சமீபத்தில் காஷ்மீரை சேர்ந்த எனது இளம் நண்பர் ஒருவர் அங்குள்ள வாழ்நிலை பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். அரசியலில் பணம் நாட்ட ஈனச் செயல் புரிபவர்களின் சதுப்பு நிலமாக காஷ்மீர் உள்ளது. சந்தர்ப்பவாதம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் இரக்கமற்ற கொடூரங்களால் காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஊறித் திளைக்கும் ஒரு உருவற்ற சமூகத்தில், தீவிரவாதிகள், காவல்துறை, உளவுப்பிரிவு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பின்பு காலப்போக்கில் ஒருவர் மற்றொருவராக உருமாறுகிறார்கள்.

முடிவற்ற கொலைகள், தலைமறைவு, முணுமுணுப்பு, விடை காணப்படாத புரளிகள் இவைகளோடு தான் அங்கு வாழவேண்டியுள்ளது. காஷ்மீரில் வசிப்பவர்களுக்கு இதில் எது தெரிவிக்கப்படுகிறது? இது தெளிவற்று உள்ளது. காஷ்மீரை தவிர்த்த இந்தியாவுக்கு இதில் நடப்பதாக கூறப்படுவது எதுவோ. ஒரு காலத்தில் வியாபாரத்தின் மையமாகத் திகழ்ந்த காஷ்மீர் இப்பொழுது மனநோயகமாக மாறியுள்ளது என்றார் அவர்.

இன்னும் தீர யோசித்தால், இவை இந்தியா முழுமைக்கும் பொருந்தும் திசையில் தான் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த மனநோயகத்தின் உயிருக்கு இடரான காப்புக் கூடங்களாக காஷ்மீரும், வடகிழக்கு மாநிலங்களும் திகழ்கிறது. ஆனால்நாடு முழுவதிலும் நமக்கு தெரிந்ததற்கும் நடப்பதற்கும் இடையே இடைவெளி உண்டாக்குகிற தந்திரம் உள்ளது.

Arunthathi Roy

நமக்கு தெரிந்ததற்கும் நமக்கு சொல்லப்பட்டதற்கும் இடையே, தெரியாததற்கும் உறுதியாக கூறப்பட்டதற்கும் இடையே, மறைக்கப்பட்டதற்கும் அறிந்ததற்கும் இடையே, நடந்ததற்கும் அனுமானத்துக்கும் இடையே, நிஜ உலகத்திற்கும் தோற்றம் காண்பிக்கிற உலகிற்கும் இடையே, இந்த உலகம் முடிவற்ற அனுமானங்களின் களமாகவும், மனப்பிறழ்வு உண்டாவதற்கான வாய்ப்புள்ள களமாகவும் மாறி உள்ளது. நச்சுத் திரவம் நன்கு கொதிக்க வைத்து, கலக்கப்பட்டு மிகவும் தீங்கான, அநாகரிகமான அரசியல் தேவைக்கு விநியோகிக்கப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் ஒரு தீவிரவாத கும்பல் தாக்குதல் தொடுக்கும் பொழுது அங்கே அரசு, எந்த தரவுகளோ, ஆதாரங்களோ அற்ற எந்த விசாரணையும் நடத்தாமல், பழி போடுவதற்கான ஒரே நோக்கோடு தலையிடுகிறது. அது கோத்ரா ரயில் எரிப்போ, டிசம்பர் 13 பாராளுமன்றத் தாக்குதலோ, சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட சித்திசிங்பூராச் சம்பவமோ, மேற்கூறப்பட்ட எல்லா நிகழ்வுகளிலும் முடிவாக பல ஆதாரங்கள் நமக்கு தெரிய வந்தது. அமைதியை குலைய வைக்கிற பல கேள்விகளை அவை எழுப்பின.

ஆனால் அந்த கேள்விகள் உடனே குளிரூட்டியில் வைத்து அடைக்கப்பட்டது. கோத்ராவை எடுத்துக் கொள்ளுங்கள். சம்பவம் நடந்ததும் உள்துறை அமைச்சர் அதை ஐ.எஸ்.ஐ சதி என்கிறார். வி.எச்.பி இது இஸ்லாமியர்களின் பெட்ரோல் குண்டு வீச்சு என்கிறது. பல அபத்தமான கேள்விகள் விடைகளற்றது. நம் முடிவற்ற அனுமானம் தொடர்கிறது. தான் நம்ப வேண்டும் என்று நினைப்பதை ஒவ்வொருவரும் நம்புகிறார். ஆனால் இவை வெறுப்புணர்வை விதைக்க மிகக் கவனமாக திட்டமிடுதலுடன் வகுப்புவாத வெறித்தனத்தை உருவாக்கப் பயன்படுத்துகிறது.

செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்பு உற்பத்தி செய்யப்பட்ட பொய்களும், தவறான தரவுகளையும் அடிப்படையாக வைத்து அமெரிக்க அரசு ஒரே நாட்டோடு நிறுத்தாமல் அடுத்த ஒரு நாட்டின் மீதும் படையெடுத்துள்ளது. இன்னும் என்னவெல்லாம் நிகழ இருக்கிறதோ.

இந்திய அரசு அடுத்த நாட்டின் மீது அல்ல தன் சொந்த மக்கள் மீதே இந்த தந்திரத்தைப் பிரயோகிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படைகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரக்கணக்கில் நீள்கிறது. சமீபத்தில் மும்பை போலீசார் மனம் திறந்து உரையாடினார்கள். தலைமையின் உத்திரவுக்கு இணங்க அவர்கள் பலரை கொன்று குவித்ததை கதை கதையாக விவரித்தார்கள். ஆந்திராவில் சராசரியாக வருடத்திற்கு 200 தீவிரவாதிகள் இது போன்ற தாக்குதல்களில் கொல்லப்படுகிறார்கள்.

தொலைந்து போனவர்களின் தாய், தந்தை(யரின்) அமைப்பு தனது கணக்கெடுப்பின்படி 2003ல் மட்டும் 3000 நபர்கள் கொல்லப்பட்டதாகவும் அதில் 463 பேர் ராணுவத்தினர் என்றும் தெரிவிக்கிறது. குணமளிக்கும் தொடுதலுடன் அங்குள்ள மக்களை நிம்மதியளிப்பதாக உறுதி கூறி 2002 அக்டோபரில் முப்தி முகமத் சயீதின் அரசு பதவி ஏற்ற பின், 54 சிறைகாப்புச் சாவுகள் நிகழ்ந்துள்ளதாக கூறுகிறது.

ஆனால் இந்த உயர் தேசிய காலகட்டத்தில் கொல்லப்படுபவர்கள் தீவிரவாதிகளாக, ஊடுருவல்காரர்களாக, அரசை எதிர்த்து போராடுபவர்களாக, வன்முறை கும்பலை சேர்ந்தவர்களாக பெயரிடப்படும் வரை கொலைசெய்தவர்கள் புனிதப்போரில் பங்கேற்றவர்களாக, தேசத்தை பாதுகாப்பவர்களாக இந்தியா முழுவதிலும் சுதந்திரமாக வலம் வருகிறார்கள். இவர்கள் எந்த கேள்விக்கும் உட்பட்டவர்கள் அல்ல.

மக்களை பெரும் பயமூட்டுகிறதும், தொல்லை கொடுப்பதும் இந்திய ஆளும் வர்க்கத்தின் இயற்கையான போக்குகளாக மாறிவிட்டது. பொடா சட்டத்தின் நடைமுறையால் அத்தகைய போக்குகள் நிறுவனமயமாக்கப்பட்டு விட்டது. இந்த சட்டம் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அமுலாக்கப்பட்டுள்ளது.

