நம் பாரம்பரியம், நமது பண்பாட்டின் பலம் என்ன என்று பல விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. நமக்கே கூட பல நேரம் மனதில் இது பற்றி கேள்விகள் தோன்றும். எந்த பெரிய படிப்போ, வாசிப்போ, ஏன் பள்ளிப் படிப்பு கூட காணாத பலர் தமிழகம் முழுவதும் இயற்கையைக் காக்கும் செயல்பாடுகளைப் பெரிய தவம் போலச் செய்து வருகின்றனர். ஒரு செயலால் கிடைக்கும் பிரதிபலனைப் பற்றி கவலைப்படாமல், மற்றவர் பாராட்டுகிறார்களோ - இல்லையோ, "என் கடன் பணிசெய்து கிடப்பதே" என மரக்கன்று நடுபவர்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர்களது செயல்பாடுகள் நமது பாரம்பரியம், பண்பாட்டின் பலத்தை உணர்த்துகின்றன.

ஐந்தறிவு கொண்டவையாகக் கருதப்படும் பறவைகளை தன் குழந்தை போல் பராமரிக்கும் ஒரு மனிதரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படிப்பட்ட ஒருவர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். அவர் திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளத்தைச் சேர்ந்த பால்பாண்டியன் (55). திருநெல்வேலியில் இருந்து மூன்றடைப்பு வழியாக கூந்தங்குளத்துக்குச் செல்லலாம். இன்றைக்கும் கூந்தங்குளத்தைப் பற்றி என்ன விவரம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும் "பால்பாண்டியைக் கேட்டால் போதும்" என்பதுதான் பறவை ஆர்வலர்கள், மாணவர்களின் உறுதியான நம்பிக்கை.

மனிதர்களைவிட அவருக்குப் பறவை நண்பர்கள்தான் அதிகம். சைபீரியா, ஜெர்மனி, லடாக் பகுதிகளில் இருந்தும், நாட்டின் இதரப் பகுதிகளில் இருந்தும் கூந்தங்குளம் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் பறவைகள் வலசை (வலசை என்பது பறவைகள் ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு இரைதேடிய பிறகு புறப்பட்ட இடத்திற்கு திரும்புதல் ஆகும்) வருகின்றன. தென்னிந்தியாவின் மிகப் பெரியதான இந்த கூந்தங்குளம் நீர்ப்பறவை சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் 1 லட்சம் பறவைகள் வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அநேகமாக தமிழகத்தில் வேறு பகுதிகளில் இல்லாத அளவுக்கு இங்கு வரும் பறவைகள் மக்களுடன் அந்நியோனியமான உறவைப் பேணுகின்றன. இந்தப் பறவைகளுடன் அங்குள்ள மக்கள் கொண்டுள்ள உறவு ஆச்சரியம் என்றால், அதைவிட மிகப் பெரிய ஆச்சரியம் ஒன்று இருக்கிறது, அது பால்பாண்டிக்கும் பறவைகளுக்கும் இடையிலான உறவு. இதைக் கண்கூடாகவே பார்க்கலாம். இங்கு வரும் பறவைகளுடன், குறிப்பாக மரத்தில் இருந்து கீழே தவறி விழுந்துவிடும் குஞ்சுப் பறவைகளுடன் மிக நெருக்கமான உறவை இவர் பேணுகிறார். இங்கு வந்து செல்லும் மனிதர்கள் இவரை மறக்கிறார்களோ இல்லையோ, பறவைகள் இவரை மறப்பதில்லை. கூந்தங்குளம் பறவை சரணாலயம் பிரபலமானதற்கு பால்பாண்டியும் ஒரு முக்கியக் காரணம்.

இவரைப் பற்றி சுரேஷ் இயக்கிய தி பேர்ட் மேன் உள்ளிட்ட பல ஆவணப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கோவையைச் சேர்ந்த சின்னசாத்தன் என்பவருடன் இணைந்து இந்தியப்பறவைகள் கூடு கட்டும் முறை பற்றி "தி நெஸ்டிங் பிஹேவியர் ஆஃப் இந்தியன் பேர்ட்ஸ்" என்ற ஆங்கில புத்தகத்தை இவர் வெளியிட்டுள்ளார்.

நம் நாட்டில் அரசுப் பணிகள் படிப்பையும், தேர்வுகளையும் அடிப்படையாக வைத்துத்தானே கொடுக்கப்படுகின்றன. ஒரு எளிய மனிதனின் சூழலியல் பாதுகாப்புச் செயல்பாட்டை அரசுகள் எந்தக் காலத்தில் அங்கீகரித்து இருக்கின்றன. பால்பாண்டிக்கும் அதுதான் நேர்ந்திருக்கிறது. வெறும் 2314 ரூபாய் சம்பளத்தில் இவர் பார்த்து வந்த வாட்சர் வேலையில் இருந்து வனத்துறை இவரை நீக்கிவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பின் ஒருவரைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற விதிமுறையைப் பின்பற்றாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அந்தக்காலம் நெருங்குவதற்கு முன்னரே இவர் வேலையை விட்டு நீக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இவரைப் பேட்டி காணும் போது, ஆச்சரியம் ஏற்படுவது இயல்பு. எளிய மக்களின் பிரதிநிதிகளான இவரைப் போன்றவர்களுக்கு தத்துவவிளக்கங்கள் அளிக்கத் தெரியாது. அதேநேரம் அவர்களது செயல்பாட்டின் மீது மிகப்பெரிய பிடிப்பை இவரைப் போன்றவர்களிடம் பார்க்க முடியும். இவர்கள் காசு, பணத்தை முதல் நோக்கமாகக் கொண்டு செயல்படுவதில்லை. சக மனிதனின் உளமார்ந்த பாராட்டையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அங்கீகாரம்தானே பல செயல்களுக்குக் கொடுக்கப்படும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். ஆனால் அங்கீகாரம் மறுக்கப்படுவது மட்டுமின்றி, சொற்பசம்பளமும் நிறுத்தப்படுவது ஒருவரை காயப்படுத்தத்தானே செய்யும். அப்படி காயப்படுத்தப்பட்டவர்களுள் பால்பாண்டியும் ஒருவர். ஆனாலும் அவர் நம்பிக்கை இழக்காமல் "என்னைப் போல் நிறைய பால்பாண்டிகள் வர வேண்டும்" என்கிறார் மனஉறுதியோடு. இனி அவரது வார்த்தைகளில்:

உங்களுக்கு எந்த வயதில் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது?

