சிங்கள இனவெறி அரசின் கோரக்கரங்களில் சிக்கியுள்ள தமிழீழ மக்கள், சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பு - சித்திரவதைகள் ஆகியவற்றுக்கு அஞ்சி, தங்கள் வாழ்வைத் தற்காத்துக் கொள்ள உலகெங்கும் உள்ள பல நாடுகளுக்கு ஏதிலிகளாகச் சென்று தஞ்சம் புகுகின்றனர்.

தமிழீழ ஏதிலிகளின் மிக எளிதான இலக்காகவும், அவர்களது தொப்புள் கொடி உறவாகவும் உள்ள தமிழகத்தில், அவர்களை ‘முகாம்’கள் என்ற பெயரில் இயங்கும் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கின்றன, இந்திய - தமிழக அரசுகள்.

மார்வாடிகள் - குசராத்திகள் - மலையாளிகள்- தெலுங்கர்கள் என அயல் இனத்தைச் சேர்ந்தோர் எல்லாம் தமிழ்நாட்டில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்க, போரில் சிக்கி சின்னாபின்னமாகி தமிழகம் வந்தடைந்த தமிழீழ ஏதிலிகளுக்கோ எந்நேரமும் காவல்துறை கண்காணிப்பு, மிகக் குறைவான உள்கட்டமைப்பு வசதிகள் எனப் பல குறைபாடுகளுடன் இயங்கும் இவ்வகை முகாம்களே பரிசாகக் கிடைக்கின்றன.

இவர்களில் சிலரை, ‘சிறப்பு முகாம்’ என்ற பெயரில் இயங்கும் இன்னொரு வகை சித்திரவதை முகாம்களிலும் அடைக்கின்றனர்.

திபெத் அகதிகளுக்கு வழங்கப்படும் வசதிகளில் நூறில் ஒரு பங்கு கூட தமிழீழ அகதிகளுக்கு வழங்குவதில்லை.

இங்குள்ள தமிழீழ ஏதிலிகளுக்கு கல்வி - வேலை வாய்ப்புகளில் கடும் ஒடுக்குமுறை நிலவுகிறது. சட்டம் படித்த தமிழீழ ஏதிலி இங்கு வழக்கறிஞராகப் பதிவு செய்ய முடியாது. அண்மையில், பன்னிரெண்டாம் வகுப்பில் 1170 மதிப்பெண் பெற்ற, ஈரோட்டைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவிக்கு, தமிழீழ ஏதிலி என்ற ஒரே காரணத்திற்காக, மருத்துவப் படிப்புக் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.

எனவே, எவ்வித வசதிகளும் இல்லாமல் குற்றவாளிகள் போல் வாழ்வதை விட, இங்கிருந்து தப்பி ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, மலேசியா, இந்தோனேசியா உள் ளிட்ட நாடுகளுக்கு ஆபத்தான முறையில் கடல் பயணம் மேற் கொள்ள பல தமிழீழ ஏதிலிகள் திட்டமிடுகின்றனர். இவ்வாறு பயணம் செய்யும் ஏதிலிகள் சில சமயங்களில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி இறப்பதும், சில சமயங்களில் புறப்படும் முன்னரே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்படுவதும் அவ்வப் போது நடந்து வருகின்றது.

கடந்த 2012ஆம் ஆண்டு சூன் மாதத்தில், 200 ஏதிலிகளுடன் ஆஸ்திரேலியா சென்ற படகு கவிழ்ந்து சற்றொப்ப 90 பேர் இறந்துபோன நிகழ்வு மறக்கத்தக்க தல்ல. 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவரை சற்றொப்ப 600 பேர் இது போன்ற பயணங்களின் போது இறந்திருக்கலாம் என்கிறது தி நியூயார்க் டைம்ஸ் ஏடு (காண்க: தி நியூயார்க் டைம்ஸ், 19.07.2013). பணத்திற்கு ஆசைப்பட்டு, குறை பாடுடைய படகுகளில் அதிகள விலான ஏதிலிகளை ஏற்றிவிடும் கும்பல்களும் இதனால் உருவாகின்றன.

உண்மையில், ஆஸ்திரேலியாவிற்குத் தப்பிச் செல்லும் ஏதிலிகள் மீது அக்கறை இருந்தால், இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கி, அவர்களுக்கு அனைத்து வித சலுகைகளையும் அளிக்க வேண்டும்.

இவர்களது முகாம்களின் மீதான கெடுபிடிகளைத் தளர்த்திக் கொண்டு, இவர்கள் சுதந்திரமாக வாழ வழி ஏற்படுத்த வேண்டும். இதுவே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அயல் நாடுகளுக்குத் தப்பிச் செல்லும் ஏதிலிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

தற்போது, தமிழகத்தின் ஏதிலி முகாம்களிலிருந்து தப்பி ஆபத் தான கடல் பயணம் வழியாக ஆஸ்திரேலியா சென்றடைந் துள்ள 37 குழந்தைகள் உள்ளிட்ட 153 பேரையும், திரும்பவும் இலங்கை அரசிடமே ஒப்படைக்கப் போகிறோம் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் இந் நடவடிக்கை மிகச்சிறந்த நடவடிக்கை என அதனைப் பாராட்டியுள்ளார், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சிங்களக் கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா. சிங்கள இனவெறி அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு செயல்படும் ஆஸ்திரேலிய அரசின், இந்நடவடிக்கைக்கு ஐ.நா. மன்றம் மட்டு மின்றி, அனைத்துலக மன்னிப்புச்சபை உள்ளிட்ட உலகின் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. எனினும், ஆஸ்திரேலிய அரசு தமிழீழ ஏதிலிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது இது முதல் முறை இல்லை.

