1947 வாக்கில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. நாடெங்கிலும் தொழிலாளர்கள், விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்கள் வெடித்து வியாபித்துக் கொண்டிருந்த நேரம், நாகை தாலுக்காவில் தாழ்த்தப்பட்ட மக்களே விவசாயத் தொழிலாளர்களாக இருந்ததால் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தைத் துவக்கத்திலேயே சிதைத்து விடலாம் என ராமராஜ்ய அரசும், கிராமராஜ்ய நிலப்பிரபுக்களும் திட்டமிட்டனர். சாதியமைப்பைப் பாதுகாத்திடவும், பண்ணையடிமைச் சமுதாயத்தைப் பாதுகாத்திடவும், கிராமம் கிராமமாகச் சேரிகள் மீது முழுமையான தாக்குதலைத் தொடுத்தனர். மலபார் போலீசும், பண்ணையார்களின் அடியாட்களும், சேரி மக்களைத் தாக்குவதில் முனைப்பாயிருந்தனர். (பண்ணையார் ஒருவர், தானே அத்தகைய அராஜகத்தில் நேரடியாக ஈடுபட்டால் அவருக்கு மைனர் என்ற பட்டப் பெயர்.)

ag kasthuriranganபண்ணை அடியாட்கள் சேரிகளை வளைத்தனர். ஆண்களையெல்லாம் துணிகளை அவிழ்த்து விட்டு கொடூரமாகத்தாக்கி ரத்தவிளாராக்கினர். சேரியில் ஏற்றியிருந்த கம்யூனிஸ்ட் கொடியை அவர்களை விட்டே இறக்கிக் கொளுத்தச் செய்தனர் – கொடி மரத்தைத் துண்டு துண்டாக வெட்டச் செய்தனர்.

பெண்களை நிர்வாணமாக்கி தலைமுடியை அறுத்து மானபங்கப்படுத்தினர் ; கற்பழித்தனர். ஆண்களை முட்டுக்காலிடச் செய்து பெண்களை அவர்கள் மேல் உட்காரச்சொல்லி – சவுக்கால் அடித்துச் சுமையேற்றிய கழுதையை ஒட்டிப் போவது போல முட்டி தேய, கல், முள் குத்த, ரத்தம் வழிந்தோட ஊர்க்கோடி வரை ஒட்டிச் சென்றனர்.

தலைமறைவான கம்யூனிஸ்டுகளை மோப்பம் பிடித்து கைது செய்து சிறையிலடைத்து சித்திரவதைக் கொடுமைகள் புரிந்தனர் – வெளியிலும், சிறையிலும் பலரைக் கொன்றனர். இந்தப் போலீசின் அட்டகாசத்தோடு பண்ணையாரின் அடாதுடிகளும் சேர்ந்து கொண்டது. ஊர் சேரியில் அல்லது ஊர் எல்லையில் தலைமறைவு கம்யூனிஸ்ட் வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தால், கோவில் மணியொலி எழுப்பப்படும் – சாதி வெறியர்களும், பண்ணை ரெளடிகளும் சேர்ந்து தேடுவார்கள்.

யாராவது சிக்கிக் கொண்டால் முச்சந்திக்கு இழுத்து வந்து ஒரு மரத்தில் கட்டிப் போட்டு – நிர்வாணமாக்குவார்கள். சாட்டையால் மாற்றி மாற்றி அடிப்பார்கள். ரத்த ஆறு பெருக்கெடுக்கும் – மயக்கமடைவான் – சேரிவாழ் ஆண்களையும், பெண்களையும் வரிசையாகக் கொண்டு வந்து நிறுத்துவார்கள். ஒரு தட்டிலே வெற்றிலை பாக்கு புகையிலை அடுக்கப்பட்டு இருக்கும். அச்சேரி மக்கள் ஒவ்வொருவராக வெற்றிலையை எடுத்துப் போட்டு நன்றாக மென்று கட்டிக்கிடப்பவனின் முகத்திலே கொழகொழப்பான எச்சிலை காரித்துப்ப வேண்டும். மறுத்தால் அடிவிழும். அந்த அச்சத்தில் தன் தலைவன் முகத்தில் காரி உமிழும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டவர்களின் நெஞ்சம் என்ன பாடுபட்டிருக்கும்? இத்தனையும் முடித்தவுடன் காக்கி நாய்களிடம் அந்தக் கம்யூனிஸ்ட் ஒப்புவிக்கப்படுவான். அந்த வெறிபிடித்த நாய்களும் அவனைக் கடித்துக் குதறி லாரியில் ஏற்றிப் போகும்.

