணாபுரம் கோகுலக் கண்ணன், மேட்டூர் முத்துராஜ், இரண்யா, மேச்சேரி சபரி குறிப்பாக இவ்வளவு சிறப்பான நிகழ்வு நடைபெற காரணமாக இருந்த நிலாச்சோறு உரிமையாளர் ரகுநாத் - கவிதா ஆகியோருக்கும் மற்றும் கழக தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் கலந்து கொண்ட அனைத்து புதிய தோழர்களுக்கும் சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

பயிலரங்கில் உணர்வூட்டிய புரட்சிப் பாடல்கள்

தோழர்கள் லதா, சத்யா, பொன்ராஜ், உமாபதி குழுவினர் பயிலரங்கத்தில் உணர்வூட்டும் கொள்கைப் பாடல்களை பாடினர். ஒவ்வொரு உரையின் இடைவெளியில் பாடப்பட்ட பாடல்கள் பயிரங்கில் பெரும் வரவேற்பை பெற்றன.

உணவக உரிமையாளரின் பேருதவி

நிலாச்சோறு உணவகம் திறந்த வெளியில் அழகிய குடில்களாக கலை உணர்வுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. பயிலரங்க அரங்கு எதிரொலி சிறிதும் இன்றி மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.

உணவக உரிமையாளர் ரகுநாத் இரண்டு பயிலரங்கிலும் முழுமையாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்தார். இந்த பயிலரங்கம் தனது உணவகத்தில் நடப்பது எனக்கு பெருமை சேர்த்துள்ளது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

வாஸ்து மடமையை தகர்த்து வெற்றிநடை போடும் நிலாச்சோறு உணவகம்

நிலாச்சோறு உணவக உரிமையாளர் ரகுநாத் நிகழ்வின் இறுதியில் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

எந்தவித அரசியல் அடையாளம் இல்லாமல் இந்த உணவகத்தை நடத்தி வருகிறேன். அடையாளம் இல்லை என்றாலும் அனைவருக்கும் தெரியும் நான் பெரியாரிஸ்ட் என்று, எந்த ஒரு இயக்கத்திலும் நான் பயணிக்கவில்லை. இந்த உணவகத்தை வாஸ்து சாஸ்திர முறைக்கு நேர் எதிராகக் காட்டியுள்ளேன். கோடிக்கணக்கான ரூபாயில் உணவகத்தைக் கட்டுகிற என்னை பார்த்து ஒரு 20 இலட்சம் ரூபாய்க்கு வீடு கட்டுபவர் யோசிப்பார். நான் தற்போது கட்டி வருகிற கட்டிடத்தில் அனைத்து வாஸ்து சாஸ்திர அமைப்புக்கு நேர் எதிராக கட்டுமானப் பணிகளை செய்து வருகிறேன். குபேர மூலையில் கழிவறையும் சனி மூலையில் கழிவறை தொட்டியையும் அமைத்துள்ளேன்.

நான் என்னுடைய வீட்டிலும் பல்வேறு சடங்கு முறைக்கு எதிராக செய்து வந்துள்ளேன். வீட்டில் புதுமனை புகுவிழாவில் பால் காய்ச்சுவதற்கு மாற்றாக பாகற்காய் குழம்பு வைத்து சாப்பிட்டோம். இனிப்பு இல்லாமல் புதுமனை புகுவிழா நடந்தது. எனது இணையர் குடும்பப் பிண்ணனி சடங்குகள், ஜோசியம் சார்ந்து தான் இருந்தது. ஆனால் இப்போது அவர் பகுத்தறிவு சிந்தனைக்கு வந்துள்ளார். ஆகவே எனது இணையருக்கு நன்றி!

பயிலரங்கத்தின் வெற்றி; பயிற்சி பெற்றவர்கள் நெகிழ்ச்சி

சேலம் பயிலரங்கத்தில் பங்கேற்றவர்கள் நிகழ்வின் இறுதியில் பயிலரங்கம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

நாமக்கல் ரேஷிகா வர்சினி: பெரியார் குறித்த எனக்குத் தெரிந்த விவரங்களைத் தாண்டி பெரியார் பற்றிய வரலாறுகளை விரிவாக கற்றுக் கொள்ள முடிந்தது. இது என்னுடைய படிப்புக்கு உதவியாக இருக்கும். நான் பார்ப்பனரல்லாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அனைத்து சடங்குகளையும் பின்பற்றி வந்தது என்னுடைய குடும்பம். இந்த பயிலரங்கத்துக்கு வந்ததற்குப் பிறகு விடுதலை அடைந்த உணர்வை எட்டி இருக்கிறேன். இனி நல்ல வாழ்க்கை முறைக்கு ஒரு வழி கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் பெரியார் தான் என்று கூறினார்.

