இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகள் கொள்ளைக்காக நரேந்திர மோடி அவசரச் சட்ட ஆட்சி நடத்தத் தொடங்கிவிட்டார்.

நாடாளுமன்றக் கூட்டம் முடிந்து ஓரிரு நாட்களே ஆன நிலையில் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒரு மாதத்திற்குள்ளாகவே தொடங்க உள்ள நிலையில் அடுக்கடுக்காக அவரச சட்டங்கள் பிறப்பித்து வருகிறார்.

இந்த வரிசையில் இந்நாட்டு மற்றும் பன்னாட்டு பெரு முதலாளிகள் நிலப்பசிக்கு தீனி போடுவதற்காக உழவர்களையும், பழங்குடி மக்களையும் நிலத்தை விட்டு வெளியேற்றுவதற்கான அவசரச் சட்டம் ஒன்றை 2014 டிசம்பர் 31 அன்று மோடி அரசு பிறப்பித்தது.

நிலம் கையகப்படுத்தல் சட்டம் என்று பொதுவாக அழைக்கப்படுகிற “நிலம் கையகப்படுத்தலில் நியாய மான இழப்பீடு, வெளிப்படைத் தன்மை மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் உரிமைச் சட்டம் 2013” (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act 2013) என்ற சட்டத்தில் திருத்தம் செய்து பிறப்பிக்கப்பட்ட அவரசச் சட்டம் ஆகும் இது. நிலம் கையகப்படுத்தல் அவரசச் சட்டம் 2014 என இதனை அழைக்கலாம்.

வெள்ளையர் ஆட்சி காலத்திலிருந்தே மக்கள் இயக்கங்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட சட்டம் நிலம் கையகப்படுத்தல் சட்டமாகும். பிரித்தானிய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தல் சட்டம் 1894 நிலத்தின் மீதான மக்களின் மரபு உரிமையைப் பறித்தது.

அரசின் உயர் உரிமை (Eminent Domain) என்ற கோட் பாட்டின்படி யாருடைய நிலத்தையும் எந்த நேரத்திலும் அரசு கையகப்படுத்தலாம் என்று கூறும் இக் கோட்பாடு நிலத்தின் மீதான உடைமையா ளரின் உரிமை மற்றும் சமூக உரிமையை விட அரசின் உரிமை மேலானது எனக் கூறுகிறது. எடுக்கும் நிலத் திற்கு ஈடாக உரிமையாளர் களுக்கு அரசு ஓர் தொகையை அளிக்கலாம். அத்தொகை குறைவானது என நில உடைமையாளர் கோர முடியாது. நிலத்தின் மீது சமூக உரிமை உள்ள பழங்குடி மக்களோ எந்த இழப் பீடும் கோர முடியாது.

இந்திய சுதந்திரத்திற்கு பிறகும் இதே சட்டம் நீடித்தது. பொதுத் தேவைக்கு (Public Purpose) என்று சொல்லி அரசு நிலத்தை கையகப் படுத்தும் போது அதை இழக்கும் உரிமையாளருக்கு எவ்வளவு இழப் பீட்டுத் தொகை என்பதை நிலத்திற் கேற்றால் போல் அரசு வரை யறுத்து வைத்தது. நில உரிமை யாளர் நிலத்தை கொடுக்க மறுக்க முடியாது. அரசு அறிவித்த இழப் பீடு போதுமானதாக இல்லை எனக் கருதினால் வழக்கு மன்றம் செல்ல லாம். இவ்வகை வழக்குகள் தலை முறைத் தாண்டியும் நடக்கும் என்பது ஊர் அறிந்த உண்மை.

நிலம் கையகப்படுத்துவதால் நில உரிமையாளர் மட்டும் பாதிக் கப்படுவதில்லை. இந்நிலத்தில் உழைத்த நிலமற்ற உழவுத் தொழி லாளர்களும் வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். அதுமட்டுமின்றி கையகப்படுத்தப்படும் நில இழப் பால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படலாம், அது இந்நிலத்தோடு நேரடித் தொடர்பில்லாத மீனவர் கள், பழங்குடி மக்கள் போன்றவர் களையும் பாதிக்கலாம். இவர்களின் இழப்பை ஈடுசெய்வது பற்றி இந்த நில கையப்படுத்தும் சட்டத்தில் ஒன்றும் கூறப்படவில்லை.