கூந்தங்குளத்தில் 37 வருஷம் தலையாரியாக வேலை பார்த்த எனது அப்பாவுக்குப் பறவைகள், வீட்டு விலங்குகளின் மீது ஆர்வம் உண்டு. கிளி, மைனா, பூனை, ஏன் கீரிப்பிள்ளை கூட வளர்த்திருக்கிறார். இதைப் பார்த்துத்தான் எனக்கும் பறவைகளின் மீது ஆர்வம் அதிகரித்தது.

எட்டாவது படிக்கும்போதே மரங்களில் இருந்து தவறி விழுந்த பறவைக் குஞ்சுகளை எடுத்து வளர்ப்பது, மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கும் பழக்கத்தைத் தொடங்கிவிட்டேன். பள்ளிக்குப் போய் வந்தவுடன் வீட்டில் பையை வீசிவிட்டு, பறவைக் குஞ்சுகளைப் பிடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பேன். அப்பொழுதே இந்தியப்பறவை உலகின் தந்தை எனப்படும் சலிம்அலி கூந்தங்குளம் வந்தபோது என்னைப் பாராட்டியுள்ளார். பறவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அந்தக் காலத்தில் இருந்தே அவற்றுடன் ஓர் ஐக்கிய உணர்வு எனக்கு ஏற்பட்டுவிட்டது.

கூந்தங்குளத்துக்கு பறவைகளைப் பார்க்க வந்த பேராசிரியர் டாக்டர் சைலாஷ் எனது பணிகளையும் ஆர்வத்தையும் பார்த்துவிட்டு, "பறவை நண்பன்" என்று பாராட்டினார். அத்துடன் "கைட் ஆப் ஆசியன் பேர்ட்", "இந்தியன் பேர்ட்ஸ்" என்ற சலிம் அலியின் புத்தகங்களைத் தந்து என் பணிகளை ஊக்கப்படுத்தினார்.

பறவைகள் சார்ந்த எனது பதிவுகளை, புதிய கண்டறிதல்களை ஐ.பி.ஏ. (இன்டர்நேஷனல் பேர்ட் அசோசியேசன்) புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். எஸ்.டி ஜான்ஸ் கல்லூரி முதல்வர் ஒரு முறை லண்டன் சென்றிருந்தபோது, "நான் திருநெல்வேலியில் இருந்து வருகிறேன்" என்று கூறியிருக்கிறார். உடனடியாக அந்நாட்டைச் சேர்ந்த மொராய் என்ற பேராசிரியர், "கூந்தங்குளம் உங்கள் ஊருக்கு அருகில்தானே இருக்கிறது? அங்கே ஓர் அதிசய மனிதன் இருக்கிறாரே, அவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டிருக்கிறார். என்னைப் பற்றித்தான் அந்தப் பேராசிரியர் அப்படி விசாரித்திருக்கிறார். கூந்தங்குளம் வந்து என்னுடைய உதவியுடன் ஆராய்ச்சி செய்து சென்ற பீலா என்பவருக்கு ஜெர்மன் விருது கிடைத்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த நிக்கோல் என்ற பெண் கூந்தங்குளத்தில் ஆறு மாதம் தங்கிப் படித்துள்ளார். என்னால் படிக்க முடியவில்லை. ஆனால் படிப்பவர்களுக்குத் தொடர்ச்சியாக நான் உதவி வருகிறேன். ஐ.பி.ஏ, கோவை சாகான் - சலிம் அலி சென்டர் பார் ஆர்னிதாலஜி, திருநெல்வேலி, தென் மாவட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து ஆராய்ச்சி செய்து செல்கின்றனர்.

பறவைகளைப் பராமரித்துக் கொண்டிருந்த உங்களால் குடும்பத் தேவைகளை எப்படி சமாளிக்க முடிந்தது?

10வது முடித்த பிறகு சம்பாதிப்பதற்காக பாம்பேயில் ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலைக்குப் போனேன்.

வெல்டிங் வேலை பார்த்தேன். அங்கிருந்து குஜராத்தில் உள்ள நிர்மா வாஷிங் நிறுவனத்தில் சேர்ந்தேன். 7,500 ரூபாய் சம்பளம் கிடைத்தது. விடுமுறைக்கு ஊருக்கு வந்துபோது திருமணம் நடந்தது.

2 வருடங்கள் வேலை பார்த்திருப்பேன். ஒரு நாள் அந்தக் கம்பெனி முதலாளியின் பெண் இறந்துவிட்டார். வழக்கமாக தீபாவளிக்கு போனஸ், 7-8 நாள் லீவு கிடைக்கும். ஆனால் அந்த வருடம் எதுவும் கிடைக்க வில்லை. அடுத்த முறை ஊர் திரும்பியபோது முதல் மகன் பிறந்திருந்தான். மனைவி, மகனுடன் இருக்க வேண்டும் என்று என் மனதுக்குத் தோன்றியது. கஷ்டப் பட்டாலும் கால்வயித்துக் கஞ்சி குடித்தால் போதும் என்று நினைத்தேன். 6 மாதம் பறவைகள் வரும் சீசன். எஞ்சிய ஆறு மாதம் மம்பட்டி வேலை, ஓட்டல் வேலை என எது கிடைத்தாலும் செய்து வந்தேன்.

உங்கள் பணியில் உங்கள் துணைவி வள்ளித்தாயின் பங்கைப் பற்றி...

எனது 25வது வயதில் வள்ளித்தாயை திருமணம் செய்து கொண்டேன். 2 மகன்கள், 2 மகள்கள் இருக்கிறார்கள். இந்த ஊரில் என்னுடைய வீடு மட்டும்தான் ஓலைக்குடிசை. எனது குழந்தைகள் இரவில் வெளியே படுக்கும் நிலைமைதான் இருந்தது. பல நாட்கள் சாப்பிடாமல் பட்டினியாக இருந்திருக்கிறோம்.

இந்தப் பறவைகளைப் பாதுகாப்பதில் என்னுடன் சேர்ந்து 13 வருடங்கள் செலவிட்டவர் என் வாழ்க்கைத்துணை வள்ளித்தாய். என்னைவிட அவருக்குத்தான் பறவைகள் மீது அதிகப் பாசம். பறவைகளின் வாயில் உள்ள பூச்சியை எடுப்பது, இறக்கைகளில் உள்ள செதில்களை எடுக்கும் வேலைகளைச் செய்தவர். நான் இல்லாத நாட்களில் அந்தக் குஞ்சுகளுக்கு அவரே மீன் போடுவார். பறவைகளின் உடலில் உள்ள வைரஸ் தாக்கி இரண்டாவது முறை ஆபரேஷன் செய்தும் பிழைக்க முடியாமல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்தார்.

