முதல் நிலை ஆதாரங்களின் படி பார்த்தால் நரேந்திர மோடி அரசு மன்மோகன் சிங் அரசுக்கு சற்றும் வேறுபடாமல் அதே பொருளியல் திசையில் நடைபோடுவது தெரிகிறது.

ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே ‘கசப்பு மருந்து’ குறித்து மோடி பேசத் தொடங்கிவிட்டார். 2014, சூன் 13 அன்று பிரதமர் அலுவலக டுவிட்டர் மூலம் விடுத்த செய்தியில் “நாட்டின் நீண்டகால தேவையை மனத்தில் கொண்டு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது கசப்பு மருந்து” என்று தெரிவித்தார்.

இவர் சொல்லும் ‘கடும் நடவடிக்கை’ மக்களுக்கு எதிராகத்தானே தவிர பெருமுதலாளி நிறுவனங்களுக்கும், வணிக சூதாட்டகாரர்களுக்கும் எதிராக அல்ல.

மோடியின் வெற்றிக்காக பணத்தையும், பரப்புரையையும் வாரி வழங்கிய வெளிநாட்டு, வடநாட்டு பெருமுதலாளிகள் அதற்கு ஈடாக விரைவான பயன்களை எதிர்பார்க் கிறார்கள். “கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே” என்ற கீதை உபதேச மெல்லாம் மக்களுக்குதானே தவிர முதலாளிகளுக்கு அல்ல. இது மோடிக்கும் தெரியும். எனவே இப்பெருமுதலாளிகள் முன் வைக்கும் நிபந்தனைகளை விரைந்து செயலாற்றும் ‘செயல்துடிப்புள்ள’ பிரதமாராக மோடி விளங்குகிறார்.

மோடி பிரதமானவுடன் அவரைச் சந்தித்து தாங்கள் விரும்பும் 15 கடும் நடவடிக்கைகளை முதலாளி சங்கத்தினர் பட்டியளிட்டு வழங்கியிக்கிறார்கள்.

அவற்றுள் சில வருமாறு:

டீசல் விலையை மாதம்தோறும் உயர்த்தும் வகையில் டீசல் மானியத்தை படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும். சமையல், எரிவளி விலையையும் மண்ணென்ணெய் விலையையும் மாதந்தோறும் உயர்த்த வேண்டும், உர மானியத்தை விரைவில் விலக்கிக் கொள்ள வேண்டும், நிலம் கையகப்படுத்தல் விதிமுறைகளில் தளர்வு வேண்டும், அமர்த்து – துரத்து என்பதை எளிதாக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும், உணவு தானிய கையிருப்பு அதிகமாக இருப்பதால் வேளாண் விளைப்பொருள்களுக்கான அடிப்படை ஆதார விலையை முடிந்த வரை குறைந்த அளவிற்கே உயர்த்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை தனியாருக்கு விற்பதை விரைவுப்படுத்துவதோடு நாடாளுமன்ற ஒப்புதலை எதிர்பார்க்காமலேயே அரசாணைகளின் மூலமாக இலாபமான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் வகையில் சட்ட ஏற்பாடுக்கள் செய்ய வேண்டும் இதற்கு மாநிலங்களவையில் பா.ச.க கூட்டணிக்கு போதிய எண்ணிக்கையின்மை தடையாக வருமானால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தின் மூலம் இதனை நிறைவேற்ற வேண்டும், ஆகியவை முதலாளிகள் முன் வைத்துள்ள பரிந்துரையாகும்.

இவற்றை ஒவ்வொன்றாக மோடி நிறைவேற்றி வருவதைப் பார்க்க முடியும்.

மன்மோகன் சிங் அரசு முன் வைத்த கடந்த ஆண்டு வரவு - செலவு அறிக்கை யிலேயே 5.73 இலட்சம் கோடி ரூபாய்க்கு பெருமுதலாளி நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுவிட்டது. இதற்கு மேல் நேரடி வரிவிதிப்பில் வசூலிக்க முடியாத தொகை 5 இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது என அரசின் அறிக்கை குறிப்பிடுகிறது.

மோடி அரசு தன் பங்கிற்கு பட்ஜெட்டுக்கு முன்னாலேயே முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளையும், மக்கள் ம{து வரிச்சுமையையும் வழங்கி வருகிறது.

