அயல்மொழி அலமாரி -3

சின்ன வயதில் வருடா வருடம் கோடை விடுமுறையில் ஒரு பத்து நாட்களாவது நாங்கள் லால்குடிக்கு எங்கள் தாத்தா வீட்டிற்கு ‘நாடு’கடத்தப்பட்டோம். அங்கே தெருப்புழுதியை அங்குலம் அங்குலமாய் அளந்து வெயிலை வீணாக்காமல் அலைந்த நேரம் போக வீட்டில் ஆர்.கே. நாராயண் புத்தகங்கள் சில வாசிக்க கிடைத்தன. அவரது கற்பனை ஊரான மால்குடி (அது லால்குடி மாதிரியே உச்சரிப்பு ஆனதால்) என்னைக் கவர்ந்தது... ஆனால் மிஸ்டர் சம்பத், மகாத்மாவுக்காக காத்திருத்தல் (waiting for the Mahathma) போன்றவை ஏற்படுத்திய ஆர்வம்... பள்ளிக்கூடத்தில் பாடமாக வைத்ததாலோ என்னவோ அவரது கைடு எனும் பலரும் பாராட்டும் நாவலில் எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை.

பின் நாட்களில் எனக்குள் புகுந்த சார்லஸ் டிக்கின்சும், மார்க்ட்வைனும் ஆர்.கே. நாராயண் என்கிற (ஒரே) இண்டிலீஷ் நாவலாசிரியர் மீதான என் ஈர்ப்பை அநியாயத்திற்கு உடைத்தெறிந்தார்கள். இங்கிலாந்திற்கு பிரயாணம் செய்த முதல் இந்தியர் ராஜாராம் மோகன்ராய், முதன் முதலில் இந்தியாவைப் பற்றி ஆங்கில புத்தகம் எழுதியவர் நிராஜ் சவுத்ரி... என்கிற ரீதியில் ‘முதன்முதல்’ தகவல் ஒரு இருநூறு வைத்திருக்கிறேன்.. (யாருக்காவது உபயோகப்படுமானால் பாரதி புத்தகாலயம் எண்ணிற்கு ஸ்பேஸ் விடாமல்(!) ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பவும்!) ஆனால் சமீபத்தில் ‘தி இந்து’ நாளிதழ் தனது முதல் இலக்கிய விருதை வழங்கி உள்ளது. பெற்றுள்ளவர் மனுஜோசப். அந்த இண்டிலீஷ் நாவல் ‘த சீரியஸ் மென்’ என்பதை கேள்விப்பட்டு அதனை வாங்கி வாசிப்பவர்கள் இந்திய ஆங்கில எழுத்து என்பது ஆர். கே. நாராயண் மட்டுமல்ல முல்க்ராஜ் ஆனந்த் (தீண்டத்தகாதவர்கள்) போன்றவர்களிடமிருந்தே கூட எவ்வளவோ மாறிவிட்டது என்பதை உணர முடியும்.

இந்திய ஆங்கில எழுத்தின் திருப்புமுனை எப்போது ஏற்பட்டது என்பதை சரியாக விமர்சகர்களால் கணிக்க முடியவில்லை. அது வாசகர்களால் ஏற்படுத்தப்பட்டது. முன்பு குமுதம் மாதிரி இதழ்களில் முன்னணி தமிழ் நடிகைகள் ஆங்கில ‘பல்ப்’ நாவல்களைக் கையில் வைத்து வாசிப்பது போல போட்டோவுக்கு போஸ் கொடுத்து வந்ததை நினைவு கூர்ந்தால் புரியும். இந்திய ஆங்கில வாசிப்பு அப்படித்தான் இருந்தது (?) ஆனால் ஆங்கிலக் கல்வி மூலம் தனது சமூக அந்தஸ்த்தை தேடிவந்த ஒரு புதிய தலைமுறைக்கு நாவல் தீனி (!) போடுவது மிகவும் சவாலான ஒரு வேலையாக இருந்த சூழலில் புக்கர் பரிசு நாயகரான சல்மான் ருஷ்டியை வாசகர்கள் கண்டடைந்தார்கள். அவரது ‘சாத்தானின் கவிதைகள்’ நூலைக் கண்டு அரண்டுபோய் இந்திய விமர்சக ஜாம்பவான்கள் தலைசிறந்த அவரது நாவலான ‘மிட் நைட் சில்ரனையும்’ அதிகம் சிலாகிக்காமல் கொஞ்சம் எட்டவே இருந்தாலும்... சாதாரண வாசகர்கள் அவரை தீவிரமாக வாசித்தார்கள் என்பதே உண்மை.

