இராசீவ் காந்திக் கொலைவழக்கில் தண்டிக்கப் பட்டு கடந்த 23 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபட்பயஸ், இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழுபேரையும் விடுதலை செய்ய அமைச்சரவையில் முடிவு செய்து கடந்த 19.02.2014 அன்று தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் செயலலிதா அறிவித்தார்.

தமிழக அரசின் இம்முடிவு கட்சி வேறுபாடின்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கு முதல் நாள் 18.02.2014 அன்று தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்தது. இம் மூவரின் கருனை மனுவை ஆய்வு செய்ய அவசியமற்ற அளவில் நீண்டகாலம் எடுத்துக் கொண்டு இந்தியக் குடியரசுத்தலைவர் நிராகரித்து ஆணையிட்டது செல்லாது என்று இத் தீர்ப்பு கூறியது. இதனடிப் படையில் இம் மூவரின் மரணதண்டனை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது.

periarivalan-7இத் தீர்ப்புக்கு தமிழகமெங்கும் கிடைத்த உணர்ச்சிகரமான வரவேற்பையும், இவ்வழக்கில் சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக் கையையும் ஆய்வு செய்தபிறகே தமிழக அரசு இம் முடிவுக்கு வந்தது.

ஆனால், காங்கிரசு கட்சியின் துணைத்தலைவர் இராகுல் காந்தி இதனைக் கடுமையாக எதிர்த்தார். தூக்குமர நிழலிலும், சிறைக்குள்ளும் 23 ஆண்டுகள் கழித்தபிறகே இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது என்பதையும், அதுவும் உச்ச நீதிமன்றம் கோடிட்டுக் காட்டிய சூழலில் இந்த விடுதலை உத்தரவு வந்திருக்கிறது என்பதையும் மறந்து இராகுல் காந்தி தெரிவித்துள்ள எதிர்ப்பு அவரது பழி வாங்கும் வன்மத்தையே காட்டுகிறது.

இந்த வன்ம எதிர்ப்புக்கு இந்திய அரசு துணை போனது. இந்தியப் பேரரசின் இளவரசன் குரலே ஆட்சியின் குரலாக எதிரொலித்தது. ”தமிழக அரசு இந்தியாவின் ஆன்மாவுக்கே துரோகம் இழைத்து விட்டது’’ என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொக்கரித்தார்.

எசமான் காட்டிய திசை நோக்கி பாயும் பிராணிகளைப் போல காங்கிரசு அமைச்சர்களும், தலை வர்களும், தமிழக அரசின் மீது பாய்ந்தனர்.

இராசீவ்காந்தி கொலையில் தொடர்புடைய இந்த ஏழுபேரை விடுதலை செய்வது தவறான முன் எடுத்துக்காட்டை ஏற்படுத்திவிடும் எனக்கூறி பாரதிய சனதா கட்சி நாடாளுமன்றக் குழுத்தலைவர் அருண் ஜெட்லி கண்டித்தார். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ”இந்த ஏழு பேரின் விடுதலை பயங்கரவாதி களுக்கு ஊக்கமளித்துவிடும்’’ என்று தீக்கக்கினார்.

இதற்கு முன் எவ்வளவோ கொலைவழக்குகளில் வாழ்நாள் சிறையாளிகள்தண்டனை குறைப்பு வழங்கப்பட்ட நிகழ்வுகள் ஏராளம் உண்டு. அப்போதெல்லம் அதுபற்றி கருத்து சொல்லாதவர்கள் இராசீவ் காந்தி கொலை என்று வந்த பிறகு துள்ளிக் குதிக்கிறார்கள். சட்டத் தின் முன் அனைவரும் சமம் என்ற இந்திய அரசமைப்புச்சட்டத்தின் பிரிவு 14 இவர்களால் சுக்கு நூறா கக் கிழித்தெறியப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் ‘தேசத்தந்தை‘ என்று இவர்களால் போற்றப்படும் காந்தியாரின் கொலையில் வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டு 15 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த நிலையிலேயே 1964 -இல் கோபால் கோட்சேக்கு விடுதலை வழங்கப் பட்டதை வசதியாக மறைக்கிறார் கள். அதுவும் கோபால் கோட்சேயின் தண்டனை குறைப்பு கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித் தப்பின்னும் மராட்டிய மாநில அரசால் அவர் விடுதலை செய்யப் பட்டார் என்ற அப்பட்டமான உண்மையை இவர்கள் கூச்சலில் அமுக்கப்பார்க்கிறார்கள். ஒரு வே ளை மகாத்மா காந்தியை விட இராசீவ் காந்திதான் மேலானவர் என்று இவர்கள் கருதிவிட்டார்கள் போலும்.

