தமிழ்ப் பதிப்புகளில் பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சாமிநாதர் தொடங்கி, யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம், ‘சக்தி’ வை. கோவிந்தன் வழியாக ‘வாசகர் வட்டம்’ லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, ஏ.கே. கோபாலன் பப்ளிஷர்ஸ் என்று வளர்ந்து சமகாலத்தில் நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமது வெளியீடுகளின் தேர்வில் ஆழ்ந்த கவனமும், அவற்றின் பயன்பாட்டில் மிகுந்த அக்கறையும் உடைய பதிப்பாளர்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. அத்தகைய பதிப்பாளர்களின் பரம்பரை ஒன்று, வாழையடி வாழையாகத் தமிழில் வேர்கொண்டு வளர்ந்து வந்திருக்கிறது. செழித்தோங்கி நிற்கிறது என்று இப்பிரிவைச் சொல்ல இயலவில்லை. ஆனால், அவ்வாறு செழித்துக் கிளைக்க வேண்டியது; அதற்கான எல்லாத்தகுதிகளும் இப்பதிப்பாளர்களுக்கு உண்டு.

‘சவுத் விஷன்’ பாலாஜியின் பதிப்புப் பணி தொடங்கியது ‘பாட்டாளிகளின் வெளியீடு’ பதிப்பகம் மூலமாக. அதைத் தொடர்ந்து சென்னை புக் ஹவுஸ், சென்னை புக்ஸ், சவுத் ஏஷியன் புக்ஸ் இப்போது சவுத் விஷன் என்பதாகப் பெயர்கள் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. ஆனால் அவரது புத்தகங்களின் நோக்கும்-போக்கும் ஒரு குறிப்பிட்ட திசைவழியிலேயே தொடர்ந்து நடந்துவந்து கொண்டிருக்கின்றன. இடதுசாரி அரசியலை முன்னெடுத்துச் செல்வது என்பதே அத்திசை வழி. இந்திய மாணவர் சங்கப் பொறுப்பு, பின் பாட்டாளி வெளியீடு- பல்வேறு அமைப்புகளுடன் ‘இணைந்த புத்தக வெளியீடுகள்’, ஈழத்தமிழ் எழுத்தாளர்களுடன் இணைந்து அவர்களுடைய காத்திரமான பல புத்தகங்களை வெளிக்கொணர்வது ‘சாரதா’ என்ற கலை இலக்கிய மாத இதழின் வெளியீடு/விற்பனைப் பொறுப்பு; சிறந்த நூல்களை வெளியிட்டுப் பரவலாக வாசகர்களுக்கு அவை கிடைக்கச் செய்வதற்கு ‘மக்கள் பதிப்பு’களைக் குறைந்த விலையில் தருவது. இப்படியாக பாலாஜியின் பதிப்புநெறிகள் பன்முகத் தன்மை வாய்ந்தவை.

southvision_balajiதமிழ்ப் பதிப்பகங்களில், ‘பதிப்பாசிரியர்’ என்று ஒருவர் பொதுவாக இருப்பது இல்லை. அவ்வாறு பதிப்பாசிரியரும், காப்பி எடிட்டர் போன்றோரும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர் பாலாஜி, இதில் அவர் தன்னளவில் சில முன்னோடி முயற்சிகளைச் செய்துமிருப்பவர். இனி - அவருடனான நேர்காணல். இரு அமர்வுகளாக மொத்தம் ஐந்துமணி நேரம் இந்த நேர்காணல் நீடித்தது. உடன் உரையாடியவர்கள் (க. நாகராஜன், ஜி. செல்வா) பாலாஜியின் சக பயணிகளாகவும், நீண்ட காலமாக அவரை நன்கறிந்தவர்களாகவும் அமைந்தது - பல அம்சங்களை ஆழமாகவும் அகலமாகவும் அலச உதவியது.

சந்திப்பு :கமலாலயன்

தமிழில் புத்தகங்களை வெளியிடுவது என்ற புள்ளியும் இந்திய மாணவர் சங்கச் செயல்பாடுகளும் எப்போது உங்களில் சங்கமித்தன? எது உங்களைப் பதிப்பாளர் ஆக்கியது?

எனது தந்தை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர். எனது ஆரம்பக்கல்வி ஆங்கில வழியில்தான் அமைந்தது. கிறித்துவ நர்சரிப்பள்ளியில் 3-ம் வகுப்பு வரை படித்தேன். அடுத்து ஆங்கிலோ - இந்தியன் பள்ளியில் ஒரு வகுப்பு குறைவாகப் போய்ச் சேர்ந்தேன். அப்போது வந்திருந்த தலைமை ஆசிரியர், அடுத்து வருகிற கல்வியாண்டில் இரட்டைத் தேர்ச்சி அளிப்பதாக வாக்களித்தார். ஆனால், அந்த ஆண்டு பள்ளிக் கல்வி ஆய்வாளர் அலுவலகத்திலிருந்து இரட்டைத் தேர்ச்சி முறைக்குத் தடை வந்துவிட்டது. ஆகவே, இரண்டு வருடம் நேர்ந்த இத் தாமதத்தினால் வகுப்பிலேயே உயரமான மாணவன் நான். 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பாதியிலேயே நின்றுவிட்டேன். ஆந்திர மாநில மெட்ரிக்குலேசன் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் போஸ்டர் விளம்பரம் பார்த்தேன். ஆந்திர மெட்ரிக் எழுதுவதற்கு ஆயத்தமானேன். அப்போது தான் தமிழ் எஸ்.எஸ்.எல்.சி. பாடத்தைப் படித்தே தீரவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. நான் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது அ, ஆ, தான் தெரிந்திருந்தது. எனவே எப்படித் தமிழில் எஸ். எஸ்.எல்.சி. பாடம் படிப்பது என்று பிரச்சனை எழுந்தது.

