பவுத்தம்: ஆரிய திராவிடப் போரின் தொடக்கம்
அரசுகளின் தோற்றம் இனக்குழுக்களின் அழிவின் மேல் ஏற்பட்ட பொழுது, மக்கள் அடைந்த துன்பம் மட்டுமன்று புத்தரின் மனமாற்றத்திற்குக் காரணம். அதைவிட வலிமையான ஓர் ஆதிக்கம் மக்களை அடிமையாக்கி இருந்ததைப் புத்தர் கவனித்தார். அது ஆரியம்.
அரசன் தன் அதிகாரத்திற்கு ஆயுதத்தை முன்வைத்தான். ஆரியம் தன் ஆதிக்கத்திற்கு வஞ்சகத்தை முன்வைத்தது.
ஆரியர்கள் சிறுபான்மையினர், திராவிடர்கள் பெரும்பான்மையினர். அதனால் பெரும்பான்மைத் திராவிடர்களின் வலிமையைச் சிதறடிக்க, ஆரியம் செய்த சூழ்ச்சியின் முதல் நூல் ரிக்வேதம்.
ஆரியர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள். திராவி டர்கள் அவர்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்றது ரிக்வேதம். திராவிடர்களைச் சத்ரியர் என்றும், வைசியர் என்றும், சூத்திரர் என்றும் மூன்று கூறுகளாகப் பிரித்துப் போட்டது அந்நூல். இதைச் சதுர்வர்ணம் என்பார்கள்.
தன் பாதுகாப்புக் கருதி சத்திரியர் என்ற அரசர்களைத் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு, இராஜகுரு - மகாமந்திரி என்ற பெயர்களால் அரசனின் அதிகாரத்தைத் தனக்குச் சாதமாக்கியது ஆரியம்.
புரோகிதர்களும், குருமார்களும், சோதிடர் களும் உருவானார்கள். யாகங்கள் உருவாயின; வேள்விகள் உருவாயின; புரோகிதங்கள் உருவாயின; வேத மந்திரங்கள் ஒலிக்கத் தொடங்கின.
இவையெல்லாம் தெய்வீகத்தோடு தொடர்பு கொண்டது என்றார்கள். தெய்வத்தை "பிரம்மம்" என்றார்கள். பிரம்மமே "பிராமணன்" என்று தம்மை அதனோடு இணைத்துச் சொன்னார்கள். தெய்வீகம் ஆரியரின் சொத்து என்று சொல்லித் திராவிடர்களை அதனில் இருந்து ஒதுக்கி வைத்தார்கள்.
கடவுள் என்று பயமுறுத்தினார்கள்; விதியைச் சொல்லிப் பயமுறுத்தினார்கள்; மறுபிறப்பு என்று பயமுறுத்தினார்கள்.
அறியாமை மக்களை ஆட்கொண்டது. "அனைத்தும் அவன் செயல்" என்ற ஆரிய வாக்கை நம்பிய மக்கள் "தெய்வக்குற்றம்" ஏற்பட்டுவிடக் கூடாது என்று பயந்தார்கள். பரிகாரம் தேடினார்கள். சோதிடர்களிடம் ஓடினார்கள் மக்கள்.
மக்கள் மட்டுமன்று மன்னர்களும் ஏமாந் தார்கள். ஆரியர்களின் தெய்வீகத்திற்குப் பயந்த மன்னர்கள் ஏராளமான நிலங்களை இலவசமாக வழங்கினார்கள் ஆரியர்களுக்கு. "இறையிலி" என்ற பெயரால் வரிவிலக்கு வழங்கினார்கள். அவை "பிரம்மதேயம்" என்று அழைக்கப்பட்ட வரலாற்றை பவுத்த நூல் திக்நிகாய கூறுகிறது.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் மக்களின் நிலை வேறாக இருந்தது.
