நூல் ஆய்வு

அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை ஒரு மறுவாசிப்பு

ச. செந்தில்நாதன், புதுமைப்பித்தன் பதிப்பகம்,

சென்னை-83

பக்: 152 | ரூ. 80

தமிழகத்தின் வரலாறு, சமூகம், பண்பாடு முதலியவை பதினாறாம் நூற்றாண்டு தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை பலவகையான புரட்சிகளைக் கொண்டிருந்த காலகட்டங்களாகும். தமிழகத்தில் அன்னியப் பதிவுகளும் பார்வைகளும் ஒரு புதிய சூழலுக்குத் தமிழகத்தை தமிழின மக்களை உள்ளாக்கிய காலகட்டங்களாகும். வரலாற்றின் தொடர்ச்சியில் புதுமையும் காலமாற்றமும் தவிர்க்கமுடியாதவை என்பதனைக் காட்டுவனவாகவே அந்த மூன்றுகால கட்டங்களும் விளங்கின. வேற்றவருடைய வரவும் உறவும் தமிழகத்தின் போக்கில் பலவகைகளில் மறுமலர்ச்சிக்கும் மாற்றுச் சிந்தனைகளுக்கும் இடம் கொடுப்பதாகின. தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாற்றில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிய அக்கால கட்டங்களில் எப்படிப் பட்டவையாக இருந்துள்ளன என்பதனை அறியும் வண்ணம் அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை - ஒரு மறு வாசிப்பு என்னும் சிகரம் செந்தில்நாதனின் நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் ஆசிரியர் மார்க்சியச் சிந்தனைத் தடத்தில் இயங்கிவருபவர். வழக்குரைஞராகத் திகழும் இவர் நடுநிலையான திறனாய்வுப்பார்வையுடன் சமூக நிகழ்வுகளைச் சரியான எடுத்துக்காட்டுகளோடு எடுத்துரைப்பவர்.

இந்நூலில் நிலவுடைமைச் சமுதாயத்திற்குச் சிதைவு ஏற்படுத்தி முதலாளித்துவம் தன் ஆதிக்கத்தைச் செலுத்திய சூழலில் மதமும் பண்பாடும் மாறுபட்டமைவதை அது இக்காலத்திற்கும் பொருந்தியிருப்பதனை உற்று நோக்குகிறார் ஆசிரியர். அதனால்தான், அது மூடநம்பிக்கைகளை அதிகமாக்கியது. வழிபாட்டு முறைகளை மாற்றியமைத்தது. சில கோயில்களைப் பிரபலமாக்கியது. சில கோயில்களைப் பின்னுக்குத்தள்ளியது. கோயில்களைச் சுற்றுலாத் தலங்களாக்கியது. சாமியார்களை நவீன சாமியார்களாக்கியது. இவற்றை இன்றைய சூழலில் மறுவாசிப்புச் செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்த நூலில் ஆழமாக உணர்த்த முற்பட்டிருக்கிறார் ஆசிரியர். அருணகிரிநாதருக்கும், வள்ளலாருக்கும் முன் தமிழகம் பிற இனத்தவர்களின் படையெடுப்பாலும் ஆதிக்கத்தாலும் ஆட்பட்டிருந்த சூழலைச் சுருக்கமாகவும், ஆழமாகவும் தம் எளிய மொழிநடையில் உணர்த்தியிருப்பதனைக் காணலாம். அந்த வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைத்தால்தான் தமிழகத்தின் சமய, சமுதாயப் பண்பாட்டினைப் புரிந்துகொள்ளமுடியும் என்று கருதி அவற்றை முதல் ஐந்து இயல்களில் சொல்லவேண்டிய அவசியம் ஆசிரியருக்கு நேர்ந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தின் வளர்ச்சியில் அருணகிரிநாதர், தாயுமானவர், சித்தர்கள், சைவ மடங்கள், குகையிடிக் கலகம், சைவ சாத்திரங்கள், குமரகுருபரர், சிவப்பிரகாசர் அண்ணாமலை ரெட்டியார் நிகம வழிபாடு, வைணவத்தின் நிலை, வள்ளலார் ஆகிய இயல்கள் தொடரோட்டமாகச் செல்கின்றன.