குறிப்பாக அணைக் கட்டுகள், பெரும் தொழிற்சாலைகள், ஓர் மாநிலத்தின் குறுக்கும் நெடுக்கு மான நெடுஞ்சாலைகள், இருப்புப் பாதைக் கட்டமைப்புகள், துறை முகக் கட்டுமானங்கள், சுரங்கங்கள் போன்ற பெரும் கட்டுமானங் களால் இலட்சக்கணக்கான மக்கள் பல வகையில் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு ஏற்படுகிற இழப்பு களை ஈடுசெய்வதற்கு இந்தச் சட்டம் பயன்படவில்லை.

எனவே இவற்றிற்காக இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பல்வேறு மக்கள் பிரிவினரின் போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன.

இவற்றின் விளைவாக 2007-ஆம் ஆண்டு புதிய நிலம் கையப்படுத்தல் சட்டம் ஒன்றும் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் சட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டன. இந்த இரண்டு சட்ட வரைவுகள் மீதும் நாடு தழு விய விவாதங்கள் நடை பெற்றன. ஏற்கெனவே இருந்த நில கையகப் படுத்தல் சட்டத்தின் மீது நடை பெற்ற பல்வேறு வழக்கு களில் உச்ச நீதிமன்றத்தின் வெவ்வேறு அமர் வுகள் வெவ்வேறு வகையானத் தீர்ப்புகளையும் அளித்திருந்தன. ஒவ்வொரு தீர்ப்பும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்த தாக அமைந்தன.

இந்த நிலையில் நிலம் கையகப் படுத்தல் சட்டம், மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் சட்டம் ஆகிய இரண்டையும் சேர்த்து புதிய சட்டவரைவு 2011-ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. அதுகுறித்த விவாதம் முடிவடையாத நிலையி லேயே அவ்வரைவுச் சட்டம் காலாவதியானது.

இச்சூழலில் காந்தியவாதியான பி.வி. இராச கோபால் தலையிலான “ஒற்றுமை மன்றம்” (Ekta Parikshad) என்ற மக்கள் கூட்டமைப்பு 2012 அக்டோபர் 2-ஆம் நாள் குவாலியர் நகரில் தொடங்கி 350 கீ. மீட்டர் தொலைவிற்கு 1 இலட்சம் மக்க ளைத் திரட்டி தில்லியை நோக்கிய பேரணி நடத்தியது. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இப் பேரணிக் குத் திரண்ட உழவர் பெரு மக்கள், பழங்குடியினர் ஆகியோர் தேசிய நெடுஞ்சாலையில் மெல்ல நடந்துச் செல்ல செல்ல நடைமுறையில் அது ஓர் முற்றுகைப் போராட்ட மாக மாறியது. அக்டோபர் 29- அன்று தில்லியின் எல்லையை அப்பேரணி அடையும் முன்பாகவே இந்தியத் தலைநகர் தில்லி அதன் அழுத்தத்தை உணர்ந்தது. எல்லா சாலைகளிலும் நெரிசல் ஏற்பட் டது.

இச்சூழலில் அன்றைய ஊரகத் துறை அமைச்சராக இருந்த ஜெயராம் இரமேஷ் போராட்டக் காரர்களை அவர்கள் அமர்ந்திருந்த சாலையிலேயே சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். விரைவில் இதற்கான சட்டம் கொண்டு வருவதாக அரசின் சார்பில் உறுதி மொழியை எழுதிக் கொடுத்தார். இதன் அடிப்படையில் முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதற்கு சில மாதங்களுக்கு முன்பாக உத்திரப் பிரதேச உழவர் கள் திக்காய்த் தலைமையில் இதே கோரிக்கைகளுக்காக போராட் டங்களில் ஈடுபட்டனர்.

