EMS_Essaysஇ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரண்ட்லைன் கட்டுரைகள்

தமிழில் : மிலிட்டரி பொன்னுசாமி

பக்: 288 | ரூ.140

அரசியல், தத்துவம், பொருளாதாரம், கல்வி, சமூக இயக்கங்கள், இலக்கியம், மதம், கலாச்சாரம், புத்தகம் என பலதரப்பட்ட விசயங்களை அலசி ஆராய்ந்து நூற்றாண்டு கால இந்தியாவின் மனசாட்சியை இக்கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார் இ.எம்.எஸ். தன் வாழ்நாளின் கடைசி ஏழாண்டுகளில் ‘ஃபிரண்ட்லைன்’ இதழுக்காகத் தொடர்ந்து எழுதிய செறிவான கட்டுரைகளின் தேர்வு செய்யப்பட்ட தொகுப்பு.

 

செய்திகள் \ நெல்லை மணிமாறன்

பக்: 96 | ரூ. 50

புறாக்களின் கால்களில் செய்தி ஓலையைக் கட்டும் பழங்கால முறையிலிருந்து தொடங்கி செல்போன் இதழியல் வரை இந்நூல் துலக்கமாகப் பேசுகிறது. நேர்காணலின்போது நடந்து கொள்ளும் முறை ஒரு தேர்ந்த சிறுகதையாளனுக்குரிய நுட்பத்துடன் விவரணம் பெற்றுள்ளது. பேட்டி எடுப்பவருக்கும் பேட்டி கொடுப்பவருக்குமான புரிதல் அதிகபட்ச உளவியல் கூறுகளுடன் வெளிப்பட்டிருக்கிறது. பெருவளர்ச்சியை எட்டியிருக்கும் இதழியல் துறை குறித்து எளிமையான மொழி நடையில் மூத்த பத்திரிகையாளர் நெல்லை மணிமாறன் கைவண்ணத்தில் அடர்த்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

விதையாய் விழுந்தவர்கள் -\ எஸ்.ஜி.ரமேஷ்பாபு

பக்: 160 | ரூ.90

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வரலாற்றை எழுதும் முயற்சியில் ஒரு பிரிவாக வந்திருக்கும் நூல். இந்த நூலில் தமிழகத்தில் உள்ள சமூக விரோத சக்திகளை, நிலப்பிரபுத்துவ சக்திகளை மக்கள் நலனுக்கு எதிரான அனைத்து சக்திகளையும் எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராடிக்கொண்டிருந்த வேளை சமூக விரோதிகளால் கொல்லப்பட்ட தோழர்களை நினைவுகூர்ந்து, அவர்களின் தியாகங்களை முதன்முதலாக இந்த நூல் பதிவு செய்கிறது. இந்த ஆவணம் சமகால வரலாற்றுக்கும், எதிர்கால வரலாற்றுக்கும் உந்து சக்தியாக அமையும்.

 

இளம் தோழர்களுக்கு / லெனின் \ பகத்சிங்

பக்: 48 | ரூ.20

அக்டோபர் 2, 1920ல் லெனின், கம்யூனிஸ்ட் இளைஞர் கழக ஊழியர்களிடம் நிகழ்த்திய உரை இது. மார்க்சியம் என்பது கடந்த காலத்தில் இருந்த அனைத்து சமூக அமைப்புகளின் சுரண்டல் முறையையும் கற்றதன் அடிப்படையில் உருவானது. எனவே புரட்சிக்கு முந்தைய முதலாளித்துவ சமூகம் உருவாக்கி வைத்த கண்டு பிடிப்புகளை, தொழில் நுட்பத்தை, நல்ல அம்சங்கள் எனப்படும் அனைத்தையும், இளைஞர்கள் கற்றுத் தேற வேண்டும் என வலியுறுத்துகிறார். இன்றைய இந்திய சூழ்நிலையில், இளைஞர்கள் ஏன் அரசியலில் ஈடுபட வேண்டும்? என்ற பகத்சிங் எழுதிய கட்டுரை, சில விளக்கங்களை முன் வைக்கிறது. இன்றைய அரசியலில் புரட்சி புரட்சி என்று பேசுவோர்க்கும், முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும், சமூக மாற்றம் குறித்த கம்யூனிஸ்ட் கட்சி அரசியலுக்குமான வித்தியாசத்தினை கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