கட்சி வேறுபாடின்றி வட நாட்டுத் தலைவர்கள் ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக எழுப்பும் கூச்சல் ஓர் உண்மையை உணர்த்து கிறது. இந்தியாவின் மனித உரிமைக் கொள்கைகள் எல்லாம் தமிழர் களுக்கு செல்லுபடியாகாது என் பதே அந்த உண்மை.

இது ஒருபுறம் இருக்க இச் சிக்கலில் சட்ட நிலைமை என்ன என்று ஆய்வதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கம்.

ஏழு தமிழர் விடுதலைகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையை எதிர்த்து 20.02.2014 அன்று இந்திய உள்துறை அமைச் சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதில், இச்சிக்கலில் முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் இந்திய அரசுக்கே உண்டு என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் தண்டனைக் குறைப்பு வழங்கி வாழ் நாள் சிறை யாளிகளை விடுதலை செய்வது குறித்து கடந்த 2013 பிப்ரவரியில் இந்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பி யுள்ளக் கடிதம் மேற்கோள் காட் டப்பட்டு மீண்டும் வலியுறுத்தப் பட்டது.

இந்தியக் குற்றவியல் தண்ட னைச் சட்ட விதி 432 (2 )ன் படி இந்த எழுபேரின் தண்டனையை இறுதிசெய்த உச்ச நீதிமன்ற ஆயத் திற்கு தலைமைத்தாங்கிய நீதிபதி யின் விரிவான கருத்துரை பெறப் பட்ட பிறகே மாநில அரசு தண்ட னைக்குறைப்பு முறையை மேற் கொள்ள முடியும் என்றும் உள் துறை அமைச்சகக் கடிதத்தில் குறிப் பிடப்படுகிறது. இதற்கு ஆதரவாக சங்கீத் - எதிர்- அரியானா மாநில அரசு தீர்ப்பிலிருந்து ஒரு பத்தியும் எடுத்துக்காட்டப்படுகிறது.

தொடர்புடைய ஏழுபேரிடம் கோரிக்கை மனு பெறப்பட்டு அதன் மீது ஒரு ஆய்வுக்குழு நியமிக்கப் பட்டு அதன் முடிவு பெறப்பட்ட பின்னரே விடுதலை என்ற முடிவை மாநில அரசு மேற்கொள்ள முடி யும் என்றக் கருத்தும் கூறப்படுகிறது.

இக்காரணங்கள் எதுவும் சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல. மேற் கண்ட காரணங்களைக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக பெறப் பட்டுள்ள இடைக்காலத்தடை நீடிக்க வாய்ப்பில்லை என்பதே நமது கருத்து.

குற்றவியல் நடைமுறை சட்ட விதி 432 (1) மற்றும் 433 (கி) ன் படி யான மாநில அரசின் தண்ட னைக் குறைப்பு அதிகாரம் தற்சார் பானது, தங்கு தடையற்றது. குற்ற வியல் சட்ட விதி 435 இராசீவ் காந்தி கொலைவழக்கில் செயல்பட முடி யாதது . நளினி, சாந்தன், முரு கன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மரணதண்டனையை உறுதி செய் தும் மீதி உள்ள மூவருக்கு வாழ்நாள் தண்டனை அளித்தும் நீதிபதி கே.ட்டி தாமஸ் தலைமையிலான ஆயம் அளித்தத் தீர்ப்பு இதனை தெளிவுபடுத்தும். என்ற போதிலும் ஒரு கூடுதல் எச்சரிக்கை உணர் வோடு தமிழக அரசு 435 (1) கீழ் மத்திய அரசின் கருத்துக் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

இராசீவ்காந்தி கொலை வழக்கு தடா சட்டத்தின் கீழ் தொடுக்கப் பட்டிருந்தாலும் இதன் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் இவ் வழக்கிற்கு தடா சட்டம் பொருந் தாது என்று முடிவு அறிவித்துதான் இவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தது.