இந்த பின்னணியில் சோனியா காந்தி தலைமையில் 2013 மே மாதத்தில் கூடிய தேசிய ஆலோ சனைக் குழு புதிய சட்டம் குறித் தும் அச்சட்டத்தில் இடம் பெற வேண்டி முக்கிய கூறுகள் குறித்தும் முடிவு செய்து அரசுக்கு அறிக்கை அளித்தது.

இதன் அடிப்படையில் “நிலம் கையகப்படுத்தலில் நியாயமான இழப்பீடு, வெளிப்படைத் தன்மை மறுவாழ்வு மற்றும் மறு குடிய மர்த்தல் உரிமைச் சட்டம்” 2013-ஆம் ஆண்டு இறுதியில் நாடாளு மன்றத்தில் இயற்றப்பட்டது. இது வரை இருந்த நிலம் கையகப்படுத் தல் சட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றமாக இச்சட்டம் அமைந்தாலும் விதிவிலக்குகள் என்ற பெயரில் அதிலும் சில ஓட்டைகள் இருக்கவே செய்தன. இவற்றைச் சரிசெய்ய வேண்டும் என்று தேசிய ஆலோசனைக் குழு வில் உறுப்பினர்களாக இருந்த அருணா ராய், ஜுன் டிரஸ் போன்ற வர்கள் அரசை வலியுறுத்தி வந்த னர்.

அரசோ அல்லது தனியாரோ தொழிலகம் நிறுவுவதற்காக அல்லது கட்டமைப்புத் திட்டங் களை நிறைவேற்றுவதற்காக நிலம் கையகப்படுத்துவதாக இருந்தால் அவ்வாறு எடுத்துக்கொள்ள முனையும் மொத்த நிலத்தில் 80 விழுக்காடு நிலத்தின் உரிமையா ளர்கள் ஒப்புதல் அளித்தால் தான் நிலத்தை கையகப்படுத்த முடியும் என்று இச்சட்டம் நிபந்தனை விதித்தது. அப்போதும் நிலத்தின் சந்தை விலையைப்போல் கிராமப் புறங்களில் 4 மடங்கும், நகர் புறங்களில் 2 மடங்கும் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கூறியது.

இவ்வாறு நிலம் கையகப்படுத் தப் படுவதால் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலமற்ற உழவுத் தொழி லாளர்களுக்கும் இழப்பீடு கிடைக்க வகை செய்யப்பட்டது. இவ்வாறு நிலம் கையகப்படுத்தப் படுவதால் வாழ்விடங்களை இழப்போருக்கு மறுவாழ்வு மற்றும் மறு குடிய மர்த்தல் செய்வதற்கான வழி முறைகள் சொல்லப்பட்டன.

இவ்வாறு நிலம் கையகப்படுத்து வதால் இதில் தொடர்புடைய சமுதாயத்திற்கும், சுற்றுச் சூழலுக் கும் ஏற்படும் பாதிப்புகளை ஈடு செய்யும் வகையில் சமூகத் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (Social Impact Assessment Report) அளிப் பதை கட்டாயமாக்கியது. நிலம் இழப்போர் குடும்பத்திலிருந்து ஒருவருக்கு அந்நிலத்தில் எழுப் பப்படும் தொழிலகத்தில் தகுதிக் கேற்ற வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் இச்சட்டம் வலியுறுத்தியது.

ஆனால் நரேந்திர மோடி அரசு பிறப்பித்துள்ள நிலம் கையகப் படுத்தல் அவரச் சட்டம் _ 2014 ஏற்கெனவே உள்ள 2013-ஆம் ஆண்டு சட்டத்திற்கு சில திருத் தங்கள் அளிப்பது தான் என்று சொல்லப்பட்டாலும் நடை முறை யில் 2013 சட்டத்தை செல்லாததாக்குகிறது.

இந்த அவரச் சட்டத்தின் மூலம் 2013-ஆம் ஆண்டு சட்டத்தில் 10A என்ற புதிய பிரிவு சேர்க்கப் படுகிறது.