…….                                                                                    …….                                                                                        ……..

மிகக் குறைந்த காலத்தில், நாகை தாலுக்காவின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, ஆங்காங்கே தலை தூக்கி நிற்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வை முன்வைத்து இடத்திற்கும், நிலைமைக்கும் ஏற்ற களவழி கண்டவுடனேயே பற்றி எரியத் தொடங்கியது. ஏற்கனவே உள்ளம் புழுங்கி வேகமடக்கிக் கிடந்த விவசாயத் தொழிலாளர்கள் வெகுண்டெழுந்தனர். அந்த திரளில் வீரியம் முடங்கிக் கிடந்த இயக்க ஊழியர்களும் புதிய செயல் துடிப்புள்ள இளைஞர்களும் அடையாளப்படுத்தப்பட்டனர். அவர்கள் வகிக்கத் தொடங்கிய பாத்திரத்தாலும், பங்கெடுப்பாலும் மக்களை ஈர்த்து நின்றனர். எதிரிகள் பகிரங்கமாகத் தங்களை அம்பலப்படுத்திக் கொண்டனர். துரோகிகள் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டனர்.

இந்தியச் சூழலில் மார்க்ஸிய பிரயோகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்து விட்ட திரிபுகள் முற்றி , அதன் செயல் வழி முடக்கப்பட்டு, மக்களைத் திரட்டி, களம் காண்பது மழுங்கடிக்கப் பட்டு வறட்டுப் பேச்சும் நழுவல் வியாக்கியானமும், தலைதூக்கி கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் படுக்கை நோயாளியாக ஆக்கிக் கொண்டிருந்த நிலையில் இந்தத் திடீர் உயிர்ப்பு எதிரிகளுக்கு இடியாக இறங்கியது.

பேரரசராகவும், சிற்றரசராகவும் தங்களைக் கருதிக் கொண்டு ராஜ தர்பார் நடத்திக் கொண்டிருந்த பண்ணை ராஜ்யாதிபதிகளுக்கு விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சி பிரளயமாகத் தோற்றமளித்தது. அவர்களும் எடுத்த எடுப்பிலேயே இதனை ஒடுக்கும் முயற்சியில், பயங்கரமாகவும், கடுமையாகவும் செயல்பட்டனர். நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டிருந்த விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சியும், செயல் போக்கும் எகிறி எம்பி எழுந்து நின்றது.

இந்த நிலையில், விவசாயத் தொழிலாளர்கள் இயக்கம், பண்ணை மன்னர்களின் படையெடுப்பிற்குக் கடுமையான விலைகளைக் கொடுக்க வேண்டியிருந்தது. உயிர் பலிகள் – உடல் ஊனம் – குடிசைகள் அழிப்பு – கூரைகள் எரிப்பு – சேரிகள் சூறையாடல் – பெண்களை மானபங்கப்படுத்துதல் – கற்பழிப்பு – போலீஸ் சித்திரவதைகள் – பொய் வழக்குகள் என்பன போன்றவைகள் அன்றாட நிகழ்ச்சிகளாயின.

இதனையெல்லாம் நாகை தாலுக்கா ஆண், பெண் விவசாயத் தொழிலாளர்கள் குறிப்பாக சேரி மக்கள் கொஞ்சமும் தயக்கமின்றி எதிர்த்துச் சமரிட்டனர். அத்தகைய போரில் அனைத்து விளைவுகளை அஞ்சாநெஞ்சுடன் ஏற்று, தங்களை அர்ப்பணித்துக் கொள்ள ஆயத்தமாகி விட்ட, விவசாயத் தொழிலாளர்கள், இயக்க ஊழியர்கள், தொண்டர்கள் வரலாற்றில் மறைக்கப்படவோ. மறக்கப்படவோ முடியாதவர்கள். அத்தனைக்கும் சித்தமாகி, தன்னிழப்பில் களம் கண்ட அந்த தொழிலாளர்கள், இயக்க வரலாற்றில் கம்யூனிஸ்ட் கட்சியால் இதுவரை பதிவு செய்யப்பட வில்லை. குறிப்பிட்ட சிலருக்கு புகழாரம் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் நாகை தாலுக்காவில், பண்ணை ராஜ்ஜியங்களை அழித்தொழிக்கத் தங்களைப் பணயம் வைத்துப் போராடிய மக்கள் ஊழியர்கள் கம்யூனிஸ்ட் கட்சியால் மறைக்கப்பட்டு விட்டார்கள் என்பதே உண்மை நிலை.