தமிழில் வேறு எதுவும் படிக்கவோ, ஒரு வாக்கியம் எழுதவோ கூட முடியாது. தேர்வில் வெற்றி பெறுவதற்கு, தமிழில் வாசிக்கவும் எழுதவும் ஓர் எளிதான வழியை அப்போதைய என் தமிழாசிரியர் கற்றுத் தந்தார். அவர் சொன்ன ஒரு யோசனைதான் தமிழில் நாவல்கள், சிறு கதைகள் படிப்பது போன்றவற்றில் என்னை ஈடுபடுத்தியது. அதன்பின் தமிழில் 70 மார்க் வரை எடுக்க முடிந்தது. பின்பு, பி.யூ.சி., வகுப்பில் அதே போல் தமிழ்ப்பாடம் வந்தது. அதே தமிழாசிரியர் பயிற்சி கொடுத்தார். பி.யூ.சி.யைக் கடந்து விட்டேன். அதன்பின் பி.காம். வகுப்பில் சேர்ந்தேன். ஏன் என்றால், அதில் தமிழ்ப்பாடம் படிக்க வேண்டியிருக்காது என்ற காரணத்தால்தான். அதன் பிறகு தமிழின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கக் கூடாது என்று இருந்தேன்.

‘கம்யூனிஸ்ட் சீனா - இன்று’ என்றோர் ஆங்கிலப் புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. எழுதியவர் பேராசிரியர் எஸ். சந்திரசேகர். அவர் மக்கள் தொகை ஆய்வில் துறை வல்லுநர். 1958-ம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் சீனத்தில் அவர் மேற்கொண்ட விரிவான சுற்றுப்பயணத்தின் பதிவுகளே இப்புத்தகம். அதன் முன்னுரையில் அவரே சொல்வது போல், ‘இது இன்றைய சமகால சீனத்தில் நான் என்ன பார்த்தேனோ-எதைக் கேட்டேனோ அவற்றின் பதிவுகள் அடங்கிய புத்தகம்; அவ்வளவுதான்.!’- அவர் புத்தகத்தை முடிக்கும் போது இப்படிக் குறிப்பிடுகிறார்: “சீனாவின் மீது நேரு வைத்த பெரும் நம்பிக்கைக்குக் காரணம் - அவர் அமைதியை நேசித்தவர். ஆனால் அந்த நம்பிக்கை தவறான வகையில் வைக்கப் பட்டு விட்டது.

சீனாவைக் குறித்த இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டிய தருணம் இது. கம்யூனிஸ தத்துவம் என்கிற நோய் ஆழமாக வேரூன்றிவிட்ட இந்நிலையில், ஆசியாவில் எதிர்காலப் போராட்டம் என்பது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சண்டையல்ல அது. ஜனநாயகமும் சுதந்திரமும் ஒரு பக்கமாகவும் கம்யூனிஸமும் அதன் அதிகாரத்துவமும் மற்றொரு பக்கமாகவும் நின்று போராடியாக வேண்டியதிருக்கும். இரண்டு நூற்றாண்டு ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தைத் தூக்கி எறிந்த நீடித்த போராட்டத்திற்குப் பின் ஆசியா இன்னொரு பயங்கர ஏகாதிபத்தியமான கம்யூனிஸத்திற்கு பலியாடாக மாறுமானால், அந்த நாள் ஆசியாவிற்கு ஒரு சோக நாள் ஆக அமையும்...’

இந்த மாதிரி முடிகிற கம்யூனிச எதிர்ப்பு நூலைப் படித்துதான் நான் கம்யூனிஸத் தத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டேன். காரணம் கம்யூனிஸ்ட் சீனத்தின் சாதனைகள் அனைத்தையும் அந்த நூல் ஆசிரியர் மிக நேர்மையாகப் பதிவு செய்திருந்ததுதான். அதன்பின் இந்தியாவிற்கும் அந்தப் பாதைதான் ஏற்றது, சிறந்தது என்ற முடிவிற்கு வந்தேன்.

1970-ம் ஆண்டு வாக்கில் இளைஞர்கள் நடுவே சமூகமாற்றம் பற்றிய கனவுகளும், சிந்தனைகளும், தேடலும் ஏராளமாக இருந்தன. நாங்கள் ஒரு பத்து பதினைந்து பேர் தினசரி சந்திக்கும் வேளையில் எங்களுக்குத் தெரிந்த அளவு அரசியல் விவாதங்களை நடத்துவோம். கம்யூனிஸ்ட் இயக்கங்களில் சி.பி.ஐ யா, சி.பி.எம். மா, சி.பி.ஐ.எம்.எல். லா எது சரியான திசையில் போகிறது என்ற கேள்வி எழுந்தது. எங்கள் குழுவிலிருந்த ஒருவருக்கு பாலன் என்ற டீக் கடைக் காரரைத் தெரியும். அவரைப் போய் சந்தித்தோம். அவர் உடனே பி.ஆர். பரமேஸ்வரனை நாங்கள் சந்திப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட அலுவலகத்தில் நாங்கள் ஒரு பத்துப் பன்னிரண்டு பேர் கூடினோம்.

பி.ஆர்.பி. வகுப்பு நடத்தினர். கட்சியின் வரலாறும் - இந்திய, தமிழக வரலாறும் பற்றியது அந்த வகுப்பு. கொஞ்சம்தான் எங்களுக்குப் புரிந்தது. நான் கேட்டேன்: “ சி.பி.ஐ., சி.பி.எம்., சி.பி.ஐ.எம்.எல் - என்று மூன்று குழுவாகப் பிரிந்திரா விட்டால், இன்று இந்தியாவில் பலமான ஒரு இயக்கமாக கம்யூனிஸ்ட் இருந்திருக்காதா?” என்று. அதற்கு அவர் கூறிய பதில், “பிரிந்ததால்தான் இன்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்று ஒன்றைப் பாதுகாத்து, முன்னேறவும் முடிகிறது. இல்லையேல் காங்கிரஸ் கட்சிக்குள் கரைந்து காணாமலே போயிருப்போம். இன்னொரு பக்கம் தீவிரவாதம் பேசி மக்களிடம் இருந்து பிரிந்து மறைந்திருப்போம்...”

