உலக வல்லரசுகளில் ஆதிக்கக் காய் நகர்த்தலுக்குள் தமிழீழச் சிக்கல் மீண்டும் பந்தாடப்படுகிறது.

ஜெனீவாவில் 2015 மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தில் எந்த சிறு விசாரணையும் இன்றி சிங்களத்தின் இனக்கொலைக் குற்றவாளிகள் தப்பவிடப் படுவார்களோ என்ற வலுவான ஐயம் எழுந்துள்ளது.

இதற்குக் காரணம் உண்டு.

தமிழின அழிப்புப் போரில் மகிந்த இராசபட்சே அரசுக்கு இந்தியா எவ்வளவுதான் நெருக்கமான உதவி செய்திருந்தாலும் இராசபட்சே ஆட்சி சீனாவின் பக்கமே கூடுதலாக சாய்ந்திருந்தது.

யார் ஆட்சியில் இருந்தாலும் சிங்களப் பேரினவாத அரசின் பொதுப் போக்கு இதுதான் என்றாலும், இராசபட்சே அரசு இதற்கு முன் இருந்த சிங்கள ஆட்சியாளர்களை விட கூடுதலாக சீனாவின் பக்கம் சேர்ந்திருந்தது.

கேள்வி முறையற்ற குடும்ப சர்வாதிகாரம், தாறுமாறான ஊழல் போன்றவற்றிற்கு இராசபட்சேவுக்கு வாய்ப்பான கூட்டணியாக இது இருந்தது.

உலகம் முழுவதும் பரவி வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பல தளங்களிலும் நடத்திய இடைவிடாதப் போராட்டங்கள் அமெரிக்காவிற்கும், தமிழ்நாட்டில் கட்சி கடந்து நடைபெற்ற தமிழீழ ஆதரவுப் போராட்டங்கள் இந்திய அரசுக்கும் அழுத்தம் தந்தன.

ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த தருஸ்மான் குழு அளித்த அறிக்கையும், டர்பனிலும் பிறகு ஜெர்மனியின் பிரேமன் நகரிலும் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கைகளும் சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைக் குற்றங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. பன்னாட்டு சமூகத்தில் இவை வலுவானத் தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்தப் பின்னணியில் தான் ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிரான முணுமுணுப்புகள் எழுந்தன. 2009இல் இராசபட்சே அரசுக்குப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றிய அதே ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பன்னாட்டுப் புலன் விசாரணை குறித்த குரல்களும் எழுந்தன.

ஆயினும் நடந்து முடிந்த தமிழினப் படுகொலைக்கோ, இன்றும் தொடரும் இன அழிப்புக்கோ குறைந்த அளவு நீதியை வழங்குவதாகக் கூட ஐ.நா. செயல்பாடுகள் இல்லை.

சீனாவுடன் முற்றிலும் இராசபட்சே அரசு அணிவகுத்திருந்ததானது இந்தியப் பெருங்கடல் வல்லாதிக்கத்தை விரும்பும் இந்திய ஏகாதிபத்தியத்திற்கும், உலக அளவில் சீனாவை முடக்கி வைக்க நினைக்கும் அமெரிக்க வல்லரசுக்கும் தலைவலியாக அமைந்தது.

இதற்கு எதிராக இராசபட்சே அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஓரளவிற்காவது தங்கள் பக்கம் இழுப்பது என்பதே அமெரிக்க - இந்திய அரசுகளின் முயற்சியாக இருந்தது. அதற்கான துருப்புச் சீட்டாக தமிழர் சிக்கலை எடுத்துக் கொண்டன.

எனவே இச்சிக்கலில் இந்தியாவின் விருப்பத்திற்கு மாறாக அமெரிக்கா பெருமளவு எதுவும் செய்துவிடவில்லை. சீனாவிற்கு எதிரான உலக அணிவகுப்பில் இந்தியா தன்னோடு இருந்தால் போதும் என்ற தேவையிலேயே அமெரிக்க வல்லரசு இருக்கிறது.

இந்தச் சூழ்ச்சி அரசியல் கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் மிகத் தெளிவாக வெளிப்பட்டது.

ஒன்றுபட்ட இலங்கை என்பதை கட்டாயமாக்கி 13-ஆவது சட்டத் திருத்தத்திற்குள் ஒட்டுமொத்த தமிழீழச் சிக்கலை அமுக்கப் பார்த்த தீர்மானம் கடந்த 2014 மார்ச்சில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நிறைவேறியது. அமெரிக்கா கொண்டுவந்த இந்தத் தீர்மானம் இந்தியாவின் மறைமுக ஆதரவோடு தான் நிறைவேறியது என்பதை முன்னமே பலமுறை எடுத்துக் கூறியிருக்கிறோம்.

நில அதிகாரமோ, காவல் அதிகாரமோ, நிதி அதிகாரமோ எதுவும் இல்லாத, கூட்டாட்சிக்கு வழியில்லாத இந்த 13-ஆவது திருத்தத்தைக் கூட இராசபட்சே அரசு செயல்படுத்த முன்வரவில்லை.

