மயிலாடுதுறை அ. வ.அ. கல்லூரி தமிழ்த்துறை 21.2.2014 அன்று உலகத் தாய்மொழி நாள் கருத்தரங்கம் நடத்தியது. வேலாயுதம் கலை அரங்கில் நடந்த இக்கருத்தரங்கிற்கு விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் முத்து வரதராசன் தலைமை தாங்கினார். தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் துரை குணசேகரன் வரவேற்புரையாற்றினார்.

இக்கருத்தரங்கில், தமிழ்தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் தோழர் பெ. மணியரசன் சிறப்புரையாற்றினார். அரங்கு நிறைய மாணவ மாணவிகளும், மற்றும் பேராசிரியர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.இலக்கிய மன்றச் செயலாளர் இளம் கணிப்பொறியியல் மாணவர் திரு பா. துரைக்கண்ணன் நன்றி நவின்றார்.

maniarasan 600 copyஇக்கருத்தரங்கில் பேசிய தோழர் பெ. மணியரசன் பின்வருமாறு கூறினார்.

“ஒருங்கிணைந்த பாகிஸ்தானில் கிழக்குப் பாகிஸ்தானாக இன்றைய வங்காள தேசம் இருந்த போது மேற்கு பாகிஸ்தானின் உருது மொழி அங்கு திணிக்கப்பட்டது. உருது மொழியின் ஆக்கிரமைப்பைத் தடுக்கவும், தங்களின் வங்கமொழியைப் பாதுகாக்கவும் கிழக்கு பாகிஸ்தான் மாணவர்கள் போராடினர். அப்போராட்டத்தின் போது 21.2.1952 அன்று டாக்கா பல்கலைக் கழக மாணவர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த நாளைத்தான் ஐ.நா. மன்றம் உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துள்ளது.

இந்தித் திணிப்பைத் தடுக்கவும், தமிழ்மொழியைக் காக்கவும், 1938 லிருந்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. 1965 ஆம் ஆண்டு 300 க்கும் மேற்பட்ட மாணவர்களும் தமிழ்மக்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.கீழப்பளூர் சின்னச்சாமி தொடங்கி 10 பேர் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்தனர். நமது மொழிப் போராட்ட நாள் ஐ.நா. மன்றத்தால் ஏற்கப்படாதது ஏன்? நான்கு பேர் கொல்லப்பட்ட வங்காள தேசத்தின் நாளை தாய்மொழிநாளாகக் கடை பிடிக்கும் நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டது ஏன்? எண்ணிப்பார்க்கவேண்டும்.

மொழிப்போராட்டத்துடன், இனம், தாயகம் ஆகியவற்றை இணைத்துப் போராடினர் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் வங்காளிகள். அவ்வாறான புரிதலுடன் 1952இல் வங்காளிகள் தொடங்கியப் போராட்டம் 1972 இல் விடுதலைப் போராட்டமாக மலர்ச்சிப்பெற்று வங்காளதேசம் பிறந்தது. ஐ.நா. மன்றத்தில் உறுப்பு வகித்து தனது மொழிப்போர் ஈகத்திற்கு அது உலக ஏற்பு பெற்றுக் கொண்டது.

ஆனால் தமிழ்நாட்டில் மொழிப்போராட்டம் வேறாகவும், இனம் வேறாகவும், தாயகம் வேறாகவும் பிரிக்கப்பட்டது. மொழி தமிழ் என்றும், இனம் திராவிடர் என்றும் தாயகம் திராவிட நாடு என்றும் திரிக்கப்பட்டது. இதனால் குளறுபடிகள் குழப்பங்கள் ஏற்பட்டன. இந்த பட்டறிவிலிருந்துதான் புதிய படிப்பிணைகளைக் கற்றுள்ளோம். இப்போது தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற சரியான சிந்தனை வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.” இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

Pin It