சுற்றுச்சூழலின் அழிவைப் பேசி உலகெங்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ஒரு நூல் ரேச்சல் கார்சன் எழுதிய ‘ஒலிக்காத இளவேனில்’ (Silent Spring). உயிர்கொல்லிகளால் பல உயிரினங்கள் அழிந்துப் போனதைச் சான்றுகளுடன் விளக்கிய நூல் இது. ஓர் உயிரினத்தின் அழிவென்பது ஒரு மொழியில் அதற்குரிய பெயர்ச் சொல்லின் அழிவும் கூட.

மேலும் அவ்வுயிருடன் தொடர்புடைய பிற சொற்களும் அதனுடன் இணைந்து அழியும். இதனால்தான் இந்நூலைப் படித்து முடித்ததும் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான ஆல்டஸ் ஹக்ஸ்லே இவ்வாறு சொன்னாராம்: “ஆங்கிலக் கவிதையின் பொருள் வளத்தில் பாதியை இழந்துக்கொண்டு வருகிறோம்.’’ நம் தமிழ் மொழிக்கும் இதே நிலைதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் சுற்றுச்சூழல் அழிகையில் அதனுடன் சேர்ந்து தமிழ் சொற்களும் அழிகின்றன. கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இதுதான் உண்மை. அந்தளவுக்கு ஒரு மொழியின் சொற்களும் சுற்றுச் சூழலும் பின்னிப் பிணைந்தவை. ஓர் அகராதியின் துணைக்கொண்டு எவ்வளவு இழந்திருக்கிறோம் என ஆய்வு செய்ய வேண்டிய அபாயக் கட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

காவிரி என்கிற சொல்லை முன்வைத்து இதனைக் காண்போம். ‘வான் பொய்யினும் தான் பொய்யா காவிரி’ என்கிற சொற்றொடரே இன்று பொய்த்த நிலை. நீர்வரத்துக் குறைந்து காவிரிச்சூழல் அழிந்து வரும் நிலையில் காவிரிப் படுகை மாவட்ட மக்களின் புழக்கத்திலிருந்து மறைந்துவிட்ட, மறைந்து கொண்டிருக்கும் சொற்களைக் காண்போம்.

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்று பேசிய காவிரிப்படுகை இன்று ஆற்றோடு சேர்த்து சொற்களையும் தொலைத்து நிற்கிறது. ஆற்றின் நீர்வளத்தைப் போற்றும் வகையில் காவிரி முழுக்கக் கொண்டாடப்படும் திருநாள் பதினெட்டாம் பெருக்கு எனப்படும் ஆடிப்பெருக்கு. ஆற்றில் கொண்டா டப்பட்ட இத்திருநாள் இன்று குழாயடியில் கொண்டாடப்படும் அவலம். இத்திருநாள் காணாமல் போனதால் இதன் வழிபாடு தொடர் புடைய பொருட்களின் சொற்கள் சிவப்பு காதோலை, கருப்பு வளையல்  சிறுவர்கள் உருட்டும் சப்பரத்தட்டி. ஆகியவையும் அருகி வருகின்றன.

‘ஆனி பிறந்துவிட்டால் ஆறு கரை புரளும்; ஆறெல்லாம் மீன் புரளும்’ என்கிற பழமொழியே இன்று இறந்துவிட்டது. படுகை மாவட்ட நன்செய் வேளாண்மை குறுவை, சம்பா, தாளடி என மூவகைப்படும். மேட்டூரில் இருந்து ஆனி மாதத்தில் நீர் திறந்ததும் மேற்கொள்ளப்படும் சாகுபடியே குறுவை. குறுகிய காலச் சாகுபடி யான இது அறுவடையானதும் அடுத்து தாளடி தொடங்கும். இவை இரண்டுக்கும் இடையில் ஏறக்குறைய ஐப்பசி மாதம் தொடங்கும் சாகுபடி சம்பா. இன்று ஆனியில் தொடங்கும் குறுவை சாகுபடியே பெரும்பாலும் ஒழிந்துவிட்டது. குறுவையே இல்லையெனில் தாளடி ஏது? விரைவில் சம்பா என்கிற சொல் மட்டுமே எஞ்சும். நடப்பு ஆண்டில் இதற்கும் ஆபத்து ஏற்பட்டுவிட்டது.

பட்டக்கால் என்பது மண்வளம் கருதி கோடையில் தரிசாக விடப் பட்ட வயல். இன்று வீட்டுமனை விற்பனைக்காகத் தரிசு எனும் பெயர் பெற்றுவிட்டது. ஆற்றில் நீர் வந்ததும் வயலுக்குப் பாய்ச்சும் முதல் தண்ணீர் வெங்கார். அதுபோல் வெங்கார் பாய்ச்சிய வயலில் மண் மென்மையாய் மாறுதலைக் குறிப்பது பூங்கார். (ஒரு நெல்லுக்கும் இப்பெயருண்டு).