2013-ஆம் ஆண்டு சட்டத்தில் விதி III மற்றும் IV ஆகியவை முக்கியமானவை. இப்பிரிவுகள் தாம் 80 விழுக்காடு நில உரிமையாளர் களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதையும் சமூக தாக்க மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் நிபந்தனையாக விதிக் கிறது. அவரசச் சட்டத்தின் 10A பிரிவு மேற்கண்ட நிபந்தனை கள் கீழ்வரும் திட்டங்களுக்குப் பொருந்தா என விலக்கமளிக்கிறது. அத்திட்டங்கள் வருமாறு :

அ) இந்தியப் படைத்துறை சார்ந்தத் திட்டங்கள் இந்தியப் படைத்துறை உற்பத்தி அல்லது அதற்குத் தேவையானத் திட்டங் கள் மற்றும் தேசப் பாதுகாப்புக்கு இன்றியமையாதத் திட்டங்கள் மற்றும் அவற்றின் பகுதிகள்.

ஆ) மின் மயமாக்கல் உள்ளிட்ட ஊரகக் கட்டுமானத் திட்டங்கள்

இ) நலிந்த பிரிவினர்க்கான குடியிருப்புகள் உள்ளிட்ட குடி யிருப்புக் கட்டுமானத் திட் டங்கள்

ஈ) தொழில்துறை வளாகம்

உ) அரசு தனியார் கூட்டாண் மைத் திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படைக்கட்டுமானத் திட்டங்கள்

மேற்கண்ட திட்டங்களில் படைத் துறை மற்றும் தேசப் பாது காப்புக்கானத் திட்டங்கள் என்று கூறப் பட்டாலும் அவையும் தனி யார் துறைக்கு நிலத்தை கையகப் படுத்தித்தரும் திட்டங்கள் தான் என்பது புரியும். ஏனெனில் படைத் துறை உற்பத்தியில் நூற்றுக்கு நூறு வெளிநாட்டு தனியார் முதலீடு அனுமதிக்கப் படுவதாக பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே மோடி அரசு அறிவித்தது.

மேற்கண்ட நிபந்தனைகளில் ஆ, இ ஆகியவை கட்டுமானத் துறையிலும், மின்சார உற்பத்தி யிலும் உள்ள பெரு முதலாளி நிறுவனங்களுக்கானவை என்பது புரிந்துகொள்ளக் கூடியது

ஈ, உ ஆகிய பிரிவுகள் பிற தொழில்துறை முதலாளிகளுக்காக உழவர்களின் நிலத்தை கைப்பற்றி தரும் நோக்கம் உடையவை.

இச்சட்டப்பிரிவு 10A ஐ உற்று நோக்கினால் எந்த வகைத் தொழி லையும், இந்த விதிவிலக்குக்குள் கொண்டுவரக் கூடிய வகையில் மோசடியாக வரையப்பட்ட சட்டம் என்பது புரியும். மேற்கண்ட அனைத்து பிரிவிலும் “உள்ளிட்டவை” என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த உள்ளிட்டவை என்ற சொல்லுக் குள் நாளைக்கு எவ்வளவுத் திட்டங் களையும் நுழைத்துக் கொள்ள முடியும். அதாவது நேரடியாக இச்சட்டப் பிரிவில் சொல் லப்படாத திட்டங்களுக்காகவும், உழவர்களிடமிருந்து கேள்வி முறை யின்றி நிலத்தைப் பறித்துக் கொடுப் பதற்கு வகைசெய்யப்பட்டு விட்டது.

இதுமட்டுமின்றி இந்த அவச ரச் சட்டத்தின் மூலமாக 2013-ஆம் ஆண்டு சட்டத்தில் பிரிவு மிக்ஷி விதி வீவீ- இல் ஹ்ஹ் என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது.

ஏற்கெனவே உள்ள சட்டத்தில் நிலம் கையப்படுத்தலுக்கு தகுதி யுடையவையாக இந்திய நிறுவனச் சட்டத்தில் (கம்பெனிச் சட்டத்தில்) பதிவுப் பெற்ற தனியார் நிறுவ னங்களே அனுமதிக் கப்பட்டன. இப்போதைய அவசரச் சட்டத்தில் மேற்கண்ட திருத்தப் பிரிவின் வழி யாக எல்லா தனியாரும் இச் சட்டத்தின்படி நிலத்தை கைப்பற்ற லாம். அதற்கு 80 விழுக்காடு நில உரிமையாளர்களின் ஒப்புதல் தேவையில்லை என்றாகிறது.

