மஞ்சள் குங்குமம் வைத்து
மாட்டுப் பொங்கலில்
மந்தைக்குப் போகும்
மாடாய்
மணக் கோலத்தோடு
மறுவீடு வந்தோம்.

வாசல் தெளித்து
கோலமிடுவது முதல்
பாத்திரம் கழுவி
பாய்விரிப்பது வரை
‘மாங்கு மாங்கு’வென
உழைத்த பின்
நல்ல மருமகள் என்று
பெயர் வாங்கினோம்.

நாலெழுத்து படித்திருந்ததால்
தோள்பை மாட்டி
வேலைக்கும் போனோம்
தேவதையாய் முலாம் பூசி
தெருவில் நடந்தாலும்
தேவைகளுக்குக் கையேந்தும்
பிச்சைக்காரிகளாகவே
நாங்கள்.

பிடித்த புத்தகத்தை
வாங்குவதற்கும்
வாங்கிய புத்தகத்தை
படிப்பதற்கும்
நேரமில்லாமல்,
நிதியில்லாமல்
இயலாமைக்குள்
நொறுங்கிக் கிடக்கின்றன
மனசுகள்.

குடும்பம், பொறுப்பு, வேலை
இவற்றிற்காய்
மனத்தில் சுரக்கும்
கவிதைப் பாலை
வீதியில் கொட்டி விரைவதே
எங்கள்
விதியாய் இருக்கிறது.

அடுப்படித் தாளிப்புகளுக்கும்
அதிகாரிகளின் தாளிப்புகளுக்கும்
குருதியிரைத்து
சுருண்டு வீழ்கிறது
உடம்பு.

குப்பைப் பேச்சுகள்,
கோப வெடிப்புகள்,
விழலுக்கு இரைத்திடும்
வியர்வைத் துளிகள்,
வீணுக்கு அழுதிடும்
தொண்டைத் தண்ணிகள்
இப்படி
இரைச்சலில் குரல் தீர்த்து
இற்று வீழ்கிறது
உணர்வு.

கல்யாணம், காட்சி,
கருமாதி, சடங்கு,
விருந்து, வேட்டு,
நல்லது, கெட்டது,
இப்படி விடுமுறைகளையும்
பிடுங்கித் தின்கிறது
வாழ்க்கை.

கணக்குப் போட்டு
கணக்குப் போட்டு
பங்கு வைத்து
பங்கு வைத்து
எமக்கான நேரம்
இல்லாமலே தீர்ந்து
ஒளவை வழியில்
அறம்பாட வலுவின்றி
பல நாளாய்
பட்டினி கிடக்குது
எங்கள் பேனா!

Pin It