இதற்குப் பின், இந்திய மாணவர் சங்கத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டேன். வாசிப்பும் தீவிரமடைந்து வந்தது. 1974ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் இரண்டாவது அகில இந்திய மாநாட்டில் பங்குபெற்றேன். அம்மாநாட்டின் தொடக்க உரையாற்றியவர் தோழர் பி. சுந்தரய்யா அவர்கள். அவரது உரை பல வெளிச்சங்களை எனக்குக் காட்டியது. 1975-1977-ம் வருடங்கள் அவசர நிலைக்காலம். அதன் பின் தோழர் இரா. பாண்டியன் அறிமுகமானார். அவரும், ஏ.தெ. சுப்பையன் மற்றும் சிதம்பரம் ஆகியோர் இணைந்து நடத்திக் கொண்டிருந்த “பாட்டாளிகள் வெளியீடு” பதிப்பகத்தில் நான் இணைந்தேன்.

ஏ.தெ. சுப்பையனின் ‘முறையீடு’தான் பாட்டாளிகள் வெளியீட்டின் முதல் நூல். அது ஒரு எதேச்சையான நிகழ்வு. ‘முறையீடு’ நூலை வெளியிடுவதற்காக, ஒரு மிகப்பெரிய இடதுசாரி இயக்கப் பதிப்பகத்தை ஹிணுகிu’ர்கள். அவர்கள் மறுத்துவிட்டதால், மேற்கண்ட மூவரும் சேர்ந்து ஆளுக்கு ஐநூறு ரூபாய் முதலீட்டில்தான் ‘முறையீடு’ வெளிவந்தது. அதன்பின் இரா. பாண்டியனுக்கு பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் தொடர்பு கிடைத்தது. அவரின் ‘இலக்கியமும் திறனாய்வும்’ நூல் பாட்டாளிகள் வெளியிடாக வந்தது. அவசரநிலைக் காலத்தில் பி.ஆர். பரமேஸ்வரன் தலைமறைவாக இருந்தார்.

அப்போது அவர் ‘சிரஸ் மரனே’ என்ற நாவலைத் தமிழில் மொழி பெயர்த்தார். ‘வீர நினைவுகள்’ என்பது மாதிரியான ஒரு தலைப்பைக் கொடுத்திருந்தார். அந்தத் தலைப்பு சரியில்லை என்று கருதி பாண்டியன் ‘நினைவுகள் அழிவதில்லை’ என்று மாற்றினார். உண்மையில் ‘சிரஸ்மரனே’ என்றால் ‘அழியாத நினைவுகள்’ என்பதுதான் பொருள். நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்றி தலைமை வகித்த தோழர் வி.பி.சிந்தன் இந்த அம்சத்தை சுட்டிக் காட்டினார். அதற்குப்பின், ‘பிணந்தின்னிகள்’, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு (போல்ஷ்விக்), நவ சீனப் புரட்சி வரலாறு, ஸ்டாலின் - மாவோ நூல்கள் என்று தொடர்ச்சியாகப் பல்வேறு நூல்களை வெளியிட்டு வந்தோம்.

அப்போது நீங்கள் பாட்டாளிகள் வெளியீடு மூலம் முன்பதிவுத் திட்டம் வாசகர்களின் வீட்டுக்குப் புத்தகங்களை வி.பி.பி. மூலம் அனுப்பி பணம் பெறுவது போன்ற முயற்சிகளை செய்தீர்கள் இல்லையா?

ஆம், ஆனால் அது வெற்றி பெறவில்லை. பல தடைகள். ஆனால் நான் பதிப்புலகில் தீவிரமாகத் தொடர்ந்து செயல்பட்டு வந்தேன். அப்போது விமர்சன ரீதியில் திரும்பிப் பார்த்தால் அந்தக் காலகட்டத்தின் தேவைக்கேற்ப ஏகாதிபத்திய எதிர்ப்பு, தமிழ்நாட்டு அரசியல் சமூகநிலை குறித்து நூல்கள் கொண்டு வரவில்லை. அப்படி வெளியிடத் தவறி விட்டோம். கோ.கேசவனின் ‘மண்ணும் மனித உறவுகளும்’, ‘இயக்கமும் இலக்கியப் போக்குகளும்’, க.கைலாசபதி, க.சிவத்தம்பி நூல்கள் இதில் விதிவிலக்கு.

ஆனால் சுற்றுச்சூழல், உலகமயமாக்கல், காட் ஒப்பந்தம், விதைகள் காப்புரிமை பற்றியெல்லாம் நீங்கள் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்புடன் இணைந்து நிறையப் புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள் இல்லையா?

சரிதான். ‘பூவுலகின் நண்பர்கள்’ குழுவில் முக்கிய மானவர்களான நெடுஞ்செழியன், குமாரசாமி உள்ளிட்டவர்களோடு சேர்ந்து ‘பசுமைப் புரட்சியின் வன்முறை’ நூலை முதலில் வெளியிட்டோம். அதை வெளியிடுவதில் சில பிரச்சனைகள் வரக்கூடும் என்ற தயக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் நான் துணிந்து வெளியிடலாம் என்று முன்வந்தது அவர்களுக்கே ஆச்சரியம் அளித்தது. விவசாய சங்கம் அதை உற்சாகத்துடன் வரவேற்றது. அது எனக்குப் பெரிய ஷாக்.. (சிரிக்கிறார்)

நிறைய மொழிபெயர்ப்பு நூல்களாக - ஆங்கிலத்தில் இருந்து கொண்டு வந்ததற்குக் குறிப்பான காரணம் ஏதேனும் உண்டோ?