அருணகிரிநாதர் பற்றிய வரலாற்றை மேலெழுந்த வாரியாகச் சொல்லிவிட்டு முருகனை அவர் பெரிதும் போற்றிப் பாடிய சூழலைப் பக்தி இயக்கப் பின்புலத்தில் ஆராய்கிறார். ‘நிலவுடைமைச்சமுதாயத்தின் வளர்ச்சியை ஒட்டி, இனக்குழுச் சமூகத்தின் முருக வழிபாட்டை விட, அச்சமூகத்திற்குத் தேவையான சிவன் வழிபாடு ஏற்றம் கண்டது. முருகனுக்கு முக்கியத்துவம் அதிகார வர்க்கத்தால் குறைந்தது. விஜய நகர ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தபோது, அருணகிரிநாதர், தம்முடைய சந்தப்பாடல்களால் முருகன் வழிப்பாட்டுக்குப் புத்துயிர் பாய்ச்சினார். நாயன்மார்கள் காலத்திற்கு எண்ணூறு ஆண்டுகளுக்குப் பின்னர் சிவன் வழிப்பாட்டைப் பின்னுக்குத் தள்ளி முருகனை முன்னிலைப்படுத்தினார் என்று சொல்லி அதற்கான காரணத்தைக் கூறுகிறார். பிராமண மயமாக்கப்பட்ட சைவம், சிவ வழிபாட்டை விட, அதிகம் பாதிக்கப் படாத முருகன் வழிபாடு ஒரு மாற்றாக அருணகிரிநாதருக்குத் தோன்றியது (பக்.35). என்கிறார். அது போல, வடமொழியை ஒட்டித் தோன்றிய கந்த புராணம் எழுதப்பட்ட பின்பும், அருணகிரிநாதர் அந்த மரபைப் பின்பற்றாமல், மாறுபட்டுப் பாடியிருப்பதனைக் காட்டும் ஆசிரியர், தெய்வானையைவிட குறத்தி மகள் வள்ளிக்கே அருணகிரியார் முதலிடம் தந்திருப்பது, ஆன்மிகப்பண்பாட்டுத்துறை வரலாற்றில் ஒரு மாற்றத்திற்கான நிலைப்பாடு (பக்.39) என்ற கருத்து எண்ணத்தக்கது. அருணகிரிநாதரின் தமிழ், தமிழர்களின் பூர்வீகக் கடவுள் ஆயிற்று. தமிழ் உணர்வுக்கு உந்து சக்தியானது. முருகன் வெறும் கடவுள் மட்டும் அல்ல. தமிழின் அடையாளமும் ஆனான் என்று கருத்துரைக்கிறார். மாறாக அவருக்குப்பின் வந்த தாயுமானவர், சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு சைவ நெறி ஒழுகியவர். எனினும் ஆன்ம சிந்தனை அவர் பாடல்களில் மிக முக்கியத்துவம் பெற்றிருப்பினும், சமூக எதிர்ப்பு அவரிடம் கிடையாது. சமரச நோக்கே அவரிடம் இருந்துள்ளது எனவும், அவரது பாடல்களில் அவர் காலத்திய பதிவுகள் அழுத்தமாய் இல்லை என்றும் தமது முடிவினை மொழிகின்றார். (பக்.43) சித்தர்கள் பற்றிய கருத்துரைக்கையில் அவர்கள் கலகக் குரல் எழுப்பியதன் பின்னணி எடுத்துரைக்கப்படுகிறது. உலோகாயதச் சித்தர் பற்றி சொல்லியிருக்கும் செய்தி சுவையானது.