அவ்வெழுச்சி கால கட்டமான 1962 முதல் 1972 வரையிலான பத்தாண்டுகளில் கள வாழ்வைத் தங்கள் சுயவாழ்வாக்கிக் கொண்ட அந்த தீர்ர்களைப் பதிவு செய்து நினைவு கூர்ந்து விட்டு அக்கால கட்டத்தின் நிலைமைகளையும் – நிகழ்வுகளையும் சம்பவங்களையும் தொடர்வோம்.

………..                                                                             ………….                                                                 ………..                                  

சிறிது நேரத்திற்குப் பிறகு, போலீஸோடும் நிறைய ஆட்களோடும் கோபால கிருஷ்ணநாயுடு கீழ் வெண்மணிக்கு வருகிறார். வந்தவர்கள், பக்கிரிசாமியைத் தேடுகிறார்கள். ஒரு பக்கத்தில் அவருடைய உடல் கிடத்தப்பட்டு இருக்கிறது. போலீசிடம் உடலை ஒப்படைக்கிறார்கள். போலீஸ் உடலைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டு புறப்பட்டுப் போகிறார்கள்.

அதன்பிறகுதான், கண்ணில் தென்படுகின்றவர்களை எல்லாம் வெட்டுவதும், பார்க்கின்ற குடிசைகளுக்கெல்லாம் தீ வைப்பதுமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. எத்தனை பேரிடம் துப்பாக்கிகள் இருந்தன என்பது தெரியவில்லை. என்றாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளால் சுடப்பட்டிருக்கிறார்கள். துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பயந்து பல்வேறு பக்கங்களிலும் சிதறி ஓடியிருக்கிறார்கள். ஓடியவர்களில் வயல்வெளிகளில் பதுங்கியவர்களைக் கூட ஒரு அனுமானத்தில் சுட்டிருக்கிறார்கள். சிலர் ஓடிக் கொண்டேயிருந்திக்கிறார்கள். ஓட முடியாமல், சிக்கிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் தடுமாறியவர்கள் தான் நடுத்தெருவில் இருந்த ராமையாவின் குடிசைக்குள் நுழைந்து விடுகிறார்கள்.

வரிசையாக குடிசைகளைக் கொளுத்தி விட்டுத் திரும்பும் போது, இவர்கள் பதுங்கியிருந்த குடிசையிலிருந்து பேசும் சத்தம் கேட்டது. மற்ற வீடுகளைக் கொளுத்திக் கொண்டு வந்தவர்களின் பார்வை, இந்தக் குடிசையின் மீது பட்டு, இதற்குள் ஆட்கள் இருக்கிறார்கள் என்று வெளிப்புறமாக கதவினைத் தாள் போட்டுவிட்டு 44 பேர் இருந்த அந்த குடிசையை கொளுத்தி விடுகிறார்கள்.

தீ கொளுந்து விட்டு எரியத் துவங்கிய பின், குடிசைக்குள் இருந்து பெரிய அளவிலான சத்தம் வந்திருக்கிறது. ஆனாலும் அவர்களை எவரும் காப்பாற்றவில்லை. தப்பி வெளியே வந்த ஒருவர் வெட்டப்பட்டு மீண்டும் தீக்குள் வீசப் பட்டுள்ளார். இந்தச் செய்திகளெல்லாம் முழுமையாக நமக்கு மறுநாள்தான் தெரியவந்தது. 25.12.1968 அன்று இரவு வீடுகள் எரிந்து அடங்கிய பின்னர், எதிர் நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாமல் திரும்பி வந்து அலுவலகத்தில் தங்கி விட்டோம். மறுநாள் 26.12.1968 அன்று காலை தோழர் பி.ராமமூர்த்தி (பி.ஆர்)க்குச் செய்தி தெரிந்துவிடுகிறது.

….                                                                         …..                                                                                          …..                         

மேற்கண்டவாறு கீழத்தஞ்சை உழவர்களின் ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைப் போராட்டங்களும் அதற்காக அவர்கள் செய்த ஈகங்களும், எதிர் வினைகளும், அப்போரட்டங்களில் தோழர் அ.கோ.கஸ்துரிரெங்கன் அவர்களின் பாத்திரமும் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. படிக்க வேண்டிய சமகால வரலாறு.

பக்கங்கள் : 217, விலை : ரூபாய் 185.00, தொகுப்பும் பதிவும் : திரு பசு.கவுதமன், வெளியீடு : ரிவோல்ட் பதிப்பகம் சாக்கோட்டை கும்பகோணம், தொடர்பு எண்கள் : 9884991001, 9786540367.

Pin It