நீங்கள் எப்போதாவது மங்கிய வெளிச்சத்தில் மாலைப் பொழுதுகளில் தூய்மையான படிக்கட்டுகளில் அமர்ந்து உங்கள்முன் சலசலத்து ஓடும் ஒரு நதியினை ரசித்தது உண்டா? அந்த ரசிப்பில் நீங்கள் புதிய பலவற்றை அறிந்து கொள்ள முடியும். நான் காவேரியின் கரையில் அமர்ந்து பலசமயம் அதனை ரசிப்பதுண்டு. தண்ணீரின் சப்தம், அதில் காற்று உரசிச்செல்லும் ஒளியுடன் சூழும் புத்துணர்வு என்னை அமைதிபடுத்தும்.
நான் சிறிதுநேரம் அதனை உற்றுப்பார்த்த பின்பு அது என்னோடு பேசத்துவங்கும். முதலில் ஒரு அந்நியனைப் போல எனக்கு சொல்லி பின் ஒரு தோழனைப்போல நெருங்கி இறுதியில் ஒரு ஆசானைப்போல உருமாற்றமடையும் மாற்றங்களை நான் அனுபவித்துள்ளேன். தூரத்தில் காவேரியின் நெடுஞ்சாலை பாலத்தில் ஒரு லாரியின் உறுமல் கேட்கிறது. விட்டு விட்டு இந்த சப்தம் வரும். ஆட்கள் எழுந்து வீடுகளுக்கு போய்விட்டனர். என்னைப்போல ஒரு சிலர் இன்னமும் ஆற்றை விட்டு பிரிய மனமின்றி படிக்கட்டுகளில் சாய்ந்துள்ளனர். கூடுதுறை கோயிலின் இறுதிப் பூசையின் மணியோசை கேட்கிறது.
நம் குடும்பத்தார்களிடம் பாதுகாப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. யாரும் தங்கள் குழந்தைகளை சுதந்திரமாக ஆற்றில் குளிக்க விடமாட்டார்கள். நானும் அப்படியே வளர்ந்தேன். என் சக பள்ளி நண்பர்கள் ஆற்றில் குதித்து மூழ்கி விளையாடும்போது வீட்டுக் குளியலால் நீச்சல் பழக்கமற்ற நான் கரைகளில் உட்கார்ந்து மற்ற நண்பர்களை ரசித்துக்கொண்டிருப்பேன். என்றாலும் அவர்களைப் போல நீந்தமுடியவில்லையே என்ற ஆதங்கம் மிகுதியாக இருக்கும். பள்ளி விடுமுறைகளில் சிறுவர்களுக்கு ஆற்றின் கரை ஓரம் விளையாட ஏராளம் இருக்கும். கரையில் ஓரமாய் நீந்தும் குட்டி மீன்களை தரைக்கு தள்ளி பாட்டில்களில் அடைத்து எடுத்துச் செல்லலாம். விளையாட்டுப் பொருட்கள் கிளிஞ்சல்கள், கூழாங்கற்கள் என அது நீளும்.
நான் சிறிது நேரம் தென்படாவிட்டாலும் பாட்டி என்னைத் தேடி வந்துவிடுவாள். நான் இருந்தேனென்றால் கடுமையாக என் சக நண்பர்களை திட்டியபடி என்னை இழுத்து வந்துவிடுவாள். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரைக்கும் எனக்கு நீச்சல் தெரிந்திருக்கவில்லை. சைக்கிளிலிருந்து கீழே விழுந்து விடுவேன் என்று பொத்தியே சைக்கிள் ஓட்டவும் தெரியாமலிருந்து வந்தேன்.
எனக்குமுதலில் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தவன் சிவலிங்கம். அவனின் சைக்கிளில் குரங்கு பெடல் அழுத்தி பழகி பின் வட்ட வடிவில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை அவனின் சைக்கிளில் அவனை பின்னே உட்கார வைத்து நான் ஓட்டினேன். நான் அன்று அவனது அக்காளின் வீட்டிற்கு குமாரபாளையம் போக வேண்டும் என்று நச்சரித்தான். சைக்கிள் விட நானும் வருவதாக கூறி அவனுடன் சென்றேன்.
நாங்கள் காலை பத்துமணி சுமாருக்கு ஊரின் ஓரப்பகுதியில் புதிதாக கட்டிடங்கள் உருவாகிக்கொண்டிருந்த ஒரு இடத்தில் லைன் வீட்டில் அவன் அக்காள் வீட்டினை அடைந்தோம். அவன் அக்காளின் கணவன் ஒரு பழைய இரும்பு வியாபாரி. சமயத்தில் கிடைக்கும் வேலை செய்பவன். அன்று அவன் சணல் பைகளை எடுத்து சுருட்டி அவரின் அகன்ற சைக்கிள் கேரியரில் வைத்துக்கொண்டு, "அடுப்புக்கரி அள்ளவேண்டும் வந்தால் நல்லது" என்று சிவலிங்கத்திடன் சொன்னான்.