இன்னொருபுறம் படைவகையில் சீனாவோடு மிக நெருக்கமான ஒத்துழைப்பை இராசபட்சேயின் அரசு மேற்கொண்டது.

கடைசியில் சீனக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்து சென்றது இந்தியாவை அதிர வைத்தது.

இனி இராசபட்சே ஆட்சி தொடர்வதால் தங்களது மண்டல ஆதிக்க நலனுக்கு இடையூறு ஏற்படும் என இந்திய ஆட்சியாளர்கள் முடிவு செய்தனர்.

மன்மோகன்சிங் ஆட்சியின் இறுதி மாதங்களிலேயே இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் முயற்சிகள் தொடங்கி விட்டன. இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலை இராசபட்சே முன்னதாக நடத்தியது இதற்கு எதிர் முயற்சி தான்.

இந்திய உளவு அமைப்பான “ரா” வின் கைப்பிள்ளையாக தமிழ்த் தேசியக் கூட்டணி செயல்படுவது ஊரறிந்த செய்தி.

இராசபட்சே ஆட்சிக்கு எதிராக சிங்களர்களிடையே இருந்த குமுறல்களையும், சிங்களக் கட்சிகளுக்கிடையே இருந்த முரண்பாடுகளையும் பயன்படுத்தி புதிய அணிசேர்க்கைக்கு இந்திய உளவு அமைப்பு கடுமையாகப் பணியாற்றி எதிரும் புதிருமான பலரையும் ஒருங்கிணைத்து புதிய அணியை உருவாக்கியது. இராசபட்சே அமைச்சரவைக்குள்ளும் பிளவுகளை உண்டாக்கியது.

இவற்றின் விளைவாக மைத்திரிபால சிறிசேனா பொது வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டார்.

இவற்றிற்குப் பிறகும் சிங்களர்களிடையே இராசபட்சே தான் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார். தமிழர்கள், முஸ்லீம்கள் ஆதரவு இருந்ததால் சிறிசேனா வெற்றி பெற்றார்.

இந்திய அரசின் இந்தக் காய்நகர்த்தல் அமெரிக்க வல்லரசின் இசைவோடுதான் நிகழ்ந்தது.

இந்திய - அமெரிக்க அரசுகள் விரும்பியவாறே சீனாவுடனான சிங்கள அரசின் நெருக்கத்தை சிறிசேனா சற்றுக் குறைத்துக் கொண்டிருக்கிறார்.

இராசபட்சே குடும்பத்தினர் செய்த ஊழல்கள், தேர்தல் முடிவுகளை முறியடிக்கும் விதத்தில் கடைசி நேரத்தில் இராணுவப் புரட்சி செய்ய இராசபட்சே மேற்கொண்ட முயற்சி போன்றவைக் குறித்து விசாரணை நடத்த சிறிசேனா அரசு முயல்கிறதே தவிர, தமிழர்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையைத் தீவிரப்படுத்த முயலவில்லை.

அனைத்து அதிகாரங்களும் குடியரசுத் தலைவரின் கைகளில் குவிக்கப்பட்ட நிர்வாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி முறைக்கு மாறாக அமைச்சரவையின் அதிகாரத்தின் கீழ் இலங்கை ஆட்சி நடைபெறுவதற்கு ஏற்றாற்போல் சில சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளனவேயன்றி, வடக்கு மாகாண அரசின் அதிகாரங்கள் அடிப்படையில் அதிகரிக்கப்படவில்லை.

இது பற்றி இந்திய அரசுக்கும் கவலை இல்லை.

மறுபுறம் வருகிற சூன் மாதம் நடைபெற உள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலிலும் இதேபோன்ற வெற்றி கிடைத்து இராசபட்சே எந்த வகையிலும் திரும்ப வராமல் இருக்க வேண்டுமே என்ற கவலை மட்டுமே இந்திய அரசுக்கு உள்ளது.

இந்தச் சூழலில் தான் வருகிற மார்ச் திங்களில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் அடுத்தக் கூட்டம் வருகிறது.

இதில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கை முன்வைக்கப்படுமா, ஐ.நா. மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்து இலங்கை அரசே நடத்திய உள்நாட்டு விசாரணைக் குறித்த அறிக்கை பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பது பெருத்த ஐயத்திற்கு இடமாகி உள்ளது.

பன்னாட்டுப் புலன் விசாரணை என்ற திசையில் சிறு அசைவு ஏற்பட்டாலும் அதனைப் பயன்படுத்தி சிங்களர்களிடையே இனவெறியைத் தீவிரப்படுத்தி அதன் ஊடாக இராசபட்சே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பெற்று விடுவாரோ என்ற ஐயத்தில் இந்தியா உள்ளது.

இந்தியாவைப் பொருத்தளவில் இலங்கையைக் கூடியவரை தனது செல்வாக்கு வலையத்திற்குள் வைத்துக் கொள்வதற்கு பயன்படும் ஒரு பொருளாக ஈழத்தமிழர் இனச்சிக்கல் பயன்படுத்தப்படுகிறது அவ்வளவே.