அவரின் பாடல் டார்வின் தத்துவத்தையும், பகுத்தறிவு வாதத்தையும், மார்க்சியத்தையும் உள்வாங்கி உள்ளதாகச் சுட்டியுள்ளார். அந்தச் சித்தர் கண்டிப்பாக அண்மைக் காலச் சித்தராகத்தான் இருப்பார் போலும். பதினெண் சித்தர்களில் இவர் அடங்குவாரா என்பது ஐயமே. பாட்டின் நடை அவ்வாறுதான் அவரைக் கருதத் தோன்றுகிறது. மடங்களைப் பற்றியும், (பக்.51-62) வீர சைவ ஆதினங்கள் (பக்.70-73) பற்றியுமான பார்வைகள் சுருக்கமாக இருந்தாலும் நாம் கருத்துரைக்க வேண்டிய கண்ணோட்டத்தை எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர். குகையிடிக் கலகம், (பக்.61) நிகம வழிபாடு (பக்.78) குறித்த பார்வைகள் சற்றே மொழி பக்தி இலக்கியத்தைப் பரப்புவதற்குக் கருவியாக இருந்துள்ளது. தமிழ்பக்திப் பாடல்கள் வழித் தமிழின் சிறப்பையும் மொழியும் குமரகுருபரர் சைவ ஆதினங்களில் தனித்து நிற்பவர் என்கிறார். அவர் தமிழையும் முருகனையும் முன்னிறுத்தியவர். சிவப்பிரகாசர் தமிழ் உணர்வில் ஒருபடி மேலே போய்விட்டார் என்று கருத்துரைக்கும் ஆசிரியர் அவரைப்பற்றிய செய்திகளை மேலும் சற்றே விரித்திருக்கலாம்.

அருணகிரிக்குப்பிறகு, தமிழ்நாட்டில் முருக வழிபாட்டின் நீட்சியை அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து மூலம் காணப்பட்டிருப்பதாகச் சொல்லியிருப்பது சிந்திக்கக்கூடிய இடமாகும். வைணவத்தின் நிலை பற்றிய கட்டுரை முறை மாறி இடம் பெயர்ந்துள்ளதோ என்று நினைத்தாலும். இராமனுசர் பற்றி ஆசிரியருக்குச் சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டதாலே வள்ளலாருக்கு முன் அவரைப்பற்றிய சிந்தனை எழவேண்டியிருக்கிறது. அதில் சொல்லப்பட்டிருக்கும் சில செய்திகள் கருத்தில் கொள்ளத்தக்கன. திருமுறைகளுக்குச் சைவக்கோயில்களில் கிடைக்காத இடம் வைணவக்கோயில்களில் பிரபந்தங் களுக்கு கிடைத்தன. அதற்கு இராமனுசரே காரணம் (பக்.85) அவர் தம் காலத்தின் சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சியைப் புரிந்துகொண்டு சமய அரசியலில் காய்களைத் திறமையாக நகர்த்தினார் (பக்.86). ஆழ்வார்கள் மரபு வழியிலோ அல்லது புதுப்பாதையிலோ பயணம் செய்யாமல் போனது தமிழுக்கு இழப்பேயாகும் (பக்.87) என்று வரும் கருத்துகள் சிந்தனையைத் தூண்டவல்லன.

வள்ளலார் பற்றிய விரிந்த பார்வை இந்த நூலுக்கு அடித்தளம். அதனால்தான் அவருக்கு முந்தி இருந்த தமிழக சமயப் பின்புலம் அரசியல், சமூக, பொருளாதாரப் பண்பாட்டு நிலைகளை ஆசிரியர் சொல்லவேண்டி நேர்ந்தது. ஆங்கிலேயர், கிறித்தவர், இசுலாமியர். ஆகிய வேற்றவரின் வரவால் வள்ளலார் புரிந்துகொண்டவை என்ன என்பதனைத் தெளிவாகக் கூறும் ஆசிரியர், அவர்கள் வரவால், வழிபாட்டு முறையில் சில மாற்றங் களையும், சமூகத்திற்குத் தேவையான சில பின்பற்றுதல் களையும் தம் சீர்திருத்தத்திற்குப் பயன்படுத்திக் கொண்டதைப் புதிய அணுகுமுறையில் அறியமுடிகிறது. தமிழகத்தில் கிறித்துவமதத்தின் தத்துவத்தையும், அதன் நடைமுறைகளையும் வள்ளலார் அளவிற்குப் புரிந்துகொண்ட சைவ சமயவாதிகள் யாரும் இல்லை (பக்.95) என்று கருத்துரைப்பது சிந்தனைக்குரியது. வள்ளலாரையும் ஆறுமுகநாவலரையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டும் இடங்கள் ஆய்வுத் தளத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளன.

இந்த நூல் தெளிவான நடையில் அமைந்திருப்பதோடு, எடுத்துக்கொண்ட கருத்தாக்கத்திற்குத் தகுந்தவாறு செய்திகளை ஆதாரத்தோடு வழங்கி இருக்கிறது.

Pin It