2008 - 2009 இல் தமிழீழத்தில் கூட்டம் கூட்டமாகத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது தமிழ் மக்களைப் பாதுகாக்கும் கோரிக்கைகளுடன் தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. அப்போது 7.1.2009 அன்று காலை சென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகே ஒற்றைத் தனி மனிதராய் ஒரு போராட்டம் நடத்தினார் தோழர் தமிழ்ச்சமரன். அப்போராட்டம் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தது. சோகம் சுமந்த ஈழத்தமிழர்களின் நெஞ்சக் காயத்திற்கு மருந்து தடவியது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் 7.1.2009 அன்று சென்னை வந்தார். சிங்கள இன வெறி அரசு நடத்திய இனப்படுகொலைப் போருக்கு ஆயுதம் கொடுத்து, நிதி கொடுத்து, படை வல்லுநர்களை அனுப்பிப் பயிற்சிக் கொடுத்து, பன்னாட்டு அரசியல் ஆதவைத் திரட்டிக் கொடுத்து தமிழின அழிப்பில் பங்கு கொண்ட இந்திய அரசின் பிரதமரைக் கண்டிக்கும் வகையிலும், திரும்பிப் போ என்று எதிர்ப்புக் காட்டும் முறையிலும், ஈழத்தில் போர் நிறுத்தம் கொண்டு வர இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் அந்தப் போராட்டத்தைத் தோழர் தமிழ்ச் சமரன் நடத்தினார்.

அன்று காலை 10 மணியளவில் அண்ணா சிலை அருகே இந்திய அரசுக் கொடியை எரித்தார்! மூவர்ணக்கொடி எரிந்து முடிந்தது; ஆனால் சமரன் நெஞ்சில் எரிந்த நெருப்பு அணையவில்லை.

“ஈழத்தமிழர் இன அழிப்பிற்குத் துணைபோகும் மன்மோகன் சிங்கே திரும்பிப்போ!”!

”இந்தியாவே சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுக்காதே!” ஈழத்தில் உடனடியாகப் போர் நிறுத்தம் கொண்டுவா!”

என்று தோழர் தமிழ்ச் சமரன் முழங்கினார். மக்கள் ஆர்வம் கொண்டு ஆதவரவுக் கருத்துடன் சூழ்ந்தனர். திருவல்லிக்கேணி காவல் துறையினர் தோழர் தமிழ்ச் சமரனைத் தளைப்படுத்தினர். தமிழ்ச்சமரன் செயல் கண்டு யாரும் ஆத்திரப் படவில்லை. ஆதரவுக் கருத்துகளையே பேசினர்.

தோழர் சமரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் முன்னணித் தோழராய்ச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். 16 நாட்கள் சிறையில் இருந்தார். பின்னர் பிணையில் எடுக்கப்பட்டார்.

இப்போது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சென்னை நடுவண் கிளைச் செயலாளராக தோழர் தமிழ்ச் சமரன் செயல்பட்டு வருகிறார்.

ஐந்தாண்டுகள் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்திய அரசுக் கொடியை எரித்ததை ஏற்றுக் கொண்டார் சமரன். அதற்கான காரணத்தையும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். மனந்திறந்து தமது ஞாயத்தை முன் வைத்த தோழர் சமரன் மீது நீதிபதிக்குக் கனிவும் மதிப்பும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஏற்கெனவே 16 நாள் சிறையில் இருந்ததைத் தண்டனையாக அறிவித்து4.2.2014 அன்று தோழர் சமரனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார் நீதிபதி. தோழர் சமரனுக்காக வழக்கறிஞர் பா. இரவிக்குமார், வழக்கறிஞர் து. மகாராசன் இருவரும் வாதாடினர்.

தீர்ப்பு வழங்குவதை ஒட்டி அன்று காலையில் இருந்தே த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன் தலைமையில் தோழர்கள் க. அருணபாரதி, பாலா, கோவேந்தன், வெற்றித்தமிழன், பிச்சமுத்து, இளங்குமரன்,முத்துக்குமார், சத்தியா, ஜனா, சரவணன் ஆகியோர் நீதிமன்றம் வந்திருந்தனர். விடுதலையாகி வெளியே வந்த தோழர் சமரனுக்குத் தோழர் உதயன் துண்டு அணிவித்தார்.

இந்திய இராணுவத்தில் பணியாற்றியதால் இந்திய அரசுக்கொடிக்கு விரைப்பாக நின்று வணக்கம் செலுத்திப் பழகிப் போன வடார்க்காடு மாவட்டம் வரகூர் பட்டணம் திரு கிருட்டிணன் அவர்கள் மகன் தமிழ்ச்சமரன் தமது இனமக்களைப் பாதுகாக்கவும் மனித நேயத்தை நிலைநாட்டவும் அதே இந்திய அரசுக் கொடியை எரித்துச் சிறை சென்றார்.

இப்பொழுதும் தமிழ்ச்சமரன் தமிழின உரிமைப் போராட்டங்கள் பலவற்றில் கலந்து கொண்டு அவ்வப்போது தளைப்பட்டு வருகிறார்.

Pin It