என் முதல் பெண்ணை எங்கள் ஊரிலேயே கட்டிக் கொடுத்திருக்கிறேன். முதல் பையன் வாடகை வண்டி எடுத்து டிரைவராகப் பணிபுரிகிறார். இரண்டாவது மகன் ஹைதராபாத்தில் ஒரு விதை நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். கடைசிப் பெண்ணுக்கு 21 வயதாகிறது. திருமணம் செய்து கொடுக்க வேண்டும். இரண்டு மகள்களும் பறவைகளைப் பாதுகாப்பதில் நிறைய உதவியிருக்கிறார்கள்.

தினசரி காலை 5 மணிக்கு சரணாலயத்துக்குப் புறப்பட்டால் 11 மணி வரை பறவைகளை நோக்குவேன். புதிய பறவைகள் வந்திருக்கின்றனவா, கூடு இருக்கிறதா எந்தப் பறவையாவது புதிதாக முட்டையிட்டிருக்கிறதா, அடை காக்கிறதா என்று பார்ப்பேன். புதிய பறவைகளைக் கண்டால், புத்தகத்தைப் பார்த்து அவற்றைப் பற்றி கூடுதலாகத் தெரிந்து கொள்வேன். தொடர்ச்சியாக ஆண்டுக்கணக்கில் இப்படிச் செய்து வருவதால், ஒரு குஞ்சு முட்டையில் இருந்து வெளியே வருவதற்கான காலம், ரோமம் முளைக்க ஆகும் காலம், கண் திறக்க ஆகும் காலம் எல்லாவற்றையும் என்னால் கூற முடியும்.

நாரை, கூழைக்கடா, வக்கா போன்ற பொதுவான பறவைகளைப் பற்றி எங்கள் ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால் புதுப் பறவை தென்பட்டால் நான் கவனமாகப் பார்ப்பேன். புத்தகத்துடன் ஓப்பிட்டுப் பார்ப்பேன். தரை அல்லது மரத்தில் கூடு கட்டுகிறதா, கட்டவில்லையா என்று பார்ப்பேன். அவற்றின் குரலை வைத்தே குணங்களை கணிக்க ஆரம்பிப்பேன்.

அக்டோபர் மாதம் சைபீரிய வாத்து வகைகள், கிரீன் ஷாங்க், ரெட் ஷாங்க், மார்ஷ் - ஸ்பாடட் - காமன் சாண்ட் பைபர் உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. சைபீரியாவில் குளிர் அதிகரிக்கும்போது பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை அவை கடந்து இங்கு வருகின்றன. அப்பொழுது இங்கு அறுவடைக் காலம் என்பதால் அவற்றுக்கு தானியங்களும், பூச்சிகளும் கிடைக்கும். ஏப்ரல் மாதம் இங்கு கோடை வரும்போது, சைபீரியாவில் குளிர் குறைந்திருக்கும். அப்போது அங்கு திரும்பிவிடுகின்றன. இங்கு வரும்போது குஞ்சுகளும் அங்கிருந்து பறந்து வரும். வெளிநாட்டுப் பறவைகள் இங்கு கூடு கட்டுவதில்லை. உள்நாட்டுப் பறவைகள் மட்டுமே கூடு கட்டுகின்றன.

கூந்தங்குளத்தின் சிறப்பு என்ன?

கூந்தங்குளத்துக்கு 169 வகை பறவைகள் வருகின்றன. பறவை வரத்து முன்பைவிட அதிகமாகி இருக்கிறது. 3000 கூழைக்கடாகள், 4,000 மஞ்சள்மூக்கு நாரைகள் இங்கு அதிக அளவில் கூடு கட்டுகின்றன. இங்கு பெரும்பாலான பறவைகள் கூடு கட்ட விரும்புகின்றன. மக்கள் தொந்தரவளிக்காமல் இருப்பது இதற்கு மிக முக்கிய காரணம். இது கூந்தங்குளத்தின் தனிச்சிறப்பு.

ஓயிட் ஸ்டார்க், ஓயிட் நெக்ட் ஸ்டார்க் (நாரை) போன்ற புதிய பறவைகளின் வருகையை நான் பதிவு செய்திருக்கிறேன். பின் டெய்ல் கார்கெனி, டீல் டக் போன்ற வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் இங்கு வருகின்றன. மொத்தம் 17 வகை வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. இங்கு வரும் பறவைகளின் மொத்தம் எண்ணிக்கை 1,23,619 (2009ல்).

கூந்தங்குளம் பகுதியில் 120 குளங்கள் இருக்கின்றன. மேலும் கூழைக்கடா, மஞ்சள்மூக்கு நாரை, அரிவாள் மூக்கன், நீர்க்காகம் போன்றவற்றின் இரையான மீன் இங்கு அதிகம் இருக்கிறது. பூநாரை எனப்படும்

பிளமிங்கோ நுண்ணுயிரிகளை உண்ணும். அதுவும் இங்கு கிடைக்கிறது. 10,000க்கும் மேல் வரும் பின்டெய்ல் டக், கார்கெனி, பார் ஹெடட் கூஸ் போன்றவற்றுக்கு தானியமே முக்கிய உணவு.

கூந்தங்குளத்தில் 2009ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட கூடுகளின் எண்ணிக்கை: 4000க்கும் மேற்பட்ட பெலிகன் (கூழைக்கடா), பெயின்டட் ஸ்டார்க் (மஞ்சள்மூக்கு நாரை), ஸ்பூன்பில் (கரண்டிவாயன்) - 200, ஸ்நேக் பேர்ட் (பாம்புதாரா) - 300, கார்மரான்ட் (நீர்க்காகம்), ஓயிட் ஐபிஸ் (அரிவாள் மூக்கன்), கிளாஸி ஐபிஸ் (அன்றில்), நைட் ஹெரான் உள்ளிட்டவை நூற்றுக்கணக்கில்.

உங்கள் ஊரில் உள்ள மக்கள் இந்தப் பறவைகளை எப்படி தங்களில் ஒருவராகப் பார்க்கிறார்கள். அந்தப் பறவைகளும் எப்படி அதைப் புரிந்து கொள்கின்றன?