மகிழுந்து (கார்) தொழில் நிறுவனங்களுக்கு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட உற்பத்தி வரி, இறக்குமதி வரி, சலுகைகள், இன்னும் ஆறு மாத்திற்கு தொடரும் என நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்திருக்கிறார். சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு ரூபாய் 4400 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது.

இது போன்று முதலாளிகளுக்கு வாரி வழங்க நிதி ஆதாரங்களை பெருக்குவதற்கு பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விற்பனையின் மூலம் திரட்டும் தொகையை மன்மோகன்சிங் அரசு அறிவித்த 52 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் கோடியாக உயர்த்தலாம் என அரசு வட்டாரங்களில் விவாதம் நடந்து வருகிறது.

மக்களுக்கு வழங்கும் அனைத்து மானியங்களையும் பெருமளவு வெட்டுவதற்கு நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன. டீசல் விலையை மாதந்தோறும் லிட்டருக்கு 50 பைசா வீதம் உயர்த்திக் கொள்ளவும் அதற்கு நிகரான அரசு மானியத்தை குறைத்துக் கொள்ளவும் முடிவெடுக்;கப்பட்டுள்ளது. அதேப் போல் சமையல் எரிவளி விலையை மாதந்தோறும் 10 ரூபாய் உயர்த்த முடிவுசெய்யப்பட்டு, மக்கள் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக 3 மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் இந்த அறிவிப்பு செயலுக்கு வரலாம்.

எரிஎண்ணெய் தொழிலில் கோலோச்சும் ரிலையன்ஸ் அம்பானியும், அதானியும், டாடாவும் மோடியின் வெற்றிக்கு நெருக்கமாகப் பணியாற்றியவர்கள் என்பதை இணைத்துப் பார்த்தால் பெருங்குழுமங்களும் அரசு நிர்வாகமும் இரண்டறக் கலந்து இருக்கும் நிலைமை தெளிவாகும்.

கெடுபிடியான சட்டத்திட்டங்கள் உள்ள நாடு இந்தியா என்ற களங்கத்தை விரைவில் போக்க வேண்டும் என சட்ட அமைச்சர் இரவிசங்கர்பிரசாத் கூறுவது கவனிக் கத்தக்கது.

முதலாளிகள் சங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தொழிலாளர் நலச் சட்டங்கள் தளர்ந்து போக இருக்கின்றன என்பதற்கான முன் அறிவிப்பு இது. அதே போல் பழங்குடி மக்கள் போராட்டம், மாதக்கணக்கில் தில்லியை முற்றுகையிட்டு குறிப்பாக தில்லியின் புறநகரை நிலைகுலைய வைத்த உத்திரபிரதேச உழவர் போராட்டம் போன்றவை காரணமாக கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட முற்போக்கான சட்டத்திருத்தங்கள் நீக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தல் சட்டம் வலுவிழக்கச் செய்யப்பட உள்ளது. வரும் கூட்டத் தொடரிலேயே இது முடிவாகலாம் என்பதற்கான முன் அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

தொடர்வண்டித்துறை வரவு - செலவு அறிக்கை வரும் சூலை 8-ம் நாள் முன்வைக்கப்பட உள்ள நிலையில் முன்கூட்டியே தொடர்வண்டிக் கட்டணம் சராசரியாக 14.2 விழுக்காடு என்ற அளவிலும், சரக்குக் கட்டணம் 6.8 விழுக்காடு என்ற அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளன.

சென்ற ஆட்சியைப் போலவே நெல் கொள்முதல் விலையைக் குவின்டாலுக்கு 50 ரூபாய் உயர்த்தி வேளாண்மையை இழப்பு சந்திக்கும் தொழிலாக அழுத்துவது மோடி ஆட்சியிலும் தொடர்கிறது.

சென்ற காங்கிரசு அரசைப் போலவே மோடியின் பா.ச.க அரசும் இந்தித் திணிப்பு, இனக்கொலையாளி இராசபட்சேக்கு வரவேற்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு என தமிழினப் பகைப் போக்கிலேயே தொடர்கிறது.

எல்லா வகையிலும் பா.ச.க வின் மோடி ஆட்சி காங்கிரசின் மன்மோகன்சிங் ஆட்சியைப் போலவே செயல்படுகிறது. இவர்களுக்குள் அடிப்படை வேறுபாடு எதுவுமில்லை.

ஒரே வேறுபாடு மன்மோகன்சிங் பேசாத பிரதமர், நரேந்த மோடி வாயாடிப் பிரதமர்.

Pin It