தமிழ்நாடு அறிவியல் இயக்க ஈரோடு மாவட்டக் கிளை மீண்டும் 2 நாட்கள் (ஜன-8,9) வாசிப்பு முகாமை ஈரோட்டில் நடத்தியது. இம்முறை வாசிப்பிற்கான புத்தகங்களாக பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்ட கல்விச் சிந்தனைகள் தொகுப்பிலிருந்து பாரதி, விவேகானந்தர், அம்பேத்கர், பெரியார், காந்தி, தாகூர் ஆகியோர்களின் சிந்தனைகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

நூறாண்டுகளுக்கு முன் கல்விக்குழுக்கள் கல்வி சார்ந்த பிரச்சனைகளுக்கு எவற்றைப் பரிந்துரைத்தனவோ அவையே இன்றளவும் நீடிக்கிறது. 92 இலட்சம் குழந்தைகள் இன்னும் பள்ளி அமைப்பிற்குள் வராமல் வெளியே இருக்கிறார்கள். முதல் வகுப்பில் 100 குழந்தைகள் சேர்ந்தால் 10 சதவீத குழந்தைகளே உயர்கல்விக்கு செல்கிறார்கள். 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கல்வி குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு ஜனநாயகத் தன்மையுடன் அமைதல் வேண்டும். அனைத்து திறன்கலையும் வளர்க்கக்கூடிய கல்விமுறையும் அனைத்து திறன்களையும் சோதிக்கும் தேர்வு முறையும் வேண்டும். ஆங்கிலவழிக்கல்வி மோகம் உடைய வேண்டும் என்றால் உயர்கல்வியும் தாய்மொழியில் அமைய வேண்டும். இன்றைய கல்விப்பிரச்சனைகள் அனைத்தையும் தொட்டுக் காட்டிய பேரா.இராஜு இவையே இந்த முகாமின் பரிந்துரைகளாக முன்வைக்கவேண்டும் என்ற தெளிவான வழிகாட்டலுடன் தனது சிறப்புரையை நிறைவுபடுத்தினார்.

முகாமில் கலந்துகொண்டவர்களை ஆறு குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு கல்விச் சிந்தனையாளரின் புத்தகம் அளிக்கப்பட்டது. நம்முன் உள்ள கல்விப்பிரச்சனைகள் குறித்து நம் நாட்டு கல்வியாளர்கள் என்னதான் முன்வைக்கிறார்கள் என்ற ஆர்வம் மேலோங்க குழுவாகப் பிரிந்து வட்டமாக அமர்ந்து படித்து, விவாதித்து, கற்றுக்கொண்டு, கற்றுக்கொடுத்து குழுவாக கற்பதன் முழு அனுபவத்தையும் பெற்றது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

முதல் குழு விவேகானந்தரின் கல்விச் சிந்தனைகள் குறித்தும்,இரண்டாவது குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாரதியின் கல்விச் சிந்தனைகள் குறித்தும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். அன்னியரால் தரப்படும் இக்கல்விமுறை வெறும் கணக்கர்களைத்தான் உருவாக்கும். தேசப்பற்றுமிக்க கல்வி வேண்டும்.

அனைவருக்கும் இலவசக் கல்வி, தாய்மொழிக் கல்வி, மனப்பாடத் தேர்வுமுறையை ஒழித்தல் போன்றவை முக்கிய கருத்துகளாககும்.

பெண்கல்வி பற்றி வலியுறுத்தும் பாரதியிடம் சில இடங்களில் சமய சிந்தனைகளின் எல்லைக்குட்பட்ட பார்வையே இருந்தது போன்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது.

இரு குழுவினரின் தொகுப்புரைக்குப்பின் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விவேகானந்தர், பாரதி இருவரின் கல்விச் சிந்தனைகளுக்கான மதிப்பீடும் ஒப்பீடும் சார்ந்து பின்வரும் தொகுப்புரையை வழங்கினார்.

உலகம் முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொண்டவராகவும் சரியான வற்றைப் பாராட்டும் தன்மை கொண்டவராகவும் பாரதி விளங்குகிறார். தேசியக் கல்வியை வலியுறுத்துகிறார்.

விவேகானந்தர், பாரதி இருவருமே அடித்தட்டு மக்களுக்கான கல்வியை முன்னிறுத்தியவர்கள். தேச விடுதலைக்கு கல்வி ஒரு ஆயுதம் என்னும் கருத்துடையவர்கள்.

மூன்றாவது குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெரியார் கல்விச் சிந்தனைகள் குறித்த தங்கள் குழுவினரின் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

ஆண், பெண் சமகல்வி, மதிப்பெண் அடிப்படையிலான தேர்வுமுறையை ஒழித்தல்போன்ற கருத்துகளை முன்வைத்துள்ள பெரியார் ஆசிரியர்கள் பகுத்தறிவாளர்களாக இருக்கவேண்டும் என வலியுறுத்துவதாக அக்குழுவினரால் பதிவு செய்யப்பட்டது.