கிட்டத்தட்ட 300 வருடங்களாக எங்கள் ஊருக்கு பறவை வரத்து அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். பறவைகள் வந்தால் மழை பெய்யும். ஊர் செழிப்பாக இருக்கும் என்பது எங்கள் ஊரில் நிலவும் பாரம்பரிய நம்பிக்கை. பறவைகளுக்கு ஐந்தறிவுதான் என்றாலும் முகத்தைப் பார்த்து, நடந்து கொள்ளும் முறையைப் பார்த்து மனிதர்களைப் புரிந்து கொள்ளும். இங்குள்ள மக்கள் துன்புறுத்த மாட்டார்கள், இடைஞ்சல், இடையூறு செய்யமாட்டார்கள் என்பது அவற்றுக்கு நன்றாகத் தெரியும்.

ஒவ்வொரு வீட்டுக்கு அருகேயும் உள்ள மரங்களில் அவை கூடு கட்டி, குஞ்சு பொரித்து, வளர்ந்து பெரிதாகும் வரை இந்த மக்கள் அவற்றை எந்த வகையிலும் தொந்தரவு செய்வதில்லை. மேலும் அவற்றின் எச்சம் தினமும் கீழே விழுகிறது. மழை பெய்தால் மிக மோசமான வாடை அடிக்கும். பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாது. கீழே முள் விழுந்து கிடக்கும். தினசரி கூட்டி சுத்தப்படுத்த வேண்டும். இவற்றை அவர்கள் தொந்தரவாக நினைப்பதில்லை. குளத்தில் நீர்க்கருவை மரங்கள் வளர்வதற்கு முன் 300 கூடுகள்தான் இருந்தன. இப்போது குளம் தவிர்த்து, கிராமத்துக்குள் மட்டும் 4000 கூடுகள் இருக்கின்றன.

எங்கள் ஊர் குளத்தில் தண்ணீர் எடுக்கவோ, குளிக்கவோ, ஆடு மாடு குடிக்கவோ அனுமதி கிடையாது. இதனால் நீர் பச்சை நிறத்தில் இருக்கும். மேலும் குளத்து மீனை யாரும் ஏலம் எடுப்பதில்லை. பறவைகளுக்கு தண்ணீர் வேண்டுமென்றால் பாசனத்துக்கு விடப்படும் தண்ணீரைக்கூட அடைத்து விடுவார்கள். அந்த அளவு எம்மக்கள் பறவையை நேசிக்கிறார்கள். அதேநேரம் குளத்தில் பறவை எச்சம் விழுவதால், அது இயற்கை உரமாகிறது. அந்தத் தண்ணீரை வயலுக்குப் பாய்ச்சினால் அதிக மகசூல் கிடைக்கிறது.

நான் 10வது பரிட்சைக்குப் போயிருந்தபோது, நான் வளர்த்த மஞ்சள்மூக்கு நாரைக்குஞ்சை ஒரு குறவன் வேட்டையாடிவிட்டான். நான் வந்தால் சண்டையிடுவேன் என்று கூறி, எங்கள் ஊர் மக்கள் அவனை அடித்தே விரட்டிவிட்டார்கள். இப்படிப் பறவைகளுக்கு யாராவது தொந்தரவு செய்தால், எங்கள் ஊர் மக்களுக்குத் தன்னையறியாமல் கோபம் வந்துவிடும், அடித்து விரட்டி விடுவார்கள்.

15 வருடங்களுக்கு முன் ஒரு முறை இப்பறவைகள் எங்கள் ஊருக்கு வரவில்லை. அந்த ஆண்டு குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. இது அந்தப் பறவைகளுக்குத் தெரிந்திருக்கிறது. அதேநேரம் முந்தைய நாள் இரவு மழை பெய்தால், அடுத்த நாள் காலையில் பறவைகள் வந்துவிடும். தை அமாவாசைக்குப் பறவைகள் கூடு கட்டவில்லை என்றால், விளைச்சல் இல்லாமல் விதைத்த பயிர்கள் எல்லாம் தீய்ந்து போய்விடும். அறுவடை கிடையாது என்பது எங்கள் ஊர் நம்பிக்கை.

கீழே விழும் பெரியபெரிய நீர்ப்பறவைக் குஞ்சுகளை எப்படி வளர்க்க முடிகிறது?

வருடத்துக்கு 50 - 100 குஞ்சுகள் கீழே விழலாம். காத்து மழை அதிகமிருந்தால் குஞ்சுகள் விழுந்துவிடும். இனப்பெருக்க காலத்தில் 3 - 4 ரவுண்ட் சுற்றுவேன். சாக்கு எடுத்துக் கொண்டு போய் குஞ்சுகளைச் சேகரித்து வருவேன். பாதிக்குப் பாதி பிழைக்கும், பாதி இறக்கும். அப்படி இறந்தால் குழி தோண்டிப் புதைத்து விடுவோம். இல்லையென்றால் நாய் இவற்றைச் சாப்பிட்டு ருசி கண்டுவிடும். பிறகு பறவைக் குஞ்சுகளை விரட்டிப் பிடிக்க ஆரம்பித்துவிடும்.

கூழைக்கடாகள் ஒரே மரத்தில் கூட்டுவாழ்க்கை நடத்தும். இதில் எத்தனை குஞ்சுகள் இருந்தாலும், தாய்ப்பறவை தனது குஞ்சை சரியாக அடையாளம் கண்டு பிடித்து தன் குஞ்சுக்குத்தான் இரை கொடுக்கும். கூட்டு வாழ்க்கை காரணமாக எடை தாங்க முடியாமல் மரக்கிளைகள், கூடுகள் ஒடிந்து விழலாம். ஒரே கூட்டில் கூழைக்கடா குஞ்சுகள் போட்டி போட்டுக் கொண்டு இரையை வாங்க தலையைத் தூக்கும். அப்போது சில கீழே விழுகலாம். அப்படி விழுந்தால் குஞ்சைத் தாய் திரும்ப எடுக்க முடியாது, எடை அதிகம். நான் சென்று எடுத்தால் அவை ஒன்றும் செய்யாது. அதன்பிறகு அக்குஞ்சுக்கு தாய், தகப்பன் நாம்தான்.

நத்தை கொத்தி நாரை கூழைக்கடா குஞ்சுகள் குளத்துக்குள் விழுந்தால், நீந்திக் கரைக்கு வந்துவிடும். அல்லது அலையில் அடித்து வந்து கரை ஒதுங்கிவிடும். அதேநேரம் மஞ்சள்மூக்கு நாரை, நீர்க்காகம் குஞ்சுகள் விழுந்தால் செத்துவிட வாய்ப்புண்டு.