சிவலிங்கம் என்னையும் கூப்பிட்டான். "இரண்டு மணி நேரத்தில் வேலை முடிந்துவிடும்... அடுப்புக்கரி சிதறியிருக்கும் அதை சணல் பையில் போட்டு கட்டி எடுத்துவிட வேண்டியதுதான்" என்று சொன்னான். அவனது பெயர் ராமன் என்பதனை அகன்ற கேரியர் வைத்த சைக்கிளில் எழுதப்பட்டிருந்ததில் நான் அறிந்து கொண்டேன். சிவலிங்கத்துடன் இருப்பது எனக்கு பிடிக்கும் என்பதாலும் மதியத்திற்குள் வீடு திரும்பிவிடலாம் என்று ராமன் சொன்னதாலும் அவர்களுடன் செல்ல சம்மதித்தேன். நாங்கள் பேருந்து ஏறிக் கொண்டோம்.
அந்த சாலை காவிரி ஆற்றை ஒட்டிச் செல்லும் பாதை. நாங்கள் ஒரு மணி நேர பயணத்திற்குப்பின் சமயசங்கிலி என்ற பஸ் நிறுத்தத்தில் இறங்கினோம். சாலையிலிருந்து விலகி சரிவாய் செல்லும் பாதையில் இறங்கி நடந்தபோது காவேரி ஆறு தெரிந்தது. அப்பகுதியில் ஆற்றில் சிறுசிறு தீவுகளைப் போல நிலப்பகுதியும் பாதையும் அதில் உயர வளர்ந்த புற்களும், சிறுமரமும் நிறைய இருந்தன.
அதனைச் சுற்றி காவிரி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அந்த தீவு திட்டுகளில் வெந்நிறமாய் புகை எழுந்து கொண்டிருந்தது. இவ்வாறு ஆங்காங்கிருந்த சில திட்டுகளில் புகை வந்து கொண்டிருந்தது. "நாம் அந்த திட்டுலதான் கரி அள்ளனும்' என்று கைகளை நீட்டிக் காட்டினான் ராமன்.
என்னங்க அங்கே புகை வருது? என நான் கேட்டதும் சற்று சிரித்துக் கொண்டு சொன்னான் ""அங்கே பொங்க வைக்கிறாங்க""
அவன் நையாண்டி செய்வது தெரிந்து கொண்டேன். பின் திரும்பச் சொன்னான் ""சாராயம் காய்ச்சராங்கப்பா""
சாராயம் காய்ச்சும் இடமா? சாராயம் விற்பவர்களை நான் பவானி ஆற்றங்கரைகளில் பார்த்திருக்கின்றேன் ஒரு அலுமினியப் பாத்திரத்தில் மறைவாக வைத்துக்கொண்டு இருப்பார்கள். ஒரே கண்ணாடி டம்ளரில் எல்லோரும் வாயை வைத்து குடிப்பார்கள். சாராயக்காரர்கள் போக்கிரிகள். குடிகாரர்களுக்கு போதை அதிகமாகும்போது அவர்கள் பணத்தை எடுத்துக்கொள்வார்கள். பணம் இல்லாதவர்களை அடிப்பார்கள். என என்னுள் பதிந்திருந்தவைகள் எனக்குள் சொல்லிக்கொண்டது.
சாராயம் காய்ச்சும் இடத்தில் நாமா? வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் என்னாவது? ஓடிவிடலாமா? அவ்வாறு ஓடினால் சிவலிங்கம் வருத்தப்படுவான். ராமனும் சிவலிங்கமும் என்னை பயந்தாங்கொள்ளி என ஏளனம் செய்வார்கள். மேலும் பேருந்துக்கு பணமில்லை. இரண்டு மணி நேரம் தானே... எதையும் வெளிப்படுத்தாமல் இருந்துவிடலாம் என்று என்னுள் ஆறுதல் கூறிக்கொண்டேன். அப்போது சாராயம் காய்ச்சுவது எப்படி என்று தான் தெரிந்து கொள்ளலாமே என்று சிறு ஆசையும் வந்து அச்சமும், குழப்பமும் இருந்த நிலையில் வேடிக்கை காட்டியது.
கரையிலிருந்து தீவு திட்டினை நோக்கிப் புறப்பட்ட ஒரு பரிசலில் நாங்கள் ஏறிக்கொண்டோம். அந்த பரிசலில் ஒரு மூட்டை நாட்டுச் சர்க்கரை கொஞ்சம் விறகுகள் இருந்தது. அந்த மூட்டை மீது நாங்கள் உட்கார்ந்து கொண்டோம்.