பொடாவை உற்று நோக்கினால் அதில் கொடுமைகள் வியாபித்திருப்பதை நம்மால் உணர முடியும். எவருக்கும் பொருந்தும் ஆற்றல் படைத்தது இந்த பொடா சட்டம். ஆயுதங்களுடன் பிடிபட்ட அல்கொய்தா தீவிரவாதியாக அல்லது வேப்பமரத்தடியில் புல்லாங்குழல் இசைத்துக் கொண்டிருக்கும் ஆதிவாசியாக இருந்தாலும் சரி, அது நானாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் பொடா பொருந்தும். மேதாவித்தனம் படைத்தது பொடா. அரசியல் தேவைக்கேற்ப தன்னை உருமாற்றிக் கொள்ளும் பொடா.

நம்மை ஆள்பவர்களின் சகிப்புத்தன்மையின் மீது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசாங்கத்தின் மீது எழும் விமர்சனங்களைக் கட்டுப்படுத்திட தமிழ்நாட்டில் பொடா பயன்படுகிறது. 3200 அப்பாவி ஆதிவாசிகளை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று பொடாவின் கீழ் கைது செய்து முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்துள்ளது ஜார்கண்ட் அரசாங்கம். நில மீட்பு மற்றும் வாழ்வுரிமைக்காக போராடுபவர்கள் மீது கிழக்கு உத்திரபிரதேசத்தில் பொடா பாய்கிறது. குஜராத்திலும் மும்பையிலும் பொடா பிரத்யேகமாக இஸ்லாமியர்களின் மீது பயன்படுத்தப்படுகிறது.

2002ல் குஜராத் அரசால் தலைமை ஏற்று நடத்தப்பட்ட படுகொலையில் 2000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். 1,50,000 பேர் வீடுகளை இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக ஆக்கப்பட்டார்கள். இந்த சம்பவங்களின் பின்னணியில் 287 பேர் மீது பொடா சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 286 பேர் இஸ்லாமியர். எஞ்சிய ஒருவர் சீக்கியர். பொடா சட்டத்தின்படி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படுகிற வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியமாக தாக்கல் செய்யலாம். பொடா காவல் நிலைய விசாரணைகளை காவல் நிலைய சித்தரவதைகளாக மாற்றுகிறது. துரிதமானதாக செயல்படுகிறது. செலவுகள் குறைவாகிறது. நிரம்ப லாபம் தரக்கூடியது. அரசாங்கம் தன் செலவுகளை குறைப்பது பற்றி பேசப்படுகிற காலமிது.

கடந்த மாதம் பொடா விமர்சன மக்கள் மன்றத்தின் உறுப்பினராக நான் இருந்தேன். நம் அற்புத ஜனநாயகத்தில் அரங்கேற்றப்படும் கொடுமைகளை இரண்டு நாட்கள் கேட்க நேர்ந்தது. கட்டாயப்படுத்தி மூத்திரம் குடிக்க வைப்பது, நிர்வாணப்படுத்துவது. இழிவுபடுத்துவது, மின்சாரத்தால் அதிர்ச்சி தருவது, சிகரெட்டால் உடலில் சுடுவது. மலவாயில் பழுத்த இரும்பு கம்பியை வைப்பது. அடிப்பது, பூட்சால் மிதித்தே கொன்று விடுவது இவை எல்லாம் காவல் நிலையத்தில் நடக்கும் செயல்கள் என்று என்னால் இதை உறுதியாக கூற முடியும்.

பொடா நீதிமன்ற நடவடிக்கைகள் மக்கள் ஆராய்தலுக்கு அணுக முடியாதவை. கிரிமினல் சட்டத்தை தலைகீழாக மாற்றுகிறது பொடா. ஒருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவர் அப்பாவி. பொடாச் சட்டப்படி நீங்கள் சம்பந்தப்படாத குற்றமாக இருந்தாலும் சரி அது நிரூபிக்கப்படும் வரை நீங்கள் ஜாமீனில் வெளிவர இயலாது. விஞ்ஞான ரீதியாக பார்த்தால் தண்டிக்கப்படுவதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் தேசமிது. பொடா துஷ்பிரயோகம் செய்யப்படுகிறதா என்று யோசித்தால் அது சூதுவாதற்ற சிந்தனை.

எதிர்மறையாக பார்த்தால் அது எந்த காரணத்திற்காக நடைமுறையில் வந்ததோ அதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. மாலிமாத் குழுவின் பரிந்துரைகளை நாம் அமுல்படுத்தினாலே பொடா தேவைக்கு அதிகமானதாகிவிடுகிறது. நடப்பில் உள்ள கிரிமினல் சட்டங்களில் சில திருத்தங்களை ஏற்படுத்தினால் அது பொடாவுக்கு இணையான சட்டமாக மாறிவிடும் என்று மாலிமாத் குழு மீண்டும் பரிந்துரைக்கிறது. பிறகு கிரிமினல்களே இருக்கமாட்டார்கள் எல்லாம் தீவிரவாதிகளே. இது ஒரு ஒழுங்கு.

இன்று காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது. ராணுவத்தில் அதிகாரிகள் மட்டும் அல்ல பல இளநிலை அதிகாரிகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும். அவர்களின் பார்வைக்கு பொது ஒழுங்கை குலைக்கும் அல்லது ஆயுதங்கள் வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டாலோ இந்தச் சட்டப்படி வன்கொடுமை புரியும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இவை நம்மை எங்கே இட்டுச் செல்லும் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிலை. மறைந்து போனவர்கள். கொடுமைகளுக்கு ஆளானவர்கள், சிறை காப்புச் சாவுகள், பலாத்காரங்கள், பாதுகாப்பு படைகளின் கூட்டு பலாத்காரங்கள் இவைகளின் தகவல்கள் நம் ரத்தத்தை உறையவைக்க போதுமானவை. சட்டபூர்வமான மக்களாட்சி என்ற கௌரவத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதன் மத்திய தரவர்க்கத்தின் மத்தியிலும் இந்த அம்சம் கொண்டாடப்படுகிறது.

1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை கட்டுப்படுத்த லின்லித்கோ பிரபு இயற்றிய பலம் பொருந்திய சட்டத்தின் கடும் வடிவம் தான் இங்கு நடைமுறையில் உள்ள இந்த சட்டம். 1958ல் மணிப்பூரின் சில பகுதிகள் பதட்டமான பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டு அங்கே இந்த சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. 1965ல் ஒட்டு மொத்த மிசோரம் (அன்று அஸ்ஸாமின் ஒரு பகுதி) பதட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த சட்டம் திரிபுராவுக்கு நீட்டிக்கப்பட்டது. 1980ல் மொத்த மணிப்பூர். பதட்டத்தை தீவிரப்படுத்த இது போன்ற சட்டத்தை பெரும் நிலப்பரப்புகளின் மீது குறுகிய காலத்தில் பயன்படுத்துகிறது அரசு. இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா?