அவ்வாறு விடுதலை செய்யப் பட்டவர்களில் 14 பேர் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட ஆயுதச் சட்டம், வெடிபொருட்கள் தடைச் சட்டம், ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்கப்பட்டு, விசார ணைக் காலத்தில் சிறையிலிருந்த ஆண்டுகளையே அத்தண்டனைக் காலமாக அறிவித்து விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

ஆயுதச்சட்டத்தின் படியான சிறைத்தண்டனையே மூன்றாண்டு முதல் அதிகபட்சம் ஏழாண்டுவரை தான். இதில் இராசீவ்காந்தி கொலைவழக்கின் ஆயுதச் சட்ட பிரிவில் விதிக்கப்பட்டது மூன் றாண்டு சிறைதண்டனையே. வெடி பொருட்கள் தடைச் சட்டம் வழங்கும் அதிகபட்ச தண்டனையே இரண்டாண்டு சிறைதான். இராசீவ்காந்தி கொலை வழக்கில் மத்திய அரசின் அதிகாரத்திற்குட் பட்ட சட்டங்கள் இவைதாம்.

இப்போது சிறையில் உள்ள ஏழுபேரும் ஏற்கனெவே விடுதலை செய்யப்பட்ட 19 பேரில் 14 பேரும் மத்திய அரசின் அதிகாரத்திற்குட் பட்ட மேற்கண்ட சட்டங்களின் படி உள்ள அதிகபட்ச தண்டனைக் காலத்தை கடந்தவர்கள் ஆவர்.

இந் நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங் களின் கீழ் முழு தண்டனையையும் அனுபவித்து முடித்துவிட்டார்கள் எஞ்சி இருப்பது இந்திய தண்ட னைச் சட்டப் பிரிவு 302 -ன் கீழுள்ள கொலைக் குற்றத்திற்கான தண்ட னைதான்.

மத்திய அரசாங்கத்தின் சட்டம் எதுவும் மாநில அரசின் தண்ட னைக் குறைப்பு அதிகாரத்திற்கு குறுக்கே வர முடியாது. 432 -ன் கீழ் உள்ள மாநில அரசின் தங்கு தடையற்ற முழு அதிகாரத்தின் படியே இவர்கள் விடுதலை செய்யப் படுகிறார்கள்.

இவ்வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வுக் குழு நடத் தியது என்பதற்காகவே 435 (1) -ன் படி மத்திய அரசின் கருத்து கேட்டு மாநில அரசு கடிதம் அனுப்பி யுள்ளது.

435 (1) -ன்படி மத்திய அரசுடன் கருத்து கேட்டு கலந்து ஆலோசிப் பது அடிப்படையில் ஒரு சட்ட சடங்கு தானே தவிர மத்திய அரசின் கருத்து மாநில அரசைக் கட்டுப்படுத்தாது. ஏனெனில், இச் சட்டப்பிரிவு ”கலந்தாலோசிப்பை’’ (consultation) தான் கோருகிறதே தவிர மத்திய அரசின் “ஒப்புதலை” (consent) வலியுறுத்த வில்லை.

435(1) மற்றும் 435 (2) ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கினால் இந்த வேறுபாடு துல்லியமாகத் தெளி வாகும் .

மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களின் படி தண்டனை வழங்கப்பட்டு, அத் தண்டனைக் காலத்தைக் குறைத்து விடுதலைசெய்வதாக மாநில அரசு முடிவு செய்தால் தான் அவ்வாறான தண்டனைக் குறைப்பில் மத்திய அரசின் கருத்து மேலோங் கும் நிலை இருக்கும். இதைத் தான் 435 (2) கூறுகிறது.

435 (1) “ கலந்தாலோசிப்பதையும்” (consultation) 32 (2) “ஒப்புதல் (consent) வலியுறுத்துகிறது என்பதைப் பார்த்தாலே இவ்விரண்டு உட் பிரிவுகளின்வேறுபாட்டைப் புரிந்து கொள்ள முடியும்.