பறவைக் குஞ்சுகள் கீழே விழுந்தவுடன் சிலவற்றுக்கு ரத்தம் வரும். சுவாசிக்க முடியாது. தண்ணீர் கொடுக்க வேண்டும். கால் ஒடிந்து போயிருக்கலாம். அதற்கு மட்டை வைத்து, சிக்கெண்ணெய் வைத்து நரம்பைச் சேர்க்கும் பயிற்சியைப் பெற்றிருக்கிறேன். அப்படிச் செய்தால் பிழைத்துவிடும். கால் நன்றாக ஆகிவிடும். பிறகு பாதுகாப்பாக வளர்க்க ஆரம்பித்தால், இரை தேடி நம்மைக் கூப்பிட ஆரம்பிக்கும். மீன் வேண்டுமென்றால் ஒரு மாதிரியும், தண்ணீர் வேண்டுமென்றால் வேறு மாதிரியும் அலகை ஆட்டும். கத்திக் கூப்பிடும்.

இப்படி எடுத்து வந்த பல வகைப் பறவைகளில் ஒரு வகைப் பறவையான பாம்புதாரா குஞ்சுகள் கொத்தும் தன்மை கொண்டவை. அப்போது அவற்றை அடிக்கக் கூடாது. முதல் இரண்டு நாள் கொத்தும். காற்றில் பேசும். பிறகு தோளில் வந்து உட்கார்ந்து கொள்ளும். இவர் நமக்கு உணவு கொடுப்பவர் என்று புரிந்து கொண்டுவிடும். அதன்பிறகு மீனைத் தூக்கிப் போட்டால் கேட்ச் பிடிக்கும்.

எங்களைத் தவிர வேறு யார் சென்றாலும் குஞ்சுப் பறவைகள் ஏற்றுக்கொள்ளாது. ஒரு முறை மகளிர் குழு உதவிச் செயலாளர் ஒருவர் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். பறவைகள் இருந்த அறையின் சாவியை நான் கொடுத்துவிட்டேன். உள்ளே போன அவரை அந்தப் பறவைகள் தண்ணீர் குடிக்கவிடவில்லை. அதேநேரம் நான் நாய் வளர்த்திருக்கிறேன். பறவைகள் அருகே யாராவது வந்தால் அது சப்தமிடும், பெரிதாகக் குரைக்கும். மற்ற நாய்கள் வந்தால் விரட்டும். அங்கேயே படுத்திருக்கும் நாயைச் சுத்தி பறவைகள் சூழ்ந்து கொள்ளும்.

கூழைக்கடா, மஞ்சள்மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, கரண்டி வாயன், அரிவாள் மூக்கன், வக்கா, பாம்புதாரா உள்ளிட்டவற்றின் குஞ்சுகள் இப்படிக் கீழே விழ வாய்ப்புண்டு. அவற்றில் பலவற்றை வளர்த்து வண்டலூர் விலங்கு காட்சியகத்துக்கு கொடுத்திருக்கிறேன்.

குஞ்சுகளை எப்படிப் பாதுகாக்கிறீர்கள்?

இயற்கையாக வளரும் குஞ்சுக்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எடை அதிகமாகவும், கலர் சூப்பராகவும் இருக்கும். ஆனால் அழுக்கு சேர விட்டுவிடக் கூடாது. இல்லையென்றால் நோய்கள் தாக்கிவிடும்.

கூழைக்கடாக்களின் தாடைப் பைக்குள் ரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இறக்கைக்குள் பேன் இருக்கிறதா என்று கவனமாகப் பார்த்து பராமரிக்க வேண்டும். அவற்றால் நமக்கும் சில நோய்கள் தொற்றலாம். ஆனால் அது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

காலையில் காப்பகத்தில் இருந்து எல்லாப் பறவைகளையும் வெளியேற்றி, அறையை சுத்தப்படுத்தி தேய்த்துக் கழுவ வேண்டும். நானும் என் மனைவியும்தான் அந்த வேலைகளைச் செய்வோம். பிறகு பறவைகளைக் குளிப்பாட்டுவோம். மீன் சாப்பிட்டால் பறவைகளின் இறக்கையில் பேன் உற்பத்தியாகும், செதில் போல உதிரும். நோய் வரும். இதனால் துப்புரவாகக் கழுவிவிட வேண்டும். வெயில் அதிகமானால் மஞ்சள் மூக்கு நாரைகள் தண்ணீர் கேட்கும். மீனும் கேட்கும்.

ஒரு குஞ்சை வளர்ப்பதைப் பொறுத்து பணம் தேவைப்படும். ஒவ்வொரு பறவையும் தினசரி சராசரியாக அரைக்கிலோ மீன் சாப்பிடும். என் சொந்த செலவில்தான் வாங்க வேண்டும். இதற்காக மீன்காரரிடம் முன்பே பேசிவிடுவேன். மனிதர்கள் சாப்பிடும் தரத்தில் இல்லையென்றாலும்கூட ஒரு நாளைக்கு 300 - 350 கிலோ மீன் தேவை.

குஞ்சுகளை 3 மாதம் வளர்க்க வேண்டும். அதன் பிறகு பறக்கும் திறன் வந்தாலும், தானே பறந்து போகாது. குளத்துக்குப் போய்விட்டு திரும்ப இங்கேயே வரும். மீன் போடும் நேரம் பார்த்து வந்துவிடும். அப்போது இரக்கப்படக் கூடாது, பாசம் காட்டிவிடக் கூடாது. "நீ உன் இனத்துடன் போ" என்று அனுப்பாவிட்டால், நம்முடனே தங்கிவிடும். உணவை படிப்படியாக நிறுத்த வேண்டும்.

ஒருமுறை மூன்று குஞ்சுகள் பறக்க முடியாத நிலையில் இருந்தன. ஒன்றுக்கு இறக்கை, ஒன்றுக்குக் கால், ஒன்றுக்குக் கண் இல்லை. வீட்டில் கட்டிலை சுத்திப் படுத்துக் கிடந்தன. ஒரு நாள் வீசிய கடுமையான காற்றில் அடித்துச் செல்லப்பட்டு அவை இறந்துவிட்டன. இதைக் கண்டு என் மனைவி கண்ணீர்விட்டு அழுதார். மற்றொரு முறை எங்களிடம் வளர்ந்த ஒரு குஞ்சு தீபாவளி அன்று கரெக்டாகத் திரும்ப வந்தது. நான் காப்பகத்துக்கு அருகே தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தேன். அப்போது அதன் கூரை மீது அந்த கூழைக்கடா வந்து உட்கார்ந்திருக்கிறது. என்னைப் பார்க்க வந்த என் துணைவியின் கையில் இருந்த பையை பார்த்தவுடன், அதில் மீன் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு வந்து பையைப் பிடுங்கியது. பிறகு மீன் வாங்கிக் கொடுத்தோம். இப்படி ரொம்பப் பாசமாக இருக்கும் பறவைகள் அவை.