இத்தகைய எந்த வழக்கையும் புலன் ஆய்வு செய்ய விருப்பம் இல்லாத இந்திய அரசு, சட்டங்களை காட்டி மக்களைப் பெரும் பீதியூட்டவும் உண்மை நிலவரங்களை வெளித்தெரியாமல் அடக்கி வைக்கவும் விரும்புகிறது. பல ஆதாரங்கள் குவிந்து கிடந்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன. 1984ல் 3000 சீக்கியர்கள் தில்லியில் கொலை செய்யப்பட்டதானாலும் சரி, 1993ல் பம்பாயில் இஸ்லாமியர்கள் படுகொலையானாலும் சரி, 2002ல் குஜராத் படுகொலையாலும் சரி(இன்று வரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை).

சில ஆண்டுகளுக்கு முன் ஜே.என்.யு பல்கலைக்கழக பேரவைத் தலைவர் சந்திரசேகரின் கொலையானாலும் சரி, 12 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட சத்திஸ்கர் முக்தி மோர்ச்சாவின் சங்கர் குஹாயோகியின் படுகொலையானாலும் சரி, இவை எடுத்துக்காட்டுக்குச் சில உதாரணங்களே. உங்களுக்கு பக்கபலமாக அரசாங்கங்கள் இருக்கும் பொழுது கணக்கில் அடங்கா சாட்சியங்களும், மக்களின் வாக்குமூலங்களும், கண்ணீர்க் கதைகளும் போதுமானவை அல்ல உங்களை தண்டிப்பதற்கு.

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க பொருளாதார நிபுணர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் பொருளாதார நாளிதழ்களில் தெரிவிக்கிறார்கள் நாம் கணிசமாக வளர்ச்சி கண்டிருப்பதாக, கடைகள் நுகர்வு பொருட்களால் நிரம்பி குவிவதாக, அரசாங்க உணவு கிடங்குகள் தானியங்களால் நிரம்பி ததும்புவதாக. இந்த வட்டத்திற்கு வெளியே சென்று பார்த்தால் விவசாயிகள் கடனில் மூழ்கி நூற்றுக்கணக்கில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

ஊட்டக்குறைபாடும் பட்டினி சாவுகளின் செய்திகளும் நாட்டின் குறுக்கிலும் நெடுக்கிலும் குவிந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் நமது அரசாங்கம் 63 மில்லியன் டன் உணவு தானியங்களை அழுகிப்போக அனுமதித்தது. 12 மில்லியன் டன் உணவு தானியங்களை மிகவும் மலிந்த மானிய விலையில் ஏற்றுமதி செய்யக் கையெழுத்திட்டது. சொந்த நாட்டின் ஏழைகளுடன் இதை பகிர்ந்து கொள்ள மனமில்லாமல். ஒரு நூற்றாண்டு கால உணவு தானிய உற்பத்தி மற்றும் உட்கொள்ளும் அளவுகள் குறித்த ஆய்வுகளை நடத்தியுள்ளார் விவசாயப் பொருளாதார நிபுணர் உட்ஸா பட்நாயக்.

அவரின் கூற்றுபடி 1990 முதல் 2001 வரையிலான காலக் கட்டத்தில் உட்கொள்ளும் அளவுகள் மிகவும் குறைந்து விட்டது. இது இரண்டாம் உலகப்போர் மற்றும் 30 லட்சம் பேர் பட்டினியால் மடிந்த வங்கப் பஞ்சத்தைவிட குறைந்துவிட்டதாக கூறுகிறார். உலகப்புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் பேராசிரியர் அமர்த்தியா சென்னின் வார்த்தைகளின் படி, ஜனநாயகங்கள் பட்டினிச் சாவுகளை நிகழ அனுமதிப்பதில்லை. கட்டுப்பாடற்ற செய்தி ஊடகங்களின் வாயிலாக பிரபலமடைவதில் தான் அரசுகளின் பெருங்கவனம் குவிந்துள்ளது.

இன்று ஊட்டக்குறைபாடும் தொடர் பட்டினியின் அபாயகர அளவுகோல்கள் தான். மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 47 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டக்குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 46 சதவிகிதம் கடும் கவனம் ஈர்ப்பவை. உட்ஸா பட்நாயகின் கூற்றுப்படி கிராமப்புறங்களில் வாழ்கின்ற 40 சதவிகிதம் பேரின் உணவு உட்கொள்ளும் அளவு சகாரா ஆப்பிரிக்க மக்களின் உட்கொள்ளும் அளவுகளுக்கு சமமானதாக உள்ளது. 1990களின் துவக்கத்தில் உட்கொண்டதைவிட சராசரியாக வருடத்திற்கு 100 கிலோ கிராம் குறைவான உணவை உட்கொள்கிறது கிராமப்புறத்தில் வாழும் ஒரு குடும்பம். சுதந்திரம் பெற்ற பிறகு, கடந்த ஐந்து ஆண்டுகளில் தான் நகர்புற கிராமப்புற வருமான விகிதங்களில் சமனற்ற உயர்வு தாழ்வு நிலைகளை கண்டிக்கிறோம்.

ஆனால் நகர்ப்புற இந்தியாவில் நீங்கள் எங்கு சென்றாலும் அது ரயில் நிலையமோ, விமான நிலையமோ, உடற்பயிற்சிக் கூடமோ, மருத்துவ மனையோ, அங்கே தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஏற்கனவே வாக்குறுதிகள் நிஜமாகிக் கொண்டே இருக்கிறது. இந்தியா ஒளிர்கிறது இதமான உணர்வு. காதுகளை இறுக மூடிக்கொண்டால் காவல்துறையின் பூட்ஸ் கால்களால் யாரோ ஒருவரின் விலா எலும்புகள் முறியும் ஓசை கேட்கிறது. உங்கள் பார்வையை இந்த ஏழ்மை நிலைகளில் இருந்து சற்று விலக்கினால், சேரிகள், நொறுக்கப்பட்ட கந்தலான மக்கள் தெருக்களில், உடன் அருகில் இருக்கிற தொலைக்காட்சிப் பெட்டியைப் பாருங்கள் நீங்கள் ஒரு முற்றிலும் புதிய அழகிய உலகத்தினுள் பிரவேசித்து விடுவீர்கள்.

அது நிரந்தரமாக இடுப்பு துடிக்கும் ஆட்டங்களை ஆடிக்கொண்டிருக்கும் பாலிவுட் நட்சத்திரங்களின் உலகம். நிரந்தர சிறப்புரிமை பெற்ற, இந்தியாவின் நிரந்தர மகிழ்ச்சியானவர்கள் கைகளில் மூவர்ணக்கொடியசைத்துக் கொண்டிருக்கிறார்கள், இதமான உணர்வு, எது நிஜம் எது தொற்றுலகம் என்று விளங்கிக் கொள்வது வரவர கடினமான காரியமாக மாறிவிட்டது. பொடா போன்ற சட்டங்கள் தொலைக்காட்சி பெட்டியின் பொத்தான்களாக மாறிவிட்டன.. இதை அழுத்தினால் தேவையற்றவர்கள், தொந்தரவு தருபவர்கள், ஏழைகளிடமிருந்து நீங்கள் விடுபட்டு விடலாம்.

புதிய வகைப்பட்ட பிரிவினைவாத இயக்கம் நடந்து வருகிறது. இதை நாம் புதிய பிரிவினைவாதம் என்றே அழைக்கலாம். இது பழைய பிரிவினைவாதத்தின் தலைகீழ் வடிவம். எந்த வகையிலும் இந்த நாட்டை சாராத ஒரு புதிய வகைப்பட்ட பொருளாதாரத்தை சார்ந்த, வித்தியாசமான கிரகத்தை சார்ந்தவர்கள் நாங்கள் இந்த நாட்டின் ஒரு பகுதியே என்ற பிரகடனப்படுத்தும் பொழுது அது நிகழ்கிறது.