(கொஞ்சநேர மௌனத்திற்குப் பின்..) “நீங்கள் புரட்சி செய்ய விரும்பினால், ஆங்கிலத்தைப் படியுங்கள்” என்ற ஒரு சொற்றொடர் எங்கள் மாணவர் அமைப்பு மத்தியில் ஓடிக்கொண்டிருந்தது. இன்றும் அது எனக்கு ஒரு வழிகாட்டி வாசகம். உலக நிகழ்வுகள், உலகமயமாக்கல், சர்வதேச நிதி நிறுவனம், ‘காட்’ (நிகிஜிஜி) ஒப்பந்தம் - இது போன்ற பலவற்றையும் ஆங்கிலம் வழிதான் நாம் அறிய முடிகிறது. அவற்றைத் தமிழில் கொண்டு வருவது ஓர் அரசியல் கடமை என்ற உணர்வில்தான் செய்தேன். அதே சமயம் எந்த ஒரு சமூகமும் கல்வியைத் தனது தாய்மொழி மூலம் மட்டுமே கற்றுத் தரவேண்டும். தாய்மொழியில் புதிய சிந்தனைகளை, உலகளாவிய வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு வருவதற்கு ஆங்கில ஞானமும் - மொழிபெயர்ப்புகளும் அவசியம் என்று கருதுகிறேன்.

மக்கள் பதிப்புகள்’ என்ற ஒரு கருதுகோளை நீங்கள் முன் வைத்தீர்கள். தொடர்ந்து அந்த வரிசையில் கனமான நூல்களைக் குறைந்த விலையில் பதிப்பிக்கிறீர்கள். இதற்கு ஏதேனும் பின்னணி உண்டா?

உண்டு. அச்சு இயந்திரத்தின் வருகைக்குப் பின்பு, புத்தகங்களின் உற்பத்தித் திறன் பன்மடங்காக உயரந்தது. பல்லாயிரம், பல லட்சம் பிரதிகள் அச்சிடும் முறை வந்தது. புத்தகங்களின் விலையும் கணிசமாகக் குறைந்தது. எவ்வளவுதான் குறைந்தாலும் இன்னும் சமூகத்தில் 70 சதவிகித மக்கள் வாங்கும் சக்தியற்றவர்களாகத்தானே இருக்கிறார்கள்? மக்களை அணி திரட்டும் வேலைகளைச் செய்யும் நமது இயக்கங்களின் பார்வையில், செயலில் ஒரு மாற்றம் தேவை.

இடதுசாரி இயக்கச் சிந்தனைகளை, அரசியலை, தத்துவத்தை வரலாற்றை, பண்பாட்டை, சமூக இயலைப் பரப்புவதற்கு மக்கள் வாழ்விடங்களில் நூல்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நகரங்களில் வீதிக்கு ஒரு நூலகமும், கிராமத்தில் ஊருக்கு ஒரு நூலகமும் இன்றைக்கு ஓரு அத்தியாவசியமான தேவை. அரசு பொது நூலகங்களின் பயன்பாடும் செயல்பாடும் ஒரு வகையானவை நம்முடைய நூலகங்களின் பயன்பாடும் செயல்பாடும் வேறுவகையானவையாக இருக்க வேண்டும். கருத்துகள் பரப்புவதற்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுவதற்கு நூல்கள் ஒர் இயக்கமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இடதுசாரி இயக்கப் பரவலுக்கு, கருத்து பிரச்சாரத்திற்குப் புத்தகங்கள் இல்லாமல் பெருந்திரள் வாசிப்பில்லாமல் எப்படி முடியும்?

நான் செய்ய முற்பட்டது இதுதான்:

ஓரு நூலின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்றால் அடக்க செலவுகள் ஒரு மடங்கு என்று கணக்கிட்டால் விலையை 3 மடங்காக நிர்ணயிப்பது எமது நிறுவனத்தின் வழக்கம். ஆனால் சிலர் 4,5,6,10 மடங்காகவும் ஆங்கில பதிப்புகள் பல மடங்குகளாகவும் நிர்ணயிக்கிறார்கள். அது ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைக்கு ஏற்பவும் நூல் உருவாக்கத்தில் உள்ள நிலைமைகள் தன்மைகள் கொண்டுதான் அந்நூல்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பிரதிகள் எண்ணிக்கையும் விலை நிர்ணயிப்பில் ஒரு முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்தப் பொருளியல் அட்டவணை பார்க்கும் பொழுதே உங்களுக்குப் புரியும் விலை நிர்ணயிப்பின் அம்சங்கள் மற்றும் வேறுபாடுகள். மக்கள் பதிப்பு விலை உருவாக்கத்தின் பொழுது எமது அனுபவம் என்னவென்றால் அடக்க செலவை நாங்கள் ஒரு மடங்காகக் கொண்டது வெறும் பேப்பர், அச்சு, பைண்டிங் மட்டுமே. இரண்டாயிரம் பிரதிகளுக்கு முன்வெளியீட்டு பணத்தைப் பெறமுடிந்ததால் மொத்தமாக ஒரே நேரத்தில் 4000 பிரதிகளை அச்சடிக்க முடிந்ததால் அந்நூலின் விலையை ரூ.50/- வைக்க முடிந்தது. இதை ஏன் எல்லா பதிப்புகளுக்கும் செய்யக் கூடாது என்று யோசித்தோம்.

