கல்விக்கூடங்கள், வழிப்பாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், மக்கள் நடமாட்டம் செறிந்துள்ள இன்னபிற பொதுஇடங்களில் நுழைந்து மனம்போன போக்கில் நூற்றுக் கணக்கானவர்களைச் சுட்டுத்தள்ளுவது, குறிப்பிட்ட வகையினரை மட்டும் தெரிவுசெய்து குறிப்பிட்ட பாணியில் மட்டுமே தொடர்ச்சியாகக் கொல்வது ஆகிய பயங்கரவாத அட்டூழியங்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பொழுதுபோக்குபோல நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இப்படியான கொலைச்செயல்கள் கிறிஸ்தவ பயங்கரவாத மென்றோ அமெரிக்க ஐரோப்பிய பயங்கரவாதமென்றோ ஒருபோதும் குற்றம் சாட்டப்படுவதில்லை. அவை வெறுமனே உளவியல் கோளாறுப் பிரச்னைகளாக/ உணர்ச்சிவயப் பட்ட தனிநபர் நடவடிக்கைகளாக ஊத்தி மூடப்படுகின்றன. ஆயிரக்கணக்கானவர்களை பலிவாங்கிய போபால் விஷவாயுக் கசிவு வெறும் தொழில்நுட்பக் கோளாறாகவும், ஐயாயிரத்துக்கு மேற்பட்டவர்களை அழித்தொழித்த குஜராத் கலவரம் உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினை என்றும் பசப்பப்படுகின்றன.

சமூகத்தின் ஆதிக்கப்பிரிவினர் தமக்குள்ள ஊடக மற்றும் கருத்தியல் செல்வாக்கின் மூலம் தமது வக்கிரங்களையும் அத்துமீறல்களையும் நியாயப்படுத்தி தப்பித்துக்கொள்கிற இந்த கபடத்தோடு இணைத்தே பாபர் மசூதித் தகர்ப்பு என்கிற இந்துத்துவத்தின் திட்டமிட்ட பயங்கரவாதத்தை கரசேவகர்களுடைய மிகுவுணர்ச்சியின் வெளிப்பாடு என்று சித்தரிக்கும் சூதினையும் புரிந்துகொள்ள வேண்டும்.

பாபர் மசூதி இடிப்பு குறித்து ஆய்ந்து ரகசியமாய் வைக்கப்பட்டிருந்த லிபரான் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதற்கு முன்பே கசிந்துவிட்டதை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம், மசூதி இடிப்பு பயங்கரவாதிகள் என்று தம்மீது கமிஷன் சுட்டும் குற்றச்சாட்டை பின்னுக்குத் தள்ளமுடியும் என்று பா...கூட்டணி களமிறங்கியுள்ளது. உண்மையில் காங்கிரசும் இதைத்தான் விரும்பி எதிர்பார்த்திருந்தது. தனது விசுவாசத்தை புதுப்பித்துக் காட்டி மேலும் பல அடிமைசாசனங்களில் கையெழுத்துப் போடுவதற்கு பிரதமர் மேற்கொண்டுள்ள அமெரிக்கப்பயணம் குறித்து நாடாளுமன்றத்திலோ மக்கள் மன்றத்திலோ விவாதங்கள் எழும்பாமல் திசைதிருப்ப ஆட்சியாளர்களே இந்த ரகசிய அறிக்கையை இந்த தருணத்தில் கசிய விட்டிருக்கிறார் களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

186 பேரின் உயிரைப் பறித்த 26/11 என்று துக்கம் அனுஷ்டிக்கும் தேசபக்தர்கள், நாட்டின் உயிரையே பறித்தெடுத்துப்போவதற்கான கொலையொப்பந்தங்களிலும் உலையொப் பந்தங்களிலும் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கிற காங்கிரஸ் அரசாங்கத்தை என்ன செய்யப் போகிறார்கள்?

- ஆசிரியர் குழு

 

Pin It