இந்த புதிய பிரிவினைவாதத்தில் ஒரு மிக சிறிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அளவு கடந்த பெரும் செல்வந்தர்களாக மாறிவருகிறார்கள். அவர்கள் பெரும்பான்மை சமூகத்திடமிருந்து நிலம், நீர், சுதந்திரம், பாதுகாப்பு, பெருந்தன்மை, போராடுவதற்கான அடிப்படை உரிமை என சகலத்தையும் அபகரித்தும் அனுபவித்தும் வருகிறார்கள். இது ஒரு குறுக்காகவோ, பகுதி சார்ந்தோ அல்ல செங்குத்தான பிரிவினை, இது நிஜமான அமைப்பு மாற்றம். இந்தியா ஒளிர்கிறதை இந்தியாவிடமிருந்தும், இந்தியா தனியார்மயம் லிமிடெட்டை இந்தியாவை பொது துறையிடமிருந்தும் வித்தியாசப்படுத்திப் பிரிக்கிறது.

இதன்படி பொது கட்டுமானம், உற்பத்தி, பொதுச்சொத்துதண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுகாதாரச் சேவைகள், கல்வி, இயற்கை வளங்கள் என்று அரசாங்கத்தால் மக்களின் தேசத்தின் நலன் கருதி பாதுகாக்க வேண்டிய சொத்துக்களை, மக்களின் வரி பணத்தில் கடந்த பத்தாண்டுகளாக நிறுவி நிர்வகித்து பராமரிக்கப்பட்ட சொத்துக்களை இன்று தனியார் நிறுவனங்களிடம் விற்று வருகிறது. இந்திய ஜனத்தொகையில் 70% பேர், அதாவது 700 மில்லியன் மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கை இயற்கை வளங்களை அபகரித்து அதை தனியார் நிறுவனங்களின் கையிருப்பாக்குவது கைவிடப்பட்டவர்களின் ஏழ்மையாக்கத்தை இன்னும் அதிகரிப்பதற்கான துவக்கமே.

இந்தியா தனியார்மயம் லிமிடெட்டை மிகச் சில கூட்டாண்மை நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் கைப்பற்றிவரும் காலம் நெருங்குகிறது. இந்த சில நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் நம் நாட்டை, கட்டுமானங்களை, வளங்களை, மீடியாவை, பத்திரிக்கையாளர்களை வழி நடத்தி வருகிறார்கள். இதில் மக்களுக்கு எந்த பங்களிப்பும் இல்லை. சட்டபூர்வமாக, சமூகமாக, கொள்கை சார்ந்து நன்மை தீமைகள் சார்ந்து எந்த கேள்விக்கும் உட்படாதவர்கள் இவர்கள். இந்த சில தலைமை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான் இந்திய பிரதமர் இருக்கிறார் என்று பேசுபவர்களுக்கும் மிகச் சரியாக விஷயம் புரிந்துள்ளது என்று அர்த்தம்.

இதனால் ஏற்படுகிற பொருளாதார நடைமுறைகள் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவை. இதன் பயன் உறுதி, பெரும் வியப்பு, சாதுர்யத்தனம் பற்றி பேசப்பட்டாலும், இந்திய அரசு சில தனியார் நிறுவனங்கள் வசம் தனது கடமையை அடமானம் வைத்து தனது பொறுப்பிலிருந்து தப்பித்து வருகிறது. இதனால் நம் காதுகளை துளைக்கிற வாக்காளர் குடியாட்சியின் நாடகத்தில் இன்னும் அர்த்தம் இருக்கிறதா? இல்லை அதன் பங்களிப்பு இருக்கிறதா?

கட்டுப்பாடற்ற சந்தைக்கு மிகவும் கடுமையான அரசாங்கம் தேவைப்படுகிறது. செல்வ ஏழ்மைக்கான ஏற்றத்தாழ்வு அதிகரிக்க, ஏழைநாடுகளின் அரசுகள் தங்கள் பொறுப்புகளிலிருந்தும் கடமைகளிலிருந்தும் வெளியேறி வருகின்றனர். கண்டிக்கத்தக்க செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் அரசாங்கங்களின் துணையின்றி அசுரலாபம் தரும் ஒப்பந்தங்களை கட்டாண்மை நிறுவனங்களால் செயல்படுத்த இயலாது. கட்டாண்மை உலகமயமாக்கத்திற்கு மிகவும் பணிவான, ஊழல் மலிந்த, கண்டிப்புடன் நடந்து கொள்ளும் அரசுகளின் தேவை இருக்கிறது. (ஏழை நாடுகளில்) அவைகளின் துணை இன்றி எதிர்ப்பு குரல்களை கலகங்களை தகர்த்து எறியும் சாத்தியம் இல்லை. இதைத்தான் நல்ல முதலீட்டுச் சூழலின் உருவாக்கம் என்று சொல்கிறார்கள்.

வரும் தேர்தல்களில் நம் வாக்கை கட்டாய நிலையை, அடக்குமுறையை அமுல்படுத்த இருக்கும் எந்த அரசியல் கட்சியின் ஆட்சிக்கு முதலீடு செய்ய இருக்கிறோம்.

புதுமை தாராளமய முதலாளித்துவத்திற்கும் வகுப்புவாத பாசிசத்திற்கும் இடையே பேரம் நடத்த வேண்டிய சூழலில் நாடு உள்ளது. இன்னும் முதலாளித்துவம் தனது முழு அர்த்தத்தை இழந்து விடாத காலமிது. இருப்பினும் பாசிசம் என்ற வார்த்தையை பிரயோகிப்பது கூட குற்றமாகலாம். அதனால் இந்த வார்த்தையை நாம் சரியாகத்தான் பிரயோகிக்கிறோமா? என்று நம்மை நாமே ஒரு முறை கேட்டுக் கொள்வோம். நாம் சூழ்நிலையை மிகைப்படுத்திப் பார்க்கிறோமா. இல்லை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்கள் பாசிசம் என்று வர்ணிக்க தகுதி பெறவில்லையா?

ஒரு அரசு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக படுகொலைகளை ஆதரித்து அதில் கொடூரமான முறையில் 2000 பேர் மரணம் அடையும் பொழுது, இது பாசிசம் இல்லையா? இந்த சமூகத்தைச் சார்ந்த பெண்கள் தெருக்களில் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்படும் பொழுது, இது பாசிசம் இல்லையா? 1,50,000 பேர் வீடுகள் இழந்து பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்படும் பொழுது, இது பாசிசம் இல்லையா? வெறுப்பை விதைக்கும் கலாச்சார நிறுவனங்கள் பிரதமரின், உள்துறை அமைச்சரின், சட்ட அமைச்சரின், பொதுத்துறை ஒழிப்பு அமைச்சரின் நன்மதிப்பையும் ஆதர்சத்தையும் பெறும் பொழுது, இது பாசிசம் இல்லையா?

இதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஓவியர்கள், எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள், திரைப்படத்துறைச் சேர்ந்தவர்களின் படைப்புகள் எரிக்கப்பட்டு, அவர்கள் இழிவு படுத்தப்பட்டு அச்சுறுத்தப்படும் பொழுது, இது பாசிசம் இல்லையா? அரசாணைகளை பிறப்பித்து ஒரு அரசாங்கம் பள்ளி பாடப்புத்தகங்களில் திருத்தங்களை கொணரும் பொழுது, இது பாசிசம் இல்லையா? வகுப்புவெறி கும்பல்கள் தொன்மையான வரலாற்று ஆவணங்களை தீயிட்டுக் கொளுத்தும் பொழுது, இது பாசிசம் இல்லையா?