கடந்த சூலை 6 அன்று, ஆஸ்திரேலியாவால் இதே போல 41 இலங்கை ஏதிலிகள், இலங்கைக்கே திருப்பி அனுப்பப் பட்டனர். அவர்களை, சிங்கள இராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களில் 5 பேரை, சிறப்புக் காவலில் எடுத்துள்ளனர் இராணுவத்தினர். இனி அவர்களது நிலை கேள்விக்குறியே!

கடந்த 2012ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் பிறகு மட்டும், ஆஸ்திரேலிய அரசு சற்றொப்ப 1000க்கும் மேற்பட்ட தமிழீழ ஏதிலிகளை, இதே போல இலங்கை அரசின் கோரப்பிடியில் ஒப்படைத் திருக்கிறது. இவ்வாறு ஒப்படைக் கப்படும் ஏதிலிகள், இலங்கை அரசின் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவர் எனத் தெரிந்தும் ஆஸ்திரேலிய அரசு இவ்வாறு செய்கிறது.

ஏதிலிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பும் செய்தி, ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டுள்ள தமிழீழ ஏதிலிகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சூன் மாதம் 22ஆம் நாள், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், தம்மை ஏதிலியாகப் பதிவு செய்து கொள்ளக் கோரி விண்ணப்பித்த 40 அகவை தமிழீழத் தமிழர் ஒருவர், இதனால் தற்கொலைக்கு முயற்சித்து, சுற்றத்தாரால் காப்பாற்றப்பட்டார்.

ஏற்கெனவே கடந்த மே 31ஆம் நாள், ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய தமிழீழ ஏதிலியான லியோ சீமான்பிள்ளை என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இவர், வேலூர் தமிழீழ ஏதிலிகள் முகாமிலிருந்து தப்பி படகு வழியில் ஆஸ்திரேலியா சென்றடைந்தவர் ஆவார்.

இதற்கு முன்னர், சிட்னி நகரில் ஏதிலியாக பதிவு செய்யக் கோரி இதேபோன்று இன்னொரு தமிழீழத் தமிழர் ஒருவர், தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்து 75 விழுக்காட்டுத் தீக்காயங்களுடன் காப்பாற்றப்பட்டார். கடந்த மே 11 அன்று, திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த தேவரூபன் என்ற தமிழீழ ஏதிலி, தம்மை விடுதலை செய்யக் கோரி தமது கை மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

தமிழகத்திலும், ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களிலும் தமிழீழ ஏதிலிகள் தற்கொலைக்கு முயல்வது, அவர்களது வாழவழியற்றக் கையறு நிலையையே எடுத்துக் காட்டுகிறது.

இந்நிலையில், 07.07.2014 அன்று ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம், 153 தமிழீழ ஏதிலிகளை இலங்கை அரசிடமே திரும்ப ஒப்படைப்பதற்கு இடைக்காலத் தடைவிதித் துள்ளது. இத்தடை தற்காலிக மானதே என்பது கவனத்திற்குரியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 1951 ஆம் ஆண்டில் நிறை வேற்றப்பட்ட ஏதிலிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா. ஒப்பந்தம், ஒரு நாட்டில் இன அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ ஒருவரின் உயிருக்கோ அல்லது சுதந்திரத்திற்கோ அச்சுறுத்தல் ஏற்படுமென்றால், அந்த நாட்டிற்கு எந்த காலகட்டத்திலும் அவர் தஞ்சம் புகுந்துள்ள நாட்டின் அரசு திருப்பி அனுப்பக்கூடாது என்று கூறுகிறது (பிரிவு 33).

அதேபோல், ஒரு நாட்டில் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து இருப்பதாக தெரிந்தால் அவரை அந்த நாட்டிற்கு அனுப்பக் கூடாது என சித்திரவதைக்கு எதிரான அனைத் துலக ஒப்பந்தத்தின் 3 ஆவது பிரிவில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்திய - தமிழக அரசுகள், தமிழகமெங்கும் உள்ள தமிழீழ ஏதிலிகள் முகாம்களை இழுத்து மூட வேண்டும்.

ஏதிலிகளுக்கு இன்றுள்ள காவல்துறை கெடுபிடிகளை நீக்கி, அவர்கள் தமிழ்நாட்டில் தன் மதிப்போடு வாழும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்தால், தமிழீழ ஏதிலிகள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபத்தானக் கடல் பயணம் மேற்கொள்ளப்படுவது தவிர்க்கப் படும். தமிழீழ ஏதிலிகளின் மீதான மதிப்பும் உயரும்!

ஆனால் இந்தியாவின் தமிழினப்பகை அரசு தானாக இதைச் செய்யாது. செய்யவைக்க வேண்டும்.

Pin It