பெரிய கட்சிகளை எதிர்பார்க்காமல் குடியியல் சமூக (சிவில் சமூக) இயக்கங்கள் முன்னெடுக்கும் மக்கள் போராட்டங்கள் அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் வேகம் பெற்றுள்ளன. தாங்கள் முன்வைக்கும் இலக்குகளை நோக்கி முன்னேறியும் வருகின்றன.

அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., போன்ற தமிழகத்தின் முதன்மை கட்சிகளையோ காங்கிரசு, பாரதீய சனதா, கம்யூனிஸ்ட் கட்சிகளையோ சாராமல் இவ்வியக்கங்கள் முன்னேறி வருகின்றன. எடுத்துக்காட்டாக மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டம் கருதத் தக்க இடைக்கால வெற்றி அடைந்திருக்கிறது.

காவிரிப் படுகை மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் மீத்தேன் எடுப்புத் திட்டம் தற்காலிகத் தடையை இப்போது சந்தித்துள்ளது.

காவிரிப் படுகையில் மீத்தேன் எடுப்பதற்கு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்தோடு இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை தற்காலிகமாகத் தடுத்து வைத்துள்ள தமிழக அரசு இத்திட்டத்தின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமர்த்தியது. அது இன்னும் அறிக்கை அளிக்கவில்லை.

மீத்தேன் திட்டம் முற்றிலும் கைவிடப்படவில்லை. காவிரிப் படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் களிமண் பாறை எண்ணெய் (ஷேல் பெட்ரோலியம்) மற்றும் களிமண் பாறை எரிவளி (ஷேல் வாயு ) எடுக்க அளிக்கப்பட்டுள்ள அனுமதி நீக்கம் செய்யப்பட வில்லை என்ற போதிலும் மீத்தேன் திட்டம் தற்காலிகமாகவாவது நிறுத்தப்பட்டது மக்கள் இயக்கங்களுக்குக் கிடைத்த வெற்றியே.

மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் தொடக்கம் மிக எளிமையானது. ஆனால் உறுதியானது.

சூழலியல் போராளி ஐயா நம்மாழ்வார் அவர்களின் தலைமையில் தோழர்கள் கே.கே.ஆர். லெனின், பொறியாளர் கோ. திருநாவுக்கரசு ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்ட போராட்டம் வளர்ச்சி பெற்றது. அடுத்து பேராசிரியர் த.செயராமன் ஒருங்கிணைப்பில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் தழுவி மாபெரும் மக்கள் இயக்கமாக மலர்ந்தது.

பல்வேறு ஊர்களில் புதைக்கப்பட்ட குழாய்கள், நடப்பட்ட எல்லைக்கற்கள் ஆகியவை அந்தந்த ஊர் மக்களால் பிடுங்கி எறியப்பட்டன. ஆடுதுறை முருகன் (ம.தி.மு.க.) போன்ற மக்கள் போராளிகள் கிளர்ந்தெழுந்தனர்.

சிவகெங்கை மாவட்டத்தில் மீத்தேன் திட்டம் தலை காட்டிய போது அங்கும் மீத்தேன் எதிர்ப்பு இயக்கங்களும் மக்களும் போராடினர்.

மக்கள் போராட்டங்கள் வெடித்ததால் கீழை ஆற்றல் பெறு நிருவனம் (கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜ்ஜி கார்ப்பரேசன்) தஞ்சையிலிருந்த தனது தலைமையகத்தைக் கடந்த சனவரி (2015) மாதம் காலிசெய்து கொண்டு வெளியேறியது.

இத்திட்டத்தால் உடனடியாகப் பாதிக்கப்படாத தமிழகத்தின் பிறபகுதிகளுக்கும் மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டம் எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்த விழிப்புணர்வு தேவை என்றாலும் கிடைத்துள்ள இடைக்கால வெற்றி ஊக்கமளிப்பதாக உள்ளது.