நான்காவது குழுவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அம்பேத்கரின் கல்விச் சிந்தனைகள் குறித்த தங்கள் குழுவினரின் கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

 வறுமையானது தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்கு தடைகாரணியாக இருப்பதை சுட்டிக்காட்டிய அம்பேத்கர் அதற்கு தீர்வாக உதவித்தொகை அரசு வழங்க வேண்டும் என முன்வைத்துள்ளார் என்பன போன்ற கருத்துகள் அக்குழுவினரால் பதிவு செய்யப்பட்டது.

இரு குழுவினரின் தொகுப்புரைக்குப்பின் மாணவர் சங்க அகில இந்திய த¬வைர்களில் ஒருவரான தோழர் செல்வாவால் அம்பேத்கர், பெரியார் இருவரின் கல்விச் சிந்தனைகளுக்கான மதிப்பீடும் ஒப்பீடும் சார்ந்த தொகுப்புரை வழங்கினார்.

 உற்பத்தி சார்ந்த துறையிலிருந்து சேவைத்துறைக்கு மூல்தனம் மாறிஉள்ள் நிலையில் டக்டர் அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பட்டிற்கும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளது இன்றைய தேவைக்கும் பொறுத்தமானதே.

 இந்திய தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சுரங்கத்துறை சார்ந்த பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் ஒருவர் கூட இல்லாததை சுட்டிக்காட்டி அதை மற்றுவதற்கான ஆலோசனைகளையும் முன்வைக்கிறார். உயர் கல்வி நிறுவனங்களில் அதே நிலைமை இன்று வரை தொடர்வது வெட்கக்கேடான செய்தி போன்ற அம்பேத்கரின் பல சிந்தனைகள் இன்னும் நடைமுறைபடுத்தப் படாததை நம் பார்வைக்கு கொண்டு வந்தார். பெரியார் சிந்தனைகளாக,

 கல்வி என்பது ஒருவர் தனது வாழ்நாளில் சுதந்திரத் தோடு வாழ்வதற்கு தகுதியுடையவனாக்குவதற்கே என்கிறார்.

 கல்வி அறிவை விட அனுபவ அறிவே முக்கியமானது

 பெண்கல்வி சமத்துவத்தையும் பொருளாதார சுதந்திரத்தையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும் போன்றவற்றை பகிர்ந்து கொண்டார்.

நவீன அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் விளைவாக உலகமே கிராமாக சுருங்கிவிட்ட போதிலும் தீண்டாமை, சாதிய ஒடுக்குமுறை, மத அடிப்படைவாதம், பெண் அடிமை உள்ளிட்ட பிற்போக்கு நிலப்பிரபுத்துவ சிந்தனையோட்டத்தை தகர்க்க முடியவில்லை. இந்த வேலைகளுக்கு அம்பேத்கர், பெரியாரின் சிந்தனைச் செல்வங்களை பயன்படுத்தவேண்டியது இன்றைய காலத்தின் தேவை என்று செல்வா பேசி முடித்தபோது நம் முன்னோடிகளின் சிந்தனைகளைப் பெற்று அதனூடே நம் இயங்குதளத்தை அமைத்துக்கொள்ளும் சிந்தனை நம்மைத் தீவிரமாய் ஆட்கொண்டது.

5வது குழுவின் ஒருங்கிணைப்பாள்ரான பாலசரவணன் காந்தியின் கல்விச் சிந்தனைகள் குறித்த தங்கள் குழுவினரின் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

 தாய்மொழிவழிக் கல்வி, தாய்மொழியில் கலைத்திட்டம், செயல்வழிக்கற்றல், மதுவிலக்கு மூலம் வரும் வருவாயை கல்விக்குப் பயன்படுத்தக் கூடாது போன்ற கருத்துகளை காந்தி முன்வைத்துள்ளார்.

 கல்வி சகிப்புத்தன்மையின் மொத்த உருவமாக இருக்கவேண்டும், பொதுமொழியாக ஹிந்தி இருக்கவேண்டும், உயர்கல்விக்கு அரசுப் பணம் ஒதுக்கவேண்டாம் போன்ற விமர்சனத்திற்குரிய கருத்துகளையும் கொண்டவராகவே காந்தி இருந்திருக்கிறார்.