""ஊறலுக்கு சர்க்கரையா? "" என்று ராமன் பரிசல்காரரிடம் கேட்டான்.
பரிசல்காரன் ஆமாம் என தலையசைத்தான். பின் அடுப்புக்கரி டீக்கடைக்கா போடப்போறே என்றான்.
இல்லை பட்டறைக்கு பயன்படும். பெரிய லாபமிருக்காது என்று சிரித்தான் ராமன். பின்னர் இருவரும் பீடியை பற்ற வைத்துக்கொண்டார்கள். காவிரியின் வேகம் அதிகமாகவேயிருந்தது. பரிசலின் துடுப்பு சற்று எதிர்த்திசையில் அழுத்தி போடப்போட நாங்கள் நீரோட்டத்தில் நேரே தீவை நோக்கி முன்னேறினோம்.
போலீஸ் வருவாங்களா? என்றான் ராமன். எப்பவாவது வருவாங்க, வந்தா தண்ணில குதிச்சு ஈரோட்டு பக்கம் கரைக்கு போயிடவேண்டியதுதான் என சிரித்தான்.
என்னுள் மீண்டும் அச்சம் எழுந்தது. சிவலிங்கத்தை பார்த்தேன் அவனும் சற்று பயந்தே காணப்பட்டான். நாங்கள் ஒரு திட்டை நெருங்கினோம். அங்கு இடுப்புயரம் புற்கள் முளைத்திருந்தது. அதனை அவர்கள் குட்டு என்று அழைத்தார்கள். அதில் சீமை வேலான் மரம் குடைபோல படர்ந்திருந்தது. புற்களின் மேல் புகை வந்து கொண்டிருந்தது. குட்டை நெருங்கியதும் பரிசல்காரன் கீழே இறங்கி பரிசலை திட்டை நோக்கி சற்று தள்ளினான். பரிசலை பார்த்து புற்களுக்கு வெளியே இருவர் வந்தார்கள். இருவரும் கோவணம் மட்டுமே அணிந்திருந்தார்கள்.
பரிசலில் இருந்த சர்க்கரை மூட்டையை தூக்கினர். நாங்களும் அதற்கு உதவினோம். நாங்கள் புற்களை தாண்டிச் சென்ற போது அங்கே ஒரு அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. அந்த அடுப்பில் ஒரு பெரிய பானையிருந்தது. அதற்கு மேலே இன்னொரு பானை வைக்கப்பட்டிருந்தது. மேல் பானையில் ஒரு குழாய் நீட்டிக்கொண்டிருந்தது. அதன் முனை கட்டையால் அடைக்கப்பட்டிருந்தது. அந்த பானைக்கும் மேலே அகண்ட அலுமினியப் பாத்திரம் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது. இவ்வாறு இரண்டு அடுப்புகள் பானைகளுடன் எரிந்து கொண்டிருந்தது.
ராமன் அங்கு அடுப்புகளில் முன்பு எரிக்கப்பட்ட கரியை தேடினான் கொஞ்சம் இருந்தது. ஏற்கனவே அதன் விலையை அவர்கள் அறிந்திருந்ததால் பெரிய அளவில் பேரம் நடக்கவில்லை. அங்கு கரி குறைவாக இருப்பதால் இன்னமும் ஒரு சில மூட்டைகளாவது கிடைத்தால் தான் குறைந்த அளவேனும் பணத்தை பார்க்கமுடியும் என்று ராமன் கூறினான். ஆற்றங்கரை ஓரமாய் ஒரு குட்டு இருப்பதாகவும் அங்கு மூன்று நான்கு மூட்டை வரை கரி தேறும் என்றும் வந்தால் கூட்டி போவதாக அவனிடம் பரிசல்காரன் சொன்னான்.
