வாகனப் புகை மற்றும் இரைச்சல் சத்தத்திற்கு இடையே, மயில்கள் - குயில்கள் - மான்கள் என பல வனவிலங்குகள் கொஞ்சி விளையாடும் இயற்கைச் சூழலுடன் அமைந்துள்ள இடமாக, சென்னை கிண்டி தேசியப் பூங்கா செயல்பட்டு வருகிறது. 1978ஆம் ஆண்டு இது தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

வார இறுதி நாட்களில் சென்னை வாழ் பள்ளிக் குழந்தைகளும் சிறுவர்களும் படை யெடுத்து வந்து, இந்தப் பூங்காவின் இயற்கை இரசிப்பதுடன், இந்த வனவிலங்குகளைக் கண்டு மகிழ்கின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களுக்கு நடுவில் இதுபோன்ற வனப்பகுதிகள் இருப்பதன் காரணமாகத்தான், ஓரளவாவது காற்று மாசுபாடு போன்றவற்றிலிருந்து நாம் தப்ப முடிகின்றது.

இந்நிலையில், இப்படிப்பட்ட இப்பூங்காவிற்கு தமிழக அரசின் மூலம் தற்போது பேராபத்து வந்திருக்கிறது.

அடர்ந்த வனப்பகுதி நிறைந்த இப்பூங்காவை ஒட்டியுள்ள பகுதியில் தான், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கான உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆளுநர் மாளிகையும் இதையொட்டியே இருக்கிறது. இப்பகுதியிலுள்ள அடர்ந்த வனப்பகுதி என்பது, சென்னை நகரின் இதயப்பகுதியில் அமைந்துள்ளதாகும்.

சிறிய சதுர அடி நிலங்கள் கூட பல கோடிகள் வரை விற்பனையாகும் சென்னை மாநகரின் இதயப் பகுதியில், இவ்வளவு பெரிய வனப்பகுதி இருப்பது அரசியல் புள்ளிகள் மற்றும் நில வணிகர்களின் கண்களை தொடர்ந்து உறுத்தி வருகிறது. ‘வளர்ச்சி’ என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுவதையும், வானளாவிய கட்டடங்கள் எழுப்பப்படுவதையும் ஆதரிக்கும் நடுத்தர வர்க்கத்தினர், இத்தகைய ‘வனப்பகுதி’களை வேண்டா வெறுப்பாகவே பார்க்கின்றனர். இதன் வெளிப்பாடாகவே, தமிழக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.

உலகமயப் பொருளியல் கொள்கை கோலோச்சும் இக்கால கட்டத்தில், இந்தியா முழுவதிலும் அதிவேகமாக வனப்பகுதிகள் அழிக்கப்பட்டுக் கொண்டுள்ளன. இதனைத்தடுக்க, 2011ஆம் ஆண்டு இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை ‘சூழலியல் பாதுகாப்புப் பகுதி’ (Eco-sensitive zone) என்ற பகுதிகளை அறிவித்தது. இவ்வாறு அறிவிக்கப் பட்டுள்ள பகுதிகளில் புதிய கட்டு மானங்களை ஏற்படுத்த தடை விதிக்கப்பட்டது.

அவ் வகையில், சென்னை கிண்டி தேசியப் பூங்காவை சுற்றியுள்ள பகுதிகள் சூழலியல் பாதுகாப்புப் பகுதி என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, அங்கு புதிய கட்டடங்களை எழுப்ப முடியாது.

ஏற்கெனவே, கடந்த 2002ஆம் ஆண்டு, தலைமை வன உயிரினங்கள் காப்பாளர் ((Wildlife Warden) ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் மரங்களை வெட்டவோ, புதியகட்டு மானங் களை எழுப்பவோ தடை விதித் திருந்தார் (காண்க: தி இந்து, 17.05.2002).

இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு திசம்பர் மாதம் ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் புதிய கட்டுமானப் பணிகளுக்காக மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டன.