இசக்கி ராஜன் (திருநெல்வேலி): இங்கே வருவதற்கு முன் பெரியார் குறித்த நான் நிறைய படித்திருக்கிறேன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் இங்கே தோழர்கள் பேசியதற்குப் பிறகு நான் இன்னும் படிக்காதது நிறைய இருக்கு என்று உணர்ந்து கொண்டேன். ஜாதி குறித்தும் சடங்குகள் எப்படி பெண்கள் வழியாக கடத்தப்படுகிறது என்பது பற்றியும் பெரியாரின் போராட்ட வரலாறு குறித்தும் புதிய செய்திகளை அறிந்து கொண்டேன்.

சஞ்சய் : நான் சேலத்தைச் சேர்ந்தவன் தான். ஓமலூர் பக்கத்துல புளியம்பட்டி என்கிற ஒரு ஊரு. எங்க வீட்டுல ஒரு அம்பேத்கர் படம் இருக்கும். அந்த படம் எங்க அப்பா அம்மா கல்யாணத்துல பரிசா கொடுத்தது. சின்ன வயசுல இருந்தே அந்த படத்தை பார்த்து வந்ததுனால எனக்கு அம்பேத்கர் பரிச்சயமானவர். ஆனா பெரியார் எனக்கு பரிச்சயம் கிடையாது. அவர் படத்தை நான் புத்தகத்தில் பார்த்ததோடு சரி, வேற எங்கேயும் நான் பார்த்தது கிடையாது. இப்படி இருக்கும்போது தோழர் கொளத்தூர் மணி நான் படித்த பள்ளியில் சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு வராரு. அப்பதான் வந்து கொளத்தூர் மணி அவர்களை முதல்ல சந்திக்கிறேன். அதுக்கப்புறம் தான் பெரியார் யாரு, பெரியார் என்ன பண்ணாரு, பெரியாரை நாம் ஏன் ஆதரிக்கணும் அப்படிங்கற விஷயத்தை படிக்க ஆரம்பிக்கிறேன். பெரியார் சமத்துவம், பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு போன்ற கொள்கைகள் மேல் எனக்கு ஈர்ப்பு வருது. முக்கியமா பெண் அடிமைத்தனம் ஒழிப்பது சாதாரணமா எங்க வீட்டிலேயே நடக்கக் கூடியது தான். இன்னைக்கு கூட எங்க வீட்டுல சண்டை போட்டுட்டு தான் வந்தேன். ஏன்னா எங்க அப்பா வீட்டுல ஒரு வேலை செய்யல. அதை எங்க அம்மா கேட்கும்போது, "அது பொம்பளை வேலை, நான் எதுக்கு செய்யணும்?" அப்படின்னு சண்டை போட்டார். இப்ப நான் அதை எதிர்த்து கேள்வி கேட்கிறேன். ஏன் வேலையில் கூட ஆம்பள, பொம்பளைன்னு இருக்கா? ஏன் ஆம்பள செஞ்சா என்ன? பொம்பளை தான் செய்யணுமா? அப்படின்னு எங்க அப்பா கிட்ட சண்டை போட்டேன். எங்க அம்மாவுக்கு ஆதரவா, என்னைப் பெற்ற என்னுடைய தகப்பனையே எதிர்த்து நான் கேள்வி கேட்கிறேன். இந்த விழிப்புணர்வு கொடுத்தது பெரியாருடைய கொள்கை தான்.