ராமன் ஆவலடைந்து என்னை இந்த குட்டில் கரி அள்ளி மூட்டையில் கட்டிக் கொண்டிருக்கும் படியும் ஒரு மணி நேரத்தில் தானும் சிவலிங்கமும் வந்து விடுவதாகவும் கூறினான். என்னிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆனால் நான் இந்த குட்டில் சேகரிக்கும் கரியை வாங்கவேனும் கட்டாயம் வருவான் என்ற நம்பிக்கையிருந்தது. நான் கரி அள்ளத் துவங்கினேன். பரிசலில் ராமனும் சிவலிங்கமும் கரையை நோக்கி போய்க்கொண்டிருந்தனர். அவர்கள் ஆற்றங்கரையை அடைந்து அப்பால் மறையும் வரை நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதன் பின்னே நான் இருக்கும் குட்டிலிருக்கும் மனிதர்களை பார்த்தேன். ஒருவன் நல்ல உயரமானவன். ஒடுங்கலான கன்னங்களும் சுருட்டைமுடியும் கொண்டிருந்தான். அவனின் மீசையை முறுக்கி விட்டிருந்தான். அவனின் ஒரு தோளில் ஆழமான தழும்பொன்றிருந்தது. ஏதேனுமொரு தகராறில் கத்தி பட்டிருக்கும் என்று யூகித்தேன். அவன் வலக்கையில் லட்சுமி என்று பச்சை குத்தியிருந்தான். அவனது அம்மா அல்லது மனைவியின் பெயராக இருக்கவேண்டும். அவனை சின்னு என்று பரிசல்காரன் கூப்பிட்டிருந்தான்.
மற்றொருவன் குள்ளமான கிழவன். அவனின் தலைமுடி செம்பட்டை நிறத்திலிருந்தது. நான் குழம்பிய நிலையில் முன்பு எப்போதோ எரிக்கப்பட்ட சாராய அடுப்பின் சிதறிக் கிடந்த கரிகளை பொறுக்கி சணல்பையில் நிரப்பினேன். அந்த வேலையும் கடுமையானதாகவே இருந்தது. சூரியனின் உச்சிவெயில் சீக்கிரம் என்னை களைப்படையச் செய்தது. நான் கரியை சேகரிக்க மண் மேடு போன்ற இடத்தில் கால் வைத்தபோது கால் சற்று பதிந்தது. டேய் தம்பி ஊறல் போட்டிருக்கு பார்த்து கால் வை என்றான் சுருட்டை முடிக்காரன் சின்னு. நான் அங்கு பார்த்த போது சில இரும்பு பேரல்களில் அதன் வாயினை துணியால் வேடுகட்டி மண்ணில் புதைத்து வைத்திருந்தனர்.
நான் இது என்னங்க என்றேன்
ஏன் நீயும் தொழில் கத்துகிட்டு வேறொரு குட்டிலே காய்ச்சப் போறயா?என்றான் சின்னு.
நான் படிச்சிகிட்டிருக்கேன் பத்தாவது ரிசல்ட் வருவதற்காக காத்திருக்கிறேன். அந்த இன்னொரு பையன் என் நண்பன் என்றேன்.
படிக்கிறவன் என்றதும் அன்புடன் பேசத் துவங்கினான் சின்னு. நீயேன் இங்க வந்தே? என்றான் கிழவன்.
தெரியாமல் வந்துவிட்டதை சொன்னேன்.
சின்னு ஒருமுறை சாராயப்பானையின் மேலிருந்த அலுமினிய குண்டாவில் குளிர்ந்த நீரை ஊற்றிவிட்டு அடுப்பை சற்று எரியூட்டிவிட்ட பின்பு சீமைவேலி மரத்தின் கிளையில் செருகப்பட்டிருந்த சோத்து தூக்குப்போசியினை எடுத்து சாப்பிட உட்கார்ந்தான். என்னை பக்கத்தில் வந்து உட்காரச் சொன்னான். தூக்குபோசியில் பழையசோறு இருந்தது. எனக்கு போசியின் மூடியில் கொஞ்சம் சோறும் நீச்சத்தண்ணீரும் ஊற்றிக் கொடுத்தான். நான் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டேன். அந்த பழைய சோற்று தண்ணீரில் உப்பு துளிகூட இல்லை. உப்பில்லையா? என்றேன்.
""நாங்க உப்பு போட்டு சாப்பிடமுடியாது. எந்நேரமும் தண்ணிரிலேயே கை நனைந்து கிடப்பதாலே உப்பு பட்ட கை பொத்தலாகி விடும்" என கையை நீட்டினான். உள்ளங்கை சொதசொத என ஊறி வெள்ளை நிறமாக இருந்தது. கிழவன் சாப்பிடாமல் அடுப்பை எரியூட்டிக்கொண்டிருந்தான்.
அவனின் கையும் அப்படியே இருந்தது. சின்னுவிடம் அந்த சாராய ஊறல்களை பற்றி கேட்டேன். நாட்டு சர்க்கரைப் பாகும், தட்டிப்போட்ட வெள்ளை வேலான் மரப்பட்டையும் நவாச்சரமும் கலந்த கலவையை சில நாட்கள் இப்படி ஈரப்பசையுள்ள இடத்தில் புதைத்து வைக்கும்போது அந்த கலவை நொதித்துப்போகும். அதில் காற்றுக் குமிழிகள் வெளிப்படும். அப்போது அந்த கலவையை சாராய அடுப்பின் அடிப்பானையில் ஊற்ற வேண்டும். அடுப்பை சூடாக்கி கலவையை கொதிக்க வைக்கும் சமயம் அந்த கலவையின் நீராவி, துவாரம் உள்ள மேல்பானைக்குள் போகும்.