அதேபோல் கெயில் குழாய் பதிப்பை எதிர்த்து நடைபெற்ற மக்கள் போராட்டங்களும், பெருந்துறையிலும், திருச்சியிலும் கொக்கோ கோலா நிறுவனத்திற்கு எதிராக மக்கள் இயக்கங்கள் முன்னெடுத்த போராட்டங்களும் முன்னேறி வருகின்றன.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான நீண்ட போராட்டம் அந்த அணு உலையை உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

முனைவர் சு.ப. உதயகுமார் தலைமையில் புஷ்பராயன், முகிலன். மை.பா.சேசுராசன் உள்ளிட்டோர் முன்முயற்சியில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக கடலோர மக்கள் நடத்தி வரும் போராட்டம் உலககெங்கும் அணு உலைக்கு எதிரான அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு எதிராக தமிழகம் காக்கும் மக்கள் போராட்டம் எழத் தொடங்கியிருக்கிறது.

இத்திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்கள் வழக்கு தொடர்ந்து பெற்றிருக்கிற இடைக்காலத்தடை இப்போராட்டத்தை வீச்சாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்பது உறுதி.

மேக்கே தாட்டு அணைத் திட்டத்திற்கு எதிராக காவிரி உரிமை மீட்புக்குழு முன்னெடுத்த மேக்கே தாட்டு முற்றுகைப் போராட்டம் கடந்த 07.03.2015 அன்று தேன்கனிக் கோட்டையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

பல்வேறு உழவர் அமைப்புகள் மற்றும் அரசியல் இயக்கங்கள் ஆகியவற்றை சேர்ந்தோரும் தனிப்பட்ட உணர்வாளர்களும் ஐயாயிரத்திற்கு மேற்பட்டோர் பெருந்திரளாகப் பங்கேற்ற இப்போராட்டம் தமிழகக் காவிரி உரிமைப் போராட்டத்தில் ஒரு மைல் கல்லாகும்.

இதுவரையிலும் இல்லாத வகையில் உழவர் அமைப்புகள் முன்னெடுத்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு 28.03.2015 இல் நடைபெற்ற தமிழகம் தழுவிய காவிரி உரிமைக்கான முழு அடைப்புப் போராட்டம் தமிழக மக்களின் ஒருங்கிணைந்த சீற்றத்தை வெளிப்படுத்துவதாக, வெற்றிகரமாக அமைந்தது.

முதன் முதலாக தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து சென்று தலைமை அமைச்சர் நரேந்திரமோடியை சந்தித்து அழுத்தம் கொடுத்தது ஒரு முன்னேற்றம்.

 இவை மட்டுமின்றி அன்றாடம் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் மக்கள் போராட்டங்கள் நடந்து வருவதை தொலைக்காட்சிகள் காட்டி வருகின்றன. மொத்தத்தில் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

பெரிய கட்சிகளின் துணையின்றி பெரிய ஆரவாரமின்றி குடியியல் சமூகத்தின் முயற்சியில் நடைபெற்று வரும் இப்போராட்டங்கள் தமிழகத்தின் அடிப்படை அரசியல் ஒரு திருப்புமுனைக்கு அணியமாகி வருவதைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளன.

 மேலடுக்கு அரசியலில் நிகழ்ந்துவரும் கேடுகெட்ட சீரழிவுக்கு எதிர்வினை யாகவும் இவை அமைகின்றன. நடந்துவரும் இப்போராட்டங்கள் அனைத்துமே இந்திய அரசை எதிர்த்து கூர்முனை கொண்டுள்ளதை உணரலாம்.

ஆயினும் இந்திய அரசின் தமிழினப்பகை அரசியலை புரிந்து கொண்டு தமிழ்த்தேசிய மாற்று அரசியலோடு இணையாமல் நடப்பதால்தான் இவை தனித்தனிப் போராட்டங்களாக சிறுசிறு வெற்றிகளோடு நிற்கின்றன.

வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவெங்கும் நடைபெற்ற பல்வேறு தனித்தனிப் போராட்டங்கள் கூட பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குவிக்கப்பட்டதைப் போல் தமிழகமெங்கும் நடைபெற்றுவரும் தனித்தனியான மக்கள் போராட்டங்கள் இந்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தமிழ்த்தேசியப் போராட்டமாக நிலை கொண்டால் இறுதி வெற்றியை உறுதி செய்வது திண்ணம்.

இந்திய அரசின் தமிழர் பகைத் திட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்திவரும் குடியியல் சமூக இயக்கங்கள் இத்திசையில் சிந்திப்பது இன்றைய தேவையாகும்!

Pin It