முதலில் கைவசம் உள்ள நூல்களின் விலையை மக்கள் பதிப்பு விலையாகக் குறைத்து முத்திரை குத்தினோம். அதற்குப்பின் வெளியிடப்படும் மறுபதிப்புகளுக்கு “மக்கள் பதிப்பு விலை”நிர்ணயித்தோம். புதிய நூல் பதிப்புகளுக்கு அந்த நூல் உருவாக்க செலவுகள் என் பொறுப்பில் நான் ஏற்றுக் கொண்டு அச் செலவுகளைக் கணக்கில் கொள்ளாமல் விலையை நிர்ணயித்தேன். இதைத் தொடர்ந்து செய்வதனால் இதற்கு ஒரு நிரந்தர ஏற்பாடு தேவைப்படுகிறது. ‘சமூக ஆய்வுக் கழகம்’ “society for Social Studies” என்கிற அறக்கட்டளையை ஏற்படுத்த இருக்கிறோம். அவ்வறக்கட்டளை இந்தத் தயாரிப்புச் செலவுகளை ஏற்றுக்கொண்டு பதிப்பகம், பேப்பர், அச்சு, பைண்டிங் செலவுகளை மட்டும் செய்து மக்கள் பதிப்பு விலையில் விற்பனை செய்திடும். இதன் மூலமே நூல்கள் மக்களைச் சென்றடையும் என்று உறுதியாக நம்புகிறோம்.

நூல்கள் சரக்குகள் அல்ல. அவை பண்பாட்டின் சின்னங்கள் கல்வி, மருத்துவம், கலை, இலக்கியம், இசை, நாடகம் இவற்றின் செலவுகள் உற்பத்தி செலவுகளாக கொள்ளக் கூடாது. இதை நான் விளக்க வேண்டியது இல்லை. இச் செயல்பாடுகளையெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ‘மக்கள் பதிப்பு விலை’யும் ஒரு பங்காற்றும் என நம்புகிறோம்.

இதற்கு மேல் கட்சியோ - இயக்கங்களோ வேறு என்ன செய்ய முடியுமென்று நினைக்கிறீர்கள்?

புத்தகங்களை வெளியிடுவதும், விற்பதும் பதிப்பாளரின் வேலை மட்டுமே என்பது வியாபார ரீதியான பதிப்பகங்களுக்குப் பொருந்தும். ஆனால் அரசியல் நூல்களைப் பொறுத்தவரையில் இயக்கங்களுக்கு என்று ஒரு பங்குபாத்திரம் இருக்கிறது. அதன் செயல்பாடுகள் பன்முகப்பட்டதாக அமைய முடியும். “நினைவுகள் அழிவதில்லை’யைப் போன்ற ஒரு சிறந்த நூலை நான் இதுவரை படித்ததில்லை” என்றார் இ.எம்.எஸ். ஆனால் அந்த நாவலைப் பற்றி ஒரு மாவட்ட நிலையிலுள்ள ஊழியருக்கே கூடத் தெரிந்திருக்கவில்லை. இதை மாற்றியமைக்க வேண்டும். நூல்களை அறிமுகப் படுத்துவது என்பதை ஓர் இயக்கமாக மாற்றியமைக்க வேண்டும். அப்படி அறிமுகப்படுத்தி விற்பனையை அதிகரிக்க உதவ வேண்டும் என்று நான் சொல்வது, உயர்ந்த அரசியல் விழிப்புணர்வைப் பரவச் செய்வதற்கான ஓர் உத்தரவாதமான வழி.

ஒரு மாநாடு - பேரணி - கூட்டம் என்றால், ஒவ்வொரு அம்சத்தையும் யோசித்து யோசித்துத் திட்ட மிடுகிறோம் இல்லையா? கட்சி ஊழியர்கள் நடுவே நூல்களைக் கொண்டு செல்லப் போகிறோம் என்பது பற்றியும் திட்டமிட்டு, பட்ஜெட் போட்டு நாம் அதைக் கொண்டு போக வேண்டும். நன்றாகத் திட்டமிட்டு இப்பணி செய்யப்பட்டால் அதன் வீச்சையும், தாக்கத்தையும் நீங்கள் ஊழியர்கள் பணி செய்கிற விதத்திலிருந்தே கண்டறிய முடியும்.

நீங்கள் வெளியிட்ட சில சிறப்பான நூல்கள், மறுபதிப்புச் செய்யப்படும் போது கூடுதலாகப் பின் இணைப்புகளைச் சேர்த்து விரிவாக்கி அல்லது சிலவற்றைத் தவிர்த்து விட்டு வெளியீடுகிறீர்கள். இதற்குக் குறிப்பான காரணம் ஏதும் உண்டா? உதாரணமாக ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ நூலின் மறுமதிப்பு வந்தபோது -இரண்டு பின்இணைப்புகள் கூடுதலாக இடம் பெற்றன...

southvision_balaji_360‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ புத்தகத்தின் மறுபதிப்பு வரும்போது அதில் கியூபாவின் அப்போதைய சூழலுக்கும் புத்தகம் மறுபதிப்பான காலத்திற்கும் உள்ள கால இடைவெளியில் நடைபெற்ற வளர்ச்சிப் போக்குகள் பற்றியும், கியூபபுரட்சியின் இன்றைய பொருத்தப்பாடு பற்றிய இரு பின்னிணைப்புகள் சேர்த்து வெளியிட்டேன். அதே போல், கலாநிதி ந. சுப்ரமணியன், கௌசல்யா சுப்ரமணியன் எழுதிய ‘இந்தியச் சிந்தனை மரபு’ நூலின் முதல் பதிப்பு வந்த போது தமிழ்நாடு அரசு அதற்குப் பரிசு கொடுத்தது. முதல்பதிப்பிற்கு வந்த கருத்துரைகள், விமர்சனங்கள் ஆகியவற்றிற்கு நூலாசிரியர்கள் விளக்கமளித்ததை இரண்டாம் பதிப்பில் இணைப்புரையாக வெளியிட்டேன். ஸ்பார்ட்டகஸ், ஏழு தலைமுறைகள், நினைவுகள் அழிவதில்லை ஆகிய நூல்களுக்கு சிறப்புரைகள் சேர்த்தேன்.

ஆ.இரா.வெங்கடாசலபதி, கலாநிதி ந.சுப்ரமணியன், ந. இரவீந்திரன் ஆகியோர் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் முதல் நூல்களை நீங்கள்தான் வெளியீட்டிருக்கிறீர்கள். இது குறித்து உங்கள் அனுபவங்களைச் சொல்லலாமா?