தாசா - கம்ம - போரிச - வேட்ட - விட்டா - ஆதனா - டுக்கட்டா இவை உழைக்கும் மக்களைக் குறிக்கும் பாலி மொழிப்பெயர்கள் என்பதைச் சம்யுக்த நிகாய என்ற பவுத்த நூல் கூறுவதைக் காணலாம்.
குறிப்பாக "தலித்" என்ற பெயர் முதன் முதலாக "தலித்தா" என்று ஒடுக்கப்பட்ட ஆதரவற்ற மக்கள் என்ற பொருளில் திரிபிடக நூலுள் ஒன்றான மஜ்ஜிய நிகாய குறிப்பிடுவது கவனத்திற்குரியது. இன்று தலித் மக்கள் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படு கிறார்கள்.
மேலே குறிப்பிட்ட இம்மக்களின் வாழ்நிலை எப்படி இருந்தது புத்தரின் காலத்தில்?
விளக்கம் தருகிறார் உமா சக்கரவர்த்தி, "தாசர்கள், கம்மக்காரர்கள், போரிசர்கள் பற்றி பவுத்த நூல்களில் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. வேட்டன் மற்றும் விட்டானிகன் போன்ற வார்த்தைகளும் ஒருசேரத் தோன்றின. முதன் முறையாகப் பயன்படுத்திய மற்றொரு வார்த்தை "தலித்தா" . மிகவும் வறிய நிலை மக்களை இது குறிப்பிட்டது.
அவர்கள் பரிதாபமான வறுமை வாழ்க்கையை வாழ்ந்தனர். உண்ணவோ, அருந்தவோ போதிய பொருட்கள் இல்லாத ஏழைகளாக இருந்தனர். தங்களது முதுகை மூடக்கூட ஆடை யின்றி இருந்தனர். மிதமான வசதியும், சமூகத்தின் இதர பகுதியினருக்கு வளமான வசதியும் இருந்தபோதிலும், அத்தகையத் தீவிர வறுமையும் அனாதர வான நிலையும் நிலவியதை, ஆதாரங்கள் முதன் முறையாகச் சுட்டிக்காட்டின.
சமூகத்தில் பணக்காரர்கள் ஆடம்பரமாக இருந்தனர். தங்கம், வெள்ளி, தானியம், அழகிய வீடுகள் பணியாட்கள் அவர்களிடம் இருந்தன. அவர்களோடு ஏழையான மக்களை இலக்கியம் ஒப்பிட்டுக் காட்டியது.
பரிச்சயமான பாலி மொழிச் சொற்றொடர்களான மொஹபோக குலம், தலித்தா குலம், சாதனா, ஆதனா, சுகட்டா, டுக்கட்டா ஆகியவை மூலம் வர்க்கங்களிடையே இருந்த கூர்மையான சமூக வேறுபாடு வெளிப்படுத்தப்பட்டது. அத்தகைய வறுமையாக்கலுக்குக் காரணமாக நிலம் மற்றும் வள ஆதாரங்கள் சமனற்றுக் கிடைக்கப் பெற்றதைக் கூறலாம். வறுமையாக்கப்பட்ட குழுக்களுக்கு தங்கள் உழைப்பை விற்பதைத் தவிர வேறு மாற்று இல்லை. அடிப்படை இருப்பிற்கான, தேவைக்காக அடிமையாக இருப்பது தவிர வேறு மாற்று இல்லை."