அப்பானையின் மேலே உள்ள குளிர்ந்த நீர் நிரப்பிய அலுமினிய பாத்திரத்தில் அது பட்டு சொட்டுச் சொட்டாக வடியும். அது உள்ளிருக்கும் ஒரு பாத்திரத்தில் தேங்கும். அந்த பாத்திரத்திலிருந்து குழாய் வெளியே நீட்டியுள்ளது. எனவே நீட்டியுள்ள குழாயினை திறந்தால் சூடான சாராயம் கிடைக்கும் என்று விளக்கினான். பத்தாவது அறிவியல் பாடத்தில் வாளை வடித்தல் என்று படித்ததற்கு இணையானது தான் சாராயம் காய்ச்சும் செய்முறை என்று சின்னுவிடம் சொன்னேன். இப்போது கிழவன் சாப்பிட உட்கார்ந்தான்.
சின்னு அடுப்பையும் பாத்திர தண்ணியையும் கவனித்து வந்தான். சூடேறிவிடும் அலுமினியப்பாத்திர நீரை அடிக்கடி மாற்றி குளிர்ந்த நிலையில் அதனை வைத்திருந்தான். பேச்சின் ஊடே சின்னுவும் கிழவனும் கூலிக்கு அங்கு வேலை செய்வதையும் முதலாளி வேறு ஆள் என்பதும், காய்ச்சும் லிட்டர் அளவைப் பொறுத்து கூலியும், போலீஸ் மாமுல் எல்லாம் முதலாளியை சார்ந்தது என்பதுமான செய்தி அறிந்தேன்.
கிழவன் சாப்பிட்டவாறே சின்னுவிடம் சொன்னான். புது போலீஸ் அதிகாரி கெடுபிடி செய்யறதா பேச்சு, முதலாளி பேசப் போயிருக்கறாருன்னாங்க... ரெய்டு வந்தாலும் வருமாம் நேத்து பேசிக்கிட்டாங்க. முதலாளி போன வாரப் பணமே இன்னும் தரலை, இதைச் சொல்லி கூலி தராம இழுத்தடிப்பானப்பா... காலைலேயே பொண்டாட்டி சந்தை செலவுக்கு பணம் கேட்டு சத்தம் போட்டா, இந்த சரக்கை கொடுத்து இன்னிக்கு பணம் வாங்கனும் என்றான் சின்னு.
நான் சிறுகச் சிறுக இப்போது அரை மூட்டைக்கு கரியை சேகரித்திருந்தேன். மண்ணை லேசாக குச்சியால் கீறி புதைத்திருந்த கரியை எடுத்துக் கொண்டிருந்தேன். நான் இங்கு வந்து மூன்று மணி நேரத்திற்கு மேலே இருக்கும். இன்னமும் சிவலிங்கத்தையும் ராமனையும் பார்க்கமுடியவில்லை. நான் கரையையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆற்றில் தண்ணீர் சற்று நுரையுடன் கலங்கலாய் ஓடியது. புதுத்தண்ணீர் வருகிறது என்றான் சின்னு கிழவனிடம். மெல்ல வெய்யிலின் கடுமை குறைந்தது.
சூரியன் மேற்கே சரிந்து கொண்டிருந்தான். சிவலிங்கமும் ராமனும் வரும் நம்பிக்கை எனக்கு குறைந்து வந்தது. என் முகத்தில் பீதியின் ரேகைகள் பரவிக்கொண்டிருந்தது. அதற்குள் இரண்டு பெரிய லாரி டியூப்களில் புதிதாக வடித்த சாராயத்தை புணல் வைத்து ஊற்றி கட்டி விட்டிருந்தார்கள். காவேரியின் தண்ணீர் மட்டம் சற்று உயரத்துவங்கியது. குட்டின் கரையில் ஒரு அடிக்கு நீர்மட்டம் ஏறியிருந்தது.
சின்னுவும் கிழவனும் ஊறல் டின்களை மேடான பகுதிக்கு கொண்டு வந்து வைத்துக்கொண்டிருந்தனர். கடைசி சாராயம் வடிக்கப் போகிறார்கள். நான் முடிவு செய்து கொண்டேன் சிவலிங்கமும் அவன் மாமன் ராமும் இன்றைக்கு வரமாட்டார்கள் என்று. நான் ஆற்றின் கரையையே பார்ப்பதை பார்த்து சின்னு என் தோளைத் தொட்டு கூப்பிட்டான். நான் திரும்பினேன். என் கண்கள் கலங்கியிருந்தது. ஆற்றை கடக்க சின்னுவும் கிழவனும் மட்டுமே எனக்கு உதவமுடியும்.