மற்றபடி, இந்திய ஆரியத்திற்கும், சிங்கள ஆரியத்திற்கும் உள்ள பொது இனக்கொள்கையான தமிழினப்பகை கொள்கையில் அடிப்படை மாற்றம் ஏதும் இல்லை.

இலங்கை அரசு ஒரேடியாக சீனாவின் பக்கம் சாயாமல் இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி இந்திய அரசுக்கு இலங்கையோடு வேறு எந்த முரண்பாடும் இல்லை.

அதற்கேற்ற காய் நகர்த்தல்களில் ஒரு கட்டம் முடிந்திருக்கிறது. தாங்கள் விரும்பும் ஆட்சி மாற்றத்தை இலங்கையில் இந்திய அரசால் கொண்டுவர முடிந்துள்ளது. இதை சிக்கலின்றி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இதற்கு ஐ.நா. விசாரணை இடையூறு செய்யுமானால் அதனை விட்டுவிடலாம் என்பது இந்தியாவின் விருப்பம்.

அமெரிக்காவுக்கும், இலங்கை அரசியலில் சீனாவின் கை மேலோங்காமல் இருந்தால் போதும். அதற்கு தமிழர்ச் சிக்கலை கை கழுவ வேண்டி வந்தாலும் கை கழுவி விடும்.

இந்த நிலையில் வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் இலங்கை மீதான தீர்மானம் வராமலோ அல்லது பன்னாட்டு புலன் விசாரணைக் கோரிக்கையை இன்னும் ஓராண்டிற்கு தள்ளிப்போட்டோ தீர்மானம் நிறைவேற வாய்ப்புகள் நிறைய உண்டு.

கடந்த 03.02.2015 அன்று தமிழத் தேசிய கூட்டணித் தலைவர்களைச் சந்தித்த தென்னாசியா விவகாரங் களுக்குப் பொறுப்பான அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் நிர் மல்பிஸ்வால் இதனை மறைமுகமாகத் தெரிவித்து விட்டார்.

இந்த புதியச் சூழலுக்கு ஏற்றாற்போல் தமிழர்களும் புதிய வகைச் செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

இச்சிக்கலில் இனி நமது முதன்மைக் களம் தமிழீழமே ஆகும். வடக்கு - கிழக்கு மாகாணத்தில் வாழும் ஈழத் தமிழர்கள்தாம் இனி அடுத்தகட்டப் போராட்டத்தில் முன்னோடுபவர்களாக மாற வேண்டும்.

இந்தியாவின் கைப்பாவையாகச் செயல்படும் சம்மந்தர் தலைமையைப் புறந்தள்ளிவிட்டு பணம், பதவி, விளம்பரம் ஆகிய மூன்றிற்கும் ஆசைப்படாத புதிய இளம் ஆற்றல்கள் களம் இறங்க வேண்டும்.

இனப்படுகொலை குறித்த பன்னாட்டு விசாரணை, தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்பு ஆகிய அடிப்படை நிலைப்பாட்டில் ஊன்றி நின்று கொண்டு, தமிழீழ மண்ணிலிருந்து சிங்களப்படை வெளியேற்றம், சிங்களமயமாக்கல் தடுத்து நிறுத்தப்படல், தடுப்புக் காவலிலும், அரசியல் கைதியாகவும் உள்ளோர் விடுதலையாதல், அனைத்து சனநாயக உரிமைகளும் வழங்கப்படல், தமிழர்களின் மீள் குடியேற்றம், பறிக்கப்பட்ட காணிகளும், குடியிருப்புகளும் திரும்ப அளிக்கப்படுதல் போன்ற உடனடி கோரிக்கைகளை வைத்து அமைதி வழிப்பட்ட மக்கள் திரள் போராட்டங்களை வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும்.

சிங்கள அரசின் அடக்கு முறைகளை எதிர்கொண்டு இப்போராட்டங்களை ஈழத்தமிழர்கள் முன்னெடுக்கும் போது அதற்கு ஆதரவாக புலம் பெயர் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் இயக்கங்கள் நடத்த வேண்டும்.

ஜெனிவா மனித உரிமை மன்ற மாநாட்டையே வாய்ப்பாகப் பயன்படுத்தி இம்முயற்சிகள் தொடங்கலாம்.

சம்மந்தர் தலைமை சொல்வது தான் அம்மண்ணில் வாழும் தமிழர்களின் கோரிக்கை என்ற நிலையில் மாற்றம் வந்தால் தான் இந்திய - அமெரிக்க காய் நகர்த்தல்களிருந்து தமிழர் சிக்கல் பக்கம் உலக கவனத்தை ஈர்க்க முடியும்.

வல்லரசுகளின் சூழ்ச்சித் திட்டத்திற்குள் மக்கள் உரிமைகளை மூழ்கடித்துவிட முடியாது என்பதை ஈழத்தமிழர்கள் மீண்டும் உணர்த்த வேண்டும்.

ஏற்பட்டுள்ள புதிய சூழலை எதிர்கொள்ளும் புதிய உத்தியும் அதுதான்.

Pin It