அறிவு ராட்சசன் என எதிரிகளால் அசூயையுடன் அழைக்கப்பட்டார் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட். அவரது நூற்றாண்டுதான் இந்த ஆண்டு. அவர் தன் இறுதி மூச்சு நிற்கும் வரை எழுதிக் கொண்டிருந்தார். போராட்டங்களை முன் நின்று வழி நடத்தும் போதும் எழுதினார். நெருக்கடியான காலங்களிலும், சிறை வாழ்க்கையிலும், தலைமறைவுக் காலத்திலும் தொடர்ந்து எழுதினார். இ.எம்.எஸ். முதலமைச்சராக இருக்கும், போதும் கட்சிப் பொதுச்செயலாளராக முக்கிய பொறுப்புகளை நிர்வகிக்கும் போதும் எழுத்து வேலைகளைத் தொடர்ந்தார். வயோதிகத்தால் உடல் உறுப்புகள் சில செயல் திறன் மங்கிய நிலையிலும் தன் எழுத்துப் பணியை நிறுத்தியதில்லை.

தோழர் இ.எம்.எஸ். கதைகளையோ, கற்பனைகளையோ எழுதிக் குவிக்கவில்லை. அவர் வேதங்களை வர்க்கப் பார்வையுடன் அணுகினார். சமூக உறவுகளை வரலாற்று இயக்கவியல் நோக்கில் ஆராய்ந்தார். நில உறவுகளை ஆய்வு செய்தார். பண்பாட்டை, கலாசாரத்தை இலக்கியத்தை, முற்போக்கு நிலையிலிருந்து பகுத்தாய்ந் தார். இந்திய விடுதலைப் போராட்டத்தை, காந்தியை, நேருவை உழைக்கும் மக்கள் சார்புநிலையிலிருந்து மதிப்பிட்டார்.

இத்தகைய சிறப்பு மிக்க தோழர் இ.எம்.எஸ். நூற்றாண்டை புத்த விற்பனை இயக்கமாக அனுசரிப்ப தென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டக்குழு பொருத்தமாகவே முடிவு செய்தது. பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து இந்த விற்பனை இயக்கத்தை நடத்தியது. தோழர் இ.எம்.எஸ். நினைவு நாளான மார்ச் 19 அன்று துவங்கி, பகத்சிங் நினைவு நாளான மார்ச் 23 வரை இந்த விற்பனை இயக்கம் நடைபெற்றது.

பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள், அங்காடிப் பகுதிகள், ரயில் நிலையங்கள், கடற்கரைகள் என 100 மையங்களில் மாலை நேரப் புத்தக சந்தை கடைகள் உரிய ஏற்பாடு களுடன் நடத்தப் பட்டன. ‘புத்தகங்கள் அறிவு இல்லத்தின் திறவு கோல்’ எனத்தலைப் பிட்டு வாசிப்பை ஊக்கு விக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

சென்னை மாநகரில் பிரம்மாண்டமான புத்தகக்கடைகள் இருக்கின்றன. பெரிய அளவிலான புத்தக கண்காட்சி ஆண்டு தோறும் நடைபெறுகிறது. இருப்பினும், இவை மாநகரின் உழைக்கும் மக்களுக்கு, அவர்களின் நேரம், காலம், வாய்ப்புகளை யட்டி எட்டும் வகையில் அமையவில்லை. இ.எம். எஸ் நூற்றாண்டு புத்தக விற்பனை இயக்கம் உழைக்கும்

மக்களின் வழித்தடங்களில், அவர்களுக்கு எட்டும் வகையில் புத்தகங்களை விரித்தது. மக்களும் பேரார்வத்துடன் அணுகினர்.

ஒவ்வொரு மையத்திலும் சுமார் 150 தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டன. தத்துவம், வரலாறு, அறிவியல், பண்பாடு, இலக்கியம், தியாகிகள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், தலைவர்கள், பொருளாதாரம் என அனைத்து வகை பயனுள்ள, உயர்தரமான உள்ளடக்கம் கொண்ட புத்தகங்கள் எளி யோரும் வாங்கும் வகையில் 5 ரூபாய், 10 ரூபாய் விலை வைக்கப்பட்டன. மக்கள் ஆர்வத்துடன் குவிந்தனர்.

ஒவ்வொரு மையத்திலும் ஒரு நாள் முதல் 5 நாள் வரை விற்பனை நடைபெற்றது. முதல் நாள் பார்த்தவர்கள் மறுநாள் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். புத்தகங்களை விற்பனை செய்த ஊழியர்களுடன் விவாதித்தனர். ஊழியர்களின் உற்சாகம் அதிகரித்தது. குறிப்பிட்ட தேதியுடன் விற்பனை இயக்கத்தை முடிக்கச் செய்தாலும், பல மையங்களில் விற்பனையை மேலும் தொடரவும், தொடர்ந்தும் நடத்தவும் ஆர்வம் காட்டுகின்றனர். நூறு விற்பனை மையங்களில் குறிப்பிட்ட நாட்களில் 790 ஊழியர்கள் இந்த விற்பனை இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

ஒவ்வொரு மையத்திலும் ஒவ்வொரு நாளும் 150 முதல் 350 பேர் என பார்வையாளர்களின் எண்ணிக்கை இருந்தது. அனைத்து மையங்களிலும் சுமார் 20ஆயிரம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

பல மையங்களில் ஒலி பெருக்கி அமைத்து அறிஞர்களின் உரைகளுடன் கருத்து விழாக்களும் நடந்தன. விவாதங்கள் தொடர்கின்றன. பல தொடர்புகள் உருவாகின. விற்பனை இயக்கத்தில் ஈடுபட்ட சுயநலன் பாராத ஊழியர்களுக்கு திருப்தியையும் மேலும், ஆர்வத்தையும் தூண்டும் வகையில் விற்பனை இயக்கம் அமைந்தது. 100 விற்பனை மையங்களில் 200 விற்பனை நாட்களில் சில மணி மாலை நேர விற்பனை 40ஆயிரம் பேரின் பார்வையை ஈர்த்தது. அதில் சரிபாதியினர் புத்தகங்களை வாங்கினர். பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதி, சாதி எதிர்ப்பு, பெண் விடுதலை போன்ற முற்போக்கு எண்ணம் கொண்டது தமிழக பொது சிந்தனை. இந்தியாவில் வேறெந்த மாநிலத்தையும் விட தமிழகம் இதில் சிறந்து விளங்கியது. சமீபத்தில் மின்னணு ஊடகங்கள், அதிகப்படியான டிவி சானல்கள், மஞ்சள் பத்திரிகைகளுக்கு சமமாக ஆபாச வியாபாரம் செய்யும் சில அச்சு ஊடகப் பத்திரிகைகள், தமிழகத்தின் இந்த முற்போக்கு பொது சிந்தனையில் நஞ்சு கலக்கின்றன. இந்த தீய முயற்சியை முறியடிக்கவும், சாதாரணமான உழைக்கும் மக்களின் தரமான வாசிப்பு ஆர்வத்தையும் ஊக்குவிக்கவும் இந்த விற்பனை இயக்கம் வழி செய்தது. உழைக்கும் மக்களின் ‘ராட்சச அறிவுப்பசிக்கு’ இது போல் பல ஆயிரம் முயற்சிகள் தேவை என்பதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டியுள்ளது.

- க.மாதவ்

Pin It