எனக்கு பயமா இருக்குதண்ணே
""இந்த நாசமாப்போன வியாபாரியை நம்பி இங்கே வந்திருக்கற பாரு" என்றான் சின்னு.
எனக்கு அழுகை வெடித்து பொங்கியது. கிழவன் காய்ந்த வெள்ளைவேலாம்பட்டையால் எரிந்து கொண்டிருந்த அடுப்பை விட்டுவிட்டு என் அருகில் வந்தான்.
கவலைப்படாதே நான் உன்னை கரையிலே கொண்டு போய் விடறேன். ஆனால் கொஞ்சம் காத்திருக்கனும் அழக்கூடாது சின்னுவின் வார்த்தை ஆறுதலைத் தந்தது. நான் கரி அள்ளுவதை விட்டுவிட்டு சின்னுவுக்கு உதவி செய்தேன். ஆற்றிலிருந்து தண்ணீர் மொண்டு கொடுத்தேன். அடுப்பு எரிக்க விறகினையும் காய்ந்த மரப்பட்டையையும் எடுத்து வந்தேன். இப்பொழுது வெயில் முற்றிலும் தணிந்து விட்டது. நான் நேரமாக ஆக கலக்கம் அதிகரித்து திருத்திருவென விழித்து வந்தேன்.
என்னை கரையில் விட்டுவிட்டு முதலாளியிடம் சரக்கை சேர்த்துவிட்டு வருவதாகவும் அதற்குள் கடைசி சாராயத்தை வடித்து சேகரித்து வைக்கும்படியும் கிழவனிடம் அப்போது சின்னு சொன்னான் .
இரண்டு லாரி டியுப் சாராயம் பரிசலில் ஏற்றப்பட்டது. நான் சேகரித்த கரி மூட்டையை பரிசலில் ஏற்றிக் கொண்டபின் கிழவனிடம் சொல்லிவிட்டு பரிசலில் ஏறினேன். சின்னு பரிசல் துடுப்பை வழித்தான். ஆற்றின் நீரோட்ட வேகம் புதுத்தண்ணீர் வருகையால் அதிகரித்தது. அப்போது பரிசல் அசைவது அச்சமூட்டக்கூடியதாக இருந்தது. பரிசலை பாறைகளில் மோதாமல் துடுப்பை வழித்து ஓட்டுவது கடினமானதாகவும் இருந்தது.
குட்டுக்கும் கரைக்கும் நடுவே எங்கள் பரிசல் வந்திருந்த சமயம் கிழவன் குரல் எழுப்பி சின்னுவை கூப்பிட்டான். சின்னு திரும்பி பார்த்தபோது ஓடிடு என்றான். பின் கிழவன் காவிரி ஆற்றில் குதித்து நீந்தத் துவங்கினான். அவன் நீரோட்ட போக்கில் போய் மறு கரையை நோக்கி நீந்துவது போல தெரிந்தது. வேறு சில குட்டுக்களிலிருந்தவர்களும் தண்ணீருக்குள் குதித்தனர். சிலர் பரிசலை வேகப்படுத்தினர். போலீஸ்காரர்கள் சாராயம் காய்ச்சுபவர்களை பிடிக்க வருவதை நான் யூகித்துக் கொண்டேன்.
இரண்டு வேன்கள் கரையில் நின்றது. இரண்டு பரிசல்களில் போலீஸ் ஆற்றில் வந்து கொண்டிருந்தனர். நாங்கள் போகவிருந்த கரை அதற்கு தள்ளியும் போலீஸ் இருந்தனர். சின்னு கணநேரம் யோசித்து விட்டு பரிசலை கெட்டியா பிடிச்சுக்க கரைக்கு போயிடும். இல்லைனா துடுப்பை போடு என்று கூறிவிட்டு தண்ணீரில் குதித்து நீந்தத் துவங்கினான் பரிசல் குலுங்கியது. பரிசலில் சாராய டியூப்களுடன் நீச்சல் தெரியாத நான்மட்டும். எனக்கு அச்சத்தில் கைகால் நடுங்கியது. என் பரிசல் ஒரு பாறையின் மீது நீரோட்டத்தில் மோதி கவிழ்ந்தது. நான் தண்ணீரில் தத்தளிக்கின்றேன்.