மேலே சுட்டிக்காட்டியபடி மத்திய அரசு சட்டப்படி வழங்கப் பட்ட தண்டனை முழுவதையும் இந்த ஏழுபேரும் சிறையில் கழித்து விட்டார்கள். இத் தண்டனையில் குறைப்பு ஏதும் வழங்குவதாக மாநில அரசு முடிவு செய்யவில்லை. 435(2) இங்கு எழாது. வழக்கை மத்திய அரசின் புலனாய்வுக்குழு விசாரித்தது என்றக் காரணத்திற்காகவே ஒரு கூடுதல் எச்சரிக்கைக்காக 435 (1) -இன் படி மத்திய அரசின் கருத்துக் கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதன் மீது மத்திய அரசு எந்த விதக் கருத்துக் கூறினாலும் அது தமிழக அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தில் தலையிடும் சட்டத் தகுதி உடையது அல்ல.

இந்த ஏழுபேரில் தூக்கு தண் டனை உறுதி செய்யப்பட்டு, பிறகு வாழ்நாள் தண்டனையாக தண் டனை குறைப்பு பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகிய நான்குபேரும் 433 (கி) -ன் படி 14 ஆண்டுகள் சிறைத் தண்ட னையைக் கடந்து விட்டவர்கள் ஆவர்.

இந்திய தண்டனைசட்டம் 302ன் கீழ் தண்டனைப் பெற்றவர் கள் அதாவது மரண தண்டனை பெற்று வாழ்நாள் தண்டனையாகக் குறைப்பு பெற்றவர்கள். அல்லது மரண தண்டனைக்கு பதிலாக வாழ்நாள் சிறைத்தண்டனை பெற் றவர்கள். 14 ஆண்டுகள் கழிக்கும் முன்பாக விடுதலைக் கேட்டு மாநில அரசுக்கோ, மத்திய அரசுக்கோ விண்ணப்பிக்க முடியாது என்பதே 433 (கி) விதிக்கும் நிபந்தனையாகும். இந்த நிபந்தனை அடிப்படை யிலேயே காந்தியார் கொலை வழக்கில் கோபால் கோட்சே 15 ஆண்டுகள் 8 மாதம் சிறையிலிருந்த பிறகு வாழ்நாள் சிறைத் தண்ட னையிலிருந்து மராட்டிய மாநில அரசால் விடுதலை செய்யப்பட்டார்.

23 ஆண்டுகள் தங்கள் வாழ்க் கையின் துடிப்புமிக்க காலத்தை சிறையில் கழித்த இந்த ஏழுபேரை இனியும் தொடர்ந்து சிறையில் வைக்காமல் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவு மனித நேயத்தின்பால்பட்டது என் பது மட்டுமின்றி அண்மையில் தலைமை நீதிபதி சதாசிவம் தலை மையிலான உச்ச நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு சுட்டிக் காட்டியதற்கு இசைவானதும் ஆகும்.

குற்றவியல் நடைமுறைச்சட்டம் 432(7) தண்டனைக் குறைப்பு வழங்க பொருத்தமான அரசாங்கம் (appropriate government) பற்றிப் பேசு கிறது.

ஒன்றிய அரசின் நிர்வாக அதி காரத்திற்குட்பட்ட சட்டங்களின் படி தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனைக்குறைப்பு குறித்து முடி வெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு என 432 (7) (a) கூறுகிறது. பிற எல்லாவழக்குகளிலும் மாநில அரசுகளின் தண்டனை குறைப்பு அதிகாரமே செல்லும் என்று 432 (7) (தீ) வரையறுக்கிறது. இரண்டு இரண்டு வெவ்வேறு தளங்களில் செயல்படுகிறது.

இதில் எந்த இடத்திலும் மத்திய அரசாங்கத்தின் கருத்தே மேலோங் கும் என்று சொல்லப்படவில்லை. எனவே தமிழக அரசின் முடிவின் மீது இந்திய உள்துறை அமைச்சகம் எந்த வகையிலும் ஆணை செலுத்த முடியாது.

இந்திய உள்துறை அமைச்சகம் 2013 பிப்ரவரியில் அனுப்பியக் கடிதத்திலும், இப்போது அனுப்ப பட்டுள்ள கடிதத்திலும் இந்திய தண்ட னைச் சட்டப் பிரிவு 432 (2) மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப் படுகிறது.