டிராக்டர் வந்தபோதே பொன்னேர் காணாமல் போய்விட்டது. கலப்பை உழுத தடமான உழுதசால் டிராக்டருக்கு பின்னே கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. படுகை மாவட்டங்களில் சேற்று உழவுக் கென்று பெயர் பெற்ற உம்பளாச்சேரி மாடுகளுக்கு மொட்டைமாடு என்று பெயர். மாடுகளின் கொம்பைத் தீய்த்து பயன்படுத்துவதால் இப்பெயர்.

 வெள்ளைநிற முடிகளைக் கொண்ட இதன் வாலுக்கு வெடுவால் என்று பெயர். முன்பு யாராவது சுறுசுறுப்பாய் வேலை செய்தால் சுள்ளாப்பா வேலை செய்யறான் என்பார்கள். சுள்ளாப்பு என்ற இச்சொல் அதட்டி விரட்ட தேவையில்லாமல் தானாகவே சுறுசுறுப் பாக வேலைச் செய்யும் மாட்டிலிருந்து பிறந்தவையாகும்.

இன்று தனித்தனியாய் நாற்றங்கால் விடப் பாசனநீர் வசதி போதவில்லை. எனவே அவ்விடத்தை நாற்று நடும் இயந்திரங்கள் பிடித்து வருகின்றன. இதனால் இழக்கப்படும் சொற்கள் இவை. நாற்றங்கால் நாற்று விடும் இடம். பறியங்கால் -நாற்று பறித்த இடம். நாற்றங்காலை சுற்றி தண்ணீர் வழிந்து ஓடுவதற்கு ஒரு கருங்கல்லில் துளையிட்டு இழுப்பர். இதற்குத் தோண்டிக்கால் என்று பெயர்.

நாற்று பறித்தலிலும் நிறையச் சொற்கள் இருந்தன. கை நிறையும் வரை நாற்று பறித்தால் அது ஒரு பிடி. இரண்டு பிடி நாற்று சேர்ந்தால் ஒரு முடி. ஐந்து முடி நாற்று ஒரு கை. இரண்டு கை சேர்ந்தால் ஒரு குப்பை. பத்துக் குப்பை சேர்ந்தால் ஒரு கட்டு. நாற்றை நடும் இடைவெளிக்கும் ஒரு பெயருண்டு. கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் முடிந்தவரை விலக்கி பிடித்தால் ஏற்படும் இடைவெளிக்கு ஓட்டை என்று பெயர். அதுபோல் ஒரு நாற்று முடியிலிருந்து மூன்று நான்கு நாற்றுகளைக் கிள்ளி வயலில் நடுவர். இப்படி நட்ட நாற்றின் பெயர் முதல். இத்தனை சொற்களும் இனி இழப்புதான்.

இங்கு வாழ்ந்த பல உயிரினங்களே அழிந்துவிட்ட நிலையில் அதன் பெயர்ச் சொற்களும் அழிந்துவிட்டன. உடனடி எடுத்துக்காட்டு, பச்சைத்தவளை. இது இன்று படுகை மாவட்டங்களில் இல்லை. இதுபோல் உளுவை மீன்கள். இதன் தடமே காணோம். சாணிக்கெண்டை இன்று நினைவில் மட்டும். கார்த்திகை மாத ஆற்றில் கரையோரமாக நாங்கள் வெறும் கைகளாலேயே பிடித்துக் குவித்த சார்முட்டி என்கிற பொடி மீன்வகைகள் இன்று எங்கே போனது? இச்சிறிய மீன்களை மூக்கையும் வாலையும் கிள்ளிவிட்டுச் சட்டி யில் கொட்டி கண்ணுக்குப் புலப்படாத செல்களைக் கஞ்சி போல் திரண்டு வருமாறு அளஞ்சி எடுப்பர். சார்முட்டியோடு இந்தச் சொல்லும் போய்விட்டது.

இதுபோல் வாய்க்கால்களிலும் குளத்திலும் மீன் பிடிக்க மூங்கில் சிம்புகளால் ஆன ஊத்தா எனும் பொறிப் பயன்பட்டது. இதற்குள் சாணி உருண்டையை வைத்துவிட்டு சென்று திரும்பி மாட்டியிருக்கும் மீன்களைப் பிடிப்பர். சில இடங்களில் கூந்தாளி என்ற பெயரும் இருந்தது. ஐப்பசி கடைசியிலிருந்து கார்த்திகை கடைசி வரைக்கும் ‘கார்த்திகை வாளை’ என்கிற மீன் கிடைக்கும். இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் காவிரியில் ஐப்பசி மாதத்தில் தண்ணீரே ஓடாத ஆண்டாகப் பதிவாகியிருக்கிறது. இதில் கார்த்திகை வாளையை இனி எங்கே தேடுவது?

இனி அறுவடைக் காலம். வைக்கோல் முதன்மை யான உபரிப் பொருளாக இருந்த காலம் போய் விட்டதால் அறுவடை இயந்திரம் அறுத்துப் போட்ட வைக்கோலை காவிரிப்படுகை மாவட்ட மாடுகள் பல இன்றும் தின்னுவதில்லை. அவற்றைப் பொறுத்தவரை அவை வைக்கோலே அல்ல கூளம்.