ஒரு கேடுகெட்ட கத்துக்குட்டி அரசியல்வாதி கூட தான் ஒரு மத்திய கால தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அல்லது வரலாற்றாளர் என்று நடிக்கும் பொழுது, மிகவும் பொருளாதார நெருக்கடியிலும் வழங்கப்படும் கருணைத் தொகைகளை இது போன்ற பாமர பாராட்டு நோக்கியவர்களுக்கு தாரை வளர்க்கும் பொழுது, இது பாசிசம் இல்லையா? பெரும் வசதி படைத்தவர்களும் மத்திய தர வர்க்கமும் சற்றே ஒருகணம் தங்கள் நடையை தளர்த்தி, பின் தங்கள் தினசரி வாழ்விற்குள் தொலைந்து போகும்பொழுது, இது பாசிசம் இல்லையா? இது பாசிசம் இல்லையா?

சிறந்த நிர்வாகியும், தொலைநோக்குப் பார்வையும் படைத்த நம் பிரதமர் இவைகளை பார்வையிட்டு தனது பாராட்டுக்களையும் புகழுரைகளையும் நிகழ்த்தும் தருணத்தில் நாம் ஒரு முழு வீச்சிலான பாசிசத்திற்கு அடிக்கல் நாட்டிக் கொண்டிருக்கிறோம்... இல்லையா?

வெறிகொள்ளப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் வரலாறு, வரலாற்றில் சில பத்திகளாக முக்கியத்துவமற்று சுருக்கப்பட்டுள்ளது. உயர்சாதி இந்துக்களுக்கு இந்த வரலாற்று துரோகங்கள் பொருந்தாது. இந்த வரலாற்று தீங்கிழைப்புகளின் அரசியல் பாதை சரி என்று நம்மால் தேர்வு செய்யப்பட்டால் பின்பு உறுதியாக ஆதிவாசிகள் மற்றும் தலித்துக்களை கொலை புரியவோ, அவர்களுக்கு குறிக்கோளற்ற சேதங்கள் விளைவிக்கவோ சகல உரிமையும் இருக்கிறது.

ரஷ்யாவின் கடந்த காலம் முன்னறிந்து கொள்ள முடியாதது. இந்தியாவில் பள்ளிப் பாடப்புத்தகங்களில் வரலாற்றுத் திருத்தங்கள் செய்தபின் அந்த உண்மையை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. பாபர் மசூதியைத் தோண்டும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ராமர் கோவிலின் சிதிலடைந்த பாகங்களை கண்டெடுப்பார்கள் என்ற ஆசையை போலி மதச் சார்பின்மைவாதிகள் குறைத்துக் கொண்டார்கள். இந்தியாவில் ஒவ்வொரு மசூதிக்கும் கீழ் இரு இந்து கோவில் இருப்பது உண்மையானால், அந்த கோவிலுக்கு கீழ் என்ன இருந்தது?

நிச்சயமாக இன்னொரு இந்து கோவில், புத்தர்சிலை, பெரும்பான்மையாக ஆதிவாசிகள் பழங்குடியின் வழிபாட்டுத் தளம், வரலாறு உயர்சாதி இந்துக்களிடமிருந்து தான் துவங்குகிறதா? இன்னும் எவ்வளவு ஆழம் தோண்ட? இன்னும் எவ்வளவு சீர்குலைக்கலாம். இந்திய சமூகத்தில் பொருளாதார ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் சமூகமாகவும் பிரித்துப் பார்க்க முடியாத அங்கமாக திகழ்கிற இஸ்லாமியர்களை குடியேறிகள் அல்லது படையெடுத்தவர்கள் என்று வர்ணிக்கிறார்கள். அவர்களின் மீது கொடூரமான தாக்குதல்களை நிகழ்த்துகிறார்கள்.

ஆனால் நம் அரசாங்கம் மிகத் தீவிரமாக இயங்குகிறது. வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை, நம்மை காலனியாக்கி நூற்றாண்டுகள் அடிமைப்படுத்தியவர்களிடம் பெறுவதற்கு. 1876 முதல் 1892 வரை மிகக் கொடூரமான பஞ்சங்கள் நம் நாட்டைத்தாக்கிய பொழுது வெள்ளை அரசு இங்கிருந்த உணவுதானியங்கள் மற்றும் கச்சாப்பொருட்களை ஏற்றுமதி செய்வதில் மிகத் தீவிரமாக இயங்கியது. (இங்கு லட்சக்கணக்கில் இந்தியர்கள் பட்டினியால் செத்து மடிந்தார்கள்) வரலாற்றுச் சான்றுகள் இறந்தவர்களின் எண்ணிக்கையை 1 கோடியே 20 லட்சத்திலிருந்து 2 கோடியே 90 லட்சம் வரை இருக்கலாம் என்று தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை அரசாங்கத்தின் பழிவாங்கும் போக்கை வர்ணிக்கிறது இல்லையா? இல்லை இது ஒரு விளையாட்டுதான், ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் ஊறுபடத்தக்க இலக்குகள் தானோ.

கடுமையான பாசிசம் அதிகப்படியான உழைப்பைக் கோருகிறது. அது போலவே நல்ல முதலீட்டுச் சூழலை உருவாக்குவதும் கூட.

மன்மோகன் சிங் இந்திய சந்தைகளை புதிய மூலதனத்திற்கு திறந்து விட எத்தனித்து அடிப்படை வேலைகளைச் செய்து கொண்டிருந்த அதே காலத்தில் தான் அத்வானி தனது ரதயாத்திரையை நடத்தி வகுப்புவெறி விரோதங்களுக்கான விஷ வித்துக்களை விதைத்து புதிய பாசிச சூழலை உருவாக்க அடிப்படை வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். 1993ல் மகாராஷ்டிர அரசு என்ரான் மின்சார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. புதிய முதலீட்டுச் சூழலில் உருவான முதல் நிறுவனம் என்ரான்.

என்ரான் ஒப்பந்தம் அபாயகரமானதாக உருவெடுத்தது. இங்குதான் தனியார் மயத்தின் அடுத்தகட்டம் துவங்கியது. காங்கிரஸின் கைகளிலிருந்து அதிகாரத்தை பி.ஜே.பி. பறித்துவிட்டதால் அது கரைகளிலிருந்து புலம்பியது. அரசாங்கம் அசத்தியான இரட்டை கச்சேரியை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதில் தீவிரம். மறுபுறம் சீர்குலைந்த பல குரல் தேசியத்திற்கான தனது ஏக்கப்புலம்பலை, ஊளையிடுதலை, குரைத்தலை அரங்கேற்றுவதில் தீவிரம். ஒன்றின் கருணை மற்றொரு பைத்தியக்காரத்தனத்திற்கு உறுதுணையாகிறது.