ஓர் எழுத்தாளருக்குள் என்ன விதமான கருப்பொருள் இருக்கிறதோ, அதை வெளிக்கொணர வைக்கப் பல விதத்திலும் முயற்சிகள் செய்ய வேண்டியிருந்தது. தமிழில் பல புதியவர்களின் முதல் நூல்களை நான் வெளியிட்டது அத்தகைய ஒரு முயற்சிதான். ‘பண்ணையடிமைத்தனத்தை எதிர்த்த போராட்டத்தில் தனுஷ்கோடி’ நூலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் அவரே சொல்லச் சொல்ல எழுதப்பட்ட நூல் அது.

கவிஞர் இன்குலாபின் எழுத்தாளுமை முழுமையாக இன்னும் வெளிவரவில்லை என்பது என் கருத்து. நான் அவரிடம் ஒரு முறை கேட்ட கேள்வி இது: “உங்கள் ஆளுமையை வெளிக்கொணர இடதுசாரி இயக்கம் உதவியதா?” இந்தக் கேள்வியை நான் ஏன் கேட்டேன் என்றால் பொதுவாக இயக்கத்திற்கு வரும் படித்தவர்களை போதுமான அளவிற்கு இயக்கம் பயன்படுத்துவதில்லை என்பது என் கருத்து. அவர்களை எழுதத்தூண்டுவது அதற்காக பயிற்சி அளிப்பது போன்று எதுவும் நடப்பதில்லை.

உங்களுடைய ஆரம்ப கால வெளியீடுகளில் நீங்கள் பதிப்புரை என்று தனியாக எழுதுவதில்லை. சிறு குறிப்புகள் மட்டும் இருக்கும். இப்போது சற்று விரிவான பதிப்புரைகள் இடம் பெறுவதற்கு குறிப்பான காரணம் உண்டா?

குறிப்பான காரணம் என்று எதுவுமில்லை. கடந்த பத்தாண்டுகளாகத்தான் எழுதுகிறேன். பதிப்பிக்கும் நூல்களின் வரலாற்று முக்கியத்துவத்தையும், அவை இன்றைய காலச்சூழலுக்கு எந்த வகையில் பொருந்து கின்றன என்பதையும் இதைச் செய்யத் தோன்றியது. டாக்டர் நார்மன் பெத்யூனின் வாழ்க்கை வரலாற்று நூலுக்குப் பதிப்புரை எழுதும் போது, ‘போரும் - அமைதியும்’ நூலின் பிற்சேர்க்கையில் இருந்த தேனீக்களின் மகரந்த சேர்க்கை பற்றிய கவிதை வரிகளை மேற்கோள் காட்டினேன். டால்ஸ்டாய் வரலாற்றாளனுக்கும் கலைஞனுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிக் கூறும் பொழுது ‘வரலாற்றாளன் ஒரு நிகழ்வின் விளைவுகளை கையாள வேண்டியவன் ஆகிறான். ஒரு கலைஞன் நிகழ்வின் உண்மைகளைக் கையாள வேண்டியவன் ஆகிறான்’ என்று கூறுகிறார்.

உங்கள் பதிப்பகம் வழி நாவல்கள் அதிகமாக வெளிவரவில்லை. அதுபற்றி..

இதற்குப் பதில் சொல்லும் போது, ஒரு நிகழ்ச்சியை நினைவுகூற விரும்புகிறேன். சென்னை சமூக வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் நாகராஜ் பத்தாண்டுகளுக்கு முன் என்னைக் கேட்டார்: “கன்னட நாவல்களில் உள்ள சமூக வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய கலைவெளிப்பாடுடன் தமிழில் ஒரு நாவல் உண்டா?” நான் என்ன சொன்னேன் என்றால் - ‘இல்லை...!’ இடதுசாரி இயக்கங்கள் சார்ந்த எழுத்தாளர்கள், கவிதை - சிறுகதையில் வெற்றி பெற்றிருக்கிறரர்கள். நாவல் விஷயத்தில் அப்படிச் சொல்ல முடியாது. நாவல் எழுத பெரிய அளவிலான அனுபவம், ஆழ்ந்த வாசிப்பு, விரிவான பின்புல ஆய்வு, செய் நேர்த்தி, பயிற்சி இப்படிப் பல அம்சங்கள் தேவையாயிருக்கின்றன. நான் இந்த விஷயத்தில் பலரையும் முயற்சி எடுக்குமாறு தூண்டி வருகிறேன்.

‘நாவலும்-சமூக வரலாறும்’ என்ற தலைப்பில் இது பற்றி விவாதித்து, முயற்சி எடுக்குமாறு செய்ய ஒரு கூட்டமும் நடத்தினோம். ச. தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சன்யா, சு. வெங்கடேசன், சொ. பிரபாகரன் மற்றும் இயக்க ஊழியர்கள் எஸ். கண்ணன், எஸ்.ஜி. ரமேஷ்பாபு,ஜி. செல்வா, நீதிராஜன், ஈழ எழுத்தாளர் ஜோதிகுமார் உட்பட பலரும் பங்கேற்றார்கள். நாவல்களின் விஷயத்தில் நமது முயற்சிகளின் போதாமையை உணர்ந்திருப்பதனால் நாவல்களை நான் அதிகம் வெளியிடவில்லை.

என்றாலும் தஞ்சை ப்ரகாஷின் ‘கள்ளம்’, முகில் எழுதிய ‘ஞானம் புதுசு’ மொழிபெயர்ப்பு நாவல்களாக ‘நினைவுகள் அழிவதில்லை’, ‘காம்ரேட்’ ‘கல்லில் தீப்பொறிகள்’, சீனநாவலான ‘இளைஞன் ஏர்கையின் திருமணம்’, ‘லூசுன் படைப்புகள்’இப்படிக் குறிப்பிடத்தக்க சிலவற்றை வெளியிட்டு வந்திருக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில், ஆழமான காத்திரமான நாவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றைப் பரவலாக்க வேண்டும்; வாசிக்க வேண்டும்-விவாதித்து இன்னும் முன்னெடுக்க வேண்டும்.