இது குறித்து ஏடுகளில் வெளியான செய்தியை, தாமே வழக்காக ((Suo Motto) பதிவு செய்து கொண்ட தென்னக தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், ஐ.ஐ.டி. நிர்வாகத்தைக் கடுமையாகக் கண்டித்தது. இவ் வழக்கின் விசாரணையின் போது, பல தடைகளையும் மீறி கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டிற்குள் மட்டும் ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் சற்றொப்ப 8000 மரங்கள் வெட்டப்பட்டது தெரிய வந்தது.

நீதிமன்றத்திற்கு அஞ்சாத ஐ.ஐ.டி. நிர்வாகம், இப்பகுதியில் சற்றொப்ப 265,000 சதுர மீட்டர் களில் பல புதியக் கட்டடங்களை எழுப்ப வேண்டுமென திட்ட மிட்டது.

எனவே, இத்தடைகளை நீக்கி கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதிக்க வேண்டுமெனக் கோரி நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகத் திற்குக் கடிதம் எழுதியது ஐ.ஐ.டி. நிர்வாகம். சுற்றுச்சூழல் அமைச்சகம், இந்திய அரசின் தலைமை வனப் பாதுகாவலரிடம் (Principal chief conservator of forests - PCCF) இது குறித்து கருத்துக் கேட்டது.

இந்நிலையில் தான், கடந்த சூன் 10 அன்று, இந்திய அரசின் தலைமை வனப்பாதுகாவலருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள, தமிழக அரசின் வனத்துறைச் சிறப்புச் செய லாளர் சையது முசாமில் அப்பாஸ், சூழலியல் பாதுகாப்புப் பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள கிண்டிப் பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளை அதிலிருந்து நீக்கிவிடலாம் என்றும், ஐ.ஐ.டி. நிர்வாகத்தின் புதிய கட்டங்களுக்கு அனுமதி தரலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஐ.ஐ.டி. பகுதியில் உள்ள மரங்களும், அதைச் சார்ந்து வாழும் உயிரினங்களும் அழிக்கப்பட்டு பல புதிய கட்டடங்களை சட்டக் குறுக்கீடுகள் இல்லாமல் எழுப்ப முடியும்.

தற்போது, வனங்களைப் பாது காக்க பல சட்டப் பாதுகாப்புகள் இருக்கும் நிலையிலேயே, ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் 52 ஏக்கரில் பல பழமையான மரங்கள் அழிக்கப் பட்டு, பல புதிய கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதற்கு இந்திய சுற்றுச்சூழல் துறை அனுமதியோ, சென்னை மாநகராட்சிக் குழும அனுமதியோ பெறப்படவில்லை.

இந்நிலையில், இது போன்ற சட்டப் பாதுகாப்புகள் ஏதும் இல்லாத நிலை வந்தால், அங்கு வேகமான அளவில் காடுகள் அழிக்கப்படும் என்பதே கண்முன் உள்ள உண்மை! இதன் மூலம், காலப் போக்கில் பூங்காவிற்கான இடம் குறுக்கப்படுப்போகிறது என்பது மற்றொரு உண்மை!

அறிவியல் வளர்ச்சிக்கான கட்டங்களைத் தானே ஐ.ஐ.டி. எழுப்பு கிறது, அதற்கு தடை கோரலாமா என நம்மில் பலர் கேட்கலாம். புதியக் கட்டடங்களை எங்கு வேண்டுமானாலும் எழுப்ப முடியும். இக்கட்டடங்களால் அழிக்கப்படும் மரங்களையும், வனங்களையும் எங்கு சென்றாலும் நம்மால் மீட்க முடியாது!

வனப்பகுதியை சமூகத்தின் உறுப்பாகவும் கடவுளாகவும் வழி பட்டு வந்த தமிழ்ச்சமூகத்தை சேர்ந்தவர்கள் நாம்! இன்று ‘வளர்ச்சி’ என்ற பெயரில் அவற்றை அழிப்ப தற்கும் நாம் துணை போகப் போகி றோமா? என்ன செய்யப் போகிறோம்?

Pin It