வேகமாக காவேரி என்னை இழுத்துப் போகிறது. என் வாயிலும் மூக்கிலும் தண்ணீர் புகுகிறது. இரண்டுமுறை நான் தலையை தண்ணீருக்கு மேலே கொண்டுவந்தேன், நான் செத்துக் கொண்டிருக்கிறேன். வீடு, அம்மா, மீன் பிடிக்கும் ஆற்றங்கரை என எல்லாம் நொடிப்பொழுது வந்து போகிறது. நான் மூழ்குகிறேன். என் கடைசி மூச்சும் விடைபெறப்போகிறது. என்னுள் மரண அதிர்வுகள். மெல்ல இருள் கண்களை கவ்வுகிறது.
ஒரு கணநேர அளவில் மரணம் நிற்கிறது. என்னை ஒருகை தலைமுடியை பிடித்து மேலே தூக்குகிறது. நான் தண்ணீருக்கு மேலே வருகின்றேன். என் தலைமுடி நீரோட்டத்தின் எதிர்த்திசையில் இழுபடுகிறது. அந்த கைகள் வெண்ணிறமானது. உப்பு பட்டால் புண்ணாகக்கூடியது. அது சின்னுவின் கைகள். ஒரு போராட்டத்திற்கு பின் நான் கரையில் சேர்க்கப்பட்டேன். பாதி நினைவுகள் மட்டுமே எனக்கிருந்தது. போலீஸ் சின்னுவை சூழ்ந்து கொண்டது.
சில அடிகள் அவனுக்கு விழுந்தது. என்னையும் சாராயக்காரன் என நினைத்து என் கால்களை மிதித்த ஒருவனையும் பள்ளிக்கூடம் படிக்கிற பையன்... கரி அள்ள வந்தான். அவனை விட்டுடுங்க என்றான் சின்னு. ஒரு பெண் சின்னுவுக்காக அலறியபடி வந்தாள். அவள் அவனின் மனைவியாக இருக்க வேண்டும். யாரோ என்னை குப்புறபடுக்கச் செய்து வயிற்றிற்கு அழுத்தம் கொடுத்து தண்ணீரை வெளியேற்றச் செய்த சமயம் பழைய சாராயப் பானைகளை தலையில் சுமக்க செய்து சின்னுவை போலீசார் கூட்டிச் சென்றார்கள். காதுக்குள் கொய்ங்... என்ற சப்தம்.
மெல்ல இருள் சூழ்ந்து கொண்டது. தீராத இருள் கண்களுக்குள். நான் இருள் சூழலிருந்து மேலே வருகின்றேன். என்னால் உடலை அசைக்க முடிகிறது. கண்களை திறக்க முயன்றேன். ஒற்றையாய் ஒரு விளக்கின் வெளிச்சம் மட்டும் தெரிகிறது. என் நெற்றியில் துணியை நனைத்து பத்து போடப்பட்டிருக்கிறது. என்மீது சில துணிகள் போர்த்தப்பட்டுள்ளது. இது என் அம்மா பக்குவமாக இருக்க வேண்டும். என் அம்மாவிடம் நான் வந்துவிட்டேனா? என் உடல் களைத்திருக்கிறது. என் கால்களுக்கு அருகில் யாரோ படுத்திருக்கிறார்கள். மீண்டும் கண்களை மூடிக்கொள்கிறேன்.
காக்கைகளின் இடைவிடாத சப்தம் கேட்கிறது. நான் கண் திறந்து பார்க்கிறேன். இருட்டு கலந்த வெளிச்சம். நான் ஒரு குடிசையினுள் படுத்திருக்கின்றேன். அந்த குடிசை எனக்கு இதற்குமுன் எப்போதும் அறிமுகமாகாத ஒன்று. என்மீது ஒரு போர்வையும் இரண்டு சேலைகளும் போர்த்தப்பட்டுள்ளன. காய்ச்சல் மிகுந்து குளிர் கண்டு இரவில் நடுங்கியிருப்பேன் போலும். என் கால்களுக்கு பக்கமாய் ஒரு சிறுமி படுத்துக் கிடந்தாள். அவளுக்கு ஏழெட்டு வயதிருக்கும். எழுந்து விடவேண்டும் என தோன்றியது.முடியவில்லை. குடிசைக்கு வெளியே யாரோ சீமாற்றினால் வாசல் பெருக்கும் ஒலி கேட்கிறது. கூடவே பேச்சு சப்தம்.
"வீட்டுக்காரனை போய் ஸ்டேசன்லே பார்த்தியா? முதலாளிகிட்டே தகவல் சொன்னியா?"
மறுபக்கம் பதிலில்லை. தொடர்ந்து வாசல் பெருக்கும் சப்தம். ""உன் புருசனை பிடிச்சிட்டு போனதுமே ஸ்டேசனுக்கு போயிருந்தா கொஞ்சம் அடியாவது குறைஞ்சிருக்கும். நீ என்னவோ ஆத்துலே போன ஒரு பையனை கொண்டுவந்து உன் மகனாட்டம் கவனிச்சுகிட்டிருக்கறே..."