பொருளாதார ரீதியாகவும் இந்த இரட்டை இசைக்குழு ஒரு ஒப்பேறக்கூடிய வடிவம். தனியார் மயத்தின் பெயரில் ஈட்டப்படும் கொள்ளை லாபத்தின் ஒரு பகுதி இந்துத்துவா சக்திகளுக்கு செலவிடப்படுகிறது (சிறுகச் சிறுக சேமித்த இந்தியா ஒளிர்கிறது) ஆர். எஸ். எஸ், வி.ஹெச். பி., பஜ்ரங்தள் மற்றும் எண்ணற்ற தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், சமூக சேவை மையங்கள் இதற்கிடையில் பத்தாயிரக்கணக்கில் ஷாகாக்களும் நடத்தப்படுகின்றன. இங்கு போதிக்கப்படும் வெறுப்புணர்வு கூட்டாண்மை உலகமயமாதலால் ஏற்படுத்தப்பட்டுள்ள கடும் ஏழ்மை, கைவிடப்பட்ட நிலை மற்றும் தாங்க முடியாத மனக் குலைவோடு சேர்ந்து கொள்கிறது. ஏழைகள் ஏழைகளின் மீதே நடத்தும் போருக்கு தீனி போடுகிறது. இந்த மிகச் சரியான தலைமறைவு நடவடிக்கை அதிகாரத்தின் கட்டமைப்பை பலமானதாகவும் சவாலற்றதாகவும் மாற்றுகிறது.

மக்களை தோல்வியுறச் செய்து அதை வன்முறையாக, வெறுப்புணர்வாக மாற்றுவது மட்டும் போதாது. நல்ல முதலீட்டுச் சூழலை உருவாக்க அரசாங்கமே நேரடியாக தலையிட வேண்டியுள்ளது.

சமீப வருடங்களில் ஆயுதங்கள் ஏதுமற்ற நிராயுதபாணிகளாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட குறிப்பாக ஆதிவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது காவல்துறை. ஜார்க்கண்டில் நகர்நர், மத்திய பிரதேசத்தில் மெஹந்திகேதா, ஒரிசாவில் ராயகரா மற்றும் சில்கா. குஜராத்தில் உமர்கவ், கேரளாவில் முத்தங்கா ஆகிய இடங்களில் போராடும் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளானவர்களை தீவிரவாதிகள் என்று அழைக்கிறது அரசு. (பி. டயிள்யூ.ஜீ., எம்.சி.சி., ஐ.எஸ்.ஐ., விடுதலைப்புலிகள்) இந்த தாக்குதல்களின் பட்டியல் நீள்கிறது ஜம்புத்வீப், காஷீபூர், மாய்கஞ் என்று.

குற்றவாளிகள் குற்றவாளிகளாக ஒப்புக்கொள்ள மறுக்கும் பொழுது அவர்கள் தீவிரவாதிகள் ஆகிறார்கள். அதனால் தான் என்னவோ இவ்வாறு கையாளப்படுகிறார்கள். இதுபோன்ற கடும் வியாதிகள் அனைத்திற்குமான ஒரே சிறந்த நோய் எதிர்ப்பு சக்திபடைத்த நிவாரணி பொடா. பயங்கரவாதத்தின் மீது போர் நடத்தப்படுகிற காலகட்டத்தில், இந்த ஆண்டு மனிதஉரிமையை மேலும் பலப்படுத்தி பாதுகாப்பதற்கு ஆதரவாக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 181 நாடுகள் வாக்களித்தன. இதற்கு ஆதரவாக அமெரிக்கா கூட வாக்களித்தது. ஆனால் இந்தியா வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விலகி நின்றது. ஒட்டுமொத்த மனித உரிமையை தகர்த்து எறிவதற்கான ஏற்பாடுகள் நம் நாட்டில் நடந்து வருகிறன.

எப்படி சாதாரண மக்களால் இந்த அதிகரித்துவரும் அரசு வன்முறையை எதிர்கொண்டு சமாளிக்க இயலும்?

அற வழியிலான ஒத்துழையாமைக்கான இடம் குறுகி வருகிறது. அறவழிப் போராட்டங்களை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வரும் பல மக்கள் போராட்ட அமைப்புகள் இப்பொழுது மிகத் தெளிவாக உணர்ந்து விட்டனர். நம் பாதை மாற்றப்பட வேண்டியதென்று. எதிர்காலப் போராட்டத்திற்கான பாதை குறித்த ஒரு முகப்படுத்தப்பட்ட கருத்து இன்னும் எட்டப்படவில்லை. ஆயுதம் ஏந்திய போராட்டம்தான் மிகச் சரியான ஒரே வழி என்று சில இயக்கங்கள் கருதுகின்றன.

பலர் பெரும்பான்மையாக தேர்தலில் போட்டியிட்டு அரசியலுக்குள் செல்வதின் மூலமே தீர்வு காண இயலும் என்று நம்புகின்றனர். இந்த அமைப்புக்குள் நுழைவது உள்ளிருந்து போராடுவது. (காஷ்மீரில் உள்ளவர்களுக்கு இது போன்று ஆயுதம் ஏந்துவது அல்லது தேர்தல் முறையில் நம்பிக்கை கொள்வது என்று முடிவெடுக்கும் நிலை உருவானது) எப்படியோ முடிவை எடுக்க வேண்டிய குழப்பமான சூழ்நிலையிலும் எல்லோரும் ஒன்றைமட்டும் ஏகமனதாக ஒப்புக்கொள்கிறார்கள் போதும் இது போதும் (உறுதிபட)

இதைவிட உறுதியான வேறு எந்த முடிவும் இந்த காலகட்டத்தில் எட்டப்படவில்லை. இதன் வெளிப்பாடு நிச்சயமாக சரியானதோ தவறானதோ மக்களின் வாழ்நிலையில் மாறுதலை கொணரும். பணக்காரர், ஏழை, நகரவாசி, கிராமவாசி எல்லோருக்கும்.

ஆயுதப்போராட்டம் அரசாங்கத்தின் பெரும் வன்முறைகளை சந்திக்க வைக்கும். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு சதுப்பு நிலங்களில் நாம் இதை சந்தித்துள்ளோம்.

வேறு என்ன, பிரதமர் கூறுகிறபடிதான் நாம் நடக்க வேண்டுமா? நம் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு தேர்தலில் குதித்துவிட வேண்டியதுதானே? பெரும்பான்மை நடவடிக்கைக்குள் சென்று எண்ணிலடங்கா அவமானங்களை சந்தித்து பரிமாறிக்கொண்டு இதில் கரைந்துவிட வேண்டுமா? அணுகுண்டுகள், பெரிய அணைகள், பாபர் மசூதி சர்ச்சை, தனியார்மயம் என்று எல்லாவற்றுக்குமான விதைகளை காங்கிரஸ் விதைத்தது பி.ஜே.பி அறுவடை செய்தது என்பதை மறந்துவிட வேண்டாம்.

இதற்கு அர்த்தம் பாராளுமன்றம் எதற்கும் லாயக்கற்றது, தேர்தலை புறக்கணியுங்கள் என்பதல்ல. அப்பட்டமான பாசிச மனப்பான்மை கொண்ட வகுப்புவாத கட்சிக்கும், சந்தர்ப்பவாத வகுப்புவாதக் கட்சிக்கும் வித்தியாசம் உள்ளது. அப்பட்டமான வெறுப்புணர்வை மக்களிடம் விதைக்கும் அரசியலுக்கும் மக்களை ஒருவர் மீது ஒருவர் மோதலுக்கு உட்படுத்துகிற அரசியலுக்கும் வித்தியாசம் உள்ளது.