432 (2) கீழ்வருமாறு கூறுகிறது.

“தண்டனை நிறுத்தம் அல்லது தண்டனை குறைப்பு குறித்து எப்போதெல்லாம் பொருத்தமான அரசாங்கத்திற்கு விண்ணப்பிக்கப் படுகிறதோ அப்போதெல்லாம், பொருத்தமுடைய அரசாங்கம் விண்ணபித்தவரின் தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றத்திற்கு தலைமை தாங்கிய நீதிபதியிடம் கருத்துக் கேட்கலாம். விண்ணப் பித்தவரின் கோரிக்கையை ஏற்று தண்டனைக் குறைப்பு வழங்க லாமா அல்லது அக்கோரிக்கையை நிராகரிக்கலாமா என்றக்கேள்வி நீதிபதியிடம் முன்வைக்கபட வேண்டும். அவ்வாறான சூழலில் தொடர்புடைய நீதிபதி காரண காரிய விளக்கங்களுடன் தனது கருத்தை எழுதி அவ்வழக்கு குறித்த நீதிமன்ற ஆவணங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்” .

ஏழு தமிழர் விடுதலைப் பிரச்சினையை உற்று நோக்கினால் 432(2) உறுதியாக செயல்பட முடியாது என்பது தெளிவாகும். தண்டனை பெற்றவர் தண்டனைகுறைப்பு கோரி மாநில அரசிடம் விண்ணப்பம் அளித்தபிறகு எழும் சூழல் குறித்து 432 (2) விவாதிக்கிறது.

ஆனால், ஏழுதமிழர் விடுதலையில் செயல்பட்டிருப் பதோ 432 (1) என்ற பிரிவு. மாநில அரசு எப் போது வேண்டுமானாலும் (ணீt ணீஸீஹ் tவீனீமீ) நிபந்தனை இன்றியோ அல் லது நிபந்தனை விதித்தோ (without conditions OR upon any conditions) தண்டனைகுறைப்பு வழங்கலாம் என கட்டற்ற அதிகாரத்தை வழங்குகிறது.

 இந்திய உள்துறை அமைச்சகம் சுட்டிகாட்டும் சங்கீத் - எதிர்-- அரியான மாநில அரசு தீர்ப்பிலும் அரசாங்கத்தின் இந்த நிர்வாக அதிகாரத்தின் கட்டற்றத் தன்மை எடுத்துக்காட்டப்படுகிறது.

432 (1) ன் படி சிறையாளிகளின் விண்ணப்பத்தை பெற்றோ பெறா மலோ மாநில அரசு தண்டனைக் குறைப்பு அளிக்கலாம் என்பது தெளிவு.

ஆய்வுக்குழு நியமிப்பது என்ப தெல்லாம் மாநில அரசு தனது நிர்வாக வசதிக்காக, வழக்கின் தன் மையையும் தண்டனை பெற்றவரின் சிறை நடத்தையையும் தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடே தவிர, அதில் சட்டக்கட்டாயம் எதுவும் இல்லை. அவ்வாறு அமைக்கப்படும் ஆய்வுக்குழுவின் பரிந்துரையை அப்படியே ஏற்க வேண்டிய சட்டக் கட்டாயமும் மாநில அரசாங்கத்திற்கு இல்லை. . எந்த நிபந்தனையும் இன்றி (without conditions) எப்போது வேண்டுமானாலும் (at any time) என 432 (1) கூறுவதை கவனித் தால் இது புரியும்.

432 (2) -ன் படி மாநில அரசு இந்த ஏழுபேரின் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற ஆயத்திற்கு தலைமைத் தாங்கிய நீதிபதி கே.ட்டி.தாமசிடம் கருத்துக் கேட்பது கட்டாயமா என்பது அடுத்து கவனிக்கவேண்டியது ஆகும். சிறையாளியின் தண்டனை குறைப்பு விண்ணப்பம் வந்த சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையைப் பற்றியே 432 (2) பேசுகிறது.

இங்கு சிறையாளிகளின் விண்ணப்பம் எதுவும் பெறாமல் தமிழக அரசு 432 (1) படி தன்னிச்சையாக முடிவெடித்திருப்பதால் 432 (2) செயலுக்கே வராது.