மேலும் 2013-ஆம் ஆண்டு சட்டத்தில் தனியார் நிறுவனம் என்ற வரையறுப்பில் தனியார் மருத்துவ மனைகளும், தனியார் கல்வி நிறுவனங்களும் வராது என்று தெளிவுபடுத்தப் பட்டிருந் தது. ஆனால் இப்போதைய திருத்த அவசரச் சட்டம் தனியார் மருத்துவ மனைகளும், தனியார் கல்வி நிறுவ னங்களும் தாராளமாக நிலத்தைக் கையகப்படுத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்குகிறது.

மூன்று போக சாகுபடி நடை பெறும் வேளாண் நிலங்களும் கையகப் படுத்தப்படலாம் என தாராளமாக அனுமதி வழங்கப் படுகிறது.

மொத்தத்தில் பிரித்தானிய ஆட்சியில் இருந்தது போல நிலத்தின் மீது அரசின் உயர் உரிமை மீண்டும் கொண்டுவரப் படுகிறது. பிரித்தானிய ஆட்சியில்கூட சாலை, மேம்பாலம் போன்ற பொது கட்டு மானங்களுக்குத்தான் பெரும் பாலும் அரசின் உயர் உரிமை பயன் படுத்தப்பட்டது. ஆனால் மோடி தலைமையிலான இந்திய அரசு முழுக்க முழுக்க தனியார் நிறுவனங் களின் கொள்ளைக்காக உழவர் களிடமிருந்தும், பழங்குடியினரிட மிருந்தும் நிலத்தைப் பறிப்பதற்காக இந்த அதிகாரத்தைப் பயன்படுத்து கிறது.

இந்த அவசரச் சட்டத்தைப் பயன்படுத்தி அதானி, அம்பானி, பிர்லா, டாடா, எல் அண்டு டி போன்ற பெரு முதலாளி நிறுவ னங்கள் இன்னும் 6 மாதத்திற் குள்ளாக ஏறத்தாழ இரண்டரை இலட்சம் ஏக்கர் நிலத்தைக் கைப் பற்றிக் கொள்வார்கள் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.

மோடி பிறப்பித்துள்ள நிலம் கையப்படுத்துதல் அவசரச் சட்டம் 2014 உண்மையில் நிலப் பறிப்புச் சட்டமாகும். தொகைத்தொகையாக மக்களை அவர்களது தாயகத்தி லிருந்து வெளியேற்றும் சட்டமாகும்.

நிலப்பறிப்பு என்பது உடனடி யாகப் பார்த்தால் உழவர்களின் நில உரிமைப் பறிப்பாகும். தொலை நோக்கில் பார்த்தால் ஒரு தேசிய இனத்தின் அல்லது பழங்குடி இனத்தின் தாயக உரிமைப் பறிப்பு ஆகும்.

இந்த அவசரச் சட்டத்தை நிரந்தரச் சட்டமாக நிறைவேற்று வதற்கு நாடாளுமன்ற மாநிலங்கள வையில் பாரதிய சனதா கட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை. எனவே மக்களவை, மாநிலங் களவை ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி இந்த நிலப் பறிப்பு அவசரச் சட்டத்தை நிரந்தரச் சட்டமாக்குவதற்கு மோடி ஆட்சி முனைந்துள்ளது.

ஆயினும் இச்சட்டத்தை தங்கள் மாநிலத்தில் செயல்பட விட மாட்டோம் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், அசாம் மாநில முதலமைச்சர் தருண் கொகோயும் அறிவித்துள் ளனர். அதேபோல் தமிழ்நாட்டில் இந்த நிலப்பறிப்புச் சட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்ச் செல்வம் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

அதே நேரத்தில் இந்த நிலப் பறிப்பு அவசரச் சட்டம் நிரந்தரச் சட்டமாகாமல் திரும்பப்பெறுவதற்கு உரிய அழுத்தம் கொடுக்கும் வகையில் உழவர்களும், தாயக உரிமையில் அக்கறை உள்ள அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றுதிரண்டு வீதியில் இறங்கிப் போராட வேண்டும்.

Pin It