பறவைகளின் கூடுகளைப் பற்றி ஓர் ஆங்கிலப் புத்தகத்தைத் தொகுக்க நீங்கள் உதவியிருக்கிறீர்களாமே?

நீர்ப்பறவைகள் தண்ணீரில் தான் நீந்தும். குஞ்சுகள் வளர்வதற்காகத்தான் கூடு. இனப்பெருக்க காலத்தில் மட்டுமே தாய்ப் பறவைகள் கூடு கட்டுகின்றன. குஞ்சு வளர்ந்தபின் கூடு தேவையில்லை. அவை தனியாகச் சென்றுவிடும். கூழைக்கடா, கரண்டிவாயன், அன்றில், நீர்க்காகம் போன்றவை கூடு கட்டுகின்றன.

லாப்விங், சாண்ட் கிரொஸ், குரோசர், லார்க், புளோவர் தரையில் கூடு கட்டும். அதை வெறும் கண்களால் எளிதில் பார்க்க முடியாது. அவ்வளவு சிறியதாகவும், சுற்றுப்புறத்துடன் ஒன்றி, மறைந்தும் இருக்கும். இவற்றைக் கண்டுபிடிப்பேன். கண்டுபிடித்த பின் கூடு, முட்டை, அடைகாத்தலைக் கவனிப்பேன். டமிசெல், கிரீன் ஷாங்க், இந்தியன் குரோசர், பின் டெய்ல், ஸ்நைப் போன்ற பறவைகளின் அரிய கூடுகளை கூந்தங்குளத்தில் நான் கண்டறிந்துள்ளேன்.

கிரே ஹெடட் லாப்விங் பறவையின் கூட்டை இங்கு பலராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிளாக் விங்ட் ஸ்டில்ட், ஸ்பாட் பில்ட் இங்கு கூடு கட்டாது என்றார்கள். ஆனால் நான் படம் எடுத்திருக்கிறேன். விஞ்ஞானிகள் புத்தகங்களைப் படிக்கிறார்கள். நாங்கள் இயற்கையைப் படிக்கிறோம். இதனால் கூடுகளை அடையாளம் காண முடிகிறது.

பலரும் கூடுகளைப் பார்க்க விரும்புவார்கள். ஆனால் நான் எல்லோருக்கும் காட்டுவதில்லை. அந்தப் பறவைகளுக்கு அது தொந்தரவாக இருக்கலாம் என்பதால் பைனாகுலர் மூலம் காட்டுவேன்.

எந்தெந்த மரங்களில் பறவைகள் கூடு கட்டுகின்றன?

எல்லா மரங்களிலும் கூடு கட்டினாலும் காட்டுக் கருவை, நீர்க்கருவை போன்ற நமது பாரம்பரிய முள் மரத்தில்தான் அதிகமாகப் பறவைகள் கூடு கட்டுகின்றன. பெரும்பாலும் முள்குச்சியில்தான் கூடு அமைந்திருக்கும். இதனால் பூனை, பாம்பு ஏறாது. காட்டுப்பூனை போன்ற எதிரிகள் தொல்லைகளை ஏற்படுத்த முடியாது. ஆனால் வேப்ப மரம், புளிய மரம், இலவம் பஞ்சு மரங்களிலும் பறவைகள் கூடு கட்டுகின்றன. கூந்தங்குளத்தில் கருவேலம் - 1,500, வாதமடக்கி - 20, பூவரசம் - 10, புளியம் - 15, இலவம் - 15 மரங்கள் இருக்கின்றன. குளத்துக்குள் கருவேல மரங்கள் பட்டுப் போயுள்ளன. வீட்டுக்கு 2 மரம் கொடுத்து வளர்க்கச் சொல்லலாம்.

இந்தப் பறவைகள், பறவை நோக்குதல் பற்றி யாருக்கெல்லாம் கற்றுத் தந்திருக்கிறீர்கள்?

ஐ.எப்.எஸ்., வனத்துறையில் பயிற்சி பெறுபவர்கள், கேரளப் பல்கலைக்கழக மாணவர்கள், தென் மாவட்டங் களில் தாவரவியல், விலங்கியல் படிப்பவர்கள், ஆசிரியர் பயிற்சி பெறுபவர்களுக்கும், இங்கு வரும் பறவைகளைப் பற்றி கற்றுத் தந்திருக்கிறேன். சாகான் ஜெய்குமார், பாரதி, நிக்கோல், முரளி, ராமமூர்த்தி என பல பேர் எனது உதவியுடன் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

கேரளத்தைச் சேர்ந்த பலருக்கு இந்தப் பறவைகளை நோக்கவும் ஆராய்ச்சி செய்யவும் தீவிர ஆர்வம் இருக்கிறது. இதற்காக மலையாளம் பேசப் பழகிக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சம் இந்தியும் இங்கிலிஷ§ம் பேசுவேன்.

வனத்துறை வாட்சர் வேலை பார்த்தது பற்றிக் கூறுங்களேன்?

கூந்தங்குளம் சரணாலயத்தில் நான் செய்த பணிகளைப் பார்த்துவிட்டு, 1992ஆம் ஆண்டு வனத்துறையினர் என்னை வாட்சராக நியமித்தார்கள். அப்பொழுது சம்பளம் வெறும் 8 ரூபாய். அதற்குப் பிறகு சராசரியாக ஆண்டுக்கு 100 - 150 குஞ்சுகள் என, 2000க்கும் மேற்பட்ட குஞ்சுகளை நான் வளர்த்திருக்கிறேன். குஞ்சுகளுக்கு மீன் வாங்கிப் போடுவதற்கு மட்டும் ஒரு நாளைக்கு ரூ. 300 - 350 ஆகிவிடும். 17 வருஷ வேலைக்குப் பிறகு கடைசியாக எனக்குக் கிடைத்த சம்பளம் 2314 ரூபாய்தான்.

ஒரு நிலையில் மீன்காரருக்கு வைத்த கடன் ரூ. 37,000 ஆகிவிட்டது. எனது மனைவியின் தாலிக்கொடியையும் கம்மலையும் விற்றுத்தான் அந்தக் கடனை அடைத்தோம். எங்கள் பிள்ளைகளைப் போல வளர்த்த அந்தக் குஞ்சு களுக்காக நகைகளை விற்க என் மனைவி முன்வந்தார்.