 

உலக இளைஞர் எழுச்சியும் இயக்கமும் (1815-\1890)--\ அ. பாக்கியம்

பக்: 64 | ரூ. 25

ரோமாபுரியில் அடிமைகளைத் திரட்டி உரிமைக்கான கலகம் விளைவித்த ஸ்பார்ட்டகஸ் துவங்கி, ரத்தவாடையும், தூக்கிலிடப்பட்ட, புதைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட, சுட்டுக் கொல்லப்பட்ட, இளைஞர்களின் வரலாற்றுப்பாதைகளை புதிய தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க சுமார் 300 ஆண்டு காலத்தின், இரண்டு கண்டங்களின், வரலாற்றுத்தகவல்களை சேகரித்து இருப்பது இன்றைய இளம் தலைமுறைக்கு உகந்ததாக அமையும். ஒன்றுபட்ட ஜெர்மனி, ஒன்றுபட்ட இத்தாலி, மன்னராட்சிக்கு எதிரான பிரெஞ்சு மாணவர் போராட்டம், போன்ற பல வரலாற்றுத் தகவல்கள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

 

மா சே துங் \ என். ராமகிருஷ்ணன்

பக்: 96 | ரூ.50

நவீன சீனத்தை வடிவமைத்ததில் தோழர் மா சே துங்கின் பங்களிப்பு மகத்துவம் மிக்கது. எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தன் இளம்வயதில் தந்தையின் அடக்குமுறைகளைக் கண்டு சீற்றம் கொண்டதிலிருந்தே மா சே துங்கின் ‘அரசியல்Õ ஆரம்பமாகி விடுகிறது. ‘எச்சரிக்கை தரும் வார்த்தைகள்Õ என்ற புத்தகம் தான் அவருடைய சிந்தனைப் போக்கை மாற்றியமைக்கிறது. இளமையில் ஆறுமாத கால ராணுவ அனுபவங்களிலிருந்து பெற்ற உறுதியுடன் மாணவக்குழு ஒன்றுக்கு தலைமை தாங்கிய மா சே துங் சீனப்புரட்சியின் தளகர்த்தர்களை அப்போதே உருவாக்கத் தொடங்கி விட்டார். ஆறுவயதில் பெற்றோரால் வயல் வேலைகளுக்கு அனுப்பப்பட்ட அவர் அனைத்து சீன விவசாயிகள் சங்கத்திற்கும் பின்னர் மாபெரும் சீன மக்கள் குடியரசுக்கும் தலைமைப் பொறுப்பேற்கிறார். இந்நூல் ஒரு மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவரின் முக்கியமான வாழ்க்கைப் பகுதிகளை எளிமையும் சுவாரசியமும் கூடிய மொழி நடையில் அறிமுகம் செய்கிறது.

 

 

தலித் முஸ்லிம்- \ ஹெச். ஜி. ரசூல்

பக்: 48 | ரூ 25

ஹெச்.ஜி. ரசூலின் தலித் முஸ்லிம்களைக் குறித்த ஆய்வுகள் வலுவானவை. இஸ்லாம் வலியுறுத்தும் கோட்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்குவதல்ல இவரின் நோக்கம். ஆனால் சொந்த சமூகத்துக்குள்ளேயே தீண்டப்படாதவர்களாகயிருக்கும் கோடானுகோடி இந்திய முஸ்லிம்களின் பக்கமிருந்து கிளர்ந்தெழும் இவரின் குரலில் நியாயம் தொனிப்பதை வாசிப்பவர்கள் உணரக்கூடும். சச்சார் குழு அறிக்கை குறித்த கட்டுரையிலிருந்து தமிழின் முதல் தலித் முஸ்லிம் நாவல் என்று கருதத்தக்க ‘மீன்காரத் தெருÕ ஆய்வுக் கட்டுரை வரையிலான ரசூலின் உழைப்பு இந்நூலில் முக்கியமானது. தமிழ்ச் சூழலில் இது கவனிக்கத்தக்க ஒரு ஆக்கம்.