வைக்கோல் கையால் அறுவடை செய்யப்பட்ட போது சில சொற்கள் வழக்கிலிருந்தன. மூன்று பிடி அறுத்து போட்டால் ஒரு அரி. இரண்டு மூன்று அரி களைச் சேர்த்தால் ஒரு கோட்டு. சுமக்கும் அளவுக்குக் கோட்டுகளைத் தலைப்பு மாற்றி அடுக்கினால் அது ஒரு கட்டு. இன்று கட்டு மட்டுமே எஞ்சுகிறது. இதையே விதை நெல்லைக் கட்டிய கோட்டை என்கிற சொல்லும் வழக்கொழிந்து விட்டது. அறுவடை திருநாளான பொங்கல் திருநாளின் வடிவம் குலைந்துவிட்டதால் கூடவே நெட்டிமாலை, பதனிப்பொங்கல் உள்ளிட்ட பல சொற்களும் உதிர்ந்துவிட்டன.

அக்காலக் காவிரி கோடையில் முற்றிலும் வறண்டு போகாது. ஓரத்தில் சிறுவர்கள் குளிக்கும் அளவுக்கு நீர் ஓடும். அப்போது ஆற்றின் நடுவில் சில இடங்களில் மண் மேடுகள் இருக்கும் அதற்கு எக்கல் எனப் பெயர். நீரோட்டம் நின்ற பகுதியில் ஆற்று மணலில் அலை களின் சிறு சுவடுகள் படிந்திருக்கும். இதற்கு மணல் கொழி எனப் பெயர். இதே வடிவத்தில் வானில் மழை ஓய்ந்ததற்கு அறிகுறியாகச் சிறு சிறு அலைகளாக முகில்கள் உறைந்திருக்கும் அதை வானம் மணல் கொழித்திருக்கிறது என்பர். என்னவொரு இயற்கை ஒப்பீடு!

தூவாளி எனப்படும் தவிடு போல மெத்தென்று படிந்திருக்கும் ஆற்றுமணலை சிறுவர்களாக இருக்கும் போது நீரோடு கலந்தள்ளி துளித்துளிகளாகச் சொட்டி கடல்மல்லை கோவில் வடிவத்தில் உருவாக்குவோம். கருமணல் கலந்து அவ்வளவு அழகாக இருக்கும் அவை.

தண்ணீர்த் தாகம் எடுத்தால் ஆற்றிலோடும் நீரைப் பருகமாட்டோம். பரபரவென்று மணலில் ஓரடி குழித் தோண்டினாலே ஊற்றுநீர் பொங்கும் தெளியவிட்டு குடிப்போம். இப்படி ஊற்று நீரையள்ளிச் சேந்தி செல்ல ஊற்றுவட்டா என்ற பாத்திரமே அப்போதிருந்தது. அதுபோல் ஊருக்கு பொதுவாக ஆற்றில் ஒரு ஊற்றுக் கிணறு இருந்தது. செங்கல் கட்டுமானத்தில் கோடையில் மணல் மூடியிருக்கும் இதை நான்கடி அளவுக்கே தோண்டுவர். குடம் குடமாய் நீர் ஊறிவிடும்.

ஆற்றோரத்தில் கிணறு தோண்டி ஊற்று நீரெடுத்துக் கரையோரத்திலிருந்த காய்கறி தோட்டத் துக்கு ஏற்றம் கொண்டு நீர் பாய்ச்சும் முறையும் சிலவிடங்களில் இருந்தது. இவ்வகைக் கிணற்றுக்குத் துலவாக்குழி என்று பெயர். இத்துடன் சால் உள்ளிட்ட ஏற்றம் தொடர்புடைய அத்தனை சொற்களையும் மணற் கொள்ளையர்கள் கொள்ள யடித்து விட்டனர்.

காவிரிக் கிளையாற்றின் கடைமடைப் பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நின்ற காலம் ஒன்றுண்டு. குளம் போன்ற அப்பகுதியில் உயரவகை நெல் சாகுபடி நடந்தது. இதற்குக் கோட்டகம் என்பர் அப்பகுதி மக்கள். இதுபோல் தலைஞாயிறு பகுதியில் உள்ள அளம் என்கிற உவர்நீர் ஏரியில் நட்ட நெல்லைப் படகில் சென்று அறுவடை செய்வர். காவிரிக்கரை இதனால்தான் புனல்நாடு என்று பெயர் பெற்றிருந்தது.

இத்தனை சூழலையும் கெடவைத்து இதை அனல்நாடாக மாற்ற மீத்தேன் திட்டம் வருகிறது. அக்கெடுநிலை நேர்ந்தால் நம் மொழியின் சொற்கள் மட்டுமல்ல நாமும் சேர்ந்தே தொலைவோம்.

Pin It