வாசிப்பு --_ புத்தக வினியோகம் இவற்றில் தொடர்ந்து சில கருத்துகளை முன் வைப்பவர்களுள் நீங்களும் ஒருவர். அது தொடர்பாகச் சொல்லுங்கள் :

வாசகசாலை, நூலகம், படிப்பகம் போன்ற பல வடிவங்களில் புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் இடதுசாரிகள் விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே இடைவிடாமல் முயன்றவர்கள். தொடர்ந்தும் செய்து வருகிறார்கள். வாசிப்பு என்பதே ஓர் அரசியல் செயல்பாடுதான் என்ற புரிதல் இங்கு பல முன்னணித் தலைவர்களுக்கே இல்லாத நிலையும் ஒரு காரணம். வாசிப்பின் அரசியலையும், வாசிப்புச் செயல்பாடுகளின் அரசியல் தேவைகளையும் அறிமுகப்படுத்தும் போது ஊழியர்களின் தரமே வேறாகி விடும். இதை யாவரும் புரிந்து கொள்ளாமல், புத்தகங்கள் வாசிப்பதை ஒரு பொழுது போக்காக மட்டுமே கருதுவது பெரிய சோகம். இதை மாற்றியாக வேண்டும்.

திராவிட இயக்கங்களின் கவனம் பூராவும் நாளிதழ்களிலும், இயக்கத் தேவைகளுக்கான வார மாத இதழ்களிலுமே குவிந்து அதோடு நின்றும் விட்டது. இடதுசாரிகளைப் போல புத்தக வாசிப்பு நூல்கள் பதிப்பு போன்றவற்றில் திராவிட இயக்கத்தவருள் சிலர் மட்டுமே ஆரம்ப காலங்களில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ஆனால், ரஷியாவிலிருந்து முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பப்ளிஷர்ஸ் போன்ற வெளியீட்டகங்கள் போல டன் கணக்கில் கப்பல் கப்பலாகக் கொண்டு வந்து இங்கு கலை - இலக்கியப் படைப்புகளையும், அரசியற் பொருளாதார நூல்களையும் சேர்த்தவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்? இன்று அப்படி ஒரு சூழல் - அதாவது ஓர் அரசாங்கமே பெரிய அளவில் நூல்களை வெளியிட்டுப் பரப்புவது என்பது இல்லை. இயக்கங்கள்தான் மறுபடியும் இவற்றில் முன்கை எடுக்க வேண்டும்.

பதிப்பாசிரியர் - காப்பி எடிட்டர் - காப்பி ரைட்டர் போன்று, புத்தகப் பதிப்புத் துறையில் அவற்றின் ஆசிரியர்கள் தவிர வேறு தேர்ந்த எழுத்தாளர்களும் பங்களிக்க முடியுமெனவும், ஆங்கிலப்புத்தக வெளியீட்டாளர்கள் போன்று நாமும் இங்கு அத்தகைய நூல் பதிப்பு நுட்பங்கள் தெரிந்தவர்களைக் குழுவாகப் பயன்படுத்த வேண்டுமெனவும் தொடர்ந்து கூறி வருபவர் நீங்கள். இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

காப்பி எடிட்டர்தான் புத்தகத்தின் கருப்பொருளுக்குள் ஊடுருவிச் சென்று அதைச் செழுமைப்படுத்தி வெளிக்கொண்டு வரக்கூடியவர். ஒரு படைப்பை அதன் ஆசிரியர் அதிக கால அவகாசத்தில் எழுதி முடிக்கையில் அதில் முன்னுக்குப்பின் முரணாகப் பல பகுதிகள் அமைந்திருக்ககும். தகவல் பிழைகள், காலகட்டங்கள் பற்றிய குழப்பங்கள், மயக்கங்களும் நேர்ந்திருக்கக் கூடும். இவற்றைச் சரி செய்து, தேவையற்ற பகுதிகளை எடிட் செய்து செழுமைப்படுத்துவதுதான் இந்தப் பதிப்பாசிரியர் குழுவின் வேலை. இது தமிழில் இன்னும் தொடக்க நிலையில் கூட இல்லை.

நூலாசிரியரின் தகுதிகள், திறமை பற்றி செறிவாக ஓர் அறிமுகக் குறிப்பு கூட எழுத முடியாத ஒரு நிலையில்தான் பொதுவாகத் தமிழ்ப் பதிப்புலகம் இருக்கிறது. நூலாசிரியர் பற்றி மட்டுமின்றி, நூலின் தகுதிபற்றியும் ஒரு யோசனையும் இல்லாமல்தான் இங்கு எழுத்தாளரிடமிருந்து பிரதி அச்சுக்குப் போகிறது. அச்சடித்து முடித்ததும் பைண்டிங் அதன் பிறகு கொடவுனுக்கும் அங்கிருந்து விற்பனை நிலையத்திற்கும் போகிறது. அச்சு வேலை முடித்ததும், அச்சிடுவதற்காக அனுப்பப்படும் காகித பேல்களை ‘பேக்கிங்’ செய்யப் பயன்படும் கோணிகளைத் திருப்பித் தந்து விடுவார்கள். அதைத் திரும்பத் தந்த பிறகுதான் பெரிய பதிப்பாளர்கள் அச்சு/பைண்டிங் பில்களுக்கான பணத்தையே தருவார்கள்! இதுதான் நம் நிலைமை.

இணைந்த வெளியீடுகள்’ (Joint Publications) உங்களுடைய தனித்தன்மையான ஒரு முயற்சி. அந்த சிந்தனை எப்படி வந்தது?