வி.எஸ்.நேய்பாலின் ‘எ பெண்ட் ஆஃப் ரிவர்’ நாவலை வாசித்த போதும், விக்ரம் சேதின் ‘சூட்டபிள் பாய்’ (உலகிலேயே மிகப் பெரிய நாவல் எனும் அந்தஸ்த்தை டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’நாவலிடமிருந்து பறித்த முயற்சி இது) பல மாதங்கள் எப்படியாவது வாசித்து நாவலுக்குள் முட்டி மோதி உள்ளே போக முயற்சித்த போதும் அவர்கள் நமக்காக எழுதவில்லை என்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது. ஆனால் அருந்ததிராய் தனது நாவலான சின்ன விஷயங்களுக்கான கடவுளை விட தனது அரசியல் மூலம் விருவிருப்பானவராக நம்முன்தோன்றுவதால் அவரது எழுத்தை முந்திக்கொண்டு தினசரிகளில் வெளிவரும் அவரது பெரிய கண்களோடான புகை படங்கள் வந்து நம்முன் அணிவகுக்கின்றன. ஆனால் அவரது எழுத்துக்களை, அமிதா கோஷ், மற்றும் ஜம்பலஹரி போன்ற புதிய இந்திய ஆங்கில நாவல் வரிசையிலிருந்து தவிர்க்க முடியாத அழுத்தமான பதிவாக பலரும் முன் வைக்கிறார்கள்.

ஆனால் சமீபத்திய மூன்று இந்திய ஆங்கில (இண்டிலீஷ்) நாவல்கள் மிகச் சரியான கோணத்தில் அத்துறையை செலுத்துவதாக நான் பார்க்கிறேன். விக்காஸ் ஸ்வரூபின் ‘கியூ அண்ட் ஏ’ (Q&A), அரவிந்த் அடிகாவின் ‘தி வொய்ட் டைகர்’ (The White Tiger). மற்றும் தற்போது ‘தி ஹிந்து’ விருது பெற்றுள்ள மனுஜோசப்பின் ‘சீரியஸ் மென்’(Serious Men). இந்தியா, சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா போற்றியதைப் போல ஒரே இந்தியா அல்ல. முன்னால் குறிப்பிட்டவை எல்லாம் அந்த வெளியே வளர்ந்து உயர்ந்து நெஞ்சை நிமிர்த்தும் அந்த இந்தியாவைப் பற்றிய நாவல்கள் என்றால் இங்கே நான் குறிப்பிடும் மூன்றும், அப்படிப்பட்ட பெரிய நகரங்களின் பாதாள சாக்கடை களுக்கு ஒரமாக.. குப்பைமேடுகளின் பின்புறம் வாழும் ‘தி அதர் இந்தியா’ (the other india). தனது அன்றாட வாழ்வின், உயிர் வாழ்தலின், அடிப்படையைத் தேடி நொடிதோறும் வலிதாங்கும் அடித்தள மக்களின் அவலங்கள் இந்த மூன்று நாவல்களிலும் அணிவகுப்பதைப் பார்க்கிறோம்.

‘ஸ்லம் டாக் மில்லினர்’ படமாக உருவாக்கப்பட ‘கியூ அண்ட் ஏ’ நாவல் அதிகம் வாசிக்கப்படவில்லை. சினிமாவின் பிரபலம் நாவலை பாதிக்கவில்லை. ஆனால் நாவலை வாசித்து சினிமாவைப் பார்த்தவர்கள் படத்தினால் ஈர்க்கப்பட வாய்ப்பே இல்லை. பெரு நகரங்களில் ராஜ விசுவாசிகளுக்கும் அதிகார அரிதாரங் களுக்கும் அவர்களது வாழ்வை மேன்மையாக்கிட எப்படி சாதாரண மக்கள் தங்களது கொடிய அன்றாட வாழ்வைப் பலியிடுகிறார்கள் என்பதை ராம் முகமது தாமஸின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. கோடீஸ்வரன் டிவி நிகழ்ச்சியின் அனைத்துக் கேள்விகளுக்கும் அவன் சரியான பதில் அளித்து கோடியை ஒரே எபிசோடில் வென்று விடுகிறான். நாய் மாதிரி அவனை அடித்து போலீஸ் இழுத்துச் செல்கிறது. ‘எழுதப் படிக்க மட்டுமே தெரிந்த ஒரு குப்பத்து குப்பைக்கு வகைகள் எப்படித் தெரியும்... என்கிற சந்தேகம் என விரியும் நாவல், ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு அத்தியாயமாக, நமது ரத்தத்தை உரையவைத்து விடும். மும்பை வீதிக் குழந்தைகளின் வாழ்வை பதறப்பதற நம்முன் வைக்கிறது.

