அஞ்சலி

என் தோழியும் சக எழுத்தாளருமான லதா ராமகிருஷ்ணன் ‘சூடாமணி மறைந்து விட்டார்’ என்ற தகவலைக் குறுஞ்செய்தி வழி அனுப்பியிருந்தார். 'தினமணி' புதிய ஜீவா மற்றும் பல நண்பர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். மெல்லிய புகைப்படலமாய் சூடாமணி பற்றிய நினைவுகள் நிழலாடின.

‘புதியபார்வை’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியபோது சிறுகதைகளைப் படித்துத் தேர்வு செய்யும் பணி. (பொறுப்பாசிரியர் பாவை சந்திரனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.) சூடாமணியிடமிருந்து சிறுகதைகள் வந்தது என்றால் அப்படியே DTP செய்வதற்கு அவரே அனுப்பி விடுவார். எனக்கு இது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஏற்கனவே அவரது கதைகளைப் படித்திருந்தபோதும் அதன் பிறகு சூடாமணியின் எழுத்துகளைத் தேடிப் படிக்க வேண்டுமென்று தோன்றியது. தொடர்ந்து அவரின் கதைகளை வாசித்தபோது ஆழமான மன உணர்வுகளை மிக எளிமையாகச் சொல்லும் உயிரோட்டமுள்ள அவரது கதைகள் மற்றும் உளவியல் ரீதியிலான அவரது எழுத்து இரண்டுமே என்னைக் கவர்ந்தன.

அடுத்த கட்டமாக அவரைச் சந்திக்க வேண்டுமென்ற உந்துதல் எழுந்தது. தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டபோது, 'வேண்டாமே' என மறுத்தார். என்னுடைய வற்புறுத்தலினால் அரைமனதுடன் இசைவு தெரிவித்தார்.

அவரைச் சந்தித்த பிறகுதான் அவர் ஏன் வெளியுலகுடன் தொடர்பில்லாமல் இருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிந்தது. மிக மிகச் சன்னமான குரலில் மென்மையான பேச்சு. வார்த்தைகளை அழுத்தி உச்சரித்தால் வலிக்குமோ என்பது போலிருந்தது அவரது பேச்சு. காபி கொடுத்து உபசரித்ததும் மறக்க முடியாத நிகழ்ச்சி. சூடாமணியின் கதைகள் குறித்துப் பேசியபோதும் பெரும்பாலும் மௌனமாகப் புன்னகை ஒன்றையே பதிலாக அளித்தார். பொதுவாகப் பெண் எழுத்தாளர்கள் பற்றி பேச்சு திரும்பியபோது அவர் சற்றே உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார். அதற்கும் காரணமிருந்தது. ''சந்தியா என்றொரு நாவலை வாசித்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்.

எனக்கு ஆச்சரியம். சூடாமணி நாவலும் எழுதியிருக்கிறாரா என்று. 'இல்லை' என்றதும் எனக்கு அந்த நாவலை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். அது ரங்கநாயகி அம்மாள் என்பவரால் எழுதப்பட்ட நாவல். புத்தகத்தைப் புரட்டினால் அதற்கான முன்னுரையை சூடாமணியே எழுதியிருந்தார்.

சூடாமணியின் பாட்டி ரங்கநாயகி அம்மாள். அவர் 1920-களில் எழுதிய நாவல்தான் 'சந்தியா'. நோட்டுத் தாள்களில் எழுதி வைத்துப் பல ஆண்டுகள் வரை அச்சிலேற்றாமல் பெட்டிக்குள் பூட்டி வைக்கப்பட்ட பல பிரதிகளில் இதுவும் ஒன்று. அவரது இறுதிக் காலத்தில்தான் அவரது எழுத்து பற்றி மற்றவர்களுக்குத் தெரிய வந்தது.

பாட்டியின் இறுதித் தருவாயில் இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து புத்தகமாக வெளியிட வேண்டுமென்றும் அவசியப்பட்டால் சில மாற்றங்களையும் திருத்தங்களையும் செய்து கொள்ளலாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 1962- ல் அவர் காலமான பிறகு, ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளுக்குப் பின் 1970-ல் 'சந்தியா' நூல் வடிவம் பெற்றுள்ளது.

சூடாமணியும் அவரது சகோதரி பத்மாசனியும் பாட்டியின் பல நாவல்களைப் பல முறை படித்துப் பார்த்து இறுதியாக 'சந்தியா'வைத் தேர்வு செய்துள்ளனர். அந்நாவலைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை, "பாட்டியார் தந்த சலுகையை இதில்தான் குறைந்த அளவில் பயன்படுத்த முடிந்தது. பழங்கால நடையமைப்பில் மட்டும் மாற்றங்கள் செய்திருக்கிறோமே தவிர, கதையின் உள்ளடக்கத்திலோ பாத்திரத் தன்மையிலோ எவ்வித மாற்றமும் செய்யவில்லை" என்று நேர்மையாகப் பதிவு செய்துள்ளார் சூடாமணி. இன்றளவும் அவர் எனக்கு அளித்த நூலைப் பாதுகாத்து வருகிறேன். சூடாமணியின் கதைகளின் தொகுப்பைத் தேடியே நான் அவரைச் சந்திக்க விரும்பினேன். ஆனால், அப்போதும் கூட அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் அவரின் பாட்டி ரங்கநாயகியை அவரது எழுத்து வழி எனக்கு அறிமுகப்படுத்தினார். சூடாமணியைப் பற்றி நினைக்கும் தோறும் 'சந்தியா'வும் என் நினைவில் நிழலாடுவாள்.

அதன் பின் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரை இரண்டாவது முறையாகச் சந்தித்தபோது கொஞ்சம் வயது கூடியிருந்தது. அதே மென்மையான பேச்சு, அதிர்ந்து பேசாத தன்மை. இரண்டு முறை அவரைச் சந்தித்த போதும் தூய்மையான வெள்ளை உடையில்தான் அவரைப் பார்க்க முடிந்தது. சில நூல்களை அவருக்கு அளிக்க முற்பட்டபோது, "வேண்டாம்மா, என்னால் இப்போது அதிகம் படிக்க முடிவதில்லை. வேறு யாருக்காவது கொடுங்கள்" என்று அதைப் பெற்றுக்கொள்ள உறுதியாக மறுத்து விட்டார். மனதுக்கு சங்கடமாக இருந்தாலும் யாருக்கும் பயன்படாமல் அலமாரியில் அடுக்கி வைத்துக் கொள்ள விரும்பாத அவரது நேர்மையும் என்னைக் கவர்ந்தது.

Pin It