மேலும், தண்டனையை உறுதி செய்த அமர்வின் தலைமை நீதிபதி யிடம் “கருத்துக் கேட்கலாம்’’ (may) என்றுதான் கூறுகிறது. சங்கீத் -எதிர் - அரியானா மாநில அரசுத் தீர்ப்பில் இதனை “கேட்க வேண் டும்’’ (must) என்று விளக்கமளித் திருப்பது விவாதத்திற்குறியது. 432 (2) -இன் நேரடிக் கருத்தை இந்த விளக்கம் தெளிவாக்குவதாக இல்லை.

 தண்டனையை உறுதிசெய்த அமர்வுக்கு ”தலைமை தாங்கும் நீதிபதி” (presiding judge) என்றுதான் குறிப்பிடப்படுகிறது. நீதிபதி கே.ட்டி தாமஸ் தண்டனை வழங்கிய ஆயத் திற்கு தலைமை தாங்கிய நீதிபதியே அன்றி “தலைமை தாங்கும்’’ நீதிபதி இல்லை. அதாவது நீதிபதி கே.ட்டி தாமஸ் இப்போது பதவியில் இல்லை. ஓய்வுபெற்று விட்டார்.

இதே போன்றதொரு கேள்வி புல்லார் வழக்கிலும் எழுப்பப் பட்டது. புல்லாருக்கு மரணதண்ட னையை உறுதிசெய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்கு தலைமைதாங்கிய நீதிபதிஜெ.பி.ஷா கூறிய விளக்கம் இங்கு கவனம் கொள்ளத்தக்கது.

அன்றைய அமர்வின் தலைமை நீதிபதி என்ற வகையில் புல்லார் தண்டனைக் குறைப்பு குறித்து ”உங்கள் கருத்து என்னவாக இருக்கும்?’’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது’’ நான் இப்போது பதவியில் இல்லை. என்னிடம் கருத்துக் கேட்டு முடிவு செய்ய வேண்டியதில்லை 432(2) இவ்வழக் கில் செயல்படாது’’ என்று ஜெ.பி. ஷா கூறினார்.

நீதிபதி கே.ட்டி தாமசுக்கும் இது பொருந்தும்.

தனிப்பட்டமுறையில் கே.ட்டி தாமசைக் கேட்டாலும் தமிழக அரசின் முடிவை அவர் ஏற்கவே செய்வார் ஏனெனில் பேரறிவாளன் குறித்த “உயிர்வலி’’ ஆவணப் படத்தில் நீதிபதி கே.ட்டி தாமசின் கருத்து பதிவாகி இருக்கிறது. “இவர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கலாம். ஏன்? இவர்களுக்கு விடுதலையே வழங்கலாம்’’ என்று நீதிபதி கே.ட்டி.தாமஸ் கூறுகிறார்.

எனவே எப்படி பார்த்தாலும் ஏழு தமிழர் விடுதலைகுறித்து தமிழக அரசு மேற்கொண்டுள்ள முடிவு சட்டத்தின் பார்வையில் மிகச்சரியானது. இராகுல் காந்தியின் கூச்சலுக்கு இணங்க இந்திய அரசு எழுப்பியுள்ள எதிர்ப்புகள் அனைத் துமே சட்ட மீறல்கள் ஆகும். இவற்றைப் பொருட்படுத்தாது தமிழக அரசு ஏழுதமிழர்களையும் விடுதலை செய்யவேண்டும்.

இதற்கு குறுக்கே வந்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தடை நீடிக்க வாய்ப்பில்லை என்பதே நமது கருத்து.

ஒரு வேளை உச்ச நீதி மன்றம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி ஏழு தமிழர் விடுதலைக்கு ஆணையிட தாமதம் செய்தாலோ, தடுமாறினாலோ, தமிழக அரசு அதற்காகத் தயங்க வேண்டியதில்லை. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161 இன்படி இவர்களின் விடுதலைக்கு உறுதியான ஆணையிட வேண்டும். எக்காரணம் கொண்டும் ஏழு தமிழர் விடுதலை முடிவிலிருந்து பின்வாங்கக் கூடாது.

Pin It