திரைப்பட ரசனையை வளர்க்கவும், நல்ல, உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களைச் சென்னை நகர மக்கள் - குறிப்பாக இயக்க ஊழியர்கள் பார்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தவும் சென்னை ஃபிலிம் சொஸைட்டி உருவானது. அதன் ஆரம்ப கால அமைப்பாளர்களில் நானும் ஒருவன். அந்த சொசைட்டியுடன் இணைந்து மிருணாள்சென், பேல பெலாஸ் உள்ளிட்டவர்களின் நூல்களை, திரைப்படத்துறை சார்ந்த புத்தகங்களை நான் வெளியிட்டேன். தமிழ்நாடு அறிவியல் இயக்க நூல்களில் பலவற்றை அந்த அமைப்புடன் இணைந்துதான் வெளியிட்டு வந்தேன். இந்த முயற்சி டாக்டர் சுந்தரராமனுக்கும் எனக்கும் மிகுந்த இணக்கமான தொடர்பிலிருந்து வெளிப்பட்ட ஓர் அம்சம்.

இதை அறிவியல் இயக்கம் மட்டுமே அப்பொழுது செய்திருக்க முடியாது. இந்தக் கூட்டு பதிப்பு முயற்சியின் தேவை என்னவென்றால் பதிப்புக்கலை பற்றிய அனுபவம், இயக்க ஸ்தாபனங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. அது மட்டுமல்ல நூல் வினியோகத்திலும் ஒரு ஸ்தாபனத்தோடு அது நின்றுவிடாமல் பரவலாக தமிழ் சமூகத்திற்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

‘பூவுலகின் நண்பர்’களுடன் இணைந்து சுற்றுச் சூழலியல் சார்ந்த பல புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். அவற்றுள் வந்தனா சிவா-வின் ‘உயிரோடு உலாவ’ (Staying alive) மிக முக்கியமான ஒரு நூல். இலங்கை ‘தேசிய கலை இலக்கியப் பேரவை’யுடன் இணைந்து ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’ என்ற ந. இரவீந்திரனின் முதல் நூலை வெளியிட்டேன். அதன்பின் தொடர்ந்து இலங்கைத் தமிழ் நூல்கள் பல வெளியிட்டேன். தமிழ்ப்பகுதி முழுவதுமே யுத்தக்களத்தில் இருந்த போது அங்கு நூல்பதிப்பு முயற்சிகள் முடங்கியிருந்தபோது எனது பதிப்பு முயற்சிகள் முக்கியமாக அமைந்திருந்ததாக நினைக்கிறேன். “இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டு வரலாறு’ என்னும் நூலை சி.க. செந்தில்வேல் எழுதியதை வெளியிட்டேன். இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்னும் பிற வர்க்க-வெகுஜன ஸ்தாபனங்களுடன் இணைந்து நிறையவே வெளியிட்டுள்ளேன்.

இறுதியாக, சவுத் விஷனின் பணிகளில் உங்களுக்கு நிறைவான அம்சமாக எதைக் கருதுகிறீர்கள்? ‘புதிய புத்தகம் பேசுது’ வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?

பல எழுத்தாளர்களின் முதல் நூற்களை வெளியிட்டுத்தர முன்கை எடுத்தது. வெறும் அரசியல் - பொருளாதார நூல்களை மட்டும் நான் வெளியிட்டு வந்திருக்கவில்லை. சூழலியல், உலகமயமாக்கல், திரைப்படம், ஈழம் - அதன் பன்முகத் தன்மைகளுடன், வாழ்க்கை வரலாறுகள், கலை - இலக்கியப் பிரச்சனைகள் குறித்து, ஒப்பியல் இலக்கியம், நாவல், சிறுகதைத்தொகுதிகள் - அபூர்வமாகச் சில கவிதைத் தொகுதிகள், தத்துவார்த்தச் சிந்தனைகள் - இப்படியாகப் பன்முகத் தன்மை வாய்ந்த வெளியீடுகளை நான் பதிப்பித்து வந்திருக்கிறன். புதுடெல்லி தேசிய நூலகத்தின் பட்டியலைப் பார்த்த போதுதான் ‘சவுத் விஷன்’ நூல்களின் ‘வெரைட்டி’ தெரிய வந்தது.

கடைசியாக, புத்தகங்களைக் கொண்டு சென்று மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டிய வேலையைக் கட்சியும் பிற வெகுமக்கள் இயக்கங்களுமே செய்ய முடியும். பாரதி புத்தகாலயம் இப்போது மையம் தவிர்த்த விற்பனைக் கண்காட்சிகளை நடத்துகிறது. அவற்றின் வெற்றி மகிழ்ச்சி தரக்கூடிய அனுபவம். ஆனாலும் முழு வெற்றியடைய இன்னும் போக வேண்டும். இடதுசாரி அரசியல் இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலிலேயே இந்த முனைப்புச் செயல்பாடு இடம் பெற்றாக வேண்டும்.

வாங்க முடியாமற் போவதால் அரசியல் விழிப்புணர்வைத் தரும் பல நல்ல புத்தகங்கள் வாசிக்கப் படாமலேயே போகின்றன. இந்தப் பிரச்சனையைக் கம்யூனிஸ்ட் கட்சிதான் தீர்க்க முடியும். புத்தகங்கள் பெருமளவில் உற்பத்தியாகத் தொடங்கின பிறகும் கிராமப்புற - நகர்ப்புற ஏழை மக்களுக்குப் புத்தகங்கள் சென்று சேரவில்லை. நமது இயக்கங்கள் ஒரு ‘Transmission Belt’ போன்று செயல்பட்டு இவற்றை மக்களிடம் சேர்க்க வேண்டும்! முன்னே கூறியபடி இடதுசாரி இயக்கங்களுக்கு முன் இந்த வரலாற்று சுமை சுமத்தப்பட்டிருக்கிறது. அதை சுமையாகக் கருதாமல் இன்பமாக ஏற்று ஈடுபடவேண்டும் என்பதே என் ஆசை-கனவு.

Pin It