ஆளுக்கொரு மரம் வளர்த்தால் ஆனந்தம் வரும் என்பது என் கொள்கை. வனத்துறையில் வாட்சராக சேர்வதற்கு முன்பும் பின்பும் ஆயிரக்கணக்கான ஆல், அத்தி உள்ளிட்ட மரங்களை நானும் எனது குடும்பத்தினரும் வளர்த்திருக்கிறோம். இப்படி ஆயிரக்கணக்கில் மரங்களை நாங்கள் வளர்த்திருப்போம். இவற்றில் பல, பறவைகளுக்கு கூடு கட்ட உதவுகின்றன. நான் வாட்சராக இருந்தபோது, வெளியில் இருந்து வரும் யாரும் பிளாஸ்டிக் பைகளைக் கீழே போட விடமாட்டேன்.

ஏழெட்டு வருடங்களாக எனது பணியை நிரந்தரமாக்க முயற்சி செய்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஏழு கிராமத்துக்காரர்களும் கூட மனு கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு செய்தும் பாரஸ்ட் டிபார்ட்மென்ட் பெரிதாகக் கண்டுகொள்ள வில்லை. எனக்கு உடல் ஆரோக்கியமில்லை என்று கூறி நீக்கிவிட்டார்கள். 1987 முதல் 2009 வரை வேலை பார்த்தேன். பிப்ரவரி 20ந் தேதியுடன் வேலையில் இருந்து தூக்கிவிட்டார்கள். அப்போது சம்பளம் 2314 ரூபாய். இந்த நடவடிக்கை மனதில் மிகப் பெரிய பாரத்தை ஏற்படுத்தியது. இது என் ஊர். இது நான் வளர்த்த சரணாலயம், அங்கு நான் வளர்த்த பல பறவைகள் இருக்கின்றன.

அரசு ஊழியர் என்ற காரணத்தைச் சொல்லி பல திட்டங்களின் பலன்கள் எனக்குக் கிடைக்கவில்லை. இன்றுவரை எங்கள் ஊரில் என் வீடு மட்டும்தான் ஓலைக் குடிசை. வீடு கட்ட கடன் தரவில்லை.

கூந்தங்குளத்தில் இன்றைக்கு இரண்டு கார்டு வேலை பார்க்கின்றனர். அவர்கள் பார்க்கும் வேலையெல்லாம், குளத்துக்குள் ஆடு மாடு மேயாமல் பார்த்துக் கொள்வதுதான். மற்றொன்று காடு வளர்ப்பு. ஆனால் அவர்களுக்குப் பறவைகளைப் பற்றியோ, அவற்றை பாதுகாப்பது பற்றியோ, பறவை நோக்குதல் பற்றியோ தெரியாது. ஆனால் அவர்கள் முழு நேர அரசு ஊழியர்கள். அப்போது மாணவர்கள் வந்தால் டெலஸ்கோப், பைனாகுலர், மறைப்பு அமைத்து பறவைகளைக் கண்காணிக்கச் சொல்லித் தந்தேன். ஆனால் இப்பொழுது இதெல்லாம் நடப்பதில்லை.

கூந்தங்குளத்தின் பெயரைக் கேள்விப்பட்டு இப்பொழுதும் மக்கள் வருகிறார்கள். வேலையைவிட்டு நீக்கப்பட்டுவிட்டாலும், 2009ஆம் ஆண்டிலும் பறவைகளைக் கணக் கெடுத்து உள்ளேன். தொடர்ந்து அந்தச் சரணாலயத்தை வளர்ப்பேன், கல்லூரி மாணவர்களுக்கு உதவுவேன். "நான் இந்த ஊரில் பிறந்தவன். உங்களுக்கு உதவி செய்வேன். என் நம்பருக்கு போன் பண்ணு, வெளியே சென்றிருந்தால் சொல்லி விடுவேன்" என்று மாணவர் களிடம் கூறிவிடுவேன்.

சரணாலயத்தில் என்னைப் போன்று பறவை களைப் பற்றி நன்கு அறிந்த ஒருவர் இருந்தால்தான் மாணவர்களுக்குத் தேவைப்படும் விஷயங்களை, அறிவியல் தகவல்களைக் கூற முடியும். தினசரி நான் பதிவு செய்த விவரங்களை அவர்களுக்கு தெரிவிக்க முடியும். வனத்துறை ஊழியர்களுக்குப் பறவைகளை வகை பிரித்துக்கூட கூறத் தெரியாது. அவர்களால் என்ன சொல்லித்தர முடியும்? பறவையின் பெயர் சொன்னால் போதாது, முழு விபரமும் தெரிந்தவன்தான் பேர்ட் வாட்சர். குறைந்தது 10 பால்பாண்டிகளையாவது உருவாக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

கூந்தங்குளத்தில் இன்னும் என்ன வசதிகள் செய்தால் பறவை வரத்தையும், பறவை நோக்கர்கள் வரத்தையும் அதிகரிக்கலாம்?

வேணுபிரசாத், மனுஷ்குமார் ஆகியோர் டி.எப்.ஓக்களாக இருந்தபோது நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள். போர்வெல் போடவும், கட்டடம் கட்டவும் பணம் ஒதுக்கினார்கள். 45 அடி உயர தொலைநோக்கி கோபுரம் 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதில் ஏறி குளத்தைப் பார்க்க முடியும்.

பறவைகளின் போட்டோக்களை பிரேம் செய்து வைத்து, மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். கலெக்டர், மினிஸ்டர் எல்லாம் இங்கு வந்தாலும் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லப் போதுமான பஸ் வசதி கிடையாது. யாராவது வந்தால் எட்டு மணி வரை காத்திருக்க வேண்டும். பலரும் ஆட்டோவில் செல்கிறார்கள். அத்துடன் சரியான ரோடும் இல்லை.

பறவைகளுக்கான வசதிகள் என்பது குளத்துக்குள் 500 மரங்கள் விழுந்து விட்டன. இந்தக் குறைபாட்டை நீக்க நீர்க்கடம்பு, நீர்க் கருவேல மரங்களை நட வேண்டும். நான் சில மண்திட்டுகளை உருவாக்கினேன். பாம்புதாரா, அரிவாள் மூக்கன் போன்றவை தங்குவதற்கு வசதியாக மூங்கில் வளர்த்தேன். அவற்றை விரிவுபடுத்தலாம்.