காந்தியின் கல்விச் சிந்தனைகளை சரி தவறுகளோடு இக்குழு முன்வைத்த விதம் அருமை

.ஆறாவது குழுவின் ஒருங்கிணைப்பாளரான பேரா.முருகேசன் அவர்கள் தாகூரின் கல்வி சிந்தனைகள் குறித்த தங்கள் குழுவினரின் கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

தாகூரின் மாற்றுக்கல்விச் சிந்தனை குறித்த பார்வையைப் பதிவு செய்யும்போது,

 கல்வியானது, தேசிய கல்வித்திட்டம், தாய்மொழி வழிக்கல்வி, இயற்கையோடு இணைந்த கல்வி, எல்லோருக்கும் கல்வி, இந்திய மரபு சார்ந்த கல்வி, அறிவியல் சிந்தனையைக் தூண்டும் கல்வி, பண்பாட்டுக் கல்வி போன்றவற்றை உள்ளடக்கிய தாக இருப்பதுடன் பாடத்திட்டத்தை மக்களே தீர்மானிக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தி யுள்ளார் என்று கூறினார்.

இரு குழுவினரின் தொகுப்புரைக்குப்பின் காந்தி, தாகூர் இருவரின் கல்விச் சிந்தனைகளுக்கான மதிப்பீடும் ஒப்பீடும் தொகுத்த தோழர் கமலாலயனின் தொகுப்புரையை பேரா. விஜயகுமார் வழங்கினார்.

 கல்வி எனும் அம்சத்தை விடுதலைப் போராட்டத்தின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாகப் பார்த்து தங்களால் இயன்றவரை பெருந்தலைவர்கள் தங்களது பங்களிப்பை செலுத்தியிருக்கிறார்கள்.

 நம் உற்பத்தி சார்ந்த கல்விமுறை இருந்திருந்தால் நம்முடைய உற்பத்திகளின் மூலம் பொருட்களாக முதலில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு பிறகு நம் செல்வத்தைச் சுரண்டிச் செல்வதற்காக உருவான பண்டங்களாக இங்கு திரும்பி வந்திருக்காது என்று காந்தி சொல்லியிருப்பது உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் போன்ற இன்றைய தாரக மந்திரங்களின் நாசகரமான விளைவுகளை நமக்கு முன்கூட்டியே எச்சரிப்பதாக அமைந்துள்ளது.

 சமூகத்தின் மேல் தட்டிற்கு மட்டும் கல்வி கொடுத்து கீழ் உள்ள அடுக்குகளுக்கு கல்வி தராமல் விடுவது சமத்துவமின்மையை மக்களிடையே உருவாக்கி ஒற்றுமைக்கு குறுக்கே நிற்கும் என்கிறார் தாகூர்.

 தாகூர், காந்தி இவர்களின் கல்வி சிந்தனைகளின் சாரமாக நாம் எடுத்துக்கொள்வது என்றால் ‘‘உடல் உழைப்புடன் கூடிய கல்வி, புத்தக சுமையற்ற கல்வி, மாணவர் தாம் வசிக்கும் சூழலை விட்டு விலகி தனித்துப் போகாத கல்வி, குழுவாய் இணைந்து கற்கும் கல்வி, செயல்பாடுகள் நிறைந்த கல்வி மாணவர்களின் பன்முகத் திறன் களுக்கு வாய்ப்பளிக்கும் கல்வி போன்றவற்றைக் கூறலாம்” என தோழர் கமலாலயன் அவர்களின் தொகுப்பை நம்மிடம் விஜயகுமார் பகிர்ந்து முடித்தபோது இருவரின் கல்வி குறித்த புரிதல்களை ஆழப்படுத்தியது. 

விமர்சனங்களுடன் வாசிப்பது, வாசித்ததில் சரியானவற்றை எடுத்துக் கொள்வது என்ற அரிய பண்பை இவ்வாசிப்பு முகாம் கற்றுத் தந்தது.

நாட்டின் விடுதலைக்கு கல்வியையே ஆயுதமாகக் கருதிய தலைவர்களின் தாக்கம் நம்மையும் தொற்றிக்கொண்ட நேரத்தில் பாவ்லோ ஃப்ரைய்ரேவின் வாழ்க்கையைப் படித்தல் எழுதுதல் என்ற கட்டுரை குறித்த உரையன்றை நிகழ்த்தினார் ஜெ.கிருஷ்ணமூர்த்தி.

இறுதியாக பேரா.வெற்றிச்செல்வன் இரண்டு மிக முக்கியமான ஆளுமைகள் டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் கல்விச் சிந்தனைகள் மற்ற கல்விச் சிந்தனையாளர்களிடமிருந்து எவ்வாறு மாறுபட்டு அமைகிறது என்பதை அழுத்தமான தரவுகளோடு நிறைவுரையாற்றினார்.

அடுத்த முகாம் எப்போது? என்று கேட்க வைத்த வாசிப்பு முகாமாக இது அமைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Pin It