ஒரு கொடூரம் அடுத்த ஒன்றிற்குள் அழைத்துச் செல்கிறது. இவர்கள் ஜனநாயகத்திற்குள் இருக்கும் எல்லா வழிமுறைகளையும் தங்களுக்குள்ளாகவே அரித்துவிட்டார்கள். தேர்தலில் வெறித்தனமும் துவேஷமும் நிரம்பிய சூழல்தான் ஊடகங்களின் மையக் கருவாக திகழ்கிறது. ஏனெனில் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் யார் வெற்றி பெற்றாலும் நடப்புச் சூழலில் எந்த மாற்றமும் நிகழப்போவது இல்லை. இது மாற்றத்திற்குட்பட்டதல்ல. பொடாவின் மீது கடுமையான உரைகளை பாராளுமன்றத்தில் நிகழ்திய எந்தக் கட்சியும் பொடாவை நீக்குவது பற்றி தங்களது தேர்தல் அறிக்கையிலும் சரி தேர்தல் பிரச்சாரத்திலும் சரி முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் பொடா நமக்கு தேவையான ஒன்றே என்று.

அவர்கள் தேர்தல் காலத்தில் எது பேசினாலும் சரி, அல்லது எதிர்கட்சியாக இருந்து பேசினாலும் சரி அது மத்தியிலோ, மாநிலத்திலோ எந்த அரசியல் கட்சியானாலும் சரி அது வலதோ, இடதோ, மையமோ, பக்கவாட்டிலானதோ எந்த அரசியல் கட்சியானாலும் சரி அவர்கள் புதிய தாராளமயக் கொள்கையை எதிர்ப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். இதில் அவர்களுக்கு எந்த குறிப்பிடத்தகுந்த வித்தியாசமும் இல்லை.

தனிப்பட்ட முறையில் தேர்தல் மாற்று அரசியலுக்கான பாதையாக எனக்குத் தோன்றவில்லை. அரசியல் சாக்கடை, ஊழல் மலிந்தது என்ற மத்திய வர்க்க குமட்டலிலிருந்து நான் இதை கூறவில்லை. நான் இந்த போர் பலம் பொருந்திய தளத்திலிருந்து அல்ல என்று நம்புகிறேன்.

வகுப்புவாத பாசிசம் மற்றும் புதிய தாராளமயம் இரண்டிற்கும் ஒரே பொது இலக்குதான் உள்ளது. அது ஏழைகள் மற்றும் சிறுபான்மையினர். (காலப்போக்கில் ஏழைகள் இன்னும் கடும் ஏழ்மை நிலைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.) புதிய தாராளமயம் இடைவெளிகளை அதிகரித்துச் செல்கிறது ஏழைகளுக்கும் வசதி படைத்தவர்களுக்கும், இந்தியாவுக்கும் ஒளிரும் இந்தியாவுக்கும், இந்த இடைவெளிகளால் எந்தக் கட்சியாவது நாங்கள் இருவரின் நலன்களையும் பாதுகாப்பதற்காக போராடுகிறோம் என்று கூறினால் அது கேலிக் கூத்தாகிறது. ஏனெனில் ஒருவரின் சௌகரியத்திற்கு அடுத்தவர் விலை கொடுக்கிறார். ஒரு வசதி படைத்த இந்தியரான (நான் அப்படி கருதுகிறேன்) என் நலன்களை எவ்வகையிலும் அந்தர விவசாயியின் நலன்களோடு பொருத்தும் வாய்ப்பே இல்லை.

ஏழைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிற கட்சி ஏழையான கட்சியாக இருக்கும். கட்சி நடத்துவதற்கே நிதியின்றி, இன்று பணம் இல்லாமல் தேர்தலை சந்திப்பது இயலாது. இரண்டொரு சமூகப் போராளிகளை பாராளுமன்றத்திற்குள் அனுப்புவதே சுவாரசியமானதாக உள்ளது. ஆனால் அது அரசியலாக அர்த்தமற்றது. நம் பலங்களை எல்லாம் ஒன்று திரட்டும் அளவுக்கு பிரயோசனமான செயல் அல்ல. சுய கவர்ச்சி, பண்பான அரசியல் அதிரடி மாற்றங்களை நிகழ்த்த உதவாது.

ஆனால் ஏழையாக இருப்பது பலமற்று இருப்பது அல்ல. ஏழைகளின் பலம் அலுவலக கட்டிடங்களிலோ, நீதிமன்ற அறைகளிலோ அல்ல. அது இந்த நாட்டின் வயல் வெளிகளில், மலைகளில், பள்ளத்தாக்குகளில், ஆற்றுப்படுகைகளில், நகரவீதிகளில், பல்கலை கழக வளாகங்களில் உள்ளது. அங்குதான் பேரங்கள் நிகழ்த்தப்பட வேண்டும். அங்குதான் நிஜமான போர் தொடுக்கப்பட வேண்டும்.

தற்சமயம் இந்தத் தளங்கள் இந்து வலதுசாரிகளால் அபகரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் அரசியல் எதுவானாலும் சரி. அவர்கள் அங்கு இருப்பதை மறுக்க இயலாது. அவர்கள் கடுமையாகவும் கவனமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்தியாவசிய பொதுச்சேவைகளான கல்வி, சுகாதாரம் என்று பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டை அரசுகள் நிறுத்தி தங்கள் கடமைகளிலிருந்து வெளியேறும் பொழுது அங்கு சங்பரிவாரின் சிப்பாய்கள் உட்புகுகிறார்கள். பத்தாயிரக் கணக்கில் அவர்கள் பள்ளிகள் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் சேவைகள், ஆபத்து உதவி மையங்கள் என பல அமைப்புகளை நடத்தி வருகிறார்கள்.

அதிகாரமற்ற நிலையை அவர்கள் உணருகிறார்கள். அதிகாரமற்ற மக்களின் தினசரி தேவைகளை, ஏக்கங்களை தவிர்த்து அவர்களின் உணர்ச்சி மயப்பட்ட, ஆன்மீக, பொழுதுபோக்கு தேவைகளைப் பற்றியும் அவர்களுக்கு மிகச் சரியான புரிதல் இருக்கிறது. அவர்களிடம் வடிவமைக்கப்பட்ட அபாயகரமான உருக்காலை உள்ளது. அதில் வெறுப்பு, கோபம், வாழ்வின் தோல்வி, எதிர்கால வாழ்வு குறித்து கனவு என்று எதையும் காய்ச்சி, வடித்து வன்செயல்களுக்கு அதை பயன்படுத்து இயலும். இடதுசாரிகள் இன்னும் ஆட்சியை பிடித்துவிடும் கனவு கண்டு வருகிறார்கள். ஆனால் இன்னும் இசைவற்று இன்றைய காலம் கோரும் பிரச்சினைகளை அணுக மறுக்கிறார்கள். அங்கு பழமை மொழியில் பழங்கால விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதை சிலரால் மட்டுமே விளங்கிக் கொள்ள இயலும்.

சங்பரிவாரின் தாக்குதல்களுக்கு சவாலாக தோற்றமளிப்பது வெகுஜன மக்கள் எதிர்ப்பு இயக்கங்கள் மட்டுமே, இவை நாடு முழுவதிலும் சிதறிக்கிடக்கின்றன. வளர்ச்சியின் இன்றைய கோர வடிவத்தால் ஏற்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்காகவும் கைவிடப்பட்டவர்களுக்காகவும் இவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த இயக்கங்கள் பெரும் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. (இவர்கள் வெளிநாட்டு கைகூலிகள், ஏஜெண்டுகள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு பின்னும்).