பெற்றோரா இருந்தாலும் அந்த இடத்தில் கேள்வி கேட்கணும்னு நம்மளை ஒரு கருத்தியல் தள்ளுது பாத்தீங்களா? இந்த உந்துசக்தி தான் எல்லாருக்கும் தேவை. பொதுவாவே பெற்றோர்கள் எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கும். பையன் நல்லா படிக்கணும், படிச்சு செட்டில் ஆகணும்னு எல்லாரும் ஆசைப்படுவாங்க. அதே போல தான் எங்க வீட்டிலயும். இப்ப அவங்களைப் பொருத்தவரை சஞ்சய் வந்தான், ரெண்டு நாள் ஏதோ மீட்டிங்னு போனான், வீட்டுல தங்கல, வீட்டுல சாப்பிடல அப்படிங்கறது மட்டும் தான் அவங்களுக்கு தெரியும். இங்க நான் எப்படிப்பட்ட மனிதர்களை சந்திக்கிறேன், ஒரே கொள்கை உடைய மக்களை நான் சந்திக்கும்போது அந்த சூழ்நிலை எப்படி இருக்கு, அந்த அனுபவம் எப்படி இருக்கு அப்படிங்கறது சொல்லிப் புரிய வைக்க முடியாத ஒரு உணர்வு. ஒரே கருத்தியல் கொண்ட பல மக்களை ஒரே இடத்தில் பார்த்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்த உணர்வு ஒரு புது உணர்வா இருக்கு. இப்படி வீட்டுல தங்காம நீ பாட்டுக்கு போயிட்டு இருக்க அப்படின்னு சொல்லி திட்டுனாங்க. தப்பா போயிடுவேன்னு பயந்தாங்க. அப்ப நான் அவங்க கிட்ட ஒரு விஷயம் தான் சொல்லிட்டு வந்தேன். "உன் பையன் தண்ணி அடிக்க போகல, ஊர் சுத்தப் போகல, பொறுக்கித்தனம் பண்ணப் போகல. அரசியல் பண்போடு, பகுத்தறிவு சிந்தனையோடு உள்ள சிந்தனையாளர்களையும் பகுத்தறிவுவாதிகளையும் பார்க்கத்தான் போயிருக்கேன்"னு சொல்லிட்டு வந்தேன். இந்த சந்திப்பு எனக்கு எப்படி வாழ்க்கையில் ஒரு பக்குவப்பட்ட மனிதனா வாழணும்னு எனக்கு உணர்த்தி இருக்கு.

நிலாச்சோறு உணவக உரிமையாளர் தோழர் ரகுநாத் அவர்களின் குடும்பப் பின்னணி:

1950 அக்டோபரில் பெரியார் அறிவித்த வடவர் சுரண்டல் எதிர்ப்புப் போராட்டத்தில் 8.11.1950 அன்று தோழர் ரகுநாத் அவர்களின் பாட்டியும் சேலம் சிவதாபுரம் திராவிடர் கழகத்தின் பொருளாளருமான அகிலாண்டம் அவர்களும், அவரது மாமனார் 80 வயது உள்ள மாரி அவர்களும், அவரது குழந்தைகள் ஆன 13வயது சரஸ்வதி, 10 வயது சொர்ணாம்பாள், 8வயது ஜெகநாதன், 3வயது திராவிட கனி, 1,1/2 ஒன்றரை வயது பாண்டியராசா ஆகியவர்களுடன் கைதாகிறார். அதில் குழந்தைகளில் 1,1/2 வயது பாண்டிராசாவைத் தவிர மற்ற நால்வரையும் அன்னையை விட்டுப் பிரித்து Children's Society-யில் தனியாக காவலில் வைக்கப்படுகிறார்கள். ஒரு வார தண்டனைக்குப் பின் விடுதலையான அகிலாண்டம் அம்மாள், அவரது கணவரும் சேலம் சிவதாபுரம் காட்டூர் திராவிடர் கழக தலைவருமான எஸ் எம் வெள்ளியங்கிரி அவர்களும் 21.11.1950 அன்று மீண்டும் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி உள்ளார்கள். ஒரு மாதம் தண்டனை வழங்கப்பட்டு 22.12.1950 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

16.5.1983 அன்று தங்கள் வீட்டில் `சமபந்தி போஜனம்’ என்ற பெயரில் ஏற்பாடு செய்து, ஜாதி, மதம் கடந்து அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளச்செய்து ஆட்டுக்கறி துண்டுகளும், மாட்டுக்கறி துண்டுகளும், பன்றிக்கறி துண்டுகளும் கொண்ட விருந்து வழங்கப்பட்டுள்ளது.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.