அனாதையாக கண்டெடுக்கப்படும் குழந்தைக்கு முதலில் தாமஸ் என்று பெயர் வைக்கும் பாதிரியார், இந்துக்களுக்கு பயந்து ராம் என்றும் இஸ்லாமியர்க்கு பயந்து முகமது என்றும் சேர்த்து அவனை ராம் முகமது தாமஸ் ஆக்குகிறார். நாவலின் அற்புதமான இந்த விஷயம், சினிமாவில் இல்லை, ஒரு வேளை வசூல் எஜமானர்களான ஆங்கில தயாரிப்பாளர்களுக்கு இது பெரிய விஷயமாகப் படவில்லை போலிருக்கிறது.

இந்தியா இன்று ‘வளர்ந்த’ நாடுதான் என சர்டிபிகேட், ஒபாமா கொடுத்து, ‘குட்குட்’ என பாராளுமன்றத்தில் பாராட்டுகிறார். நமது மென்பொருள் துறை இளைஞர்கள் ரொம்பவே குஷியாகி பார்டிகள் நடத்தி அந்த அவலத்தைக் கொண்டாடினார்கள் என்று படித்தேன். அரவிந்த் அடிகா மாதிரி இளைஞர்கள் அப்படி அல்ல. ‘தி வொய்ட் டைகர்’ வாசிப்பவர்கள், இந்தியாவின் மறுபக்கத்தைப் பற்றிய நெஞ்சை உறைய வைக்கும் பதிவுகளைப் பெறுவார்கள். இந்திய நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் ஒரு முறை இந்தியா சீனாவை விட சிறந்த நாடு... இங்கேதான் எண்ட புரூனர்ஸ் (தொழில் முனைவோர்) அதிகம் என்று குறிப்பிட்டார்.

இந்தியா வருகை தரும் சீன அதிபருக்குத் தன்னை வித்தியாசமான வெள்ளைப் புலியாக பாவிக்கும் முன்னா பலராம் ஒரு திறந்த கடிதம் எழுதுகிறான். முன்னா பலராம் ஒரு எண்டர் புரூனர். சீன அதிபருக்கு ஒரு தொழில் முனைவோனின் உருவாக்கம் பற்றிய விளக்கங்களோடு எழுதப்பட்ட ஒரு நக்கல், அரசியல் அங்கதம், என பலவாறான ரூபங்களை எடுத்து நாவல் நம்மை வீழ்த்துகிறது. பீகார் கிராமத்து, டெல்லி எருமை ஒன்றே நன்று கொண்ட பெரிய குடிசையில், பிறந்த முன்னா, வறுமையே வாழ்வாகி ஓட்டுனர் வேலை கற்று டீ கடை கரி உடைக்கும் குழந்தைத் தொழிலாளி எனும் வேலையிலிருந்து மீண்டு-ஊர் செல்வந்தனால் நகரம் பெயர்ந்து,,, பல விதமாய் பலரை ஏமாற்றி (கொலை கூட செய்து) பெங்களூரு மென் பொருள் பூங்கா யுவன் / யுவதிகளுக்கு இரவும் பகலும் வாகனங்கள் வாடகைக்கு விடுபவனாய் எப்படி உருவாகிறான் என்கிற வாழ்வோடு இணையும் நாம், உலகமயமாதலின் கொடிய பல் சக்கரம் இந்திய கிராமப்புற வாழ்வை சிதைக்கும் விக்ரம் சேத் அவலத்திலிருந்து ரத்தம் ஓடும் வீதிவழியேயும், தனது அன்றாட வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்படாது, வாழ முடிந்த புதிய மென்பொருள் உலகையும் ஒரே பைனாகுலரிலிருந்து பார்த்து தவிக்கிறோம். இந்த நாவலின் வெற்றியும், ஏமாற்றும், பகட்டும், லஞ்ச ஊழலும் மலிந்த இந்திய புது சமூகத்தின் உருவாக்கம் குறித்த அதன் பதிவில் மிளிர்கிறது.