அவர்கள் பணம் இல்லாமல் வேறு எந்த வளங்களும் இல்லாமல் போராடி வருகிறார்கள். அவர்கள் இந்த நாட்டின் மிக அற்புதமான தீயணைப்புப்படை வீரர்கள். தங்கள் முதுகை மதில்களின் மீது அழுத்திக் கொண்டு தங்கள் காதுகளை நிலத்தின் மீது பதிய வைத்துள்ளார்கள். உண்மையோடு அவர்கள் எப்பொழுதும் தொடர்பில் இருக்கிறார்கள். இவர்களை ஒன்றிணைத்து உறுதுணைப்படுத்தி வலுவாக்கினால் நிச்சயமாக கணக்கில் எடுக்கப்பட வேண்டிய சவாலுக்குரிய சக்திகளாக உருவெடுப்பார்கள். இந்த இயக்கங்கள் நிகழ்த்தும் போர் நிகழும் பொழுது அது உயர்ந்த கொள்கைக்கான போராட்டமாக இருக்கும் அழுத்தமான கருத்தியல் கொள்கை போராட்டமாக அல்ல.

எல்லாம் சந்தர்ப்பவாதமாக மாறிய காலகட்டத்தில், நம்பிக்கை வறண்டு போன சூழலில், எல்லாம் முடிவாக வியாபாரப் பேரமாக மாறும் பொழுது, நாம் கனவு காணும் துணிச்சலை பெற வேண்டும். நீதியில் நம்பிக்கை பெற தன்மதிப்பை பெற நமக்கு ஈடுபாடு அவசியமாகிறது. இது எல்லோருக்குமானது போருக்கான பொதுநலன் வேண்டும் அதை உருவாக்க நாம் அந்தப் பழைய பெரும் இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது. யாருக்காக இயங்குகிறது, யாருக்கு எதிராக இயங்குகிறது. யார் லாபமடைகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பல அகிம்சை வழி போராடும் வெகுஜன மக்கள் எதிர்ப்பு இயக்கங்கள் ஒற்றை கோரிக்கை இயக்கங்களை நாடு முழுவதிலும் நடத்தி வருகிறார்கள். இப்படியான இந்த கோரிக்கை விருப்பங்களை சுமந்த காலம் போதுமானது. இந்த வழி தீர்வு காண போதுமானதல்ல. பலனளிக்காதது என்பதால் இந்த உத்தி மீது வெறுப்பு கொள்ள வேண்டியதில்லை. கடும் உள்முக ஆய்வு கட்டாயத் தேவையாகிறது. (ஆயிரக்கணக்கான காரணங்கள் நம்முன்) நமக்கு தீர்க்கமான பார்வை தேவை. ஜனநாயகத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்று விருப்பமுள்ளவர்கள் சமத்துவமான உத்திகளை தங்கள் போராட்ட வடிவங்களாக வைத்து போராடி வருகிறார்கள்.

நம் போராட்டம் கருத்தியல் ரீதியானது என்றால், நம் குழந்தைகள் மீது பெண்கள் மீது நடத்தப்படுகிற உள்நாட்டு விரோதங்களை நிலைப்படுத்த தொடர்ந்து முன் எச்சரிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்க இயலாது. பெரும் அணைகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் எதிர்த்து போராடுபவர்கள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மௌனமாக சம்மதிப்பது இயலாது. பெரும் அணைகளையும் வளர்ச்சி திட்டங்களையும் எதிர்த்து போராடுபவர்கள் வகுப்பு வாதத்தையும் ஜாதி அரசியலையும் தங்கள் ஆளுமையில் உள்ள பகுதிகளில் எதிர்க்காமல் இருப்பது ஆகாதுபிரச்சாரங்களின் மூலம் அவர்களின் கோரிக்கைகளுக்கு சிறிய வெற்றிகள் கிடைத்த போதிலும். சூழலுக்கு ஏற்ற சந்தர்ப்பவாதத்தோடு நாம் நம் நம்பிக்கைகளை விலை பேசினால் மைய நீரோட்ட அரசியல்வாதிகளுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லை. நமக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் அது எல்லோருக்குமான சமத்துவமான நீதியாக இருக்க வேண்டும். முன் அறிந்தவர்களுக்கோ, தனி சிறப்பு சலுகைகளுக்கோ, பேரங்களுக்கோ அப்பாற்பட்ட நீதி.

நாம் நமது அகிம்சை வழி போராட்டங்களை மெலிவுற்ற உருமாற்றி இதமான உணர்வளிக்கும் அரசியல் நாடகமாக மாற்றி விட்டோம். இதனால் பத்திரிகைகளில் செய்தியும் படமும் இடம் பெறுவது சாத்தியமாகிறது. ஆனால் குறைந்த அளவே பலன்தரக்கூடியது. புறந்தள்ளப்படுகிறது.

உடன் நாம் போராட்ட உத்திகளை பற்றி விவாதிப்போம். உண்மையான போரை தொடுப்போம், சேதங்களை விளைவிப்போம். தண்டி யாத்திரை வெறுமனே அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகமல்ல. அதற்கு வெள்ளை சாம்ராஜ்யம் நிகழ்த்திய, பொருளாதார வஞ்சகத்திற்கு எதிரான அரசியல் மறைந்திருந்தது. நாம் அரசியலுக்கான அர்த்தத்தை மீண்டும் வரையறைப்படுத்த வேண்டும். சிவில் சமூகத்தின் என். ஜீ. ஓ மயமாக்க நடவடிக்கைகள் நம்மை எதிர்த்திசையில் அழைத்துச் செல்கிறது. அது நம்மை அஅரசியல் படுத்துகிறது. நம்மை உதவிகளுக்கு காத்திருக்கவும் கையேந்தவும் வைக்கிறது. நாம் ஒத்துழையாமையின் அர்த்தத்தை மறு உருவபடுத்திக் கொள்ள வேண்டும்.

நமக்கு தேவை லோக்சபாவுக்கு வெளியே தேர்வு செய்யப்பட்ட நிழல் பாராளுமன்றம், இதன் ஆதரவும், நம்பிக்கையுமின்றி பாராளுமன்றம் இயங்க இயலாத சூழ்நிலை உருவாக வேண்டும். இந்த நிழற் பாராளுமன்றத்தின் அடிநாதமாக தரவுகளும் தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்படும் (இதில் பல தரவுகள் மெல்ல மெல்ல ஊடகங்களில் கிடைப்பதற்கு அரிதாகி வருகிறது). நம் வாழ்வை விழுங்கிக் கொண்டிருக்கும் பெரும் இயந்திரத்தின் இயங்கு பாகங்களை நாம் பயமின்றி வன்முறையற்ற வழிகளில் செயலிழக்கச் செய்வோம்.

காலம் கைநழுவி போய்க் கொண்டே இருக்கிறது. நாம் இங்கு யோசித்துக் கொண்டிருக்க வன்முறை வளையம் நம்மை நெருங்கி வருகிறது. எவ்வகையிலும் மாற்றம் உறுதியானது. அது ரத்தக்களரியாக இருக்கலாம். அழகானதாகவும் இருக்கலாம் அது நம்மை பொருத்தது.

அருந்ததிராய்- புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர். சுற்றுப்புற சூழல், அரசியல், உலகமயமாதல், மனித உரிமை என்று பல தளங்களில் இந்தியாவிலேயே புதிய மொழியில் கட்டுரைகளை எழுதி வருகிறார். எழுத்தோடு சுருக்கிக் கொள்ளாமல் போராட்டங்களிலும் முழுமையாக ஈடுபடுபவர்.

( நன்றி தி ஹிந்து 25 மே 2004 )

 

Pin It