எதிரியைக் கண்டிப்பதற்கு முன் இனத்தாரைத் திருத்துவது முதல் தேவையாய் உள்ளது.

ஏ, ஏமாந்த தமிழினமே, எப்போது விழிக்கப் போகிறாய்?

ஏ, வஞ்சிக்கப்பட்ட தமிழினமே, எப்போது பதிலடி தரப் போகிறாய்?

இந்திய அரசு தில்லியில் என்ன செய்தது என்று பார்த்தாயா?

ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களையும் அறுநூறு தமிழகத்தின் மீனவத் தமிழர்களையும் இனக்கொலை புரிந்த இலங்கைப் படையின் கடற்பிரிவுத் துணைத் தளபதி ஜெயந்த பெரேராவுக்கு இந்தியக் கடற்படை அணிவகுப்பு மரியாதை செலுத்தியுள்ளது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி ஜெயந்தவை ஆரத் தழுவி பாசத்தைப் பொழிந்துள்ளார்.

ஆரியத்தின் இந்த அணிவகுப்பும் அரவணைப்பும் கடந்த 27.10.2014 அன்று புதுதில்லி தெற்கு வளாகத்தில் சீரும் சிறப்புமாக நடந்துள்ளது.

சிங்களப்படை தமிழர்களை அழித்தது போல் இந்திக்காரர்களை, குசராத்திகளை, மலையாளிகளை அழித்திருந்தால், அந்நாட்டுத் தளபதியை அழைத்து அரச மரியாதை செய்திருக்குமா இந்தியா?

தமிழக மீனவர்களின் படகுகளை வன்கவர்தல் செய்து சிங்கள அரசு வைத்துள்ளது. இன்று கூடத் தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் உள்ளார்கள். தமிழர் கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் தாக்குகிறது சிங்களக் கப்பற்படை. வாழ்வாதாரம் இழந்து வயிற்றுக்குச் சோறின்றி, பெற்ற பிள்ளைகளைப் பேணிக் காக்கப் பொருளின்றி இலட்சோப லட்சம் மீனவத் தமிழர்கள் தமிழகக் கடலோரங்களில் கருவாடு போல் காய்ந்து கிடக்கிறார்கள்.

தமிழர்கள் மீது கொலைச் செயல்களையும் கொடூர வன்முறைகளையும் ஏவியதற்காக சிங்களக் கடற்படைத் தளபதியை வரவழைத்துச் சிறப்புச் செய்கிறது தில்லி!

அத்தோடு நிற்கவில்லை, அடிமைத் தமிழர்களே! இன்னும் தீவிரமாகக் கடலில் தமிழர்களை வேட்டையாடுவதற் காக சிங்களப் படைக்கு இரண்டு நவீன கடலோரக் காவல் படகுகளை இந்தியா அளிக்கப்போகிறதாம். சிங்களக் கடற்படைக்கு அளித்து வரும் பயிற்சியை இன்னும் தீவிரப்படுத்தப் போகிறதாம். இவற்றை அந்த விழாவில் அறிவித்துள்ளார் இந்தியக் கடற்படைத் தலைமைத் தளபதி ஆர்.கே. தோவான்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்பகையைத் தூண்டி. சிங்கள புத்த ஆரியப் பேரினவாத வெறியை இலங்கையில் விதைத்த அனகாரிக தர்மபாலாவின் (1864 - 1933) அஞ்சல் தலையை வெளியிட்டுத் தில்லிப் பேரரசு பூரித்துப் போயுள்ளது.

ஏ, ஏமாந்த தமிழினமே, இதன்பிறகும் இந்தியா உன் நாடு என்று எண்ணுவாயா? இந்தியாவின் ஆளும் வர்க்கக் கட்சிகளான காங்கிரசுடனும் - பா.ச.க.வுடனும் கூட்டணி சேரும் தமிழகக் கட்சிகளைத் தமிழர்களின் கட்சிகள் என்று நம்புவாயா? காங்கிரசு, பா.ச.க. கட்சிகளுடன் கூட்டணி சேரும் கட்சிகள் தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் கங்காணிக் கட்சிகள் என்ற முடிவுக்கு வா!

ஏ, ஏமாந்த தமிழினமே இனிமேலாவது விழித்துக் கொள்! ஏ, வஞ்சிக்கப்பட்ட தமிழினமே,

 இனிமேலாவது பதிலடி கொடுக்க அணியமாகு!

***

தமிழக அரசே, கர்நாடக வனத்துறையினரைத் தளைப்படுத்து

வழக்கம் போல் மேட்டூர் கோவிந்தபாடி அருகே காட்டுப் பகுதியில் 22.10.2014 அன்று மீன்பிடிக்கச் சென்ற பழனி, ராஜா, முத்துச்சாமி ஆகிய மூன்று தமிழர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி பழனியைக் கொன் றுள்ளனர். இன்னொருவரைப் படுகாயப்படுத்தியுள்ளனர்.

இம்மூவரும் வீரப்பன் கூட்டாளியைப் பார்க்கப் போன தாகவும் மான் வேட்டை ஆடப் போனதாகவும் கர்நாடக வனத்துறையினர் மாற்றி மாற்றிப் பொய் கூறி வருகின்ற னர். ஆனால் தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று அப்பட்டமாக அவர்கள் பொய் கூறுகின்றனர்.

பிறகு எப்படி பழனி துப்பாக்கிக் குண்டுக் காயங் களால் செத்தார்? இம்மூவர் மீதும் துப்பாக்கி சூடு நடத்திக் கொலைக் குற்றம் புரிந்த கர்நாடக வனத்துறையினர் மீது தமிழகக் காவல் துறை கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தளைப் படுத்தி சேலம் சிறையில் அடைக்க வேண்டும்.

ஆனால் தமிழக அரசு கர்நாடக வனத் துறையின ரின் காட்டுமிராண்டித் தனங்களைக் கண்டிக்கக் கூட முன்வர வில்லை.

ஊழல் வழக்கில் பெங்களூர் நீதி மன்றத்தில் செயல லிதா தண்டனை பெற்றதைக் கன்னடர்கள் தமிழ் நாட்டைப் பழி வாங்குவதற்காக. முதல்வர் மீது ஒரு தலைச் சார்பாகத் தீர்ப்புரைத்து சிறையில் அடைத்து விட்டார்கள் என்று அ.இ.அ. தி.மு.க.வினர் பொங்கி எழுந்தனர். சென்னையில் கன்னடர் நடத்தும் உணவகத் தைத் தாக்கினர் கன்னடர்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டினர்.

ஆனால் உண்மையிலேயே கன்னட இனவெறி யோடு அப்பாவித் தமிழர்களைத் தாக்கிக் கொலை செய்தவர்களை அ.இ.அ.தி.மு.க.வும் கண்டிக்கவில்லை தமிழக அரசும் கண்டிக்கவில்லை.

தமிழக அரசு கர்நாடக வனத்துறையினர் மீது வழக் குப் பதிவு செய்து அவர்களைத் தளைப்படுத்த வேண்டும். கொலை செய்யப்பட்ட தமிழர் பழனியின் குடும்பத்திற்கு பத்து இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். கர்நாடகக் காவல் துறையினர் எல்லை யோரத் தமிழக மக்கள் மீது பதிந்துள்ள பொய் வழக்கு களைக் கைவிட முயற்சிகள் எடுக்க வேண்டும்.

Pin It