ஆனால் மனுஜோசப் அதிலிருந்து சற்றே வேறுபடுகிறார். அம்பேத்கர் உட்பட நாட்டின் சமூகப் போராளிகள் அளித்த வாய்ப்பின் மூலம் நகரத்து அலுவலகங்களில் பலவிதமான அரசு வேலைகளில் தலித் மக்கள் அனுபவிக்கும், வெளியே சொல்ல முடியாத கொடுமைகளையும் அவற்றை எதிர்த்து அவர்கள் ஆடும் பகடைகளும் அய்யன் மணி பாத்திரம் மூலம் முன் வைக்கப்படுகிறது. அறிவியல் கல்விக் கூட இயக்குனரின் கிளார்க் அய்யன்மணி ஒரு தலித். இயக்குனர் அவரது அலுவலக எதிரியான இணை இயக்குனர் இருவருமே பார்ப்பனர்கள். ஆனால் மணியின் பார்வையில் தலித்துகளைக் தவிர மற்ற எல்லோருமே பார்ப்பனர்கள் (ஆங்கிலேயேர்கள், பார்ப்பனர்களின் பார்ப்பனர்கள்!).

மிகக் கொடிய வறுமை பிடுங்கும், BDD ஒரு அறை வீட்டில் (மும்பையில் குடிசைப் பகுதிகள் கண்ணில் படாமல் இருப்பதற்காக முன்பு பிரிட்டிஷ்காரர்கள் கட்டிய பல அடுக்குமாடி கட்டடங்கள் அவை) வாழும் அய்யன் மணி தனது மகன் ஆதியை ஒரு பெரிய குழந்தை ஜீனியசாக உலகிற்கு காட்ட பல வேலைகள் செய்கிறான்.. அறிவியல், பிரபஞ்ச அறிவு, தொழில் நுட்பம் என பெரிய அறிவார்ந்த, ஒளியுடன் வலம் வரும், அறிவியல் கல்வியாக, மாமேதைகள் சரியான பெண் பித்தர்களாவும், சாதாரண மக்களை விட பதவி பண வெறியர்களாகவும் இருப்பதைப் பார்க்கும் அய்யன்மணி, அலுவலத்தில் தாட் பார் த டே (நாளரு சிந்தனை) கற்பனையாக பார்ப்பனர்களை கிண்டலடித்து பலர் கூறியதாக எழுதி (ஐன்ஸ்டீன் உட்பட) அறிவியலில் புயல் கிளப்புவதிலிருந்து அதிகாரிகளின் பேச்சை செல்லில் பதிவு செய்து மிரட்டுவது வரை பல பகடைகள் செய்து தன் வாழ்வை, தக்கவைக்கும் அவலத்தை மிக அழகாகப் பதிவுசெய்கிறார் மனுஜோசப்.

மூன்று நாவல்களிலுமே தமிழர்கள் வருகிறார்கள். இன்று இந்தியா முழுவதும் தமிழர்கள் பற்றிய பேச்சு தவிர்க்க இயலாததாகி வருவதைத் தான் இது உணர்த்துகிறது. வெள்ளைப் புலி சொல்வான் ‘தெற்கே அரசியல் நடத்த இந்த மும்பை நகர அரசியல் தலைவர் களுக்கு பயம்... அங்கே தமிழர்கள் இருக்கிறார்கள் ... தே ஆர் லைக் நீக்ரோ’! இங்கே ‘சீரியஸ் மென்’ நாவலில் அய்யன்மணி ஒரு தமிழ் தலித். ரொம்பவும் தேவைப்படும் அவசியமான தருணங்களில் தமிழில் பேசி, தமிழ் அதிகாரிகளை அவர்களது மனைவியரை வழிக்கு கொண்டு வருவான். அவனது மனைவி தமிழ் சீரியல் பார்த்து மூக்கு உறிஞ்சுவதை வாசிக்கும் நமக்கு அடிவயிற்றைக் கலக்குகிறது. ஆபீசருக்கு காப்பி வாங்கிக் கொடுத்தபடி அவரது வாழ்வைத் தனது தரித்திரத்தோடு ஒப்பிட்டுப் பதறும் அவன் தான் இன்றைய அவலம்.

ஆர்.கே. நாராயண் போன்ற அந்த ஆங்கில ஆங்கிலேய எழுத்திடமிருந்து இண்டிலீஷ் உலகம் இன்று வெகுதூரம் வந்து விட்டது என்பது மட்டுமல்ல. அது அடித்தள மக்களை, முன் காட்டப்படும் ‘வளர்ந்த’ நெடிதுயர்ந்த இந்தியாவுக்குப் பின்னே அதை நிமிர்த்திப் பிடித்தபடி போராடும் இன்னொரு இந்தியாவைப் பதிவு செய்து வரும் சத்தம் போடாத புதிய திசை நோக்கி நடைபோடுவதையும் பார்க்கிறோம். இந்தப் புதிய மென்பொருள் சந்ததியினரிடையேயும் கனத்த இதயமும், சிறுமைகண்டு பொங்கும் தோள்களும் உள்ளன என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை. 

Pin It