அதேபோல குளத்துக்குள் ஆழமான ஊரணி ஒன்று அமைக்க வேண்டும். அப்பொழுதுதான் குஞ்சு களுக்கு அதிக மீன் கிடைக்கும். அதேபோல் பூநாரைகள் கூடு அமைக்க வசதி செய்து தர வேண்டும். அவை இங்கு ஆயிரக்கணக்கில் வருகின்றன.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்காக கூந்தங்குளம் வழியாக மின்சாரம் கடத்த மிகப் பெரிய கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லைனில் அடிபட்டு நூற்றுக் கணக்கில் பறவைகள் அழிந்துள்ளன. நான் சண்டை போட்டதால் குளத்துக்குள் வைக்க வேண்டிய கோபுரம் வெளியே சென்றது. இப்பொழுது நான்கு

கோபுரங் களில் நான்கு லைன்கள் செல்கின்றன. இப்போது கூந்தங்குளத்தில் போட்டோ எடுத்தால் இந்த லைன்கள்தான் தெரியும். இதற்கு வனத்துறை எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இதனால் பறவைகளுக்குப் பெரும் ஆபத்து. சரணாலயத்துக்கும் ஆபத்து. புரிந்துகொள்ள வேண்டியவர்கள், இதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

வலசை பறவைகள் என்றவுடன் வேடந்தாங்கலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வேடந்தாங்கலில் கடந்த ஆண்டு பறவை கணக்கெடுப்பு நடத்தினேன். முருகன் என்ற வாட்சர் உடன் இருந்தார். வேடந்தாங்கலில் கூழைக்கடா, நத்தை குத்தி நாரை, சாம்பல் கொக்கு போன்றவை இருக்கின்றன. ஆனால் கூந்தங்குளம் அளவுக்கு மஞ்சள் மூக்கு நாரைகள் இல்லை.

வேடந்தாங்கல் என்பது கண்கொள்ளாக் காட்சி, சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்து. ஆனால் வேடந்தாங்கலில் குளத்தில் இறங்கினால் எல்லாப் பறவைகளும் பறந்து உள்ளே சென்றுவிடும். அதேநேரம் அதிக வகைப் பறவைகள் வருவது கூந்தங்குளத்துக்குத்தான். கூந்தங்குளத்துக்கு பூநாரை வருகிறது. அவற்றின் வரவை தேசிய அளவிலான மிகப் பெரிய பொக்கிஷமாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். எங்கள் ஊரில் கிரவுண்ட் நெஸ்டிங் உண்டு. மக்களோடு மக்களாக ரொம்ப ஐக்கியமாகப் பழகிய பறவைகளை எங்கள் ஊரில்தான் பார்க்க முடியும். ஒவ்வொரு வீட்டின் முன்னும் 20, 30 கூடுகள் இருக்கும். மக்கள் வந்தால் கலையவே கலையாது. தமிழகத்தில் வேறு எந்தப் பகுதியிலும் இது போன்று பார்க்க முடியாது.

நீங்கள் இட்டுக்கட்டிப் பாடுவீர்களா?

கிராமத்துக்காரன் நாலும் கற்றுக்கொள்ளலாம். வெல்டர், பிளாஸ்டிக் மோல்டிங், ஓட்டல் வேலை, விறகு வெட்டுதல், உழுதல், மம்பட்டி வேலையெல்லாம் பார்த்திருக்கிறேன். அதேநேரம் கவிதை, பாட்டும் எழுதுவேன்.

1. எங்கள் ஊரைப் பற்றி...

பறவைகளைக் கண்போல காத்து வரும் மக்களுக்கு

கோடானு கோடி வணக்கம்

பெற்றெடுத்த குழந்தையைத் தொட்டிலில் இட்டுவிட்டால்

தாலாட்டுப் பாடுவது எங்கள் ஊர் பறவை

என் ஜீவன் உள்ள வரை சேவையும் செய்திடுவேன்

மடிந்தாலும் மடிவேன் குளத்தங்கரையின் மேலே

2. தேசியமரம் ஆலமரம் பற்றி...

காடு இல்லையென்றால் நாடு இல்லை.

மரமில்லை என்றால் மழை இல்லை.

மரத்தை வெட்டுவதை நிறுத்திவிட்டு

ஆளுக்கு ஒரு மரம் வளர்த்தால்

ஆனந்தமாய் நாம் வாழ்வோம்

3. குறிஞ்சி மலர் பற்றி கேரளத்தில் பாடிய பாட்டு...

மூணாறு பக்கத்திலே

குறிஞ்சி மலர் பூக்குதம்மா

பன்னிரெண்டு வருஷத்திலே

ஒரு முறைதான் பூக்குதம்மா

நாற்பத்தி ரெண்டு வகையும் உண்டு

நாடு போற்றும் இடமும் உண்டு

கபிலன் என்ற புலவன்தான்

கவி ஓன்று பாடிவிட்டான்

கானகத்து குயில் போல

உலகக் கடவுள் முருகனும்தான்

வள்ளியை மனம் முடித்தான்

குறிஞ்சி மலர் பூவினாலே

என்னென்ன விருதுகள் பெற்றிருக்கிறீர்கள்?

பறவை மனிதன் என்ற பட்டத்தை அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்று வழங்கியது. கிரீன் லவ்வர்ஸ் கிளப் உட்பட கேரளாவில் இருந்து முதல்வர் அச்சுதானந்தன், வனத்துறை அமைச்சர் கையில் நானும் என் துணைவியும் விருது பெற்றிருக்கிறோம். ராஜபாளையம் காட்டுயிர் சங்கம் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கையால் விருது கொடுத்தது. திருநெல்வேலியில் மாநிலங்களவை எம்.பி. கனிமொழி என்னைப் பாராட்டிப் பேசியுள்ளார். அமைச்சர் மைதீன் கான் கோவையில் விருது வழங்கியுள்ளார்.

பறவைகளோடும், இயற்கையோடும் என மனசு ரொம்ப ஐக்கியமாக இருக்கும். அவற்றைத் துறந்து என்னால் வாழ முடியாது. நாடு கடந்து கூந்தங்குளம் வரும் வாய்பேச முடியாத இந்த ஐந்தறிவு ஜீவன்களான பறவைகளிடம் சாதி மத வேறுபாடு கிடையாது. ஒரே மரத்தில் பல வகைப் பறவைகள் கூட்டமாக வாழ்கின்றன. கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. அவற்றிடம் உள்ள ஒற்றுமை நமக்குத் தேவை. கூந்தங்குளம் வருவீர் கோடி நன்மை பெறுவீர்.

சந்திப்பு: கீற்று நந்தன், வழக்குரைஞர் சுந்தரராஜன், ஆதி

படங்கள்: ஆர்.ஆர். சீனிவாசன், சண்முகானந்தம்

(புத்தகம் பேசுது அக்டோபர் 2010 இதழில் வெளியானது)

Pin It