நான் எங்கு படுத்துள்ளேன் என்பதை என்னால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. வாசல் கூட்டும் சத்தம் நின்றதும் ஒரு பெண் குடிசைக்குள் நுழைகிறாள். அவள் சின்னுவின் கையில் பச்சை குத்தப்பட்டிருக்கும் லட்சுமியாகத் தானிருக்கும். நான் எழ முயல்கிறேன். தலை வலிக்கிறது. அவள் என்னை பார்த்து பக்கத்தில் உட்கார்ந்து ""எந்திரிக்க வேண்டாம், இன்னும் விடியல, படுத்துக்கப்பா" என்கிறாள்.
என் கண்களில் அவளை கண்டதும் கண்ணீர் பெருகியது. சின்னுவை நினைத்துக் கொண்டேன். மீண்டும் அழுகை அதிகமானது. அவள் என் கண்ணீரை துடைத்துவிட்டாள். ""உனக்கு ஒன்னும் ஆகல, நீ நல்லா இருக்கிறே பயப்பட வேண்டாம். விடிஞ்சதும் உங்க ஊருக்கு உன்னை அனுப்பி வைக்கிறேன். என் நெற்றியில் கையை வைத்து அழுத்துகிறாள். தலைவலிக்கு சற்று ஆறுதலாயிருந்தது. மீண்டும் என் கண்ணீரை துடைத்து விட்டாள். நான் அவள் கையை பிடித்துக் கொண்டு ""அம்மா" என்றேன்.
மெல்ல விடியத் துவங்கியிருந்தது.
""எந்த ஊர் நீ போகனும்"
நான் அங்கு வந்ததை சொல்லி முடித்தேன்.
""போலீஸ் சுத்திக்கிட்டிருந்ததாலே, பயந்துக்கிட்டு கூட வந்தவங்க போயிருப்பாங்க. நான் உன்னை அனுப்பி வைக்கிறேன்" என கூறிவிட்டு அவள் எழுந்து எனக்கு டீ வைக்க அடுப்பு பக்கம் போனாள். காய்ந்த வெள்ளவேலாம் பட்டைகள் மடமடவென அடுப்பில் எரிந்து டீ தயாரானது. நான் டீக்குடித்து முடித்து முகம் கழுவி உட்கார்ந்தபோது பிழிந்து காய வைத்திருந்த என் சட்டையை எடுத்துக் கொடுத்தாள். என்னை கூட்டிக் கொண்டு பேருந்து நிறுத்தம் வந்தாள்.
கூடவே அவளின் மகளும் வந்தாள். அப்போது ஒரு சிலர் அவளிடம் சின்னுவைப் பற்றி விசாரித்தார்கள். ""போய் பார்க்கனும்" என்று மட்டும் சொன்னாள். ஆற்றில் விழுந்த என்னை சிலர் பார்த்தனர். பேருந்து நிறுத்தத்தில் என் கையில் பத்து ரூபாயை திணித்தாள். எனக்குள் கொஞ்சம் தடுமாற்றமும், பலகீனமும் இருந்தது. திடுமென்று என்னை கையைப் பற்றிக்கொண்டு அவளும் பேருந்தில் ஏறிக்கொண்டாள்.
""ஊருக்கு வந்து விட்டுட்டு வந்திடறேன் தனியா அனுப்ப மனசு வரல""
பேருந்து காவேரியின் ஒரு கரையை ஒட்டி நீண்டிருந்த தார்ச்சாலையில் சென்றுகொண்டிருந்தது. சூரிய வெளிச்சத்தில் சிறுசிறு நட்சத்திரத் துகள்கள் போல பிரதிபலிப்பு நீரில் எதிரொலித்தது. ஆற்றில் புதிய தண்ணீர் செம்மண் நிறத்தில் ஓடியது.
பின்னொரு நாளில் நான் காவேரியில் நீந்த கற்றுக் கொண்டேன். காவேரி நீச்சலை மட்டுமல்ல சின்னு, லட்சுமியின் மூலமும் எனக்கு பல புதியவற்றை கற்றுக் கொடுத்திருந்தது. அந்த புதியவற்றிற்கு தலைப்பிடவோ, இன்னது என வரையறை செய்யவோ என்னால்முடியவில்லை. ஆனால் ஆசானாய் இருந்து ஆறு எனக்கு கற்றுத்தந்த அந்த புதியவை வாழ்வின் எல்லா கணங்களிலும் உடன் வரவேண்டும் என நான் விரும்புகிறேன்.