 

பெட்ரோல் அரசியல் \ வே. மீனாட்சிசுந்தரம்

பக்: 32 | ரூ.10

பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்த இயலாது என்று பொருளாதார நிபுணராக இருக்கும் பிரதமரே கூறுகிறாரே? பொதுவாக விலைகளை சுதந்திர சந்தை நிர்ணயிப்பதாக கூறப்படுவது உண்மைதானா? பெட்ரோலிய சந்தையில் விலை நிலவரத்தை தீர்மானிப்பது யார்? பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டணியால்தான் விலை உயர்த்தப்படுகிறது என்பது உண்மைதானா? பெட்ரோலிய சரக்கின் தரநிர்ணயத்திலும் அரசியலா? பெட்ரோலியப் பொருட்கள் சாதாரண சந்தைச் சரக்காக இருந்து எப்பொழுது ராணுவ அரசியல் சரக்காக மாறியது? எப்பொழுது இது நவீன தொழிலாகியது? அதற்கு முன் என்ன? நீராவி என்ஜினைக் கொண்டு காலனி ஆதிக்கத்தையும், பெட்ரோல் என்ஜினைக் கொண்டு இரண்டு உலக யுத்தங்களையும் கொண்டுவந்த ஏகாதிபத்தியவாதிகளின் நோக்கம் என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்நூல்.

 

எழுத்து எனும் கருவறை

வைகோ

பக்: 56 | ரூ. 20, வெளியீடு : சிவசக்தி ஆர்ட்ஸ், சிவகாசி.

ஈரோடு புத்தகக்காட்சியில் வைகோ இந்த உரையை ஆற்றிய போது வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த உரையின் நூல் வடிவம் இது. எழுத்து எப்படித் தோன்றியது, எழுத்து எப்படி வடிவம் பெற்றது, ஓவிய எழுத்துக்கள் எப்படி என்ன? என்று தொடங்கும் இந்நூலில் சங்க இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள் வழியாக தமிழில் மறுமலர்ச்சி ஏற்பட்ட எழுத்து வகைகள், அடிமை விலங்கை ஒழிக்க எழுத்துவகைகளைப் பயன்படுத்திய வால்டேர், மாவோ காரல்மார்க்ஸ், மண்டேலா, பகத்சிங், ஷெல்லி, பாரதி, பாரதிதாசன் என்று விரியும் இந்த நூல் புதுமைப்பித்தன் கலைஞர் மு. கருணாநிதி, பொன்னீலன் என சமகால படைப்பாளிகளின் எழுத்துகளையும் பேசுகிறது.

 

சங்க இலக்கியம் பரிபாடலில் திருமால் பாடல்கள்

குழ கதிரேசன் பக்: 248 | ரூ. 125

வெளியீடு : ஐந்திணைப் பதிப்பகம், சென்னை - \ 5

தமிழ் இலக்கியங்களான கலித்தொகையும், பரிபாடலும் பிற்காலத்தில் சங்க நூல்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த இரண்டினுள் பரிபாடல் மட்டும் மற்ற தொகை நூல்களிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. இதற்கு முக்கிய காரணம் பரிபாடல் ஒர் இசைத்தமிழ் நூலாகும். பழங்காலத்திலே இசை வகுத்த இசையாசிரியர்களின் பெயர்களும், பாடல்களும், பண்களும் பழஞ்சுவடிகளிலே பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற பழந்தமிழ் இலக்கியங்கள் போல் பரிபாடல் மக்களிடம் சென்று சேராது இருந்ததற்கு தமிழறிஞர்களும் காரணம் என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு. இந்தச் சூழலில் இந்நூல் பரிபாடலில் உள்ள திருமால் பாடல்களை எளிமையாக விளக்குகிறது. இதன் மூலமாக பண்டைய தமிழரின் வழிபாட்டில் திருமால் வழிபாடு உண்டு என்பதை உணரமுடிகிறது.

Pin It