புத்தர் காலத்தில் வாழ்ந்த சூத்திரர்களின் நிலை, மக்களின் நிலை இப்படி இருந்துள்ளது. பெண்கள் உரிமையற்றவர்களாக இருந் தார்கள். பொது அவையின் முன் அவர்கள் வரக்கூடாது. தந்தை, சகோதரன், மகனின் கட்டுப்பாட்டில் வாழ்வதே பெண்களின் "தலைவிதி" . பெண்கள் அபாயகரமானவர்கள். கோபப்படுபவர்கள். காம உணர்ச்சி ததும்பு பவர்கள். கலப்படமானவர்கள். ஆண்களின் அடிமைகள். பெண்கள் கருப்புப் பாம்புகள் என்று கருதப்பட்டார்கள் என்று பவுத்த மூல நூலான திரிபிடகத்தின் ஒரு நூலான அங்குத்த நிகாய வெட்டவெளிச்சமாக்குகிறது. பவுத்த நூலான திக்நிகாய தரும் பாடல் இது:
இங்கு இருக்கிறார் மகத அரசர் அஜாத சத்ரு
அவரும் மனிதர்தான்
நானும் மனிதன்தான் - ஆனால்
முழுமையான சுகபோகங்களில்
வாழ்கிறார் மன்னர்
இங்கு நான் அடிமையாய் உழல்கிறேன்
அரசருக்கு முன் எழுந்து
பின் தூங்குகிறேன்
அவரது மகிழ்விற்குச்
சேவை செய்கிறேன் - அவரது
பார்வையைப் பார்த்துப் பணி செய்கிறேன்
ஆனால் நான் அடிமை
- இந்த மக்களைத்தான் புத்தர் "பதித்" என்று அழைத்தார். அறியாமையால் அடிமையான வர்கள் என்று இதற்குப் பொருள்.
இனக்குழுக்களின் அழிவின்போது இருந்த துன்பத்தைவிட, இந்தத் துன்பம் வலிமைவாய்ந்தது என்பது புத்தரின் பார்வை.
பிறப்பில் தோன்றிய சாதிய வர்ணம், ஆரியத்தின் ஆதிக்கம், அதற்கு மன்னர்களின் ஒத்துழைப்பு, கடவுள் கோட்பாடுகளால் வாழும் ஆரியக் கூட்டம், அதே கோட்பாடுகளால் அறியாமைக்கு உள்ளான மக்கள், உழைப்புச் சுரண்டல், அடிமை உழைப்பு, பெண்ணடிமை, இவைகளினால் நாள்தோறும், காலம்தோறும், தலைமுறை தலைமுறைதோறும் தொடர்ந்த தொடர இருக்கின்ற துன்பம் இது என்பதை உணர்ந்தபோது, மிகப்பெரிய வலியைப் புத்தருக்குக் கொடுத்தது.
துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் பெரிதும் வேறுபாடு இல்லை என்பதைப் புரிந்துகொண்ட புத்தர், அந்த மக்களுக்காக, திராவிட மக்களுக்காக ஆரியத்தை எதிர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.
இந்த முடிவுதான் புத்தரைத் துறவி யாக்கியது.
ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதத்தில் இந்த வரி இருக்கிறது. அது, "ஜாதிக் கொடுமையையும் குருமார்களின் ஏமாற்றுவித்தைகளையும், சடங்கு முறைகளையும் ஒழிக்க எழுந்தது பவுத்தம் என்று பல தடவை நான் கூறி இருக்கிறேன்"
புத்தர் ஆரியத்திற்கு எதிராகத்தான் பவுத்தத் தைத் தொடங்கினார் என்பதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன.
கபிலவஸ்துவில் முதன் முதலாக மகதப் பேரரசன் பிம்பிசாரனைச் சந்தித்த சித்தார்த்த புத்தர் அவரிடம் இப்படிச் சொல்கிறார், "உலகியல் பூசலால் காயப்பட்டு விட்டேன். மக்கள் துன்பத்தில் இருக்கிறார்கள்... இப்போது என் பிரச்சினை விரிவாகிவிட்டது. இந்தச் சமூக முரண்பாட்டுப் பிரச்சனைக்கு நான் தீர்வு கண்டாக வேண்டும்"
பிம்பிசாரன் அமைதியாக இருக்கிறார்
புத்தர் அமைதியாகச் சிந்திக்கிறார்
கருவாகியது பவுத்தம்!
உருவாகியது சங்கம்!
- மீண்டும் சந்திப்போம்